நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலை.யில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புப் பதிவாளராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (60) பல்கலை நிதியை களவாடியது உள்பட அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்தி, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பரிந்துரை செய்தது.

உயர்கல்வித் துறை பரிந்துரையை எதிர்த்து தங்கவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, "உயர்கல்வித் துறை பரிந்துரை மீது பெரியார் பல்கலை. எடுத்த நடவடிக்கை என்ன?. உயர்கல்வித் துறை பரிந்துரை செய்தும் பல்கலை. பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்கல்வி செயலாளரின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் ஜெகநாதன் அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்?,” இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன், வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இதில் கூட்டுச் சதி உள்ளதாகவும் வழக்கு தொடர்பாக மார்ச் 14-ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். கூடாராமாக மாறிக் கொண்டிருக்கும் பெரியார் பல்கலை.யில் நிதி மோசடிகளால் நிர்வாகம் பாதிக்கப்படுவதை தடுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து பணிகளை தொடர வேண்டுமென்று கழகத் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- பெ.மு. செய்தியாளர்

Pin It