கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச் செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப் படம் திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர். "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை' (கலாச்சுவடு 2008), "ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்' (உயிர்மை 2009), "பாழ் நகரத்தின் பொழுது' (காலச்சுவடு 2010), ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன், யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் "தீபம்' என்ற வலைப்பக்கத்தைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்தி வருகிறார். - ஷோபா சக்தி (23.07.2010)

யுத்தத்திற்கும் உங்களிற்கும் ஒரே வயது, அதிலிருந்து தொடங்குவோமா?

deebachelvan_3501983 இல் இனக் கலவரம் நடந்து முடிந்த காலத்தில் நான் பிறந்தேன். தமிழ் மக்கள் தங்கள் உரிமை களுக்காகப் போராடும் காலத்தில் நான் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தேன். எனக்கு ஞாபகம் தெரியத் தெரிய அந்தச் சூழலைத்தான் பார்க்கத் தொடங்கினேன். போராளியாக இருந்த அண்ணாவை (பெரியம்மாவின் மகன்), இளைஞர்களை அழைத்துச் செல்லும் இந்திய இராணுவத்தை, இலங்கை இராணுவத்தைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்ந்தேன். யுத்தமோ குழந்தையாக இருந்த எனக்கு முன்னால் சாதாரணமாக நிகழ்ந்துக் கொண்டிருந்தது. ஏன் யுத்தம் நடக்கிறது என்பது முதலில் தெரியாது விட்டாலும் பின்னர் 'ஆமீ' வந்து ஹெலிகப்டரில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பொழுது எங்கள் ஊரில் உள்ள மக்களுடன் குழிகளுக்குள் பதுங்கிக் கிடந்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது. எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.

யுத்தத்திற்கும் எனக்கும் ஒரே வயது என்று நீங்கள் குறிப்பிடுவது போல் வெற்றியும் தோல்வியும் நிறைந்த, கனவுகள் ஏமாற்றங்கள் நிறைந்த யுத்தம் எனது குழந்தை வாழ்வு முதல் இன்று வரை தொடர்ந்து வந்து என்னைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அப்பொழுது முதல் இன்றுவரை சிதைவடைந்த தேசத்தை, சூழலைத்தான் பார்த்து வருகிறேன். பள்ளியில் குண்டு வீசப்பட்டு உடைந்த வகுப்பறை, காணியில் வெற்றுத் துப்பாக்கி ரவைகளைப் பொறுக்கி விளையாடுவது, இராணுவம் அலைந்த சப்பாத்து களின் அடையாளங்களைக் காலையில் தேடுதல் என்றுதான் என் குழந்தைப் பருவம் கழிந்தது. இப்படி நடந்த யுத்தம் என்னை அழிவுகளால், சத்தங்களால், இராணுவங்களால் அஞ்சும் ஒரு குழந்தையாக்கியது. சிறிய வயதில் இராணுவம் ஷெல் மழை பொழியப் பொழிய பொதிகளைத் தூக்கிக் கொண்டு ஓடும்பொழுது எனக்கு முன்னால் நிகழ்ந்த துயர் வாழ்க்கை யுத்தம் கையளித்த பெரு அபாயங்களாக, அச்சுறுத்தல்களாக மனதில் படிந்து விட்டன.

யுத்தம் மீண்டும் மீண்டும் துயர் மிக்க வாழ்க்கையை விரித்துக் கொண்டே சென்றது. யுத்தம் மீண்டும் மீண்டும் அலைச்சல்களையும், இழப்புகளையும் தந்தது. பதுங்கு குழிகளை வெட்ட முடியாத வயதில் தரைகளில் பதுங்குவதும் பின்னர் நிலமெங்கும் பதுங்கு குழிகளை வெட்டுவதுமாகக் கழிந்தது எங்கள் வாழ்க்கை. எனது சனங்களை வதைத்த யுத்தத்தைக் கண்டு நான் அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் பொழுது எனது ஒரே அண்ணன் யுத்தத்திற்கு எதிராகப் போராடும் மனநிலையில் இருந்தான். தனது பத்தாவது வயதிலேயே அவன் இயக்கத்தில் சேர்ந்தான். 16 வயது வரை அவன் ஐந்து தரம் போராட்டத்தில் சேர்ந்து, சேர்ந்து திரும்பி அம்மாவுடன் இணைக்கப்பட்டான். விமானங்களைக் கண்டு நான் ஒளிந்து கொண்டிருக் கையில் அண்ணா கோடரியின் பிடியை எடுத்துத் துப்பாக்கி மாதிரி வானை நோக்கி நீட்டி "படபட' என்று சுட்டு விளையாடிக் கொண்டிருப்பான்.

