தமிழ்நாட்டில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மாநில உரிமைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழுத்தமாகக் குரல் கொடுத்து வருவது, பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு கடும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கி வருவதை உணர முடிகிறது. அண்மையில் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்வில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய ஆட்சி முடக்கி வைத்துள்ளதை பட்டியலிட்டுப் பேசியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் பிற மாநிலங்களுக்கும் பரவிடக் கூடும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. - பார்ப்பனிய சனாதன ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

அண்மையில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத், மதுரை ஆதீனம், ஜீயர்கள், சாமியார்களைக் கூட்டி ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது. தமிழக அரசை மிரட்டியுள்ளதோடு, திராவிடர் இயக்கக் கோட்பாடுகளையும் கண்டித்து ‘துறவிகள்’ பேசியிருக்கிறார்கள். ‘பாரத நாடு’ என்றுதான் பாரதி பாடியிருக்கிறாரரே தவிர, ‘பாகிஸ்தான்’ என்று கூறவில்லை என்றும், கோயில் சொத்துகளை தி.மு.க.வினர் கொள்ளை அடிக்கிறார்கள் என்றும், கோயில்களை அறநிலையத் துறையிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சொற்சிலம்பம் ஆடியதோடு மோடியையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ‘பாரத் மாதாக்கிஜே’, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சைவ மடங்கள், இப்போது ஆர்.எஸ்.எஸ். பாசறைகளாக மாற்றப்பட்டுள்ளன. சைவ அறிஞர்களான மறைமலை அடிகளார், காசு. பிள்ளை போன்றவர்கள் ‘இந்து’ மதத்தை ஏற்காதவர்கள். “தமிழ் மரபில் உருவான சைவம், வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தது. தமிழை முதன்மையாக்கி ஜாதி மறுப்பை வலியுறுத்திய சைவம் பிறகு ஜாதிய கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டது” என்கிறார் சைவம் குறித்த ஆய்வாளர் நல்லூர் சரவணன். குன்றக்குடி அடிகளார் இந்த ஜாதி மறுப்பு மரபையே பின்பற்றினார். இந்து அறநிலையத் துறை என்று பெயர் சூட்டப்பட்டபோது அதை சைவ அறிஞரும் சட்ட வல்லுநருமான காசு (பிள்ளை) எதிர்த்தார். திராவிட அறநிலையத் துறை என்று பெயர் சூட்ட வற்புறுத்தினார். அந்த சைவ மட ஆதீனம், வர்ணக் கட்டமைப்பை நியாயப்படுத்தும் ‘இந்து’த்துவாவுக்கு ஆதரவாகப் பேசக் கிளம்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பார்ப்பனர் உள்ளிட்ட தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் சொத்துகளை மீட்டுள்ளதோடு துறை அமைச்சர் சேகர் பாபு ‘இந்து’ மத பக்தர்கள் மனம் குளிரும் செயல்பாடுகளை முடுக்கி விட்டிருக்கிறார். ஆளும் கட்சி மீது இந்து எதிர்ப்பு அடையாளத்தைப் பயன்படுத்த முடியாமல், கவசமாகக் காத்து வருகிறார் என்றே கூறலாம். நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருந்த ‘பல்லக்கு சவாரி’யை மீண்டும் தொடங்கியது தருமபுரம் ஆதீனமடம். தமிழக ஆளுநரும் தெலுங்கானா ஆளுநரும் மடத்துக்குப் போய் ஆதீனத்தை சந்தித்தார்கள். பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பாசறைகளாக இந்த மடங்களை மாற்றிக் கொண்டு பல்லக்கு சவாரியை நியாயப்படுத்தினார்கள். தங்களுக்கு கொலை மிரட்டல் இருப்பதாக பிரதமர் மோடியை சந்தித்து மனு தந்திருக்கிறார், மதுரை ஆதீனம். கோயில் சொத்து கொள்ளைப் போகிறது என்று கூக்குரலிடுகிறவர்கள் - அயோத்யா மண்டபத்தை தனியாரிடமிருந்து அரசு மீட்டால், பா.ஜ.க. போராட்டம் நடத்துகிறது. நாம் அனைத்து மடங்களையும் குற்றம்சாட்ட வில்லை; விலகி நிற்கும் மடங்களும் இருக்கின்றன.

