தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே பல்வேறு ஏற்றத்தாழ்வான, பாகுபாடுகளுடன் கூடிய கல்வி முறை நிலவுவதால், இதனை மாற்றி அனைவருக்கும் ஒரே வகையான சமச்சீரான கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் கொண்டுவரப்பட்டதே ‘சமச்சீர்க் கல்வித் திட்டம் Uniform System of School Education சுருக்கமாக USSE.

கடந்த திமுக ஆட்சியில் 2009ஆம் ஆண்டு நவம்பர் 30லிருந்து நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம் கடந்த 2010-11 கல்வி ஆண்டில் முதல் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு முடிய மற்றும் 7ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு முடிய ஆன வகுப்புகளுக்கு இந்த 2011-12 கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த ஆண்டு இதன் செயலாக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ரூ.200 கோடி செலவில் 9 கோடிக்கும் மேற்பட்ட பாடப் புத்தகங்களும் அச்சாக்கம் செய்யப்பட்டு அனைத்தும் தயாராக இருந்த நிலையில்தான், இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் புதிதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. ஜெயலலிதா அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமச்சீர்க் கல்வியைச் சந்தியில் நிறுத்தியுள்ளது.

girl_233இந்த நடவடிக்கைக்கு ஆட்சியாளர்கள் சொல்லும் ஒரே காரணம். சமச்சீர்க் கல்விக்கான பாடப் புத்தகங்கள் தரமானவையாக இல்லை. சமச்சீர்க் கல்வி என்பது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டுமேயல்லாது, அதைத் தாழ்த்திவிடுவதாக இருந்து விடக்கூடாது. அகில இந்திய அளவிலான போட்டியில், கல்வித் தரத்தில் தமிழக மாணவர்கள் பின்தங்கி விடக் கூடாது. தவிரவும் தற்போது அச்சாக்கம் செய்யப் பட்டுள்ள சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்களில் கடந்த கால ஆட்சியாளர்களின் பிரச்சாரமே மேலோங்கி, கல்வி அரசியலாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் தேவை தரமான கல்வியே அன்றி அரசியல் அல்ல. எனவே இதை முற்றாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த ஆண்டு பழைய கல்வித் திட்டத்திலே உள்ள பாடப் புத்தகங்களையே வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலோட்டமாக நோக்க, அரசின் இந்த முடிவு நல்லதுதானே, நியாயமானதுதானே என்று ஒரு சாராரைக் கருத வைத்திருக்கும் அதே வேளை இது எங்கே சமச்சீர்க் கல்வித் திட்டத்தையே குழிதோண்டிப் புதைப்பதாக, அதற்குச் சமாதிகட்டுவதாக ஆகிவிடுமோ என்கிற அச்சத்தையும் பலரிடம் ஏற்படுத்தியுள்ளதால் இது பற்றி பரிசீலனைக்காக சில:

1. சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் கீழ்த் தயாரிக்கப் பட்டுள்ள பாடப் புத்தகங்கள் அனைத்தும் தரமானவையே என்று யாரும் சொல்லவில்லை. அவற்றுள் குறைகள் நிறைய இருக்கின்றன. அவை களையப்படவேண்டும், செம்மைப் படுத்தப்பட வேண்டும் என்பதிலும் பெரும் பாலும் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

2. பாடநூல்கள் இப்படித் தரம் குறைவாக இருப் பதற்குக் காரணம் பாடப்புத்தகம் தயாரித்த கல்வியாளர் களுக்கு இது முதல் முயற்சி என்பதால்கூட இருக்கலாம். அல்லது அக்கறைக் குறைவு, பொறுப்பின்மை காரண மாகவும் இது நேர்ந்திருக்கலாம். எதுவானாலும் இது பாடப் புத்தகத் தயாரிப்பில், நடைமுறையில் உள்ள குறை பாடு தானே தவிர, சமச்சீர்க் கல்வி சார்ந்த கொள்கையின் குறைபாடு அல்ல.

3. இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற அரசு என்ன செய்திருக்க வேண்டும். தரமற்றதாகக் கருதப்படுவதும், சர்ச்சைக்குரியதும், அரசியலாக்கப்பட்டுள்ளதுமான பகுதிகளை நீக்கி, ஏற்கனவே திட்டமிட்டபடி சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கும் செயல் படுத்தியிருக்க வேண்டும். வழக்கம் போல ஜூன் முதல் வாரமே பள்ளி திறந்து, பாடங்களை நடத்திக் கொண்டே, ஒரு மாதத்தில் நீக்க வேண்டிய பகுதிகள், சேர்க்க வேண்டிய பகுதிகளைத் தனித்த ஒரு துணைநூலாக வெளியிட்டு இதைச் செய்திருக்கலாம்.