இறுதியில் அண்ணா கனவுக்காக வீர மரணம் அடைந்த பொழுதுதான் நான் நிறைய விடயங்களைப் புரிந்து கொண் டேன். அண்ணாவின் நெஞ்சார்ந்த கனவு என்னை மிகவும் பாதித்தது. அதுநாள் வரை இருந்த யுத்த அனுபவங்கள், அண்ணாவின் மனம் என்பன என்னை படிக்கத் தூண்டியதோடு சமூக, தேசபற்றுக் கொண்ட பொறுப்பான மாணவனாக வாழ வளரத் தூண்டியது. அந்தக் காலத்தில் வன்னியில் என்னைச் சுற்றி உணர்வு மிக்க போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஈழம் பற்றிய கனவுடன் வன்னியில் போராளிகள் மிக உன்னத மாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி இரத்தின புரத்தில் எனது சிறிய பருவத்தில் இருந்த போராட்ட சூழல், பின்னர் மணியங்குளம் ஸ்கந்தபுரத்தில் இருந்த அகதி வாழ்க்கை, மீண்டும் சிதைவடைந்த கிளிநொச்சி நகரத்திலிருந்த வாழ்க்கை, பின்னர் கொலை நகரமாயிருந்த யாழ்ப்பாண வாழ்க்கை, அடிக்கடி ஏற்பட்ட இடப் பெயர்வுகள், அலைச்சல்கள், வறுமையென்று இவைகள் எல்லாமே யுத்தத்தினால் எப்பொழுதும் அச்சுறுத்தப்பட்ட வாழ்வைத்தான் தந்தன.

ஒரு உக்கிரமான யுத்தச் சூழலுக்குள் வளர்ந்த நீங்கள் ஆயுதப் போராட்டத்திலிருந்து எவ்வாறு விலகியிருக்கக் கூடியதாயிருந்தது?

யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பொழுது நான் குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்தேன். நான் வளர்ந்து சாதாரண தரம், உயர்ந்த தரம் படிக்கும் காலத்தில் சமாதானம் வந்தது. அண்ணாவின் மரணம் என்னிடமிருந்த அச்ச உணர்வு களை அகற்றி விட்டது. நான் ஆயுதம் தூக்கிப் போராட வில்லை என்றாலும், ஆயுதம் தூக்கிப் போராடிய எங்கள் நிலையை வலுவாக ஆதரித் தேன். இன அழிப்பிற்கு எதிராக வும், உரிமை மறுப்புகளிற்கு எதிராகவும் சிறுவனாய் நான் பார்த்துக் கொண்டிருக்க, எத்த னையோ இளையவர்கள் அணி திரண்டு சென்றார்கள். அவர்களது உணர்வுகள் மிக முக்கிய மானவை. மதிக்கப்பட வேண்டிய உன்னதம். ஆனால் நான் ஆயுதப் போராட் டத்திலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று நினைக்க வில்லை. அதற்குத் தயாராக இருந்தேன். போராளிகளில் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக் கிறார்கள். அன்பழகன் என்ற எனது நண்பன் ஒருவன் விடைபெற்றுச் சென்று சில நாட்களிலேயே வீர மரணம் அடைந்திருந்தான். "என்னை யும் களத்திற்குக் கூட்டிச் செல்' என்ற வார்த்தையை நான் அவனிடம் சொல்லாத நாட்களில்லை.

