முதன்மொழி - தி.பி. 2041 சுறவம் (சனவரி - பெப்ருவரி 2010) இதழின் ஆசிரியவுரை - பாவாணர் ஆளுமை - குறித்து அரக்கோணம் தமிழேந்தி, பொறுப்பாளர்களுக்கு எழுதிய மடலுக்கு உ.த.க. நெறியாளர் பேராசிரியர் கு. பூங்காவனம் விடுத்த விடை மடல்...

அன்புடையீர் வணக்கம்.

தங்கள் மடலும் இணைப்புகளும் வரப்பெற்றேன். இது தொடர்பாகச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளக் கருதி இம்மடலை எழுதுகின்றேன்.

தந்தை பெரியார்தம் குமுகப் பணிகள் மாணப் பெரியவை. அவற்றை யாரும் குறைத்து மதிப்பிடவியலாது.

பெரியாருடைய தாய்மொழி கன்னடமே யாயினும் அவர் தம்மைக் கன்னட மொழிச் சார்பினராக ஒருபோதும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும்,தாம் ஒரு தமிழரல்லர் என்பதும் அவர்தம் நிலைபாடாக இருந்தது. எனவே தமக்கு ஓர் அடையாளம் கருதித் தம்மைத் திரவிடராகவே அவர் வெளிப்படுத்தினார். அற்றைச் சூழலில், அற்றைய சென்னைப் பெருமாநிலத்தில் வாழ்ந்த பிறமொழியாளர் பலருடைய நிலைபாடாகவே அத்திரவிட அடையாளம் அமைந்திருந்தது. இத்தகைய திரவிடக் கருத்தாக்கம், பிற திரவிட மொழிப் பகுதிகளைக் காட்டிலும் தமிழகத்தில்தான் ஆழவேரூன்றி யிருந்தது. மொழிவழி மாநிலம் அமைந்தபின்னும் அத்திரவிடத் தொடர்ச்சி நீடிக்காமல் அறுபட்டே யாகவேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு பிறமொழியினர்க்கான வளமான களமாகவே இருக்கும். இத்திரவிடக் கருத்தாக்கம் உருவாதற்கு இங்குக் கூறப்பட்ட காரணத்தையன்றி, திரவிட மொழியார் அனைவரையும் பிணித்து இணைக்கும் வேறு உணர்வார்ந்த கூறு ஏதுமில்லையாதலால், அது உண்மையும் உள்ளீடும் அற்றதாகி ஆங்கில இந்தியாவில் பாகித்தானப் பிரிவினையைப்போல், தனித்திரவிடநாடு என்னும் பிரிவினைக்குச் சற்றும் இடமில்லாதவாறு 1947ஆம் ஆண்டிலேயே திரவிடம் என்பது புதைகுழிக்குப் போய்விட்டது. 1964இல் அறிஞர் அண்ணா திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டபோது, திரவிடச் சாவின் இறுதிக் கரணம் செய்யப்பட்டது.

பிற திரவிடமொழியினர் திரவிடத்தைப் பற்றிச் சிறிதும் கவனம் கொள்ளாமல் தத்தம் இன, மாநில நன்மைகளையும் இயற்கை வளங்களைத் தம்முடையவாக உரிமைகொண்டாடுவதையும் மேற்கொண்டுள்ளனர். பிறமொழியினர் அங்கெல்லாம்  அரசியல் அதிகாரத்தைப் பெறமுடியாதவாறு விழிப்புடன் செயல்படுகின்றனர். தமிழகத்திலோ, திரவிடச் சார்பின் தொடர்ச்சியினால் தமிழர் அல்லாதாரும் ஊடுருவ முடிகின்றது. தந்தை பெரியாரும் பிறரும் தமிழர் கழகம் எனத் தொடங்கவிருந்த நிலையில் தமிழகத்தில் வாழ்ந்த பிற மொழியினரிடம் காணப்பட்ட திரவிடர் என்னும் அடையாளச் சார்பு - அத்தமிழர் கழகத்தைத் திரவிடர் கழகமாக்கிவிட்டது. இது, கிழக்கே போக வேண்டிய தொடர் வண்டியை வடக்கு முகமாகத் திருப்பிவிடுகின்ற தடம் மாற்றியின் செயல் போன்றதாகும்.

இற்றைச் சூழலுக்கு ஏற்பத் திரவிடம் எனக் காணப்படுபவை எல்லாம் தமிழம் என மாறியாதல் வேண்டும். தமிழர் கழகம், தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ்த் தேசியம் எனப் புத்துருவாக்கம் பெறும்போதுதான் இரட்டிப்பான நன்மைகள் வாய்ப்பதற்கு இடமுள்ளது. ஒரு நன்மை தமிழ்நாடு தமிழர்களுக்கே உரியது என்னும் வரையறை; இன்னொரு நன்மை, திரவிடத்தால் தமிழகத்திற்கு நேர்ந்த கேடுகள் விலக்கப்படுவது. காலச்சூழலுக்கு ஏற்ப உருவாகும் இம்மாற்றங்கள்தாம் உண்மையான வளர்ச்சியும் ஆகும்.

தந்தை பெரியார் கன்னடராயினும், அவர் கன்னட மொழிச் சார்பினரும் அல்லர்; அதே வேளையில் அவர் தமிழ்க் காப்பாளரும் அல்லர்; அதனால் அவர் தமிழ் எதிரியும் அல்லர். ஆரியச் சார்பான சமயத்தில் பிணிப்புண்டிருந்த தமிழின் நிலையைக் கண்டபோது அவர் கொதிப்படைந்து தமிழைக் காட்டுவிலங்காண்டி மொழி எனத் தூற்றியபோதும் நாம் அவரைத் தமிழ் எதிரியாகக் காணமுடியவில்லை. அவர் தமிழ் வழியினர் அல்லாதாராக இருந்தமை திரவிடச் சார்புக்கு ஆக்கமாகி விட்டது. எனினும் அவர் ஓர் ஊழிக் குமுகப் பெருந்தொண்டர் என்னும் தெளிவு நமக்கிருத்தல் வேண்டும்.

ஆரியத்திற்கு எதிர்ப்பாகவும், ஆங்கிலத் தீங்குகளுக்கும் மட்டுமல்லாமல் திரவிடத் துண்டிப்பால் - திரவிடத்தைத் தமிழியமாக மாற்றுதற்கும் குரல் எழுப்பவேண்டிய கடமை உ.த.கழகத்திற்கு உரியது. அத்தகைய வெளிப்பாடே முதன்மொழி ஆசிரியவுரை என்பதை முன்பின் தொடர்புபடுத்திப் படிக்குங்கால் வெளிப்படும்; பெரியாரைக் குறை கூறுவது அவ்வாசிரிய உரையின் நோக்கமன்று என்பதும் புலப்படும்.

இவற்றை அசைபோட்டுப் பாருங்கள். நன்றி.

Pin It