4. இப்படிச் செய்திருந்தால் யாருக்கும் எந்த அச்சமும் ஏற்பட்டிருக்காது. இடைப்பட்ட குழப்பங்களுக்கும் வழக்குகளுக்கும் இடம் இருந்திருக்காது. ஒரு மாத காலமாக யாரும் எந்தப் பாடமும் நடத்த முடியாமல் இப்படி வல்லுநர் குழுவின் முடிவுக்குக் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. பாடப் புத்தகங்களை அழிக்க வேண்டிய அவசியமோ, விரயமோ, பண விரயமோ ஏற்பட்டிருக்காது. வெறும் துணைநூல்கள் அச்சடிக்க வேண்டிய செலவோடு முடிந்து போயிருக்கும்.

மாறாக அரசு என்ன செய்தது. மே 13இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மே 16இல் முதல்வர் பொறுப் பேற்ற ஜெயலலிதா, அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே மே 22இல் தன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். ஒரு மணிநேரம்கூட முழுமையாக நடைபெறாத அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார்களோ, என்ன முடிவு எடுத்தார்களோ? அடுத்த நாளே இந்த ஆண்டு சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கிறார். அவசர அவசரமான இந்தத் தடாலடி அறிவிப்புதான் கல்வியாளர் மத்தியில் அச்சம் ஏற்பட வழிவகுத்தது.

ஏற்கனவே சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த ஆண்டிலிருந்தே இதற்கு எதிராகத் தனியார் ஆங்கில வழிப் பள்ளி நிறுவனங்கள் எல்லா வகையிலும் சதி செய்து வருகிற நிலையில், அரசே இப்படி ஓர் அறிவிப்பை வெளி யிட்டால்... இதுவே அச்சத்திற்குக் காரணமாக அமைந்தது.

தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் நலன் காக்க இந்த ஆட்சி மாற்றத்துக்குத் தனியார் ஆங்கில வழிப்பள்ளி நிறுவனங்களும் பெருமளவும் உதவியதாகவும், தேர்தலின் போதே இவை தற்போதைய ஆட்சியின் வெற்றிக்குப் பெரும் பங்களிப்பு செய்ததாகவும் ஒருபுறமும், தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்நிர்வாகிகள் பலரும் ஆட்சியாளர்களைச் சந்தித்து தங்கள் காரியத்தை நிறைவேற்றி வைக்க வேண்டிக் கொண்டார்கள் என்றும் பேசப்பட்டன.

இதற்கும் முன்பே, சமச்சீர்க் கல்விப் பாடப்புத்தகங்கள் தயாரிப்பு நிலையிலேயே, அதற்காக தயாரிக்கப்பட்ட முன்வரைவுகளைக் கல்வியாளர்கள் சிறப்பாகத் தயாரித் திருந்ததாகவும், ஆனால் இதைக் கண்ட ‘உரை நூல்’ போடும் நிறுவனங்கள் இப்படியெல்லாம் புத்தகம் வந்தால் யாரும் உரை நூல் வாங்கிப் படிக்கமாட்டார்கள், தங்கள் பிழைப்பு பாழாகிவிடும் எனவும், ஆகவே புத்தகங்களைத் தங்களுடைய வணிகத்துக்குப் பாதிப்பு வராத வகையில் தயாரிக்கக் கோரி அதற்காகச் சம்பந்தப்பட்டவர்களையும் கணிசமாகக் கவனித்ததாகவும் ஒரு செய்தி பரவியிருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் இவை எல்லாமுமாகச் சேர்ந்தே கல்வியாளர்கள், சனநாயக சமத்துவ உணர்வாளர், சமூக நீதிப் பற்றாளர் மத்தியில் இது கோபாவேசத்தைத் தூண்டியது.

காரணம் சமச்சீர்க் கல்வி என்பது வெறும் கல்வி யோடு மட்டும் தொடர்புடைய திட்டம் அல்ல. மாறாக, இது சமூகத்தில் நிலவும் பொருளியல், சமூகவியல் ஏற்றத் தாழ்வு, பின்தங்கிய மற்றும் இடைநிலை சாதி மக்களின் முன்னேற்றம், தாய் மொழிக்கல்வி, சமூகத்தில் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமமான சமூகநீதி ஆகிய பல்வேறு பிரச்சினைகளோடு தொடர்புடையது.