அப்பாவால் கைவிடப்பட்ட அம்மா மற்றும் தங்கையின் எதிர்காலம் என்பவற்றால் நானாகவே போராட்டத் தில் சென்று இணைய முடியாத நிலை யிருந்தது. ஆனால் அன்பழகனைப் போன்ற பல போராளிகள் துப்பாக்கி களை ஏந்தியபடி எமது மக்களுக்காக வைத்திருந்த மனக் கனவு உன்னத மானது என்பதை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து ஆயுதம் தூக்கிக் களத்திற்கு செல்லுவது எத்தனை உன்னதமானது. அதற்கான சூழல் எனக்கிருக்கவில்லை என்பது குற்ற உணர்வைத்தான் தருகிறது. போராட்டத்திற்கு செய்ய வேண்டிய வேறு பல பணிகள் இருந்தன. அவற்றைச் செய்து கொண்டிருந்தேன். மிக நெருக்கடியான காலத்தில் முக்கியமான பணிகளைச் செய்திருக் கிறேன்.

ஆயுதப் போராட்டத்தில் மரணம் எதிர்பார்க்கப் படுவதுதான். உரிமைக்காக, கனவுக்காக மக்களுக்காக அதை எதிர் கொள்ளும் மனோதிடம் இயல்பாக ஏற்படும். நீங்களும் கூட அப்படித்தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பீர்கள்.

ஆயுதப் போராட்டத்தில் மரணம் எதிர்பார்க்கப் படுவது உன்னதம்தான். புலிகள் உன்னதமான போராட்டத்தை நடத்தினார்கள் என்றும் சொன்னீர்கள். ஆனால் பள்ளிச் சிறுவர்களைத் துப்பாக்கி முனையில் துரத்திப் பிடித்துக் கட்டாயப் பயிற்சியைக் கொடுத்து அவர்களின் விருப்ப மில்லா மலேயே அவர்களைப் புலிகள் போர் முனைகளில் நிறுத்தி மரணத்திற்கு தள்ளியது என்ன வகையான நியாயம், என்ன வகையான உன்னதப் போராட்டம்?

வீட்டுக்கொருவர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதை நமது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அது சாதாரணமான உடன்பாடல்ல. மிகவும் கஷ்ட மானது. பெற்றோர்களே பிள்ளை களைப் போராட்டத்தில் இணைப் பது என்பது மிகத் துயரம்தருவது. ஆனால் அதைவிட எங்களுக்கு அப்பொழுது வேறு வழி தெரிய வில்லை. வயது குறைந்த பிள்ளைகள் மீளவும் பெற்றோர் களிடம் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டத்தை எப்படியாவது விடுதலை நோக்கி நகர்த்த வேண்டியிருந்தது. அதற் காகப் பல இழப்புக்களையும் வலிகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

அடக்குமுறைக்கும் ஆக்கிர மிப்புக்கும் எதிராகப் பல்லா யிரம் போராளிகள் கனவுக்காக உயிர்களைத் தியாகம் செய்திருக் கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார் கள். ஈழத் தமிழர்களின் நெஞ்சார்ந்த கனவைப் பல்வேறு விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். போராடும் குரலை உன்னதமாகக் காட்டியதன் அடிப்படையில் ஈழப் போராட் டத்தை உன்னதமான போராட்டம் என நான் கருதுகிறேன். இப்பொழுது உள்ள நிலைமையில் எமது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்.

எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி உங்களை எது நகர்த்தியது?

யுத்தம்தான் என்னை உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது. பாடசாலை யில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது படிக்காமல் கவிதை எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கால கட்டத்திலும் பாடக் குறிப்புக்களை எழுதும் கோப்பிகளுடன் எனது கவிதை எழுதும் கொப்பி ஒன்றும் இருக்கும். 2005 இலிருந்து பத்திரிகைகளில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். 2006ல் யுத்தம் மீண்டும் மூண்டபொழுது எமது மக்களின் முன்னே விரிந்த துயர் தரும் காலம் என்னை எழுதத் தூண்டியது. 2006ற்கு முன்னர் இருந்த உற்சாகமான எழுத்து, குறைந்து விட்டது. மிகச் சிலரே எழுதிக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் அச்சுறுத்தல்களால் எழுத முடியாத சூழலில் இருந்தார்கள். வன்னியில் எழுத அவகாசமற்ற வகையில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். யுத்தத் தில் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். பொன் காந்தன், அமரதாஸ், வேல்லவன் போன்றவர்களுடன் போராளிப் படைப்பாளிகளின் எழுத்துகள் பல அழிந்து விட்டன.

