பேராசிரியர் ஜெயராமன் எழுதிய தமிழ்த் தேசத்தின் எதிர் யார்? “தமிழ் இந்து : இந்துத்துவா இந்தியாவுக்கு இணக்கமான முன்னெடுப்பு” என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு அக்டோபர் 28,2023 அன்றூ மேடவாக்கம் பவலரேறு தமிழ்க்களத்தில் நிகழ்ந்தது. நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகத் தலைவர் உரை :

மா.பொ.சி அந்த காலத்து மணியரசன், சீமான் தான் அவர். திராவிடர் கழகம் மிக வேகமாக தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கு எழுச்சியுடன் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் போது தான் மா.பொ.சி உருவாக்கப்பட்டார். இவர் 1946-இல் தமிழ்தேசம் என்றார். சுதந்திர தமிழ் குடியரசு என்றார். அடுத்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாடு கேட்பதை தடுப்பதற்காகத்தான் நான் வந்தேனே ஒழிய நான் என்றைக்கும் தனிநாடு கேட்கவில்லை என்று அவரே எழுதியிருக்கிறார். அதை விடுதலையில் குத்தூசி குருசாமி எழுதினார். தமிழ்நாட்டில் காமராசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். ஆனால் ஒரே ஒரு கட்சி மட்டும் தனது தலைமை செயற்குழுவில் குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்து தீர்மானம் இயற்றியது, அதுதான் மா.பொ.சி. அவருடைய தமிழரசு கழகம் மட்டும் தான் குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்து தீர்மானம் போட்டது. வேறுயாரும் தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இராஜாஜி சொல்வதை இவர் செய்வார் அவ்வளவு தான். அதற்கு மீறி அவருக்கு தனிப்பட்ட அறிவு ஏதுவும் கிடையாது.

நான் இந்து என்பதால் சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்கிறேன், இந்தியன் என்பதால் இந்தியை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னவர் தான் மா.பொ.சி. அவ்வளவு குழப்பவாதிகளை எல்லாம் ஆதரிப்பவர்களாக அல்லது எதிர்க்காதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

தமிழ்தேசியம் என்னவென்றால் நான் முதல்வராவது, அதுவா தமிழ்தேசியம். நான் பல இடங்களில் பேசியிருக்கிறேன். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது பல முறை பன்னீர்செல்வத்தை தற்காலிக முதல்வராக்கினார். அப்போதே தமிழன் முதல்வராகி விட்டார், நான் கட்சியைக் கலைக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனால் சிக்கலே தீர்ந்திருக்கும். அதற்கு பிறகு பழனிசாமி முதல்வரானார். அவரும் தமிழன் தான். இத்தோடு முடிந்து போய்விட்டது. ஆனால் நான் முதல்வராவது தான் தமிழ் தேசியம், நீங்கள் முதல்வராவதல்ல என்கிறார்கள். இதுவா தமிழ்தேசியம். இதைவிட தமிழ்தேசியத்தை எப்படி கொச்சைப்படுத்த முடியும். அப்படியானால் அவர் தமிழ்தேசியர் என்றே பேசக்கூடாது.

ஒரு சுயமரியாதைக்காரரான நீங்கள் ஒரு மதத்தை பரிந்துரைக்கலாமா என்று ஒருவர் கேட்டார். அதற்கு பெரியார் சாத்தான்குளத்தில் நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழாவில் பதிலளித்து பேசினார். எல்லா மதமும் ஒழிய வேண்டும், அது ஒழியும் போது இஸ்லாம் மதமும் ஒழிந்துவிடும் என்று பேசினார். ஆனால் என்னிடம் வந்து ஒருவர் அய்யா தீண்டாமைக் கொடுமைகளை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை, எப்படி வெளியே வருவது என்று கேட்க, நான் இந்து இல்லை என்று வெளியே வந்துவிடு என்று கூறினார். இஸ்லாமிய மார்க்கம் தீண்டாமையை ஒழித்துவிடும் என்றார். தன் மீதுள்ள தீண்டாமை மட்டும் போய்விட்டால் போதும் என்று என்னிடம் வந்து நிற்கிறவருக்கு நான் ஆலோசனை சொல்லலாமா? வேண்டாமா? இது சுயமரியாதைக்காரருக்கு சொன்னதல்ல, பெண்ணியவாதிக்கு சொன்னதல்ல. தன் மீதுள்ள தீண்டாமை போகாதா என்ற ஏக்கம் கொண்ட என் தோழனுக்கு அறிவுரை சொன்னேன் என்றார்.

யாரவாது உங்கள் மதம் என்னவென்று கேட்டால் குறள் மதம் என்று கூறுங்கள் என்று சொன்னவர் பெரியார். 1940இல் கணக்கெடுப்பின் போது பெரியார் உங்களை திராவிடன் என்று பதிவு செய்யுங்கள் என்று சொன்னார். 1980களில் ஆந்திராவில் ஒருவர் சன்னியாசி ஆனார். அவரை சன்னியாசி என்று சொல்லக்கூடாது என்று கூறி வழக்கு தொடர்ந்தனர். சூத்திரன் சன்னியாசி என்று போடக்கூடாது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. சன்னியாசி என்று கூட சொல்லக்கூடாத அளவுக்குத்தான் நம்மை வைத்திருக்கிறார்கள்.

