வள்ளலார், திருவள்ளுவர் என சனாதனத்துக்கு எதிராக, சமத்துவத்தைப் பேசிய தமிழின் பெருமைக்குரிய தலைவர்களை எல்லாம் ‘சனாதனவாதிகள்’ என திரிபுவாதம் செய்கிற வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துகொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது அய்யா வைகுண்ட சுவாமிகளையும் சேர்த்திருக்கிற ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டி வளப்படுத்தியவர் அய்யா வைகுண்டர்” என்று கூறியிருக்கிறார். அய்யா வைகுண்ட சுவாமிகளை இழிவுபடுத்துகிற ஆர்.என்.ரவியின் இப்பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள், தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்து வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமிகளைப் பற்றி 2018ஆம் ஆண்டு மே மாதம் நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளை தருகிறோம்.

vaikunda swamiஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவர் வாழ்ந்த குமரிப் பகுதி அன்றைக்கு திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருந்தது. அதனை அப்பொழுது ஆண்டு வந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா, சங்கீத விற்பன்னர்கள் இன்றளவும் போற்றிப் புகழுகிற இந்த மன்னரின் ஆட்சியில் நாடார் சமூகத்தவர் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். சமூகரீதியிலும், பொருளாதார ரீதியிலும் கொடூரமான அடக்குமுறை நிலவியது. சாதிய அமைப்பைக் கட்டிக்காத்து வந்த மன்னர், அநியாய வரி விதித்தும், மக்களைக் கசக்கிப் பிழிந்தும் வந்தார். ஒரு நாடார், நம்பூதிரி பார்ப்பனரிடமிருந்து 36 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திலும் நின்றுதான் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் தீண்டாமைக் கொடுமைகள் நிலவிய காலம் அது. பொதுச் சாலைகளிலே செல்ல முடியாது. பொதுக் கிணறுகளிலே நீர் எடுக்க முடியாது. உயர் சாதியினர் வாழும் தெருக்களில்கூடப் போக முடியாது. பிறகு, அவர்களது கோவில்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்தக் கோவில்களுக்கு அருகேயே பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் இருந்ததால் அங்கேயும் போக முடியாது. அதிகாரிகள் வெளியே வரும்போது பார்த்தால்தான் உண்டு. அது மட்டுமல்ல குடை பிடிக்கவோ, செருப்பு போடவோ முடியாது. ஓடு வேய்ந்த வீடு கட்டக் கூடாது. பொன் நகை அணியக் கூடாது. பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் எடுத்துச் செல்ல முடியாது. தோள் சேலை (மாராப்பு) அணிய முடியாது.

நாடார்களில் ஒரு சிறு பகுதியினர் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். பெரும் பகுதியினராயிருந்த கள் இறக்கும் தொழிலாளர்களை இவர்கள் மதிப்பதும் கிடையாது; பாதுகாப்பதும் கிடையாது. உயர்சாதியினரோ இவர்கள் அனைவரையுமே தீண்டத்தகாதவர்களாகப் பாவித்தனர். திருவிதாங்கூர் அரசும் இதைத்தான் அமுல்படுத்தி வந்தது. இந்த நிலையில் களத்தில் இறங்கிய சுவாமிகள் இந்த மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்திட ‘சமத்துவ சங்கம்’ என்ற அமைப்பினைத் துவக்கினார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உறுப்பினராயினர். ஆடவர் மட்டுமல்லாது மாதரும் பங்கேற்றனர். ஊர் ஊராகச் சென்று தனது சமத்துவக் கொள்கையைப் பரப்புமாறு சீடர்களைக் கேட்டுக் கொண்டார். தானும் அவ்வாறே பயணம் மேற்கொண்டார்.

