salem dvk meeting

• திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது.

• மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன.

• காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை மீட்பே என்ற உண்மையை இவைகள் உணர்த்தின.

• மாநாட்டு அரங்கைச் சுற்றிலும் பெரியார் சிலை அமைந்த பகுதி களும் ஏராளமான கழகக் கொடிகள் கட்டப்பட்டு பட் டொளி வீசி பறந்து கொண் டிருந்தன.

• டயர்களில் காகிதங்களை ஒட்டி, வட்ட வடிவமான விளம்பரப் பலகையாக்கி, அதில் கருத்துகளை தோழர்கள் எழுதி வழி நெடுக மக்கள் பார்வைக்கு வைத் திருந்தனர்.

• மாநாட்டு அரங்கம் முழுதும் கழக சீருடையுடன் (நீல ஜீன்ஸ் பேண்ட், கருப்புச் சட்டை) திராவிடர் விடுதலைக் கழக இளைஞர்கள் பெண்களும் ஆண்களுமாக நிரம்பி வழிந்தது கண்கொள்ளாக் காட்சி யாகும். பெரியாரியம் தலை முறைகளைக் கடந்து வாழ்வியல் தத்துவமாகி சமுதாய விடுதலைப் போராட்டத்துக்கு புதிய தலை முறை அணியமாயிருப்பதையும் இந்தக் காட்சி உணர்த்தியது.

• மாநாட்டில் கழகத்தின் மாத இதழ் ‘நிமிர்வோம்’ கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி, ‘தலித் முரசு’ வெளியீடான அம்பேத்கர் உரைகளடங்கிய ‘நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’ நூல் ஆகியவை வெளியிடப்பட்டன.

• நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கடும் பணப்புழக்கம் தொழில் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய நிலையிலும் கழகத் தோழியர்களும் தோழர்களும் மாநாட்டில் பெரும் எண்ணிக்கை யில் திரண்டிருந்தனர்.

• காலை கருத்தரங்கம் முடிவடைந் தவுடன் இடைவெளியின்றி ‘விரட்டு’ நாடகக் குழுவினரின் நாடகம்  மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. நாடகமும் பாடல்களும் தோழர்களை உணர்ச்சிக்குள்ளாக்கின.

• மதிய உணவிற்கு அசைவ உணவை குறைந்த விலையில் கிடைக்க மாநாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

• மாநாட்டையொட்டி சேலம் மாநகர் முழுதும் கடைகடையாகச் சென்று மாநாட்டு துண்டறிக்கை களை கொடுத்து தோழர்கள் நன்கொடை திரட்டினர். நகரத்தில் 20,000 மக்களிடம் துண்டறிக்கை களும், ‘வேத மரபை ஏன் எதிர்க்க வேண்டும்’ என்று துண்டறிக்கை யில் தந்துள்ள விளக்கங்களும்  போய்ச் சேர்ந்ததை தோழர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.

10 ரூபாய், 20 ரூபாய் என்று சாதாரண மக்களிடம் நன்கொடைகள் திரட்டப்பட்டன. மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கங்களை அளித்தனர். இதுவே மிகச் சிறந்த பரப்புரைக் களமாகவும் மாறியது.

• அடிமைச் சின்னமான தாலி யகற்றும் நிகழ்வுகள் இதுவரை பெரியார் மேடைகளில் கணவர்களே நீக்குவதாக இருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழியர்கள் இன்னும் கூர்மை யாகச் சிந்தித்து, “அது வேண்டாம்; இதை நாங்களே அகற்றுவதுதான் சரியானது” என்று கூறி, அவர்களே அடிமைச் சின்னத்தை கணவர் முன்னிலையில் அகற்றிக் கொண் டனர். இது தாலியகற்றும் நிகழ்வுக்கு புதிய பார்வையைத் தந்தது.

• வடலூர் சுத்த சன்மார்க்க சங்கத் தின் தலைவர் படப்பை இரா. பால கிருஷ்ணன், வள்ளலாரின் வேத மறுப்பு கருத்துகளை விரிவாக எடுத்துரைத்து திராவிடர் இயக்கத் துடன் இணைந்து இதைப் பரப்ப வேண்டும் என்று அழுத்த மாகப் பேசினார். வள்ளலார், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்து தவறானது என்றும், அவர் சாகா நிலை அடைந்தார் என்பதே தன்னுடைய கருத்து என்றும் மேடையிலேயே பதிவு செய்தார்.

