chitra ramakrishna and anand‘பூதேவர்கள்’ வம்சத்தில் வந்த ‘ஆச்சார சீலர்கள்’ பங்கு சந்தையில் கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொண்ட ‘இதிகாசப் பெருமை’ களை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை, எந்தத் தொலைக்காட்சியும் விவாதக் கச்சேரிகளையும் நடத்தவில்லை. ‘இந்திரா, ஆனந்து, நிர்மலா’ என்று பல ‘வெங்காய பூண்டு’ வெறுப்பாளர்களின் அரவணைப்பில் அரங்கேறிய ‘ஊழல் மகா காவியத்தை’ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிடுகிறது.

தேசியப் பங்குச் சந்தை உருவாக்கம்

மும்பைப் பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம் மற்றும் வங்கிச் செயல்பாட்டு முறைகளில் ஏராளமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மேம்பட்ட பங்குச்சந்தை வணிக முறைகளை உருவாக்க ஃபெர்வானியின் தலைமையில், ஒரு குழுவை அன்றைய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நியமித்தார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின்பேரில், தேசியப் பங்குச் சந்தை என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிர்வாகம், பங்குச் சந்தை வணிகத்தை இணைய வழியே நடத்த முடிவுசெய்தது.

இந்தப் பங்குச் சந்தை, இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் (Securities and ExchangeSecurities and ExchangeBoard of India – SEBI – செபி) கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் ஒன்றாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பெருநகரங்களிலும் தொடக்கத்தில் இணையம் வழியே பங்குகளை வாங்கி விற்கும் வசதி கொண்டு வரப்பட்டது. இது மிக வேகமாக வளர்ந்து, இன்று இணைய வசதி உள்ள உலகின் எந்த மூலையில் இருந்தும், இந்திய தேசியப் பங்குச் சந்தையில் வணிகம் செய்யும் வசதிகள் கொண்டதாக பேருரு கொண்டுள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் மூளையும்- முதுகெலும்பும் தகவல்தொழில்நுட்பம் ஆகும். தன் வணிக வேலை நேரங்களில் 30 ஆண்டுகளில் எப்போதுமே தவறாமல் செயல்பட்டுவரும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திவருகிறது. இதன் ‘அப்-டைம்’ 99.99ரூ என்பதே இதன் அடையாளம். அதேபோல், 1992ஆம் ஆண்டு தொடங்கி அதிகரித்துவரும் விற்பனைச் செயல்பாடு களுக்கு ஏற்ப, தன் செயல் திறனை மேம்படுத்தி வந்துள்ளது தேசியப் பங்குச் சந்தை.

தன் செயல்பாடுகளை 1994ஆம் ஆண்டு தொடங்கிய போது, விநாடிக்கு 2 பங்குப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் செயல் திறன் கொண்டதாக தேசியப் பங்குச் சந்தை இருந்தது. 2001இல் விநாடிக்கு இது 60 ஆக உயர்ந்தது. தற்போது, விநாடிக்கு 1,60,000 பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடிய செயல் திறன் கொண்ட உலகின் மாபெரும் பங்குச் சந்தைகளுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதன் தினசரி வணிகம் 2-3 லட்சம் கோடிகள்.

இதன் முதல் மேலாண் இயக்குநர் ரவி நாராயண், 1994 முதல் 2013 வரை பணிபுரிந்தார். 2013-ம் ஆண்டு, அவர் பதவி விலகி, துணைத் தலைவராக, நிர்வாகப் பொறுப்புகளற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு, அவர் கீழ் பணிபுரிந்த சித்ரா ராமகிருஷ்ணா மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

சித்ராவின் பின்புலம்

சித்ரா ராமகிருஷ்ணா 1984ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றவர். தொடக்கத்தில் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியில் (Industrial Development Bank of India - IDBI) பணிபுரிந்தார். தேசியப் பங்குச் சந்தையை உருவாக்க முடிவெடுத்த இந்திய அரசு, ஐடிபிஐ சேர்மன் நட்கர்னியிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. அவர் தன் கீழ் பணிபுரிந்த அலுவலர்களான ரவி நாரயணையும், சித்ரா ராமகிருஷ்ணாவையும் தேர்ந்தெடுத்து, தேசியப் பங்குச் சந்தை நிறுவன உருவாக்கத்தில் ஈடுபடுத்தினார்.

ரவி நாராயணன் 2013ஆம் ஆண்டு தேசியப் பங்குச் சந்தையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதானது, விதிமுறைகளுக்குப் புறம்பான ஒன்று. இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. இது செபியின் அனுமதியில்லாமல் உருவாக்கப்பட்டது. இது முதல் விதிமீறல்.

அதேபோல, ரவி நாரயண் இடத்தில், புதிய மேலாண் இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா நியமிக்கப்பட்டதிலும், விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை. இது இரண்டாவது விதிமீறல்.