ஒற்றுமை உணர்வினை வளர்த்திடவும், தன்னுடைய போதனைகளைப் பரப்பிடவும் ‘நிழல் தாங்கல்’ என்பதைப் பல ஊர்களில் அமைத்தார். இது வழிபாட்டுத் தலமாகவும், கல்வி நிலையமாகவும், சுவாமிகளின் போதனைகளைப் பரப்பும் பிரச்சார மையமாகவும் விளங்கியது. சமத்துவச் சங்கத்தின் கிளைகள் போலச் செயல்பட்ட இவற்றில் வழிபாடு நடந்தாலும் விக்ரக ஆராதனை கிடையாது. விக்ரகம் என்றால் பூசாரி வந்து விடுவார். பூசாரி என்றால் சாதியப் பாகுபாடு புகுந்துவிடும் என்று அதனைத் தவிர்த்திருக் கிறார். அதே நேரத்தில் அதற்கு சித்தாந்த விளக்கமும் தந்தார்.

“மறையினிலடங்கா இறையினிலடங்கா

வணங்கிலுமடங்கா

பலவகையிலுமடங்கா துறையினிலடங்கா

தொல்புவியிலடங்கா

சுருதியிலடங்கா சகயினிலடங்கா உறவினிலடங்கா

மொழியிலுமடங்கா யுகத்திலுமடங்கா ஒரு

விதத்திலுமடங்கா”

- என்று ‘இறைவனை’ வருணித்த அவர், அவனை எந்த விக்ரகத்திற்குள்ளும் அடைக்க முடியாது என்றார். சுவாமிகளின் இந்த நிலைப்பாடு அவரைப் பின்பற்றுவோரை சித்தாந்த ரீதியிலும் உயர்த்துவதாக அமைந்தது. உருவம் மூலம் தரிசிப்பதைவிட உள்ளொளி மூலம் தரிசிப்பது உயர்நிலை என்றே இந்துமதம் கூறிக் கொள் கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டாலும் சனாதனிகள் இதனைக் கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடித்தால் புரோகிதத் தொழில் பறி போய்விடும். உருவமற்ற வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்தினார் சுவாமிகள்.

அதிகம் படித்திராத - அனுபவ ஞானத்திலேயே - தமது மக்களுக்கு எது நல்லது என்பதை உணர்ந்திருந்த சுவாமிகள், பேய், பிசாசு, மாந்திரீகம் என்று ஏமாந்து போவதைத் தடுக்கவும் முயன்றார். ஆலயங்களுக்குள் நாடார்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் நுழைய முடியாத நிலையிலும் அவர்களது காணிக்கைகள் மட்டும் புரோகிதர்களுக்கு தேவைப்பட்டது. எனவே, தொலைவில் நின்று காணிக்கைகளை இவர்கள் எறிய, புரோகிதர்கள் பதிலுக்குத் தூக்கியெறியும் இலைக்கட்டுப் பிரசாதத்தைப் பெற்று மகிழ்வர். ஏற்கெனவே வறுமையில் வாடிய இந்த மக்ககள் பக்தி மேலீட்டால் சுயமரியாதையையும் இழந்து கைப்பொருளையும் இழந்தனர். இதனால் சுவாமிகள் -

“காணிக்கையிடாதுங்கோ காவடி

தூக்காதுங்கோ

வீணுக்குத் தேடுமுதல் விருதாவில்

போடாதுங்கோ”

- என்றார். உயர்சாதியினர் கோவிலுக்கு காணிக்கையிடுகிற வேலையை ‘விருதா’ வேலை என்று பாமரத் தமிழில் போதித்திருக்கிறார் சுவாமிகள். அதே நேரத்தில் ஏழைகளுக்கு தர்மம் செய்வதை வலியுறுத்தினார். “பயந்து தர்மமிட்டு அந்தப் பரம்பொருளைத் தேடிடுங்கோ” என்றார்.

சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு என்பது இப்படிச் சமய சீர்திருத்தத்தோடே ஒட்டிப் பிறந்தது. அதே நேரத்தில், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க அவர்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டியிருந்தது. சமூக அவமரியாதைகளில் சிலவற்றையாகிலும் ஒழிக்க வேண்டியிருந்தது. அச்சத்தைப் போக்கி எதிர்த்து நிற்கும் தைரியத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது.

