40.1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் இந்திரா காந்தி. எமர்ஜென்சி காமராசரையும் கலைஞரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் வெவ்வேறு காலங்களில் இந்திரா காந்தியை ஆதரித்ததற்கு இன்று நாடு விலை கொடுக்கிறது என கலைஞரிடம் கூறினார் காமராசர்.
41.எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகின. எமர்ஜென்சிக்கு எதிராக காமராசரின் கருத்துக்களை முரசொலியில் வெளியிட்டார் கலைஞர். காமராசரின் கருத்துக்கள் முரசொலியில் முதல்முதலாக வெளியானது அப்போதுதான்.
42. சென்னை கடற்கரையில் பல லட்சம் மக்களை திரட்டி அனைவரையும் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக உறுதி ஏற்க வைத்தார் கலைஞர்.
43 . மத்திய தகவல் தொடர்பு துறை விடுதலை, முரசொலி ஏடுகளை தணிக்கை செய்தது. அகில இந்திய வானொலியில் தலைமை செய்தியாளராக இருந்து ஓய்வு பெற்ற சங்கராச்சாரி சீடர் சவுமி நாராயணன் என்ற பார்ப்பனர், விடுதலை முரசொலி ஏடுகளின் தணிக்கை அதிகாரியாக இருந்தார். “அண்ணாவை பெற்ற தாயை விட நேசிக்கிறேன்” என்று கலைஞர் எழுதிய வாசகத்தை அந்த பார்ப்பனர் முரசொலியில் நீக்கியவுடன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். கலைஞர் உடனே தொண்டர்களுடன் வீதிக்கு வந்தார், அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தணிக்கை அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடக்கும் என்று அறிவித்தார். மூன்று கிலோ மீட்டர் தூரம் அந்த ஊர்வலம் சென்றது. காவல்துறை ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கைது செய்தது, நான்கு மணி நேரம் நடந்த அந்த போராட்டம் தான் இந்தியாவிலேயே அவசர நிலைக்கு எதிராக நடந்த முதல் மக்கள் திரள் போராட்டம்.
44. முரசொலி நாளேட்டில் பத்திரிகை தணிக்கை துறையை கேலி செய்யும் எட்டு கால தலைப்பு செய்திகளை இரண்டு நாள் தொடர்ச்சியாக கலைஞர் வெளியிட்டார். ”வெண்டைக்காய் உடலுக்கு நல்லது, விளக்கெண்ணை உடல் சூட்டை தணிக்கும்” என்று வெளிவந்த அந்த தலைப்பு செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார். முரசொலி ஏட்டில் கார்ட்டூன் வரைந்து வந்த செல்லப்பா என்பவர் இந்திரா காந்தியை ஹிட்லராக சித்தரித்து கார்ட்டூன் வரைந்ததற்காக அவரது கார்ட்டூன் தடை செய்யப்பட்டது. பிறகு கலைஞரே கருத்து படங்களை வரையத் தொடங்கினார்.
45 மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக தோழர்களின் பட்டியலை முரசொலியில் வெளியிட தணிக்கை துறை அனுமதி மறுத்தது. அப்போது அண்ணா நினைவு நாள் வந்தது, அண்ணா நினைவிடத்திற்கு ’மலர் வளையம் வைப்பதற்கு வர இயலாத தோழர்கள்’ என்ற தலைப்பிட்டு கலைஞர் கைதானவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.
46. அவசர நிலை பிறப்பித்தவுடன் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே நடந்தது. அப்போது பாதுகாப்புக்காக தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் தேடி பல வட மாநில தலைவர்கள் வந்தார்கள். கலைஞர் அவர்களை பாதுகாத்தார், அவர்களில் ஒருவர் சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
47. 1976 ஜனவரி 31 அன்று ஒரு பள்ளி விழாவில் பேசிய முதல்வர் கலைஞர் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் இதுவே எனது கடைசி பேச்சாக இருக்கலாம் என்றார். விழா முடிந்து திரும்புவதற்கு முன்பு ஆட்சி கலைக்கப்படலாம் என்பதால் அடைக்கலம் தேடி வந்த பெர்ணாண்டஸை தமிழ்நாட்டை விட்டு பாதுகாப்பாக வேறு மாநிலத்திற்கு சென்று விட ஆலோசனை கூறினார். கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் பெர்னாண்டஸ் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டார்.
48. 1979-இல் திமுகவையும் அதிமுகவையும் இணைக்க பிஜு பட்நாயக் முயற்சி மேற்கொண்டார். கலைஞரையும், எம்ஜிஆரையும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கலைஞரும் அன்பழகனும் 6 நிபந்தனைகளை வைத்தனர். பெயர் திமுக எனதான் இருக்க வேண்டும், அதிமுக கொடியில் அண்ணா இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளலாம், பொருளாதார இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் போன்றவை அதில் முக்கியமானவை.
49. திமுக - அதிமுக இணைப்புக்கு சம்மதம் தெரிவித்த எம்ஜிஆர் 2 கட்சிகளின் பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெற்று இணைத்துக் கொள்ளலாம் என பிஜு பட்நாயக்கிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என மறுநாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறிவிட்டார் எம்ஜிஆர்.
50. 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்து 3 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. மத்தியில் போஃபர்ஸ் ஊழலால் ராஜீவ் காந்தியின் அரசும் ஆட்டம் கண்டது. ராஜீவ் காந்திக்கு எதிராக தேசிய முன்னணியை ஏற்படுத்தினார் வி.பி.சிங். அதில் திமுகவும் ஒரு அங்கமாக இருந்தது.
51. 1989 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று கலைஞர் முதல்வரானார். வி.பி.சிங் உள்ளிட்ட தேசிய முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்றார் கலைஞர்.
52. பெண்களுக்கு சொத்துரிமை, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி, கைம்பெண்கள் மறுமண நிதி, ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு நிதி, கர்ப்பிணிகளுக்கு நிதி போன்ற திட்டங்களை அந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தினார் கலைஞர்.
53. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்தது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவாக்கம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக் கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.
54. நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டதும் அப்போதுதான்.
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்