இந்த இரண்டு விதிமீறல்களை பங்குச் சந்தைக் காவலரான செபியும், கண்காணிக்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகமும் ஏன் அனுமதித்தன என்பது பங்குச் சந்தை நிபுணர்கள், நிதிப் பத்திரிக்கையாளர்களின் சந்தேகம்.

தேசியப் பங்குச் சந்தையின் பங்களிப்பு

தேசியப் பங்குச் சந்தை உருவாகும் முன்பு, மும்பை பங்குச் சந்தைதான், இந்தியப் பங்குச் சந்தைகளின் தலைமையிடத்தில் இருந்தது. மும்பையில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்கள், வணிகர்கள், பங்குச் சந்தைத் தரகர்கள், நிழல் உலகத் தாதாக்கள் எனப் பலரும் உலவும் இடமாக இருந்தது.

பங்குச் சந்தைப் பரிவர்த்தனைகள் வெளிப் படையாக இல்லாமல் இருந்தன. சில பெரும் பண முதலைகளின் பிடியில் மொத்த சந்தையும் இருந்தது. இதைத் தாண்டி, தில்லி, கல்கத்தா, சென்னை, கோவை, பெங்களூர், கொச்சி, எனப் பல ஊர்களில் பங்குச் சந்தைகள் இருந்தன. இவை பெரும்பாலும், உள்ளூர் செல்வந்தர்கள் மட்டுமே நுழையக் கூடிய ‘தனி மனித கிளப்’களாக இருந்தன.

ஆனால், இணைய வழிச் செயல்பாடுகளைத் தொடங்கிய தேசியப் பங்குச் சந்தை, பங்குப் பரிவர்த்தனைகளை வெளிப்படையாக்கியது. எவர் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், வெளிப்படையாக பங்குகளை வாங்கி விற்க முடிந்தது. இடைத்தரகர்கள் சொல்வதுதான் இறுதி உண்மை என்னும் விதி தரைமட்டமாக்கப்பட்டது. சந்தைப் பரிவர்த்தனைகள் முதலீட்டாளரின் கண் முன்னே நிகழ்ந்தது. இதனால், இந்தியாவெங்கும் சிறு முதலீட்டாளர்கள் மிக உற்சாகமாகப் பங்கெடுக்க முன்வந்தார்கள்.

இணையப் பங்குப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என வீம்பு பிடித்த மும்பைப் பங்குச் சந்தையும் வேறு வழியின்றி இணைய வழிச் செயல் பாடுகளைத் தொடங்கியது. தொடங்க மறுத்த, முடியாத பல நகரப் பங்குச் சந்தைகள் மாண்டு போயின.

தேசியப் பங்குச் சந்தையானது, இணைய வழிப் பங்குப் பரிவர்த்தனைகள் மூலம், இந்த வணிகத்தைப் பெருமளவு விரிவாக்கி, இந்தியா முழுவதும் உள்ள சிறு முதலீட்டாளர்களும் வெளிப்படையான வணிக முறையில் பங்கெடுக்கும் ஒரு புதிய தொழில் முறையை உருவாக்கியது. ஒன்றிய அரசு நிதித் துறையின் மிகச் சிறந்த கொள்கை முன்னெடுப்பு இந்த நிறுவனம் என்று சொல்லலாம்.

ஆனால், இந்த உருவாக்கத்தில் ஒரு சறுக்கல் என்னவெனில் இது ஒரு தனியார் துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டதே ஆகும். பங்குச் சந்தை வணிகத்தை நடத்தும் இந்த நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் இல்லை. இதன் முதலீட்டாளர் களான தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பாரத ஸ்டேட் வங்கி போன்றவர்கள் பல முறை வற்புறுத்தியும் இந்த நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்வதை தள்ளிப்போட்டு வந்தார் இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா.

ஆனந்த் சுப்ரமணியத்தின் வருகை

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேலாண் இயக்குநராகிய சித்ரா ராமகிருஷ்ணா, சில மாதங் களிலேயே, ஆனந்த் சுப்ரமணியத்தை ஆலோசகராக நியமித்தார்.

இந்த ஆனந்த் சுப்ரமணியம், அரசுப் பொதுத் துறை நிறுவனமான ‘பால்மர் லாரி’யின் துணை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர். வருடம் ரூ. 15 லட்சத்துக்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வந்த இவரை, ரூ. 1.4 கோடி சம்பளம் கொடுத்து ஆலோசகராக நியமித்தார் சித்ரா. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இவர் ஊதியம், 6 முறை உயர்ந்து கிட்டத்தட்ட ரூ. 4 கோடியாகி இருக்கிறது.