தன்னைக் காண வந்த மக்களிடம் தலைப்பாகை அணிந்து வருமாறு வற்புறுத்தினார் அய்யா வைகுண்டர். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆதிநாளில் ஒரு நாடார் சமூக இளைஞனுக்கு அவனது 16ஆவது வயதில் தலையில் தலைப்பாகைக் கட்டி கையில் பிச்சுவா கத்தி கொடுப்பார்கள் - அவர் பெரிய மனிதன் ஆகிவிட்டதன் அடையாளமாக, பல இடைத் தட்டு சாதிகளில் இந்த வழக்கம் இன்றைக்கும் உண்டு. குடும்பத் தலைவர் இறந்ததும் அவரது மகன்களுக்கு இப்படி தலைப்பாகை கட்டுவார்கள். இதற்கு “உறுமால் கட்டு” என்று பெயர். இந்தப் பழக்கம் இடைக்காலத்தில் நாடார் சமூகத்தைப் பொறுத்தவரை உயர்சாதி யினரால் தடுக்கப்பட்டிருக்கிறது. சுமை தூக்கக் கூட தலைப்பாகை அணிய அனுமதிக்கவில்லை. ‘சுருமாடு’ என்று பெயரில் வைக்கோலை மட்டும் தலையில் வைக்க அனுமதிக்கப் பட்டனர். இந்த அநியாயக் கட்டுப்பாட்டை மீறச் சொன்னார் சுவாமிகள். வழிபாட்டின்போது அவரது அன்பர்கள் இப்பொழுதும் தலைப் பாகை அணிவதைக் காணலாம்.

இதே பாணியில் வீடு கட்டுவதிலும் மாறுதலை புகுத்தினார் சுவாமிகள். மாடி வீடு, ஓடு போட்ட வீடு ஆகியவற்றை அன்றைக்கு தாழ்ந்த சாதி மக்கள் கட்டிவிட முடியாது. அவர்களது வீடுகள் ஒழுங்கற்று ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இதற்குப் பதிலாக பல அறைகளுடைய ஒரே திசையில் முன் கதவு வைத்த வீடுகளை அடுத்தடுத்து கட்டுமாறு கூறினார் சுவாமிகள். இது மக்களிடையே நெருக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்த்தார். மாதிரியாக முட்டப் பகுதியில் சுவாமிகள் ஒரு ‘சமதர்மக் காலனி’ அமைத்தார்.

இத்தோடு தனது சொந்த ஊரில் கிணறு ஒன்றை ஏற்படுத்தி அனைத்து மக்களும் அதனைப் பயன்படுத்தலாம் என்றார். அதனை ‘முத்திரிக் கிணறு’ (புனிதக் கிணறு) என்று சுவாமிகள் அழைத்தார். சுவாமிகளைக் காண வந்த மக்கள் அக்கிணற்று நீரைக் கொண்டு குளித்து, உண்டி சமைத்து உண்டு மகிழ்ந்தனர். அனைத்து சாதியினரும் இப்படி ஒரே கிணற்றில் நீரெடுத்து சமைத்து சமபந்தி போஜனம் செய்ய வைத்தார் சுவாமிகள்.

தனது சீடர்களைப் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி அங்குள்ள தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளில் உணவருந்துமாறு கட்டளையிட்டார். சுவாமிகள் ஒரு முறை இப்படியாகத் தனது சீடர்கள் இருவரை பிச்சம்மாள் என்கிற சலவைத் தொழிலாளி வீட்டில் சாப்பிட்டு வருமாறு சொல்ல, அவர்கள் அங்கு சென்றும் சாப்பிட மனமில்லாமல் திரும்பி வந்துவிட்டனர். இதை அறிந்த சுவாமிகள் இருவரையும் கடுமையாகக் கண்டித்து மீண்டும் அந்த இல்லம் சென்று உணவருந்தி வருமாறு செய்தார். இப்படியொரு வாய்மொழிச் செய்தி உள்ளது. இதுவெல்லாம் அந்தக் காலத்தில் சாதாரணமான விஷயமல்ல.

