மாணவர் கழகக் கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (3)

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 27.09.2020 அன்று மாலை 6 மணியளவில், பெரியார் 142ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம், “திராவிடம் தந்த கல்விக் கொடை, அதை சிதைக்க விடாது நம் பெரியார் படை” என்ற தலைப்பில் இணையவழியில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.

பெரியாருடைய கடவுள் மறுப்பு என்பது, மனிதனுக்கு மனிதன் ஏன் இந்த வேற்றுமை என்ற கேள்விகளுடன்தான் புறப்பட்டது. அதற்கு சாஸ்திரம் காரணம் என்று கூறினார்கள். அப்படியானால் சாஸ்திரத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன் தீ வைத்து எரிப்பேன் என்று பெரியார் கூறினார்.

சாஸ்திரம் மதத்தின் அடிப்படையில் உருவானது என்று பாசிசப் பார்ப்பனியம் கூறியது. அப்படி யானால் அத்தகைய மதம் எங்களுக்குத் தேவையில்லை மதம் ஒழிக என்று கூறினார். மதத்தை நாங்கள் உருவாக்கவில்லை கடவுளாகப் பார்த்து உருவாக்கியதுதான் வேத மதம் இந்து மதம் அது தான் வர்ணாஸ்ரமத்தை கற்பித்தது என்று கூறினார்கள்.

அப்படியானால் அப்படிப்பட்ட கடவுள் எங்களுக்குத் தேவையில்லை, ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்ற நிலைக்கு பெரியார் சென்றார்.

பெரியார் பேசிய கடவுள் மறுப்பு என்பது, பாசிச பார்ப்பனியத்தின் சமூக ஒடுக்குமுறையையும் சமூக ஆதிக்கம் என்ற ஆணிவேரையும் எதிர்த்து புறப்பட்ட ஒரு முழக்கம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் பேசிய கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பை முன்வைத்து பெரியாரை இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி விடலாம் என்ற முயற்சியிலே தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள். அதற்காக பெரியார் சிலைகளை அவமதிப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

அப்படி கடவுள் மறுப்பு பேசிய மண்ணில் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டது இல்லை; கோவில் தகர்க்கப்பட்டதில்லை; கலவரங்களும் பெரியார் பேசிய கடவுள் மறுப்பால் நிகழ்ந்தது இல்லை; பார்ப்பன எதிர்ப்பு பேசிய இந்த தமிழ் மண்ணில் எந்த ஒரு இடத்திலும் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள் என்றோ வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்றோ சம்பவங்கள் நடந்தது கிடையாது. அறிவுசார்ந்த கருத்துப் போராட் டத்தைத் தான் பெரியார் நடத்தி இருந்தார்.

உதாரணத்திற்கு ஒன்றைக் கூற முடியும். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, காந்தியை சுட்டுக் கொன்றவன் கோட்சே என்ற ஒரு பார்ப்பனர். காந்தியை கோட்சே என்ற ஒரு பார்ப்பனர் சுட்டுக் கொன்றுவிட்டான் என்ற செய்தி அறிந்தவுடன் இந்தியாவில் பல இடங்களில் மிகப்பெரும் கலவரங்கள் வெடித்தன.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்த மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களே சங் பரிவாரங்கள் நடத்திய கல்விக் கூடங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். பார்ப்பனர்களின் வீடுகளை குறி வைத்து தாக்கினார்கள், அக்ரஹாரங்கள் எரிக்கப்பட்டன, காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனர்கள் இனி எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்று அறிவித்தார்கள். வன்முறை தலைவிரித்தாடியது.

அப்போது, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை உருவாக்கிய கோல்வாக்கர் சென்னையில் தான் இருந்தார். அவர் உடனடியாக பம்பாய்க்கு புறப்பட்டுச் சென்றார். ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரில் இருந்த அவரை உயிருடன் கொளுத்துவதற்கு பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களே திரண்டார்கள்.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த டி.பி. மிஸ்ரா, கோல்வாக்கரை சிறையிலடைத்து பத்திரமாக பாதுகாத்தார். இவ்வளவு வன்முறைகள் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருந்த பெரியார் ஒரு கண் அசைத்திருந்தால் ஒரு பார்ப்பனர் கூட தமிழ்நாட்டில் மிஞ்சியிருக்க முடியாது.