எனது மக்களின் இந்தச் சாபகரமான அலைச்சலும் அச்சுறுத்தலும் அவலமும் நிரம்பிய வாழ்க்கைதான் என்னை நிகழும் எல்லா கொடுமைகளைக் குறித்தும் எழுத வைத்தது. ஈழத்தின் நான்காம் கட்டப் போரில் அதை நான் ஒரு முக்கியப் பணியாகவே எடுத்தேன். எந்தத் தருணத்திலும் எழுதிப் பதிவு செய்து கொண்டிருந்தேன். எழுத்தில் இலக்கியத்தில் சாதனை நிகழ்த்த வேண்டும். விருது வாங்க வேண்டும், பரிசு வாங்க வேண்டும் என்றெல்லாம் எழுதவில்லை. எமது மக்கள் பற்றிய எனது பதிவுகள் நமது நாட்டு ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு அஞ்சும் எழுத்துக் களாகின. யுத்தம் மூண்ட காலத்தில் யுத்தம் பற்றிய எனது கவிதைகள், எழுத்துகள் ஈழத்து இலங்கை இதழ்களில் மிகக் குறைவாகவே வெளியாகின. வலைப்பதிவிலும் தமிழக இதழ்கள் சிலவற்றிலும் தான் எழுதிக் கொண்டிருந்தேன். அம்மாவும் தங்கையும் எனது சனங்களும் மரணங்களும் யுத்தம் தின்ற வன்னிப் பெருநிலமும் அறியப்படாத கொலை களால் உறைந்துபோயிருந்த யாழ் நகரமும்தான் என்னை எழுதத் தூண்டின. நான் "கொல்லப்படுவேன்' என்று எனக்கு நிகழ்த்தப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்தும் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தேன். எழுத்துக் காகவும் கனவுக்காகவும் நான் மரணத்திற்குப் பயப்பட வுமில்லை. எனக்கு நிகழ்ந்த எல்லா அனுபவங்களையும் எழுதிக் கொண்டிருந்தேன்.

இறுதி யுத்த நாட்களில் நீங்கள் எங்கிருந்தீர்கள், யுத்தத்தின் முடிவு இவ்வாறுதானிருக்கும் என அனுமானித் திருந்தீர்களா?

2006 இல் நாலாம் கட்டப் போர் தொடங்கிய பொழுது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அப்பொழுது யாழ் கண்டி வீதி மூடப்பட்டிருந்தது. பசியிலும் இருட்டிலும் யாழ் நகர மக்களுடன் வாழ்ந்தேன். கொலைகளும் இரத்தமும் அச்சுறுத்தலும் எனச் சுமார் 45 நாட்கள் வாழ்ந்த பிறகு கப்பல் மூலம் திருமலை ஊடாக கிளிநொச்சிக்கு சென்றேன். கிளிநொச்சியில் யுத்த தாக்குதல்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்தேன். இரவிரவாக விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருக்கப் பதுங்கு குழிக்குள் வாழ்க்கை கழிந்தது. சுமார் ஒரு வருடம் வன்னியில் யுத்த சூழலில் வாழ்ந்த பிறகு மீண்டும் படிப்பதற்காக யாழ்ப்பாணம் கப்பல் மூலம் சென்றேன். அன்று முதல் இறுதி யுத்த நாட்கள் வரை யாழ்ப்பாணத்தில்தான் தங்கியிருந்தேன்.

யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுதும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். நான் இறுதி யுத்த களத்தில்தான் வாழ்கிறேன் என்று என்னை விசாரித்துப் பல மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. நான் யாழ்ப்பாணத்தில் வாழ்வதை வெளியில் குறிப்பிட முடியாத சூழலில்தான் இருந்தேன். யுத்த வலயத்தில் எமது இனத்தின் மீது திணித்த அதே மாதிரியான அழிப்பை, அச்சுறுத்தலை அரசு யாழ்ப்பாணத்திலும் திணித்தது. யாழ் பல்கலைக் கழகத்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்தேன். அத்தோடு யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தில் செயலாளராகவும் இருந்தேன். நான் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்.