எனவேதான் சமூக நீதி ஆர்வலர்கள் அரசின் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள் தீர்ப்பு அரசுக்கு எதிராக இருக்க, அரசின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த விரும்பாத ஜெயலலிதா இயல்பான தன் பிடிவாத குணம் காரணமாக 7-6-2011 அன்று சட்ட மன்றத்தில் சமச்சீர்க் கல்விச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். சென்னை உயர்நீதிமன்றம் அச்சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்க ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒன்றாம் மற்றும் 6ஆம் வகுப்பில் அமலுக்கு வந்துள்ள சமச்சீர்க் கல்வி அப்படியே தொடர வேண்டும் எனவும், பிற வகுப்புகளுக்கான கல்வி குறித்து முடிவு செய்ய தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமிக்க வேண்டும் எனவும், அந்த வல்லுநர் குழு இரண்டு வாரத்தில் இதை ஆய்வு செய்து அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப் பிக்க வேண்டும் எனவும் அதன் பேரில் உயர்நீதிமன்றம் இது குறித்து ஆணையிடும் என்று அறிவிக்க, அதனடிப் படையில் தற்போது வல்லுநர் குழு நியமிக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்த வல்லுநர்குழு உறுப்பினர்கள் குறித்துப் பலருக்கும் முரண்பட்ட கருத்தே நிலவுவதால் குழுவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதாவது அச்சடித்து வைக்கப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் மற்றும் அரசியலை நீக்கி, குறிப்பிட்ட வகுப்புகளுக்குச் சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமலாக்கக் கூறலாம். அல்லது இக் குறுகிய காலத்தில் அப்படிச் செய்ய இயலாது. எனவே, இந்த ஆண்டு இவ்வகுப்புகளுக்குச் சமச்சீர்க் கல்வி கிடையாது என்றும் கூறலாம். சமச்சீர்க் கல்வி ஆய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் பின்னணி களை நோக்க, ஆய்வுக் குழுவின் முடிவு பெரும்பாலும் இந்த ஆண்டு சமச்சீர்க் கல்வி என்பதற்கு எதிரானதாக அமையவே வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் பெரும் பாலோரது கருத்து.

இந்நிலையில் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது:

1. இதுவரை எழுந்திருக்கிற சர்ச்சைகளும், சட்ட வாதங்களும் இந்த ஆண்டு சமச்சீர்க் கல்வி உண்டா இல்லையா என்பது பற்றியதுதானே தவிர முற்றாகவே சமச்சீர்க் கல்வியே வேண்டுமா, வேண்டாமா, உண்டா, இல்லையா என்பது பற்றியதல்ல. சென்னை உயர்நீதி மன்றமோ, தில்லி உச்சநீதிமன்றமோ எதுவும் சமச்சீர்க் கல்விக்கு எதிராகத் தீர்ப்பளிக்கவில்லை. மாறாக இதற்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளன.

2. எனவே, தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சமச்சீர்க் கல்வித் திட்டம் நிலைக்குமா, நிலைக்காதா என்கிற பேச்சுக்கே இடமில்லை. சிலர் நினைப்பது போல் சமச்சீர்க் கல்வித் திட்டமே குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விடுமோ, அதற்கு சமாதி கட்டப்படுமோ என்றும் அஞ்சத் தேவையில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை.

3. தற்போதைய அ.தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த சமச்சீர்க் கல்விச் சட்டத்தில் அதன் அமலாக்கம் பற்றிக் கூறும் பிரிவு 3க்கான திருத்தம்தானே தவிர, மற்றபடி பழைய சட்டத்தையே இல்லாமல் ஆக்க வில்லை. புதியதாகவும் வேறு ஏதும் சட்டம் கொண்டு வந்துவிடவும் இல்லை.

4. இன்னும் சிலர் சந்தேகப்படுவது போல் “அம்மா”வின் நோக்கம் சமச்சீர்க் கல்வியை முற்றாகக் குழிதோண்டிப் புதைப்பதுதான். ஆனால் நேராக அப்படிச் செய்தால் எதிர்ப்பு வரும் என்பதால், முதலில் இந்த ஆண்டு மட்டும் என்று சர்ச்சையைக் கிளப்பி, அதில் வெற்றி கண்டுவிட்டால், பின் அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் நிரந்தரமாகவே அதற்குச் சமாதி கட்டிவிடலாம் என்கிற நோக்கத்திலேயே இவ்வளவும் செய்கிறார்கள் என்று கருதுகிறார்கள். அப்படிச் செய்வதும் சாத்தியமல்ல.

5. காரணம், தமிழகச் சமச்சீர்க் கல்விச் சட்டம் ஏற்கனவே கேள்விக்குள்ளாக்கப்பட்டு அது உச்சநீதி மன்றம் வரை வழக்கிற்குப் போய், உச்சநீதிமன்றம் இச் சட்டத்தின் நியாயத்தையும், அதற்கு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே செயலுக்கு வந்துள்ள, ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புக் கான சமச்சீர்க் கல்வியைக் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தொடரவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு வகுப்புகளுக்கு ஓரு கல்வியும், எஞ்சிய வகுப்பு களுக்கு வேறு ஒரு கல்வியும் தருவதை நிரந்தரமாக்கவோ ஏற்கவோ முடியாது.