ஆனால் அன்றைக்கு பெரியார், “தமிழர்களே அமைதியைக் காப்பாற்றுங்கள்; வன்முறையில் ஈடுபடாதீர்கள்” என்று தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்டச் செய்தார். 'அகில இந்திய வானொலி' பெரியாரை என்றைக்கும் பேச அழைத்தது இல்லை.

அது பார்ப்பனர்கள் கையில் இருக்கிற ஒலிபரப்பு சாதனம். அந்த அகில இந்திய வானொலியே பெரியாரை அழைத்து, நீங்கள் மக்களை அமைதியாக இருக்கக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று பெரியாரையும், அண்ணாவையும் பேச அழைத்தது.

பெரியார், வானொலியில் அமைதியை காப்பாற்றுங்கள் என்று கூறி தமிழ் நாட்டில் பார்ப்பனர்களின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தார் என்பதை ஒவ்வொரு பார்ப்பனரும் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக தலைசிறந்த ‘மண்வாசனை’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கூறிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். பெரியாரிய உணர்வாளரான ஓவியர் புகழேந்தி, பெரியார் பற்றிய கோட்டு ஓவியங்களடங்கிய நூல் ஒன்றை ‘திசைமுகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். அந்நூலைப் பார்த்து பூரிப்புடன் ஓவியர் புகழேந்திக்கு ‘கி.ரா.’ எனும் கி.ராஜநாராயணன் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

“திசைமுகம் கோட்டோவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது இவை என்னை எங்கேயோ கொண்டு போனது. பெரியாரை முதன்முதலில் பார்த்தவுடன் ஒரு முனிவர் போல எனக்குக் காட்சி தந்தார் என்று என்னிடம் சொன்னவர் ஓர் அய்யர்வாள். எனக்காகச் சொன்ன வார்த்தை இல்லை அது; மனம் திறந்து சொன்னது.

அப்படிச் சொல்ல அவருக்குக் காரணம் இருந்தது. காந்திஜி சுடப்பட்டவுடன், வானொலியில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. காந்திஜியை கொன்றவன் ஓர் இந்துதான் சுட்டுக் கொன்றான்.

இப்படியே ஏன் சொல்லிக் கொண்டிருந்தார்கள்? முஸ்லீம் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில்தான். அந்தச் சமயத்தில் ஒரு பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தினர் நடத்தினார்கள். பெரும் மக்கள் கொண்ட கூட்டம் அது. உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்தது. பெரியார் பேசப் போகிறார். அதுக்கு முன்னால் ஒரு முக்கிய பிரமுகர் பேசினார்;

 காந்தியாரைக் கொன்றது யார் தெரியுமா? என்று கேட்டு கொஞ்சம் இடைவெளி விட்டுப் பேசத் தொடங்கியதும், மேஜை மேல் வைத்திருந்த தடிமனான தனது கைத்தடியினால் ஒரு வாத்தியார் பள்ளிப் பிள்ளைகளின் சப்தத்தை அமைதிப்படுத்த தட்டுவார்களே அதுபோல் தட்டி அந்தப் பேச்சாளரை எச்சரித்தார்.

அந்தப் பேச்சாளர் சொல்லவந்தது; காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு பார்ப்பனன்; என்று பெரியாரின் அந்தக் கைத்தடி ஓசை ‘அப்படிச் சொல்லிவிடாதே’ என்று தடுத்து நிறுத்திவிட்டது.

அந்தப் பிரம்பின் ஓசை எத்தனையோ மனித உயிர்களை காப்பாற்றியது, எத்தனையோ பெண்களின் கற்பைக் காப்பாற்றியது, கோட்சே ஒரு பிராமணன் என்று சொல்ல ரொம்ப நேரம் ஆகாது. அதன் விளைவை நொடியில் யூகித்த பெரியார் தடுத்து நிறுத்தினார்.

பெரியார் என்ற மானுடன் அவரது உள்ளம் தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

ஓவியர் புகழேந்திக்கு 01.01.2004 இல் எழுதிய கடிதத்திலிருந்து... கி.ராஜநாராயணன்.