யுத்தத்தில் நாங்கள் வெற்றியடை வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தில் இருந்து கொண்டு போரை நிறுத்தவும் இன அழிப்புக்கு எதிராகவும் பகிரங்கமாகக் குரல் கொடுத்தோம். போரை நிறுத்தி, மனித அவலத்தை நிறுத்தி தமிழ் மக்களைக் காப்பாற் றும்படி கேட்டோம். "மௌனப் போராட்டம்' என்று அன்றைய சூழலில் மாணவர்கள் போராட்டம் ஒன்றை நடத்தி னேன். பல்கலைக் கழக மாணவர்களின் குரல்களும் தமிழ் மக்களின் ஒட்டு மொத்தக் குரல்களுடன் நிராகரிக்கப்பட்டன. எல்லாவற்றையும் நான் கைவிட வேண்டும் என்றும் ஈழக் கனவில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றும் இராணுவம் அச்சுறுத்தியது. இலங்கை அரசு உலகில் உள்ள யுத்த அழிவுகளில் விருப்பம் கொண்ட எல்லா நாடுகளையும் இணைத்து எங்களின் மீது யுத்தம் நடத்தியது. மனிதாபி மான நடவடிக்கை என்ற பெயரில் மனிதாபிமானமற்ற வகையில் நடந்த இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு எதைச் செய்தாவது யுத்தத்தில் வெற்றி பெறுவதென எங்கள் மண்ணை ஆக்கிரமிக்க நின்றது. தமிழ் மக்களின் வாழ்வுக்கான குரலை உலகம் புரிந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் கைவிடப்பட்ட வர்களானோம். அதனால் எல்லோரும் சேர்ந்து எங்களைத் தோற்கடித்து அழித்து முடிக்கப் போகி றார்கள் என்று அனுமானித்திருந்தேன். இதற்குள்தான் எங்கள் மக்களின் கனவு நிறைவேறுமா என்ற ஏக்கமும் எங்களை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருந்தது.

யுத்த நிறுத்தத்திற்காகவும், இராணுவத்தின் இனப் படுகொலைக்கு எதிராகவும் குரல் கொடுத்த பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் புலி களால் மனிதத் தடுப்பரண் களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை? அங்கிருந்து தப்பி வந்த மக்களைப் புலிகள் முதுகிற் சுட்டு வீழ்த்திய துரோகத்தை குறித்து ஏன் பேசவில்லை?

விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நான் மறுக்கிறேன். கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு மக்கள் இராணுவத்திடம் சரணடையத் தொடங்கி விட் டார்கள். சரணடைந்த மக்கள், படைகளின் தாக்குதல் களுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் சரணடைந் தார்கள். அரசு உணவு, மருந்துத் தடைகளைப் போட்டுப் பல களமுனைகளைத் திறந்து மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்கச் சதித் திட்டம் வகுத்துத் தாக்குதல்களை நடத்தியது. அவற்றை முகம் கொடுக்க முடியாத மக்கள் எதிரியாகப் பார்த்த படைகளிடம் சரணடைய நேர்ந்தது. மக்கள் சரணடைவதற்குப் போராளிகள் பாதைகள் எடுத்துக் கொடுத்த தாக நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது அம்மா யுத்தத்தின் இறுதிவரை அதாவது மே 17 அதிகாலை வரை யுத்த களத்தில் இருந்தார். அம்மாவையும் தங்கையும் அவர்களுடன் பதுங்கு குழிகளில் இருந்த மக்களையும் விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. எனது அம்மா படைகளிடம் சரணடைய விரும்பாமல் தான் அங்கிருந்தார்.

யாழ் பல்கலைக் கழகம் சார்பான நாங்கள் விடுதலைப் புலிகளைப் பகிரங்கமாக ஆதரித்தோம். ஏனென்றால் அவர்கள் எங்களுக்காக நடத்திய போராட்டத்தின் நியாயத்தின் பொருட்டு அவர்களை ஆதரித்தோம். நாங்கள் இணைந்து குரல் கொடுத்தோம். வன்னி யுத்தம்நடக்கும் பொழுது நான்தான் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையாக இருந்தேன். நான் உட்பட பல மாணவர்களுக்கு, விரிவுரையாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்தது. என்னை நேரடியாக வந்து விசாரணை செய்து அச்சுறுத்தியது. எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் எமது மக்களை பாதுகாப்பார்கள் என்றே கருதுகிறோம். எமது மக்களை ஆயுதமாக, காயாக பாவித்து போராட்டத்தை அழித்துக் கொண்டிருந்த அரசை அதை நிறுத்த வேண்டும் என்று கேட்டோம். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்குப் போக வேண்டும் என்றும், உலகம் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்தோம்.

விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்கு விருப்பம் தெரிவித்து அழிவற்ற பாதையை விரும்பிய பொழுது அரசு விடுதலைப் புலிகளை வேருடன் அழித்து ஈழ மக்களைப் போராட முடியாத நிலைக்குத் தள்ள அழிவு யுத்தத்தை நடத்தி மக்களை அழித்தது. அதனால் அரசுதான் யுத்தத்தை நிறத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு களங்கம் ஏற்படும் விதமாகப் படைகள் மக்கள் மீது துப்பாக்கி சூடுகளை நடத்தியிருக்கின்றன. இதில் காயமடைந்த பலரை சிகிச் சையளிக்கக் கொண்டு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கொண்டு போன இராணுவம் அவர்களைத் திருப்பிக் கொடுக்கவில்லை. ஈழப் போராட்டத்தையும் ஈழப் போராளிகளையும் தவறாகக் காட்டுவதற்கு இராணு வம் இறுதி யுத்த களத்தில் செய்த கொடுமைகள் குறித்து நான் நிறைய அறிந்திருக்கிறேன்.

புலிகளின் தோல்விக்கு முதன்மையான காரண மென எதனைச் சொல்வீர்கள்?

யுத்தம் முடிந்தவுடன் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்று சொல்ல முடியாதளவில் ஈழத்துச் சூழல் குழம்பியிருந்தது. ஆனால் ஒரு வருடம் கடந்த இன்றைய நிலையில் இன்னும் வன்னி இறுதி யுத்தம் பற்றி கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது புலிகள் உண்மையில் தோற்றார்களா என்பதை மறுபடியும் யோசித்துப் பார்த்தால், நான் நினைக்கிறேன் புலிகள் தோற்கவில்லை. இப்பொழுது யுத்தம் நடந்த களங்கள், இடங்களுக்குச் சென்று வருகிறேன். தவிர இலங்கை அரசு தாங்கள் எப்படி யுத்தம் நடத்தினோம் என்பதையும் யார் யார் யுத்தத்திற்கு உதவினார்கள் என்பதையும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராட்ட அமைப்பு மீது உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுகள் தாக்குதல் நடத்தின. அரசாங்கம் புலிகளை அழிப்போம், யுத்தத்தை முடிப்போம், இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சில தேதிகளை குறிப்பிட்டது. அந்த அவகாசங்களைப் புலிகள் முறியடித்தார்கள். உலகமே சேர்ந்து தொடுத்த யுத்தத்திற்கு அவர்கள் முகம் கொடுத்தர்கள். இந்த யுத்தம் அவர்களுக்குத் தோல்வியில்லை. ஈழப் பிரச்சினையை உலக அரங்கில் கொண்டு சென்றார்கள். எவ்வளவுதான் போராடினாலும் உலகம் எப்படிப் புரிந்து கொள்ளும், எப்படி அழிக் கும் என்பதையும் அரசுக்கும் உலகத் திற்கும் எப்படிச் செலவு வரும், எப்படி நெருக்கடிகள் வரும் என்ப தையும் அவர்கள் புரிய வைத்திருக் கிறார்கள். உலகம் அமைத்த கொடு மையான யுத்தக் களங்களுக்கு எப்படி முகம் கொடுத்தார்கள் என்றுவியந்து பார்க்கிறேனே தவிர அவர்கள் தோற்றதாக எனக்குத் தோன்றவில்லை.

புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம் மக்களைத் தான் அரசு தோற்கடித்திருக் கிறது. இந்தப் போராட்டத்திற் காக மக்கள் செய்த எல்லா விதமான தியாகங்களும் சிதைக் கப்பட்டன. கனவுக்காக எல்லா முயற்சிகளும் முறியடிக்கப் பட்டன. கடைசியில் போராட் டத்தின் தடங்களாக மண்ணிற் குள் இருந்த போராளிகளின் எலும்புக் கூடுகளைக் கூடப் படைகள் விட்டு வைக்க வில்லை. யுத்தம் முடிந்த பிறகும் மீண்டும் மீண்டும் இன, பண்பாட்டு, நில அடையாள அழிப்புக்களை மேற்கொண்டு அரசு எங்களைத் தோற்கடித்து வருகிறது. மக்கள்தான் தோற்றார்கள் என்பதுதான் தாங்க முடியாதது. ஆனால் மக்களின் தோல்விகள்தான் போராட்டங்களை உருவாக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

இந்தத் தோல்வியில் புலிகளுக்குப் பங்கேயில்லையா? சகோதர விடுதலை இயக்கங்களை அவர்கள் ஆயுத பலத்தால் அகற்றியதும் ஈழப் பரப்பில் பிற அரசியற் போக்குகளைச் செயற்பட அனுமதிக்க மறுத்ததும் அப்பாவிச் சிங்கள மக்களையும் இஸ்லாமிய மக்களையும் அவர்கள் கொன்று போட்டதும் அவர்களைத் தனிமைப் படுத்தவில்லையா? சர்வதேச நாடுகளில் அவர்கள் செய்த பயங்கர நடவடிக்கைகளும் கொலைகளும் போதைப் பொருள் கடத்தலும் ராஜீவ் காந்தி கொலையும் அவர்களின் தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கவில்லையா?

ஷோபா சக்தி! நீங்கள் விடுதலைப் புலிகள் தொடர்பான நிரந்தரமான எதிர்ப்பை வைத்துக் கொண்டு என்னுடன் பேசுகிறீர்கள். நானோ விடுதலைப் புலிகள் தொடர்பான எனது நிரந்தரமான விருப்பை வைத்துக் கொண்டு பேசுகிறேன். விடு தலைப் புலிகள் சிதைக்கப்பட்ட ஒரு சூழலில்தான் நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கிறோம். புலிகளைத் தாக்குவது மட்டும்தான் உங்கள் நோக்கம் போல் எனக்குத் தெரிகிறது. இதைக் கடந்த காலத்தில் நீங்கள் மட்டுமல்ல பலர் செய்திருக்கிறார்கள். அவை விடுதலைப் புலிகளுக்கு அறிவுரைசொல்லும் விதமாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது. அதுவே தமிழ் மக்களையும் அழித்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும், அரசின் படுகொலை களையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டார்கள், சிங்களர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்.

இயக்கங்களில் முரண்பாடு களை, சகோதரப் படுகொலை களை யாரும் விரும்பவில்லை. அவைகள் நடந்து முடிந்து விட்டன. எங்கள் இனம் முதலில் தோல்வியடைந்தது அதனால்தான். ஆனால் மக்களின் கனவை விடுதலைப் புலிகள் முன்னெடுத்ததால் அதற்குப் பிறகு மக்கள் முழுமையாக விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் அந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன்.

அரசோ அல்லது புலிகளோ சமாதானப் பேச்சு வார்த்தைகளில் முழுமையான ஈடுபாட்டோடு இருந்ததாக நினைக்கிறீர்களா?

