கோவையில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில், அதிக உற்பத்தித் திறனுடன் இயங்கும் அரசு அச்சகத்தை, வட மாநில அச்சகங்களுடன் இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் 1964-ல் அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆகியோரது முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த அச்சகம், 132.7 ஏக்கரில் அமைந்தது.

சுமார் 25 ஏக்கரில் தொழிற்சாலையும், மீதமுள்ள பகுதியில் 463 குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கிய இந்த அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 தொழிலாளர் களுடன் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அஞ்சல்துறை, பார்ம் ஸ்டோர்ஸ், விமானப் படை ஆகிய வற்றுக்கான ஆவணங்களை இந்த அச்சகம் தயாரித்து வழங்கி வருகிறது. செலவுகள் போக ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபம் ஈட்டி வருகிறது.

வட இந்திய அச்சகம்

இந்நிலையில், நாட்டிலுள்ள 17 அச்சகங்களை 5 ஆக குறைக்க கடந்த 21ஆம் தேதி மத்திய அரசு முடிவெடுத் துள்ளதாக செய்திகள் வெளியாயின. அதில் கோவை, கேரளத்தில் உள்ள கொரட்டி, கர்நாடகத்தில் உள்ள மைசூரு அச்சகங்கள் மூடப்பட்டு, அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அரசின் செய்திப் பிரிவு அறிவித்துள்ளது. கோவை அச்சகம் மூடப்பட்டால் வேலை வாய்ப்பு, ஜாப்ஆர்டர், தென்னிந்திய முக்கியத்துவம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என தொழிற் சங்கத்தினர் கூறுகின்றனர். எனவே தென்னிந்திய அச்சகங்களை மூடிவிட்டு, வட இந்திய அச்சகங்களோடு அவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரச்சினைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

4 ஆண்டு ஜாப் ஆர்டர்

இதுகுறித்து மத்திய அரசு அச்சக தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ‘கடந்த பிப்.21-ம் தேதி கோவை அச்சகத்தில் துறை இயக்குநர், இணை செயலாளர் தலைமை யில் ஆய்வு நடந்தது. கோவை அச்சகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.மாறாக, இந்த அச்சகத்தையே மூடப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.

அச்சகத்துக்கு சொந்தமான 132.7 ஏக்கர் நிலத்தை நிலம் மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் விற்று, வட மாநிலங்களில் உள்ள அச்சகங்கள் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஜாப் ஆர்டர் கைவசம் உள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் இதை நம்பியுள்ளோம். உற்பத்தி, லாபம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள கோவை அச்சகத்தை மூடக்கூடாது. மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கோவை அரசு அச்சக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘12 அச்சகங்களை மீதமுள்ள 5 அச்சகங்களுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு செய்திப்பிரிவில் தகவல் வெளியாகி யுள்ளது. இயக்குநரகத்தில் இருந்து இதுவரை அறிவிப்புகள் வரவில்லை’ என்றனர்.

அச்சகத்தை மூடாதே: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள மத்திய அரசு அச்சகத்தை வடமாநிலத்துக்குக் கொண்டுசெல்வதை கைவிடக் கோரி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அக்.10ஆம் தேதி காலை 10 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் கோவை, ஈரோடு, திருப்பூர் கழகத் தோழர்களும் 80 பேர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாலமுருகன் பங்கேற்றுப் பேசினார்.