என்று தனது நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். (‘விடுதலை’ வெளியிட்டுள்ள பெரியார் பிறந்த நாள் மலரிலும் இது பதிவாகியிருக்கிறது)

திரைமறைவில் பதுங்கி இருந்து கோடரிக் கம்புகளை ஏவி விட்டு, பெரியார் சிலைகளுக்கு காவிச் சாயம் பூசுவது, சிலையை சேதப் படுத்துவது என்று காலித்தனத்தில் இறங்கிக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள், பெரியார் இந்த பார்ப்பனப் பிரச்சினையை எவ்வளவு பன்போடு அமைதியோடு கையாண்டார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெரியார் வன்முறை வேண்டாம் என்று கூறியதற்கு காரணம், வன்முறை என்ற ஒன்று இந்த நாட்டில் வந்துவிட்டால்; அதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் ஒருபோதும் பார்ப்பனர்களாக இருக்க மாட்டார்கள்; நம்முடைய மக்கள்தான் பாதிக்கப் படுவார்கள் என்பதனால் தான் வன்முறை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாரே தவிர, காந்தியாரின் அகிம்சையை ஏற்றுக் கொண்டார் என்ற அடிப்படையில் பெரியார் அதைப் பார்க்கவில்லை.

எனவே, இங்கு கோவில் சிலைகளுக்கு ஒரு சேதம் ஏற்பட வில்லை, பார்ப்பனர்களுக்கு ஒரு தீங்கும் ஏற்படாத வாறு தான் தமிழ்நாட்டில் ஒரு சமூக மாற்றம் ஏற்பட்டது.

பெரியார் ஊர் ஊராக சென்று மக்களிடையே கருத்துக்களை பேசினார். பாசிசம் என்ன கூறுகிறது என்றால் நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் கேட்காவிட்டால் இந்த நாட்டில் இருப்பதற்கான உரிமை உனக்கு கிடையாது. நீ கைது செய்யப் படுவாய், சிறையிலடைக்கப்படுவாய் அல்லது சுட்டுக்கொல்லப்படுவாய் இப்படித்தான் பாசிசம் கூறுகிறது.

பார்ப்பனியம் என்ன கூறியதென்றால், 'நான் கூறுகிற வேதங்கள், வேத சடங்குகள் தான் உனக்கான வாழ்க்கை இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு நீ வாழ வேண்டும்; இந்த வாழ்க்கையை ஏற்காமல் நீ வாழ்ந்தாய் என்றால் நரகத்திற்கு போவாய், நீ சொல்லெனா கொடுமைக்கு உள்ளாவாய்' என்று கூறி ஒடுக்கப்பட்ட மக்களையே அச்சத்தின் காரணமாக, கடவுகளின் காரணமாக சடங்குகளை, சம்பிரதாயங்களை ஏற்க வைத்து தங்களை அடிமைப்படுத்தி அடிமையாக வைத்திருந்தது பார்ப்பனியம். இன்றைக்கும், பழக்க வழக்கங்கள், இதுதான் கலாச்சார மரபுகள், இப்படித்தான் இருக்க வேண்டும் கோவிலில் தமிழ்மொழி இருக்கக் கூடாது அர்ச்சகராக பிராமணர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் இதுதான் பழக்க வழக்கம் என்று கூறி சட்டத்திலேயே அதற்கு ஏற்பு வழங்கி அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அனைவரையும் இந்துக்கள் என்று கூறுகிறார்கள்.

நாம் இந்துக்கள் என்ற அடையாளத்தை ஏற்கவில்லை. ஏற்கா விட்டாலும் நாம் அனைவரும் இந்துக்கள்தான் என்று கூறுகிற அளவிற்கு சட்டத்தை இந்த நாட்டில் திணித்து வன்முறை வழியாக அனைவரும் இந்துக்கள் என்ற சிறைக்குள்ளே அடைத்து வைத்திருக் கிறார்கள். இப்படிப்பட்ட அடக்குமுறைகளை அன்றைக்கு செய்தவர்கள்; இன்று ஆட்சி அதிகாரங்கள் கைக்கு வந்தவுடன் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் பெரியார் அப்படி ஒருபோதும் செயல்பட்டதில்லை. அவர் ஒவ்வொரு கூட்டங்களிலும் இந்த ஆபத்துக்களை சுட்டிக்காட்டி பேசுகிறபோது, இறுதியில் ‘நான் கூறுகிறேன் என்பதற்காக நீங்கள் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் மனதிற்கு நியாயம் என்று பட்டால், உங்கள் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பாருங்கள் சரியென்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் அவற்றை தள்ளி விடுங்கள்’ என்று மக்களிடம் கருத்து சுதந்தித்தை விதைத்தார்.

அமைதியான வழியால் தான் பெரியார் பிரச்சாரத்தை செய்தார். தன் மீது வீசப்பட்ட கல்லடிகளையும், செருப்படிகளையும், சொல்லடிகளையும் சுமந்து கொண்டு இந்த சமூகத்திற்காக மீண்டும் மீண்டும் மக்களை சந்தித்து வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்று கூறி மக்களிடையே தொடர்ச்சியாக உரையாடினார்.