ஆதீனங்கள் இப்படி ஒரு பக்கம் அரசியல் நடத்த, ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி, ஒன்றிய ஆட்சியின் தேசிய கல்விக் கொள்கைகளை தமிழ்நாட்டில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பெருமைப்படுத்திப் பேசி வருகிறார். அந்தக் கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் படிக்காமலே குறை கூறுவதாக தமிழக அரசையும் கல்வியாளர்களையும் இயக்கங்களையும் சிறுமைபடுத்துகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு இந்த உரிமையில்லை என்று பேரறிவாளன் வழக்கில் திட்டவட்டமாக தெரிவித்து, ஆளுநரை மறைமுகமாகக் கண்டித்தும் தனது ‘சட்ட மீறலையும்’ அதிகார ஆணவத்தையும் மாற்றிக் கொள்ள தயாராக இல்லை.

இன்னொரு பக்கம் அண்ணாமலை என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி, தமிழக பா.ஜ.க. தலைவராக அதிரடி அரசியல் நடத்துவதாகக் கருதி, தரம் தாழ்ந்த பேச்சுகளை உதிர்த்து வருகிறார். அரசுக்கு கெடுவிதித்து சவால் விடுகிறார். ஊடக விளம்பரத்தில் ஒவ்வொரு நாளும் இடம் பெறுவதே பா.ஜ.க. வளர்ச்சி என்ற கற்பனையில் மூழ்கியுள்ள அவரது செயல்பாடுகள் எதிர் விளைவுகளை உருவாக்கி விட்டன. அவர்கள் ‘மலை போல’ நம்பியுள்ள அ.இ.அ.தி.மு.க.விலிருந்தே பா.ஜ.க. எதிர்ப்புக் குரல் வெடிக்கத் தொடங்கி விட்டது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்த பா.ம.க.வும், பா.ஜ.க.விடம் எச்சரிக்கையாக விலகி நிற்க வேண்டும் என்று அதன் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தொண்டர்களை வெளிப்படையாகவே எச்சரிக்கிறார். மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக அண்ணாமலை நடத்தும் நாடகங்கள் அக்கட்சியை கூட்டணி யிலிருந்தே தனிமைப்படுத்தி வருகிறது. இதுவே அண்ணாமலையின் தலைமை சாதனை.

தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜ.க. தான் என்ற ‘பிம்பம்’ பார்ப்பனர்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி என்றாலே, பார்ப்பனர்களுக்கு குமட்டுகிறது. எந்த ஆயுதத்தை எடுத்தாவது வீழ்த்தியாக வேண்டும் என்று ‘அனலில் இட்ட புழுவாக’ துடிக்கிறார்கள். சட்டமன்றம், உள்ளாட்சி என்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள் பார்ப்பனர்கள். 1937இல் 7 மாகாண சட்டசபை முதல்வர்களில் 6 பேர் பார்ப்பனர்கள். இராஜகோபாலாச்சாரியார் முதல்வராக இருந்த காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இன்று இந்தியாவிலேயே ஒரு பார்ப்பனர்கூட சட்டசபை உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இதனால்தான் ‘பெரியார் மண்’.

இந்த வரலாற்றுச் சூழலில், ஆதீனங்கள், ஆளுநர், அண்ணாமலை என்ற முக்கூட்டு அணி மதவாதம் அரசியல் அதிகாரம், ஆட்சி எதிர்ப்பு என்ற தளத்தில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.

திராவிட - பெரியாரியப் பார்வையில் தமிழ்நாடு கடந்து வந்த சமூக, வரலாற்றுப் பாதையையும் அதன் இலக்கினையும் இளைஞர்களிடம் கொண்டு சென்று அதற்கான பரப்புரை இயக்கங்களை முடுக்கி, இந்த பார்ப்பன சதியை வீழ்த்தியாக வேண்டும்.

குறிப்பாக, இளம் பெண்களைத் திரட்டி அவர்களை பரப்புரையாளர் களாக உருவாக்கி, சமூக மாற்றத்தின் முன் வரிசைப் படையாக பெண்களை உருவாக்குவது மிகச் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் என்பது நமது உறுதியான நம்பிக்கை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It