natarajan cricketerஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் பூஜை செய்தால் என்ன நடந்து விடும்? இப்படி கேட்டவர்கள் உண்டு. பெரியாரும் பெரியார் தொண்டர்களும் பதில் சொன்னார்கள் - உள்ளே கடவுள் இல்லை; கடவுள் சக்தியும் இல்லை என்று - அவாள்களே ‘பூணூலை’ உருவிக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்கள்!

அப்படியா? அப்படிக்கூட பேசிடுவாளா? என்று கேட்காதீர்கள். ஏன் பேச மாட்டாள்; மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தீண்டப்படாத மக்கள் உள்ளே நுழைந்தபோதும் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்த போதும் மீனாட்சியும், நடராசனும் கோயிலை காலி செய்து விட்டு, ‘சக்தி’களை மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடிப் போய் விட்டதாக கூறியவர்கள் தானே! கடவுளை தங்கள் மந்திர சக்திக்குள் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள் மந்திரம்  ஓதினால் தான் கடவுள்; இல்லை என்றால் ‘கல்’!

சூத்திரப் பெண்கள் கோயில்களில் நடனம் ஆடியபோது, ‘சதுர் கச்சேரி’ என்று இழிவு செய்தார்கள். பிறகு பார்ப்பனப் பெண்கள் நடன மங்கைகளாக மாறிய பிறகு ‘பரதநாட்டியம்’ தெய்வக் கலை என்றார்கள்.

ரிசர்வேஷன் வந்ததாலே தகுதி திறமை எல்லாம் சீரழிந்து விட்டது என்கிறார்கள்.

‘இதோ, உமக்கும் 10 சதவீதம் ரிசர்வேஷன்’ என்று சட்டம் வந்து, இப்போது ‘பாதிக்கப் பட்டவாளுக்கு’ நீதி கிடைச்சிருக்கு என்கிறார்கள்.

“சினிமா வந்து எல்லாத்தையும் கெடுத்துடுத்து; ஒழுக்கம் கெட்டுப் போச்சு; கட்டிப்புடுச்சி முத்தம் குடுக்கிறான்; காதல் ஆட்டம் போடுறான்; இதெல்லாம் நல்லதுக்கல்ல” என்று பேசியவர்கள் தான், அப்படி கட்டிப்புடிச்சி காதல் ஆட்டம் போட்டு கருப்பு பணம் வாங்கிய நடிகர் அரசியலுக்கு வந்து விட்டால் போதும்! “இதோ ஆன்மீக அரசியல் வந்து விட்டது; நேர்மையின் சின்னம்; ஸ்ரீராமபிரனாக கிருஷ்ணனாக அரசியலுக்கு வந்துட்டார்; நாடு செழிக்கப் போகுது பாருங்கோ” என்கிறார்கள்.

என்ன மாரிமுத்து? எதற்காக இந்தப் பீடிகை என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

‘கிரிக்கெட்’, ‘அக்கிரகார வீரர்களின்’ ஆட்ட மாகவே இருந்தவரை அதைப் புனிதமாக்கினார்கள். சடுகுடு, கால் பந்தாட்டம், ஹாக்கி எல்லாம் கிரிக்கெட் டுக்குப் பின்னால் தள்ளி வைத்தார்கள். இப்போது சின்னப்பப்பட்டியிலிருந்து ஒரு நடராசன் வந்திருக்கிறார்.

அதுவும் ஒடுக்கப்பட்ட நெசவாளர் குடும்பத்திலிருந்து வந்து முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரோலியாவில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்து விட்டார்; பாராட்டுகள் குவிகின்றன. அவாளுக்குப் பொறுக்க முடியவில்லை. உடனே ‘தினமலர்’ இப்படி எழுதுகிறது.

“கிரிக்கெட் விளையாட்டைவிட சிறந்த விளையாட்டுகள் பல உள்ளன. மற்ற விளையாட்டுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நடராஜன் எல்லையில் நின்று எதிரிகளை துவம்சம் செய்ததுபோல தமிழகத்தில் ‘பில்டப்’ கொடுக்கிறார்கள்” - இப்படி எழுதுகிறது ‘தினமலர்’.

2011இல் அஸ்வின் என்ற ‘அக்கிரகார’ இளைஞன் உலகக் கோப்பையில் விளையாட வந்தபோது “ஒரு தமிழன் உலகக் கோப்பை விளையாட வந்து விட்டான்” என்று பெருமை பொங்க சிண்டு சிலிர்க்க பெற்றோர்களின் படங்களுடன் செய்தி, பேட்டி என்று அமர்க்களப்படுத்தியது இதே ஏடு தானே!” என்ற தகவலை தோழர் ஒருவர் கவனத்துக்கு கொண்டு வந்தார். உண்மை தான்.

அக்கிரஹார அஸ்வின் விளையாட வந்தால் தமிழனுக்கு பெருமை என்பார்கள். சின்னப்பப்பட்டி நடராசன் விளையாட வந்தால் ‘பில்ட் அப்’ என்பார்கள். இதுதான் ‘அவாள்’ வேதகால முதல் ஆன்மிக அரசியல் வரை எழுதி வரும் அகராதி!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It