ஒரு வேளை இது அனைத்தையும் மீறி ஆட்சி யாளர்கள் உள்நோக்கத்தோடு ஏதும் செய்வதாகவோ அதாவது இந்த ஆண்டு குழுவின் பரிந்துரைப்படி எப்படியோ சமாளித்து அடுத்த ஆண்டிலிருந்து முதல் மற்றும் 6ஆம் வகுப்பையும் பழைய கல்வி முறைக்கே கொண்டுவந்து விடலாம் என்று ரகசியத் திட்டம் ஏதும் வைத்திருப்பார்களேயானால், அது கனவிலும் நடவாது. நடக்கவிட மாட்டோம் என்பதில் நாம் விழிப்போடும் உறுதியோடும் இருக்க வேண்டும். நிலைமைகளின் போக்கை முன்னுணர்ந்து எதிர்வரும் 2011-12 கல்வி ஆண்டுக்கு முன்பாகவே தமிழகம் தழுவிய ஒரு மாபெரும் போராட்டத்தைத் திட்டமிட்டு, சமச்சீர்க் கல்வியை நடைமுறைக்குக் கொண்டுவராமல் கல்வி நிறுவனங்களை நடத்தவிடமாட்டோம். ஆட்சியாளர்களை ஆளவிட மாட்டோம் என்கிற அளவுக்குத் தமிழகமே கொந்தளிக்கும் அளவுக்கு, ஆவேசத்தோடும் எழுச்சியோடும் நடத்த வேண்டும். அதற்கு இப்போதிருந்தே திட்டமிட்டு நாம் அனைவரையும் இதை நோக்கி அணியப்படுத்தி வைக்க வேண்டும்.

அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் :

1. சமச்சீர்க் கல்வி நோக்கமும் தோற்றமும்

தமிழ்நாட்டில் 5 வகையான கல்வி முறைகள் நடப்பில் இருந்து வருகின்றன. 1. மாநில வாரியக்கல்வி 2. மெட்ரி குலேஷன், 3. ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை 4. கீழ்த் திசைப் பாடத் திட்டம் 5. நர்சரி பள்ளிக் கல்விமுறை என இவை வேறுபடுகின்றன.

இக்கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் வெவ் வேறு பாடத் திட்டம், கலைத் திட்டங்களில், வெவ் வேறான அகக் கட்டுமானங்களில் பயின்று, வெவ்வேறு வகையான தேர்ச்சித் திறனோடு வெளிவருவதால், இவர்களிடையே ஏற்றத்தாழ்வான நிலையையும், உயர் கல்விகளைப் பெறுவதில் இவர்களுக்கிடையே வெவ்வேறு தர சமத்துவமற்ற நிலையை ஏற்படுத்தி, சமூக சமத்துவத் திற்கும் சமூக நீதிக்கும் இடர்ப்பாடாய் இருக்கிறது எனவும் அறிஞர்கள் கல்வியாளர்களிடையே நீண்ட நாளாய் சர்ச்சை இருந்து வந்தது. எனவே இக்குறைபாட்டை நீக்கிப் பொதுவான ஒரே மாதிரியான சமச்சீரான கல்வி முறையை அனைவருக்கும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை இருந்து வந்தது.

இதனடிப்படையில் அனைவருக்கும் பொதுவான ஒரே மாதிரியான சமச்சீர்க் கல்வி முறையைக் கொண்டு வரவேண்டுமெனத் தமிழக அரசால், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் தலைமையில் 8-9-2006 அன்று ஓர் ஆணையம் அமைக்கப் பெற்றது. 9 பேர் அடங்கிய அக்குழு சுமார் 6 மாத காலம் ஆய்வு செய்து 21-4-2007 அரசுக்கு அறிக்கை தர அது கடந்த 22-10-2007 அன்று சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இக்குழு, தங்கு தடையின்றி வரவேற்கக் கூடியதும், ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்தித் தெளியத் தக்கதுமான பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவற்றை விரிவாக விளக்க இங்கே இடம் போதாது. எனினும் அவற்றுள் முக்கியமான சில.

1. அனைவருக்கும் சமச்சீர்க் கல்வியை வழங்கவும் அதை உறுதிப்படுத்தவும் முதலில் மாணவர்கள் இடை நிற்றலுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும்.

2. அனைத்துக் கல்வியையும் தமிழ்வழி வாயிலாகவே தரவேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத குழந்தைகளுக்கு அவர்கள் தாய்மொழியுடன் தமிழ் மொழியையும் கற்பிக்க வேண்டும்.

3. கல்வி மனப்பாடம் செய்வதால் அதைத் தேர்வு அறையில் எழுதுவதாய் இருக்கக்கூடாது. மாணவர்கள் தெரிந்து கற்கவும், கற்ற அறிவைத் தொகுத்தும் விரித்தும் விளக்கும் திறமை பெற்றவராக ஆக்கவுமான வகையில் இருக்க வேண்டும்.

4. கற்றல் என்பது வெறும் ஏட்டுக் கல்வி என்பதாக அல்லாமல் சமுதாயத்தில் நல்ல குடிமக்களை உருவாக்கு வதாகவும் அமைய வேண்டும்.

