கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை, மூலதனம், இன்னுமுள்ள மார்க்சிய ஆய்வுகள் இலக்கியங்கள் யாவும் முதலாளியமும் தனி மூலதனமும், நிரந்தர மானதாய் அழியக் கூடியது. தகர்க்கப்பட வேண்டியது.

முதலாளிகள் ஒருவருக்கொருவர் சந்தைகள். ஒன்றுக்கொன்று பகை முரண்பாடு கொண்டவை.

முதலாளிகள் சந்தைகளின் எல்லைக் கோட்டுக்குள் சிக்கி சிதைபவர்கள், அவர்களுக்கு இழப்பதற்கு சந்தையும் மூலதனமும் இருக்கும்.

தொழிலாளர்கள் உலகளாவியவர்கள் இழப்பதற்கு ஏதுமில்லாதவர்கள், வென்று பெறுவதற்கோர் பொன்னுலகமுண்டு.

கண்டடைந்ததும் நிலை நிறுத்த விரும்பியதுமான கருத்துகள் மேலுள்ளவையே.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை அதன் ஆழ அகலங்களோடு புரிந்து கொள்ள வேண்டுமானால் அக்காலகட்டத்தின் சமூக பொருளாதார சூழலை சற்று விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பேராசான் கார்ல் மார்க்ஸின் கருத்துக்கள் உருக் கொண்ட 19ம் நூற்றாண்டின் தொடக்கமானது; உலகெங்கும் காலணி ஆதிக்கம் கோலோச்சிய காலமாகும். காலணியவாதிகள் குடியேற்ற நாடுகளுக்காகவும் சந்தைக்காகவும் இடைவிடாது போரிட்டுக் கொண்டிருந்த காலம்.

அன்றைய நிலையில் உலகளாவிய அளவில் முதலாளிகள் மூலதன சக்திகள் ஒன்று சேரவோ இணைந்து செயலாற்றவோ எந்த அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. முன்பே சொன்னது போல உலகளவில் ஒன்றுபடுவதற்கான தேவை ஒடுக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் களுக்கே இருந்தது.

எனவேதான் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! என்ற முழக்கம் எழுந்தது. தொழிலாளர்கள், கம்யூனிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைந்து அகிலங்கள் எல்லாம் உருவான பிறகு இடைவிடாத சந்தைக்கான யுத்தங்களில், ஒருபுறம் சோசலிச நாடுகளும், இன்னொருபுறம் நாகசாகி ஹிரோசிமா க்களும் உருவான பிறகுதான் முதலாளிகள் உலகளவில் ஒன்று சேர வேண்டிய தேவையை உணர்ந்தனர். ஆரம்பத்தில் அவர்களது உலக ஒருங்கிணைப்புக்கான அப்பாவி வடிவங்களை கேள்விப்பட்டால் வியப்பாக இருக்கும்.

1905ல் அமெரிக்காவில் தொழில் நகரமான சிக்காகோவில் உருக் கொண்ட ரோட்டரி கிளப்பே அநேகமாக உலகின் முதல் சர்வதேசிய மூலதனச் சார்பு அமைப்பாகும். 1917ல் லயன்ஸ் கிளப் 1919ல் லீக் ஆப் நேசன்ஸ் இப்படியாக தொடங்கியவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945ல் ஐ.நா.அவை தோற்றத்திற்குப் பிறகு மூலதன சக்தி சுரண்டலாளர்களின் சுரண்டலை மறைப்பவர்களின் எந்த பிரிவுக்கும் உலகளவில் அமைப்புகள் இல்லாமல் இல்லை. இன்றைக்கு அநேகமாக சமூக பொருளாதார தனி வாழ்வின் எல்லா அம்சங் களையும் அதற்கான சர்வதேசிய அமைப்புகளே கொள்கை வகுத்தல், ஆலோசனை வழங்குதல், கடனுதவி, நிதியுதவி என்கிற பெயர்களால் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக மருத்துவ துறையென்றால் உலக சுகாதார நிறுவனம், இந்த அமைப்பே உலக நாட்டு மக்கள் அனைவருடைய நலவாழ்வையும் தீர்மானிக்கிறது.

 இதன் செயல்பாட்டில் அந்தந்த நாட்டு மக்களின் திணை மருத்துவத்திற்கு இடமில்லை, என்ன விந்தை இது. இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இந்த காலை நேரத்தில் இப்போது வெளிவந்திருக்கும் இன்றைய செய்தித் தாள்களில் போலியோ சொட்டு மருந்து போட்டு சென்னையில் 2 வயது குழந்தை ஜோஸ்வா இறந்து போனதாக செய்தி வெளி வந்துள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்தை போட வேண்டும் என தீர்மானித்தது யார்? மேற்குறிப்பிட்ட உலக சுகாதார நிறுவனம்தான். நிதி உதவி என்ற பெயரில் இதனை நிறைவேற்றுவது ரோட்டரி இண்டர்நேசனல்.

மருத்துவத்தில் மட்டுமல்ல, “கல்வி, தொழில் நுட்பம், அறிவியல், கணக்கு தணிக்கை, அறிவு சார் சொத்துரிமை, உற்பத்தி, சந்தை ஒழுங்கமைவு, பண மதிப்பு...'' இப்படி எல்லா வற்றையும் தீர்மானிப்பது மேற்குறிப்பிட்ட உலக அமைப்புகள்தான். இந்த உலக அமைப்புகளை தீர்மானிப்பதோ முதலாளிகளின் மூலதனத்தின் நவீன உருவான பன்னாட்டு கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள்.

