உத்திரப் பிரதேசத்தில் ஒரு நீதிபதி சட்டத்தையும் சோதிடத்தையும் ஒன்றாக இணைத்து தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. பாலுறவு வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண் நீதி கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார், அலகாபாத் நீதிபதி அந்த பெண்ணை பாலுறவுக்கு உள்ளாக்கியவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்ப்பை வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது, எனவே நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த நீதிபதி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் சோதிடத் துறைக்கு இரண்டு பேர் ஜாதகத்தை எடுத்துச் சென்று அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்று ஒரு வினோதமான தீர்ப்பை கொடுத்து விட்டார்.

இந்த தீர்ப்பை சமூக வலைதளங்களில் பார்த்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவசர அவசரமாக நீதிபதிகள் குழு ஒன்றை அமைத்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். நீதிபதிகள் குழு சட்டத்தையும் சோதிடத்தையும் இணைக்கின்ற அலகாபாத் உயர்நீதிமன்றதிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

அரசு வழக்கறிஞர் இந்த தீர்ப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிட்டார், அதனைத் தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் சோதிடத் துறை இந்த பஞ்சாங்கத்தை பார்க்க கூடாது என்றும் தடை விதித்து இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மூடநம்பிக்கைகளும் அறிவியலுக்கு எதிரான சிந்தனைகளும் நிறைந்த ஒரு மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருப்பதன் காரணமாகத் தான் இத்தகைய நீதிபதிகள் உயர்நீதிமன்ற பதவிகளில் வந்து அமர்ந்து கொண்டு மூடநம்பிக்கைக்கு சட்ட முலாம் பூசிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த தீர்ப்பு சட்டத்தை அதன் நோக்கங்களை கேலிக்குரியதாகிவிட்டது.

இனி திருட்டு வழக்குகள் கூட இத்தகைய நீதிபதிகளுக்கு முன் வந்தால் அவர்கள் மந்திரவாதிகளிடம் போய் கேட்டுப்பாருங்கள், வெற்றிலையில் மை போட்டு பாருங்கள் என்றெல்லாம் தீர்ப்பு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கொலை வழக்குகள் வந்தால் அது அவருடைய முன் ஜென்மத்தின் பலன் என்று தீர்ப்பு கூறினாலும் வியப்பு இல்லை. இந்துத்துவா ஆட்சியில் நாடு எவ்வளவு பிற்போக்குத்தனமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பு ஒரு சாட்சியமாகும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It