வழக்கமாக, தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்படுபவர்களுக்கான தகுதிகள், அனுபவம் போன்ற விதிமுறைகள் உண்டு. அது தவிர, நிறுவனத்தில் பலரும் குறுகிய கால ஆலோசகர்களாக நியமிக்கப்படுவதும் வழக்கமாக இருந்துள்ளது. ஆனந்த் சுப்ரமணியம் ஆலோசகராக, நேரடியான பணி நியமனம் என்னும் வழியில் இல்லாமல், பின்வாசல் வழியே உள்ளே அழைத்து வரப்பட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இவர் தேசியப் பங்குச் சந்தையின் குழுமச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி என்பது, தேசியப் பங்குச் சந்தையின் மிக முக்கியமான நிர்வாகப் பதவி. இந்தப் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனில், அது, பங்குச் சந்தையின் காவலரான செபியிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே செய்யப்பட வேண்டும். ஆனால், இவரது பதவி உயர்வுபற்றிய முன் அனுமதியை தேசியப் பங்குச் சந்தை செபியிடமிருந்து பெறவில்லை. இது அப்பட்டமான விதிமீறல்.

பதவி உயர்வின் பின்னர், தேசியப் பங்குச் சந்தையின் இரண்டாவது உயர் நிர்வாக நிலையை அடைந்தார் ஆனந்த். தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துத் துறைத் தலைவர்களும் ஆனந்த் வழியேதான் சித்ராவைச் சந்திக்க முடியும் என்னும் நிலை உருவானது.

பங்குச் சந்தையைப் பற்றிய துறைசார் அனுபவம் கொஞ்சமும் இல்லாத ஒருவருக்கு, பணியும், ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வும் எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டன என்பது மில்லியன் டாலர் கேள்வி

ஒரே இட வணிக முறை

பங்குச் சந்தையில் எந்தப் புதிய வணிக முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது இந்தியப் பங்குச் சந்தை வாரியமான செபியினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால், 2010ஆம் ஆண்டு, செபியின் முறையான அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல், தேசியப் பங்குச் சந்தை நிறுவனமானது இந்தப் புதிய வணிக முறையைத் தொடங்கியது.

தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தின் சர்வர்கள் இருக்கும் அதே இடத்தில், அங்கே வர்த்தகம் புரியும் பங்குச் சந்தை வர்த்தகர்களின் சர்வர்களையும் வைத்து வணிகம் செய்யும் முறைதான் ‘கோ லொக்கேஷன் வணிக முறை’ (Colocation Trading facility) என அழைக்கப்படுகிறது. இந்த முறையில், மற்ற சில்லறை வணிகர்களைவிடச் சில நுண் விநாடிகளுக்கு முன்பே, வர்த்தகத் தகவல்கள் இந்தப் பெரும் வணிகர்களுக்குக் கிடைக்கும். இந்தச் சாதகம், பெரும்பாலும் கணிணி மென்பொருள் மூலம் இயக்கப்படும் பங்குப் பரிவர்த்தனைகளில், பெரும் லாபம் ஈட்டித் தரும் ஒன்றாகும்.

இந்த முறை தேசியப் பங்கு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிரானது. அதில் வணிகம் செய்யும் அனைவருக்கும் சமநிலை மறுக்கப்படு வதாகும் என நிதித் துறை நிபுணர்கள் பலரும் சொல்கிறார்கள்.

இதில் நிகழ்ந்துவந்த முறைகேடுகளைப் பற்றிய ஓர் அனாமதேயப் புகார் 2015-ம் ஆண்டு, இந்தியப் பங்குச் சந்தை வாரியத்துக்கு வந்தது. இந்தப் புகாரின் ஒரு நகல், ‘மணி லைஃப்’ என்னும் நிறுவனத்தை நடத்திவந்த பத்திரிக்கையாளர் சுசேதா தலாலுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் 2015 ஜனவரியில் வந்த அந்தப் புகாரை விசாரித்த இந்தியப் பங்குச் சந்தை வாரியம் செபி, இது தொடர்பான விளக்கங்களை அளிக்குமாறு தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தைக் கேட்டது. அதற்கு தேசியப் பங்குச் சந்தை நிறுவனம் ஒரு விட்டேத்தியான பதிலைக் கொடுக்க, அதையும் செபி வாங்கி வைத்துக்கொண்டது.

தனக்கு வந்த அனாமதேய கடிதத்தை முன்வைத்து சுசேதா தலால், பங்குச் சந்தை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களிடம் ஆலோசித்தார். அவர்கள் இது போன்ற முறைகேடுகள் நடக்கும் சாத்தியங்கள் உண்டு என்பதை உறுதி செய்தார்கள். எனவே, இந்தப் புகாரை தேசியப் பங்குச் சந்தைக்கு அனுப்பி, இதுபற்றிய விளக்கங்களைக் கோரினார் சுசேதா தலால். ஆனால், பல மாதங்களாகியும் பதில் வராததால், தனக்கு வந்த அனாமதேய கடிதத்தை, ‘மணி லைஃப்’ இதழில் பிரசுரித்து, இதுபற்றிய மேலதிகத் தகவல்களைத் திரட்டலானார்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்