இப்படி உலக அளவில் மூலதன சக்திகள் ஒன்றி ணைந்து உலக சந்தையை, சுரண்டலை நடத்தி வருகிற இன்றைய நிலையில் உலகத் தொழிலாளர் ஒற்றுமையோ ஒடுக்கப்பட்டோர்க்கான உலக ஓர்மையோ அகிலங் களோ அரூபமாகி விட்டன.

இப்படி இல்லாவிட்டால் ஈழத்தில் ஒன்றரை லட்சம் பேர் மிருக வெறிக்கு இரை யான போது ஒடுக்குமுறை ஒழிப்பை, சுரண்டல் அழிப்பை நோக்கமாகக் கொண்ட பொதுவுடைமை நாடுகளான சீனாவும், ருஷ்யாவும், கியூபாவும் ராஜபக்சேவை ஆதரித்து இருக்க முடியுமா?

ஆக, பேராசான் மார்க்ஸ் காலத்தில் மாமேதை லெனின் யுகத்தில் சுரண்டுவோர் பிளவுபட்டிருந்தனர். ஒடுக்கப்பட்டோர் உலகளவில் ஒன்றிணைந் திருந்தனர். இன்றைக்கு எதிர்மாறாக ஒடுக்குவோர் உலக சக்திகளாக உள்ளனர். ஒடுக்கப்படுவோரோ தேசிய சக்திகளாக இருக்கிறோம். இந்தப் பின்னணியில்தான் நமது பொருளாதாரத்தை பார்த்தாக வேண்டும்.

இன்றைக்கு தமிழர்களுடைய பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு, திறன், தமிழ் மண்ணின் இயற்கை வளங்கள் யாவும் பன்னாட்டு நிறுவனங்கள் முன் தோல்வியுற்று வீழ்ந்து கிடக்கின்றன. தமிழர் மருத்துவ மனை சித்த மருத்துவம், தமிழர் விவசாயமான இயற்கை வேளாண்மை ஏராளமான தமிழர் பாரம்பரிய தொழில்கள், தொழில் நுட்பம் யாவும் அழித்தொழிக் கப்பட்டு தொல்லியல் ஆய்வுக்குரியதாக மாறி வருகின்றன.

தமிழன் அன்றாடம் பல் துலக்க ஒரு பேஸ்டோ, பல் பொடியோ கூட (விதிவிலக்கு கோபால் பல்பொடி) தமிழர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது இல்லை. தமிழர் தொழில் முனைவோர் யாவரும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருள் / தொழில் நுட்பத்தின் முகவர்களே.

அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சியிருக்கும் சித்த மருத்துவர்கள் போன்ற சுதேசி சக்தியினரும் ஆதரிக்க ஆள் இல்லாமல் தொழிலை கைவிட நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனைப் புரிந்து கொண்டு தமிழர் தொழில் நுட்பத்தை தொழிலை ஆதரித்து வளர்த்தெடுக்க வேண்டிய தமிழ்த் தேச சக்திகளோ, அமைப்புகளோ குறுகிய அடையாள அரசியல் வட்டத்துக்குள்ளேயே சுழன்று வருகின்றன. இது தொடர்பாக தொடர்ந்து மனம் வெதும்பி குறைபட்டுக் கொண்டிருக்க நேரம் இல்லை, இப்போதே கூட மனம் துணிந்தால் மீண்டு வர தடையேதும் இல்லை.

இதன் முதற் படியாக வாசகர்கள், தமிழ்த் தேசிய சக்திகளாகிய நாம் முதலாவதாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சேவையையும் யார் வழங்குகிறார்கள், அந்த நிறுவனம் யாருக்குச் சொந்த மானது, அதன் லாபம் எங்கே போய்ச் சேருகிறது என்று அறிந்து கொள்ளவும் மற்றோரோடு பகிர்ந்து கொள்ள வும் முன்வர வேண்டும்.

இரண்டாவதாக நமக்குத் தேவையான சேவைகளில் பொருள்களில் எவை எல்லாம் தமிழர் மூலதனத்தில் தமிழர் தொழில் நுட்பத்தின் தமிழ் மண்ணின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல், தமிழர் உழைப்பில் எந்த பொருள் உருவாகின்றது என்றறிந்து அதனை பயன்படுத்தவும் பரப்பவும் வேண்டும்.

 மூன்றாவதாக நாம் தொழில் ஆற்றும் துறையில் மேற்குறிப்பிட்டவாறு தமிழர் மூலதனத்தை தொழில் நுட்பத்தை உழைப்பை தமிழ் மண்ணின் வளத்தை தமிழர் வளத்தை வளர்த்தெடுக்க முன்வரவேண்டும். இவையே தமிழர் பொருளாதாரம் மேம்பட ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய முதல் படிகளாகும். இதற்கு ஆதரவாக தமிழ் தேசிய அமைப்புகளும் சரியான நிலை எடுத்து பணியாற்ற முன்வரவேண்டும்.

Pin It