மக்களைப் பாடும் கவிஞன் யாரடா - தமிழ்
மண்ணைப் பாடும் கவிஞன் யாரடா
செக்கினைப் போல உழைக்கும் மானிடா - அவன்
செந்தமிழ் பாரதி தாசன் தானடா (மக்களைப்)

ஏழை வாழ வெளிச்சம் கேட்டவன் - தினம்
ஏங்கு வோரின் உரிமைப் பாட்டவன்
வாழை போல மனசு கொண்டவன் - வறுமை
வற்றப் பாடும் புதுமை வண்டவன் (மக்களைப்)

தீயைப் போலச் சுத்த மானவன் - பகைத்
தீய வர்க்கு வெப்ப மானவன்
தாயைப் போல மென்மை யானவன் - தாய்க்
குலத்தைப் பாடும் மேன்மை யானவன் (மக்களைப்)

சாதி மதத்தைச் சாய்க்கப் பாடினான் - பொய்ச்
சாமி சடங்கை தினமும் சாடினான்
நீதி நேர்மை நிலைக்கப் பாடினான் - தமிழன்
நிலையை எண்ணித் தினமும் வாடினான் (மக்களைப்)

புரட்சிக் கவியில் உரிமைப் பேச்சடா - கண்ட
தமிழி யக்கம் உணர்வின் வீச்சடா
குடும்ப விளக்கு பெண்ணின் மூச்சடா - அவன்
கவிதை என்றும் மின்னல் வீச்சடா (மக்களைப்)

Pin It