• 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின்போது பார்ப்பன ஏடுகள் பெரியாருக்கு எதிராக அவதூறுகளை பரப்பின. அப்போது குன்றக்குடி அடிகளார் பெரியார் பக்கம் நின்று, “இன்றைக்கு ஆத்திகம் என்பது உயர்ஜாதி நலன் காப்பது; நாத்திகம் என்பது பார்ப்பனரல்லாதார் நலன் காப்பது” என்று கூறியதை, தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் சுட்டிக் காட்டினார். திறந்தவெளி மாநாட்டில் பெரியாரும் குன்றக் குடி அடிகளாரும் இணைந்துள்ள படம் பதாகையாக அமைக்கப் பட்டிருந்தது.

• மாநாட்டின் பேரணிக்கு முதலில் அனுமதித்த காவல் துறை மாநாட் டின் முதல் நாள் இரவு 10 மணியளவில் திடீரென அனுமதி மறுத்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர்களுடன் சென்று மாநகர ஆணையாளரிடம் பேசினார். வழக்கம்போலவே இது மேலிட உத்தரவு என்று அதிகாரிகள் கூறினார்கள். அதைத் தவிர அவர் களிடம் வேறு விளக்கமில்லை. பார்ப்பனர்களும் இந்துத்துவ அமைப்புகளும் பேரணிக்கு அனு மதிக்கக் கூடாது என்று காவல் துறைக்கு ஏராளமாக புகார்களை அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.

• இனி மதவாத நிகழ்வுகள், இந்து முன்னணி அமைப்புகள், மக்களுக்கு இடையூறாக நடத்தும் பரப்புரை, சட்ட விதிகளை மீறி ஒலிபெருக்கி அலறலுக்கு அனு மதிப்பது குறித்து கழகத் தோழர்கள் கண்காணித்து ஒவ்வொரு முறை யும் காவல் துறைக்கு எதிர்ப்பு களைத் தெரிவிக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீண்டும் வலியுறுத்தினார்.

• மேடை அருகே கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணிக்கு தோழர்கள் வழங்கிய ‘மகிழுந்து’ தனி மேடையில் நிறுத்தப்பட் டிருந்தது.

• கழக ஏட்டுக்கான நன்கொடை திரட்டல், வாகனம் மற்றும் தலைமைக் கழகத்துக்கு ஆட்டோ வாங்குதல் உள்ளிட்ட கட்டமைப்பு செலவுகளுக்கு நிதி திரட்டும் பணியில் அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,  பொரு ளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் இரண்டு வார காலம் கழகத் தோழர்களை நேரில் சந்தித்து நிதி திரட்டுவதில் கடுமையாக பணியாற்றினார்.

• மாநாட்டின் தலைப்புகளும் உரைகளும் அடர்த்தியாகவும், தெளிவாகவும், வேதமரபு எதிர்ப்பு வரலாற்றை வெளிச்சம் போட்டு காட்டியதாகவும் பல கழகத் தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.

• கடும் பனி, குளிர் காற்றுக்கிடையே அவற்றைப் பொருட்படுத்தாது, பொது வெளி மாநாட்டில் தோழர்கள் கருத்துகளை செவிமெடுத்தனர்.

• சேலம் மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் செந்தில் (எப்.டி.எல்.), அருண், பிரபாகரன், ஏசுகுமார், விவேக் மனோகர், சு. குமார், அசோக் ஆகியோர் ஒரு வாரத்துக்கு முன்பே சேலம் சென்று மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். காலை மாலை இரு வேளையிலும்  கடைகடையாகச் சென்று பல்லா யிரக்கணக்கான துண்டறிக்கை களை வழங்கி நன்கொடை திரட்டினர். மாநாட்டுக்கு அடித்தளமாக முழு பொறுப்பேற்று செயல்பட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் அலுவலகத் திலேயே தோழர்கள் தங்கி மாநாட்டுப் பணிகளை செய்தனர். மாநாட்டுப் பணியில் மக்களை சந்தித்தது மறக்கவியலாத மகிழ்ச்சியான  நினைவுகளாக மனத்தில் பதிந்து விட்டதை தோழர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

• ‘வேத மரபை மறுப்போம்; வெகு மக்கள் உரிமை மீட்போம்’ என்ற முழக்கம், மாநாட்டின் முழக்கமாக முன் வைக்கப்பட்டது. இதே முழக்கத்தை முன் வைத்து பள்ளத்தூர் நாவலரசன் எழுதிய பாடலை காலை மாலை இரு அரங்குகளிலும் உணர்ச்சியுடன் பாடினர்.

• காலத்தின் அறைகூவலை சந்திக்க தோழர்கள் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்களை நெஞ்சில் ஏற்றி உற்சாகத்துடன் ஊர் திரும்பினர், கழகச் செயல் வீரர்கள்.

களங்கள் காத்திருக்கின்றன.

தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

Pin It