5. அறிவு என்பது உலக அளவில் பொது அறிவு, அத்துடன் தான் வாழும் நாடு, மாநிலம் மற்றும் பகுதி விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

6. சமச்சீர்க் கல்விமுறை வந்த பிறகு ஒரே கல்வி முறை தான் இருக்கும் என்பதால் தற்போது நிர்வாக வாரியம் நான்காக உள்ளதை மாற்றித் தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வி வாரியம் என ஒரே வாரியத்தை அமைத்து நிர்வகிக்க வேண்டும்.

7. எல்லாப் பக்கங்களிலும் கணினிப் பயன்பாடு கட்டாயம் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

8. ஒரே பொருள்பற்றிப் பல பாட நூல்கள் தயாரித்து மாணவர்களின் வெவ்வேறான கற்கும் திறனுக்கேற்ப வழங்கலாம்.

9. உள்ளூர் சிறுதொழில்கள், கலை பண்பாட்டு நடவடிக்கைகளிலும் நன்கு பயிற்சி அளிக்கலாம்.

10. ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்களுக்கு மேல் இருப்பது தகாது. ஒவ்வொரு மாணவனுக்கும் 1 சதுர மீட்டர் இடவசதியும் 3.7 மீட்டர் உயரத்துடன் காற்றோட்டமான இடவசதியும் அமைய வேண்டும்.

என இப்படி சமச்சீர்க் கல்வி சார்ந்து மட்டுமல்லாமல் பொதுவான கல்வி முன்னேற்றம் சார்ந்தும் குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இப்பரிந்துரைகள் மீது அரசு எடுக்கும் நடவடிக் கைகள் மற்றும் செயலாக்கத்தைப் பொறுத்து இது படிப்படியாக நிறைவேற்றப்படலாம். நிறைவேற்றப்பட வேண்டும்.

2. கல்வியாளர்கள் பரிந்துரை

குழுவின் இப்பரிந்துரைகளினூடேயே அதன் செயலாக்கத்திற்கான கல்வியாளர்களின் ஆலோசனைகள்:

இவ்வறிக்கையின் மீதான கலந்தாய்வு நோக்கில் பல்வேறு கல்வியாளர்கள், அறிஞர்கள் அடங்கிய கூட்டம் 4-11-2007 அன்று விழுப்புரத்திலும், 16-12-2007 அன்று சென்னை யிலும் கூட்டப்பட்டது. இவ்விரு கூட்டங்களிலும் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுகள், அதன் மீதான விவாதங்கள், கருத்துரைகள், அடிப்படையில் கீழ்க்காணும் சேதிகள் தொகுத்தளிக்கப்படுகின்றன.

1. சமச்சீர்க் கல்வி என்பது ஒரே பாடத்திட்டம், ஒரே கலைத் திட்டம் என்பதோடு முடங்கிப் போகாமல் அனைத்து மாணவர்களுக்கும் எல்லா நிலையிலும் ஒரே வகையான சமச்சீர்க் கல்வியைத் தர அனைத்துப் பள்ளி களின் அகக்கட்டுமானத்தையும் அதாவது போதுமான ஆசிரியர்கள், இடவசதி, கற்பித்தல், கருவிகள், ஆய்வுக் கூடங்கள் முதலான அனைத்து நிலைகளையும் சமப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுச் செய லாக்கப்படவேண்டும். ஏற்றத்தாழ்வான பள்ளிகளை வைத்துக் கொண்டு, பாட, கலைத் திட்டங்களை மட்டும் சமப்படுத்தி, சமச்சீர்க் கல்வியைக் கொண்டு வந்துவிட முடியாது.

2. மொழி, கணிதம், அறிவியல் ஆகிய மூன்று பாடங் களுக்கும் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பொதுப் பாட நூலை வைத்துக் கொள்ளலாம். தேவையைப் பொறுத்து துணைப் பாடங்களும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் வரலாறு, சமூகவியல் ஆகிய பாடங்கள் அந்தந்த மாவட்டத்திற்கு உரிய சிறப்புத் தன்மையோடும், தனித் தன்மையோடும் அமைய வேண்டும். மாணவர்கள் தாங்கள் வாழும் மண், சமூகம், வட்டார வாழ்வு, அதன் வரலாறு பற்றிய அறிவைப் பெற வழிவகுக்க வேண்டும்.