சமூக சீர்திருத்தவாதியுமான இவர் ஒரே நேரத்தில் மன்னர், பார்ப்பனியம் மற்றும் அந்நிய ஆட்சியாளர்கள் - மதபோதகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டது வரலாற்றிலேயே ஒரு அபூர்வமான விஷயம். சமூகத் துறையில் ஆதிக்க சக்தியாக இருந்த பார்ப்பனியத்தையும் வெளிப்படையாக எதிர்க்கத் துணிந்தார் சுவாமிகள். “பிராமணர்களைப் பயம் காட்ட நாம் வருவோம்” என்று அடித்தட்டு சாதி மக்களுக்கு தைரியம் ஊட்டினார். அதுமட்டுமா, “பிராமண வேசம் போட பக்தன்மாரே நீங்கள் உண்டு” என்றும் கூறினார். புரோகிதம் என்பதை ‘வேசம்’ என்று அவர் கூறியது அந்தக் காலத்தில் வேறு எவரும் சொல்லத் துணியாதது என்றால் அந்த ‘வேச’த்தை தாழ்த்தப்பட்ட சாதியினரும் போடலாம் என்பது சமூக நீதியின் புதிய பரிமாணம், ‘பிராமணியம்’ எனும் ஏகபோகத் தன்மையைக் கருவறுக்கிற வேலை.

சமயப் பூசல்களை அடியோடு வெறுத்தார் சுவாமிகள். “நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்ற வான்பெருதறியாமல் மாள்வார் வீண் வேத முள்ளோர்” என்று கூறியுள்ளார் சுவாமிகள்.

அடித்தட்டு வகுப்பு பெண்களின் உரிமை களுக்காகவும் குரல் கொடுத்தார் சுவாமிகள். தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களைத் தைரியமாக தோள்சேலை அணியுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சுவாமிகளின் காலத்தில் கிறிஸ்தவ போதகர்களின் வழிகாட்டுதலில் கிறிஸ்தவ நாடார்களினால் துவக்கப்பட்ட இந்தத் தோள்சேலை அணியும் போராட்டம் சுவாமிகளின் மறைவுக்குப் பிறகு, கிறிஸ்தவ நாடார்கள் - இந்து நாடார்கள் இருவரும் இணைந்து நின்று போராடியதால் வெற்றி கிட்டியது. 1859இல் நாடார் பெண்களுக்கு தோள் சேலை அணிகிற உரிமையை திருவிதாங்கூர் அரசு வழங்கியது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்த காரணத்தால் 1865இல் இதர அடித்தட்டு சாதிப் பெண்களுக்கும் அந்த உரிமை தரப்பட்டது.

தனது மக்கள் சேவையின் காரணமாய் ‘அய்யா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுவாமிகளின் சமாதி சாமித் தோப்பில் உள்ளது. அங்கே ஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்துவிளக்கு ஒளியை மக்கள் கும்பிடுகிறார்கள். இவர் வழி வந்தவர்கள் இறந்தோரை எரிப்பதில்லை; புதைக்கவே செய்கிறார்கள். அதோடு கருமாதி, திதி போன்ற சடங்குகளில் விருப்பமில்லாதவர் களாகவே உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் ஒரு புதிய சமய நெறியை உருவாக்கி அதன் மூலம் சமூக சீர்திருத்தம் செய்தவர். அய்யா வைகுண்ட சுவாமிகள்

(பேராசிரியர் அருணனின் ‘தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு’ நூலிலிருந்து)

ஆளுநருக்கு அய்யாவழி தலைமை பதி பால பிரஜாபதி கடும் கண்டனம்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து, ஆரிய கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல் ஆளுநர் ரவி பேசியுள்ளார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். சாதியை மறந்து பூமியில் ஒத்த இனமாக வாழ வலியுறுத்தினார். ஆனால் மனுதர்மத்தை ஏற்றிருந்த அரசு தான், அய்யாவை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது. 800 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை சரியாக படிக்க வேண்டும்.

அய்யாவின் வரலாறு தெரியாமல் யாரும் வாய் திறக்க கூடாது. ஆளுநர் சொல்வது போல் அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்க வரவில்லை. மக்களை அதிலிருந்து காக்க வந்தார். அவர்களிடம் இருந்த மடமையை, அறியாமையை போக்க வந்தார். தங்களுடைய சுயலாபத்திற்காக யாரும் வரலாற்றை திரித்து பேசக்கூடாது. ஜாதியை வகுத்தவனை நீசன் என கூறும் அய்யா வைகுண்டரை சனாதனத்தை ஆதரித்தவர் என ஆளுநர் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. கண்டிக்கத்தக்கது.