1996இல் ஒரு வழக்கு, முதல் திருமணத்தை ரத்து செய்யாமலேயே இன்னொரு திருமணம் நடந்து குழந்தை பிறந்தது, அவருக்கு சொத்தில் உரிமை இல்லை என்று சொல்கிறார்கள். திருமணத்தை ரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் செய்ததை உயர்நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஒன்றை கவனிக்க தவறிவிட்டது என்று கூறியது. இந்த வழக்காடிகள் எல்லாம் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு மனைவியும் ஒன்றுதான், வைப்பாட்டியும் ஒன்றுதான் அவர்களுக்கு சொத்துரிமை உண்டு என்று தீர்ப்பு சொன்னது. அந்த இந்து மதத்தில் சேர்ந்து நம்மை தமிழ் இந்து என்று சொல்லிக்கொள்ளுங்கள் என்கிறார் அய்யா மணியரசன்.

ஒன்றியத்தில் உள்ள அஞ்சல் துறை எல்லோருக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது. பணவிடை அனுப்புவதில் உள்ள படிவங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் இருக்கிறது. இது பல சிக்கல்களை உருவாக்குகிறது. ஏன் அந்தந்த வட்டார மொழிகளில் வெளியிடக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறார்கள். உடனே குமரி ஆனந்தன் மணி ஆர்டர் படிவத்தை தமிழில் வெளியிடக் கோரி ஒரு போராட்டத்தை அறிவிக்கிறார். உடனே அடுத்த வாரம் போராட்டம் வெற்றி பணவிடைத்தாள்கள் அடுத்த வாரம் முதல் தமிழில் வெளிவரும் என்று அறிவிக்கிறார். இதைப்போலத்தாலத்தான் தமிழிலும் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கையை பெ.மணியரசன் முன் வைக்கிறார். அரசு தரப்பில் 1980 மற்றும் 1997 என இரண்டுமுறை தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடந்தது. இரண்டு குடமுழுக்குகளிலும் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் தான் செய்யப்பட்டது என்று அறநிலையத்துறை நீதிமன்றத்தில் பதில் மனு அளித்தது. ஆனால் நாங்கள் தான் போராடிப் பெற்றோம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.

தமிழ்தேசியத்தை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்கிறார்கள். இந்து மதத்தில் சிக்கி இருப்பவர்களை விடுவிப்பதற்காகத் தான் நாங்கள் தமிழ் இந்து என்று சொல்கிறோம் என்கிறார்கள், அதையும் தாண்டி இதை மதச்சார்பற்ற சொல் என்று வேறு சொல்லிக்கொள்கிறார் பெ.மணியரசன். இதெல்லாமா ஒரு வாதம்?

பெரியார் தன் வாழ்நாளில் ஆட்சியாளர்களை பாராட்டியுள்ளாரா என்றால் அது இரண்டு பேரை மட்டும் தான். ஒன்று ஆப்கானிஸ்தானை சேர்ந்த அமீர் அமானுல்லா, மற்றொருவர் முஸ்தஃபா கமால் பாட்ஷா. இந்த இருவரைத்தான் தொடர்ச்சியாக பேசியிருக்கிறார். உலகம் முழுமைக்கும் உள்ளது போல் இங்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை நாள், வெள்ளிக்கிழமை கிடையாது என்று அறிவித்தார் கமால் பாட்ஷா. பெண்கள் கல்வி நிலையத்துக்கு வர வேண்டும் என்றார் அமீன் அமானுல்லா. பெண்கள் முக்காடு அணிந்தால் அவர்களுக்கு அபராதம் விதித்தவர் கமால் பாட்ஷா. இப்படி ஒவ்வொன்றாக பாராட்டி எழுதியவர் பெரியார். அமீன் அமானுல்லாவில் மரணம் அநியாயமாக நடந்ததை பார்த்து வருந்தினார் பெரியார். அவர்களை எல்லாம் கூட மணியரசன் அயோக்கியர் என்று எழுதுகிறாரா என்று கேள்வி எழுப்புகிறது இந்நூல்.

என்னென்ன பிழைகள் எல்லாம் இருக்கக்கூடாதோ அத்தனை பிழைகளையும் கொண்ட ஒரு நூலாக இருக்கிற தமிழ் இந்துவுக்கு ஒரு பதில். எனவே இந்த சிந்தனைகளை நாம் உள்வாங்குவோம், அதை மக்களிடம் பேசுவோம், இந்நூலை மக்களிடம் பரப்புவதற்கு நம்மாலான உதவிகளை செய்வோம் என்றார் கொளத்தூர் மணி. 

Pin It