3. மாணவர்களுக்குக் குடிமைப் பயிற்சி என்பது மிக மிக அவசியம். இதை ஏதோ வெறும் நல்லொழுக்கப் போதனை என்பது போல, அல்லது மதம் சார்ந்த கருத்துத் திணிப்பாகவோ ஆக்காமல், மாணவர்கள் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவர்களாக ஆக்கப்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக தீண்டாமை, சாதியக் கொடுமைகள், பெண்கள் மீதானதும் பொது வானதுமான வன்முறைகள், லஞ்சம், ஊழல் முதலான சமூக நலனுக்குக் கேடான போக்குகள் குறித்து விழிப்பூட்டி அதற்கு எதிரான போராட்ட உணர்வை வளர்க்க வேண்டும். இதற்கு இதுபோன்ற போராளிகளின் வாழ்க்கைகளையும் பாடங்களில் வைக்க வேண்டும். கூடுதலாக நூலக வாசிப்பாகவும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

4. ‘அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 45ஆன வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து, பின் அது 1993 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அடிப்படை உரிமைகள் பிரிவு 21அ பிரிவாகச் சேர்க்கப்பட்டு அதாவது இந்த உரிமைகள் அரசால் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாக ஆக்கப்பட்டு அதன் பிறகும், மேற்கொண்டு அதில் எந்தவித முன்னேற்றமுமில்லாமல் அப்படியே முடங்கிக் கிடக்கிறது. எனவே அரசு, ஏழை, பணக்கார மாணவர்களிடையே, கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும், பள்ளி செல்ல முடியாத அல்லது முடிந்தாலும் தொடர முடியாத குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலையும், சமூக இருப்பு நிலையையும் கவனத்தில் கொண்டு இம்மாறுபட்ட வாழ்க்கைச் சூழலையும், சமூக இருப்பு நிலையையும் கவனத்தில் கொண்டு இம்மாறுபட்ட வாழ்க்கைச் சூழலை மாற்றி அல்லது அச்சூழலுக்கு ஏற்ப உதவிகள் புரிந்து அனைத்துக் குழந்தைகளும் கட்டாய இலவசக் கல்வியைப் பெற வழிவகை செய்ய வேண்டும்.

5. சமச்சீர்க் கல்விமுறையின் பரிந்துரைகள் வெளிவந்த நாளிலிருந்து தமிழகத்தில் உள்ள ஆங்கில வழிப் பள்ளிகள் எங்கே தங்கள் வணிகம் பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில் இதற்கு எதிராகவும், இத்திட்டத்தை முடமாக்கவும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆங்கிலக் கல்வி மோகத்தையும் ஆதிக்கத்தையும் பாதுகாக்க இச்சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் அடங்காத மத்திய இடைநிலைக்கல்வி வாரிய ஊநவேசயட க்ஷடியசன டிக ளுநஉடினேயசல

நுனரஉயவiடிn ஊக்ஷளுநு பாடத் திட்டத்திற்குள் புகுந்து கொள்ளலாமா என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எனவே அரசு இதில் உறுதியாக நின்று ஆங்கில வழிப் பள்ளிகளில் தனியார் கல்வி நிறுவனங்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, சமச்சீர்ச் கல்வியை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும்.

இதற்கு உட்படாத பள்ளிகளின் ஏற்பிசைவைத் திரும்பப் பெறுவதுடன், புதிதாக ஏற்பிசைவோ, நீட்டிப் போ தராமல் அவற்றைச் சமச்சீர்க் கல்வி என்கிற பொது நீரோட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

இத்துடன் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர் களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை, சமச்சீர்க் கல்வியில் படித்தோர்க்கே உயர் மற்றும் தொழில் கல்விகளில் கல்வி கற்கும் உரிமை என்பனவற்றைச் சட்டமாக்கிவிட வேண்டும்.

இப்படியெல்லாம் உறுதிமிக்க நடவடிக்கைகள் எடுத்து, சீரிய முயற்சிகள் மேற்கொண்டு அவற்றைச் செயல்படுத்தினால்தான் சமச்சீர்க் கல்வி வெற்றி பெறும். அதன் நோக்கமும் நிறைவேறும்.

3. வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளோர் பட்டியல்

1. தமிழக அரசு தலைமைச் செயலாளர் (தலைவர்)

2. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் (கல்வி) ஜி.பாலசுப்பிரமணியன். (மாநிலப் பிரதிநிதி)

3. சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வரும் சென்னை சேவா சதன் பள்ளியின் ஆலோசகரும் ஆன விசயலட்சுமி சீனிவாசன் (மாநிலப் பிரதிநிதி)

4. சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் சி.ஜெயதேவ். (கல்வியாளர் பிரதிநிதி)

5. சென்னை பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளிகள் குழுமத்தின் முதல்வர் மற்றும் இயக்குநர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி. (கல்வியாளர் பிரதிநிதி)

6. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் என்.சி.ஆர்.டி - பிரதிநிதிகளாக, தில்லியைச் சேர்ந்த கணித மற்றும் அறிவியல் துறைப் பேராசிரியர் பி.கே.திர்பாடி.

7. இதே நிறுவனத்தின் சமூக அறிவியல் துறைப் பேராசிரியர் அனில்சேத்து.

8. பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் உறுப்பினர்.

9. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உறுப்பினர் செயலாளர்.

4. சமச்சீர்க் கல்வி கடந்து வந்த பாதை

8-9-2006 - சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தரமான நோக்கில் தமிழக அரசு முனைவர் முத்துக்குமரன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை நியமிக்கிறது.

4-7-2006 - 109 பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை முத்துக்குமரன் குழு அளிக்கிறது.

30-11-2009 - 2010-11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளிலும் 2011-12 கல்வி ஆண்டில் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10 வகுப்பு முடிய செயலாக்கவும் சமச்சீர்க் கல்வி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

1-2-2010 - இந்த அவசரச் சட்டம் பின் சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்படுகிறது.

30-4-2010 - இந்தச் சட்டத்தை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்றம் போக; அது இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

2010 - ஜூன் - 2010-11 கல்வி ஆண்டில் முதல் மற்றும்

6 ஆம் வகுப்பில் சமச்சீர்க் கல்வித் திட்டம் செயலாக்கப் படுகிறது.

10-9-2010 - சமச்சீர்க் கல்வி எதிர்ப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்ய, உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியானதே அதில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்து வருகிறது.

22-5-2011 - தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற ஜெ.ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம், சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், தரமற்றதாக இல்லை எனக் கூறி அதன் செயலாக்கத்தை நிறுத்திவைக்க அறிவிக்கிறது.

7-6-2011 - இது தொடர்பாக தமிழகச் சட்டமன்றத்தில் சமச்சீர்க் கல்விச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து அதைச் சட்டமாக்குகிறது.

10-6-2011 - இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து சமச்சீர்க் கல்வி ஆதரவாளர்கள் உயர்நீதிமன்றம் போக உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால் டி.எஸ். சிவஞானம் ஆகிய இருவர் அடங்கிய ஆயம். தமிழக அரசின் சட்டத்திருத்தத்தைத் தடுத்து நிறுத்துகிறது.

14-6-2011 - உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌகான் மற்றும் சுதந்திர குரு ஆகிய இருவர் அடங்கிய கோடை விடுமுறைக்கால ஆயம் கட்டுரையில் கண்டுள்ளவாறு தீர்ப்பளிக்கிறது.

5. சமச்சீர்க் கல்வியும் ஆசிரியர் அமைப்புகளும்

அ.தி.மு.க. அரசு இந்த ஆண்டு சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கைவிட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள், உணர்வாளர்கள், மாணவர் அமைப்புகள் எனப் பல பிரிவினரும் பல போராட்டங்கள் நடத்தினர். என்றாலும் இத்திட்டத்தோடு நேரடித் தொடர் புடைய ஆசிரிய சங்கங்கள் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. ஒரு சில சங்கங்களின் தலைவர்கள் அறிக்கை விட்டதோடு சரி. வேறு எந்த நடிவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதோடு மட்டுமல்ல, தாள் கிழிக்கும் பணியிலும், ஓட்டும் பணியிலும் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

ஏன் ஆசிரியர் சங்கங்கள் இதை எதிர்த்துப் போராடக் கூடாதா, அவர்களுக்குச் சமச்சீர்க் கல்வியில், மாணவர் நலனில் அக்கறை கிடையாதா. வெறும் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வுகளுக்காகப் போராடுவது மட்டும்தான் அவர்கள் வேலையா. இதுபோன்ற கல்விப் பிரச்சினைகளிலெல்லாம் அவர்களுக்கு அக்கறை கிடையாதா, இதில் அவர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாதா.

70கள் 80கள் வாக்கில் ஆசிரியர்கள், ஊதியம் குறைவாகப் பெற்று வந்த காலத்தில் அவர்களிடம் ஒரு போர்க்குணம் இருந்தது. பொதுவான கல்விக் கோரிக்கை களுக்காகவும் அவர்கள் போராடினார்கள். ஆனால் இப்போதோ ஒப்புநோக்கில் நிறைவான சம்பளம். இதனால் போர்க்குணம் போராட்ட உணர்வு என்பது மங்கிப் போய்த் தன்னலமே இலக்காய் தற்குறியாக மாறிப் போயிருக்கிறார்கள். இழப்பதற்கு எதுவுமில்லாத மக்கள் பிரிவினர் தானே போராடுவார்கள். இவர்களிடம்தான் இழப்பதற்கு ஏராளமாய் இருக்கிறதே. எப்படிப் போராடுவார்கள்.