மக்களை ஆற்றுப்படுத்தி, மக்களை பக்குவப்படுத்தி உருவாக்கிய ஒரு சமூகமாக இங்கே இருக்கின்ற காரணத்தினால்தான் இன்று வரையிலும் ஆழமாக விதையூன்றப்பட்ட இந்த கொள்கைகளை ஏற்றுக்கொண்ட ஒரு மண்ணாக தமிழ்நாட்டு மண் மாறிப்போய் இருக்கிறது. வன்முறை மூலமாக இவைகளை இந்த மண்ணில் சாதித்துவிட முடியாது என்பதைப் புரிந்து வைத்திருக்கிற ஒரு தலைவராக பெரியார் இருந்தார்.

பாஜகவைச் சேர்ந்தவர்கள், வன்முறையாளர் களை, கொள்ளைக்காரர்களையெல்லாம் கட்சியில் சேர்த்து அவர்கள் வழியாக வன்முறைகளை ஏவி விட்டு இந்த மண்ணில் தாங்கள் பேசுகிற இந்துத்துவா கொள்கைகளை பரப்பிடத் துடிக்கிறார்கள் என்று பெரியார் கூறினார், ‘நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன்.

நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரசீலனை செய்து ஒப்புக் கொள்ளக் கூடியவைகளை ஒப்பி தள்ளக் கூடியவை களை தள்ளிவிடுங்கள் என்கிற நிபந்தனையின் பெயரிலே தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அதற்கு நியாயமும் ஒழுங்கும் ஆகாது’ என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கூறினார்.

பாசிசம் இதற்கு நேர்மாறானது. நான் கூறுவதைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏற்காவிட்டால் கடுமையான தண்டனை என்றுதான் பார்ப்பனியம், பாசிசம் கோலோச்சிக் கொண்டிருக் கிறது. ஹிடலர் யூதர்களை எதிர்த்தார் என்றால் அது யூத இன வெறுப்பு. பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது ஹிடலரின் யூத எதிர்ப்பை போன்றது இல்லை.

பெரியார் பார்ப்பனர்களை ஏன் எதிர்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். இது முக்கியமான கருத்து, பார்ப்பன எதிர்ப்பு என்பதில் எவ்வளவு ஜனநாயகம் மற்றும் மனிதாபிமானம் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

“பார்ப்பனத் தோழர்களே ! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லேன். தமிழ்நாட் டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாய துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிடத் திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.

இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கை குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷனையைவிட எப்படி அதிகமான போஷனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டு மென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்” என்று 19.05.1948இல் பெரியார் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அடிப்படையில்தான் இவைகளை எதிர்த்து திராவிடம் களத்திலே நின்று கொண்டிருக்கிறது. திராவிடத்தை எதிர்த்து பாசிசம் தனது அதிகாரங்களை வைத்து படையெடுத்து வருகிறது. அவைகளினுடைய படைக்கருவிகள் தான் இந்த தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு , வேளாண் சட்டங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு சட்டங்கள், ஜி.எஸ்.டி., மாநில அடையாளங்களை ஒழிக்கின்ற சட்டங்கள் கொண்டு வருகிறார்கள்.

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த வரலாற்றை ஆராயப் போகிறோம் என்று கூறுகிறார்கள். 12 ஆயிரம் ஆண்டு என்று ஏன் வரையரை வைத்திருக்கிறார்கள்? 12 ஆயிரம் ஆண்டு என்பதன் பின்னணி, ஆரியப் பண்பாட்டை நிலை நிறுத்துவதற்குத் தான். அவர்களுக்கு அதற்காக இன்று ஒரு ஆவணம் தேவைப்படுகிறது அதனால்தான். ஆரியப் பண்பாடு, சமஸ்கிருதப் பண்பாடும் தான் இந்தியப் பண்பாடு என்பதை அறிவிக்கிற சூழ்நிலைக்கு அவர்கள் வந்துவிட் டார்கள். அதற்கு எதிரான களத்திலே பெரியாரியம், திராவிடம் தான் களத்திலே நின்று கொண்டிருக்கிறது அந்த களத்திலே நாம் தான் வெற்றி பெறுவோம்.                                               

(நிறைவு)

- விடுதலை இராசேந்திரன்

Pin It