சரி. ஆசிரிய அமைப்புகள்தான் அப்படி இருக் கின்றன. அரசியல் கட்சிகள் பலவும் அவரவர் சக்திக்கேற்ப ஆசிரிய, அரசு ஊழியர் மற்றும் தொழிற் சங்கங்களில் தங்களுக்கு ஆதரவு சக்திகளையோ அல்லது நேரடியாக சங்கங்களையோ வைத்திருக்கின்றனவே மாணவர் அமைப்பை மட்டும் போராட வைத்த இக்கட்சிகள் இந்த சங்கங்களைப் போராட வைத்திருக்கக் கூடாதா. அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரும் அரசு - தமிழ்ப் பள்ளிகளில் படிக்கவில்லையா, அவர்களுக்குச் சமச்சீர்க் கல்வி வேண்டாமா. இது பற்றியெல்லாம் தொழிற் சங்கங்களுக்கு அக்கறையில்லையா...?

தொழிற்சங்கங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சந்தா, போனஸ், பஞ்சப்படி உயர்வால் விழுக்காடு வசூல், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்தல், வாக்களித்தல் நன்கொடை வசூலித்துக் கொடுத்தல் இவ்வளவுதானா. இதைத் தாண்டி சமூக நீதிக்கான அரசியல் அவர்களுக்குக் கிடையாதா. வேண்டாமா. இது பற்றி ஆசிரிய அரசு ஊதிய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சிந்திக்க வேண்டும்.

6. பாடப்புத்தகங்களில் அற்ப அரசியல்

இந்த ஆண்டு சமச்சீர்க் கல்விக்கான பாடப் புத்தகங் களில் 6ஆம் வகுப்புக்கான சமூக அறிவியலில், தமிழகம் கருணாநிதியின் தலைமையில் சீரும் சிறப்புமாக முன்னேற்றம் பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

நான்காம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் அரைப் பக்கம் சென்னை சங்கமம்பற்றிப் பாராட்டி கனிமொழி பற்றியும் சிலாகிக்கப்பட்டுள்ளதாம்.

எல்லா வகுப்புப் பாடப்புத்தகங்களிலுமே செம் மொழி பற்றி கருணாநிதி இயற்றிய பாடல் இடம் பெற்றுள்ளதாம்.

இதுவன்றி சூரியன் பற்றி மாணவர்களுக்குச் சொல்லித் தரும் பாடம் உதயசூரியன் தேர்தல் சின்னம் போல் இருப்பது அல்லது கலைஞர் தொ.கா.இலச்சினை போல் உள்ளது. படங்களுக்கு கருப்பு சிவப்பு வண்ணம் தீட்டுவது என்பது போன்ற சூழ்ச்சியான நடவடிக்கைகள் தனி.

பாடப்புத்தகங்களிலெல்லாம் இப்படிப் பிரச்சாரம் செய்து கட்சியை வளர்த்து விட முடியுமா, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா, அது நிலைக்குமா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். விளம்பரப் பிரியர்கள் எந்த அளவுக்குக் கேவலமாக அற்பத்திலும் அற்பமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டும் ஆகும் இது.

7. தரம் பற்றிய கருத்து

சமச்சீர்க் கல்விக்கான புத்தகங்கள் போதுமான தர மற்றவையாக இருக்கின்றன என்கிற அரசின் வாதம் பற்றியும் கல்வியாளர் மத்தியில் வேறுபட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன.

தரம், தரமின்மை என்பதற்கான அளவுகோல் எது? எதை வைத்துத் தரத்தை நிர்ணயம் செய்வது என்பது போன்ற கேள்விகளை இவர்கள் எழுப்புகிறார்கள். நீதிமன்றமும் இதே கேள்வியை அரசிடம் கேட்டது ‘எதை வைத்து, எந்த அடிப்படையில் சமச்சீர்க் கல்விக்கான பாடப் புத்தகங்கள் தரமற்றவையாக இருக்கின்றன என்று முடிவு செய்தீர்கள். யாராவது வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்தீர்களா. அக்குழு ஏதாவது முடிவு செய்ததா” என்று.

இதற்கு அரசிடம் பதில் இல்லை. ஆகவே தரம், தரமின்மை என்பது அவரவர் நோக்கு, புரிதல் சார்ந்து மாறுபட வாய்ப்புண்டு. எனினும் தரம் என்பது பொதுவில் ஒரு குறிப்பிட்ட வகுப்பு படிக்கும் மாணவன், ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிக் குறிப்பிட்ட இன்னின்ன வற்றை அறிந்திருக்க வேண்டும் என்று பொதுவில் ஒரு கலைத் திட்டம் (ஊரசசiஉரடயஅ) உண்டு. இந்த அடிப்படை யிலேயே ‘தரம்’ என்பது தீர்மானிக்கப்படுகிறது.

இந்த நோக்கிலேயே சமச்சீர்க் கல்விக்கான பாடப் புத்தகங்கள், பழைய முறை சார்ந்து ஏற்கனவே கல்வி பயின்று வந்த மாணவர்களின் கலைத் திட்டத்திற்கு எந்த வகையிலும் குறைவுபடாமல் இருக்க வேண்டும் என்று கோருகிறது. அந்த வகையிலேயே தரத்தை வலியுறுத்தவும் தேவை இருக்கிறது.

Pin It