நான் முதலில் குறிப்பிட்டபடி சமாதானம் யுத்தத் தின் விளைவாக இருப்பதைப் போல சமாதானத்தின் விளைவாக யுத்தம் ஏற்படுவதையும் இரண்டு தரப்புக்களும் உணர்ந்திருந்தன. சமாதானப் பேச்சுகள் நம்பிக்கை தரும்படியாகவும் நேர்மை யாகவும் அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் முதற்கட்டப் பேச்சுகளிலே இனப் பிரச்சி னையை தீர்க்க அரசு முன்வரும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அரசோ சமாதானத்தை வைத்துப் புலிகளின் போர்த் தந்திரங்களை அழித்து விடவும் சூறையாடவும் நினைத்தது. எங்கள் தலைவர் பிரபாகரன் பல தடவைகள் இலங்கை அரசை கால தாமதமின்றி தீர்வுக்கு வர வேண்டும் எனக் கேட்டார். குறைந்தபட்ச இடைக்கால தீர்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பனவற்றில் கூட அரசு ஒத்துழைக்கவில்லை. மாறாகப் புலிகளை அழிக்கவும் ஈழப் போராட்டத்தைச் சிதைக்கவும் சமாதானத்தை அரசு பயன்படுத்தியது. அத்தோடு சமாதானத்தை யுத்த கால ஓய்வாகவும் பயன்படுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் அதற்குரிய எதிர் வேலைகளில் ஈடுபட்டார்கள். சமாதானத்தில் இருந்த நம்பிக்கையீனங்களைப் பார்த்துப் போரில் நம்பிக்கை வைத்தார்கள். சமாதானத்தின் மூலம் போராட்டங்கள் சிதைக்கப்பட்ட பல பாடங்கள் நமக்கு முன்னாலிருக் கின்றன. தமிழர்களிடம் போராடும் பலமிருக்கிறது என்பதை உணர்ந்து அரசாங்கம் தீர்வுக்கு வரவேண்டும் என்றும் அதன் மூலம் கனவுக்காக தியாகம் செய்யும் உயிர்களைக் காப்பாற்றி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதை அரசு முழுமையாகத் தனது சூழ்ச்சியான தந்திரங்களுடன் பயன்படுத்தி சமாதானத்தில் ஈடுபாடற்று இழுத்துச் சென்றது. அப்படியான சமாதானத்தில் புலிகளும் முழுமையான ஈடுபாடு காட்டாமல் போராடித்தான் தீர்வை அடைய வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.

இன்றைய நிலையில் தமிழர்களிடையே நம்பிக்கை தரக் கூடிய சக்திகளாக யாரைச் சொல்வீர்கள்?

எங்களின் மக்களின் மனதைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்படுபவர்களைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அவர்கள் எங்கள் மக்களின் கனவை, உணர்வுகளைப் புரிந்து கொண்ட வர்களாக இருக்க வேண்டும். அரச தரப்பை விட எங்களிடம் ஆளுமை மிக்க பல சக்திகள் இருக்கின்றன. ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இந்தச் சக்திகள் எல்லாம் ஓரணியில் நின்று மக்களின் கனவை நிறைவேற்ற முற்பட்டன. இன்று தங்கள் தங்கள் சுயநலன்களுக்காகப் பிரிந்து நிற்கிறார்கள். சுயநலன் உள்ளவர்கள் நிச்சயமாக மக்களின் கனவை நிறைவேற்றி விட முடியாது. மக்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட நலன்களுக்காக எமது மக்களின் அரசியலைப் பலியிடுவது, புதிய புதிய குழப்பங்களை ஏற்படுத்துவது, அரசின் இனவாத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவது என்பதைத்தான் எங்கள் மக்களை தோல்வியடைய வைத்த எம்மிடம் தோன்றிய ஒற்றுமையீனங்கள்.

எமது மக்கள் அடையாளமற்ற, தனித்துவமற்ற வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் ஆக்கிரமிப்பின்றி, அச்சுறுத்த லின்றி வாழ விரும்புகிறார்கள். நிவாரணங்களும், அனர்த்த கால சேவைகளும் எமது மக்களின் அரசியல் உரிமைகளாகி விட முடியாது. யுத்த களத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, சரணடைய வைக்கப்பட்ட மக்கள் அரசின் கொள்ளைகளுக்கு உடன்பட்டவர் களாகி விட்டார்கள் என்று கருத முடியாது. ஈழ மக்கள் இராணுவப் பிரசன்னமற்ற விடுதலையுடன் அமைந்த தங்களது வாழ்வைத் தாங்களே இயக்கும் அதிகாரங்கள் கொண்ட வாழ்வைத்தான் விரும்புகிறார்கள். இதற்காக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து நம்பிக்கைதரும் விதமாகச் செயல்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்தான் என்ன? புலிகளிருந்தவரை புலிகளின் ஊது குழலாய் இருந்துவிட்டு இப்போது அவர்கள் இந்திய அரசின் பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. வாக்குப் பொறுக்கி அரசியலைத் தவிர வேறு முற்போக்கான அரசியல் கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் அரசியல் நடத்துவதாகத் தெரியவில்லையே?

விடுதலைப் புலிகளால் ஈழப் போராட்ட சிந்தனையுடன் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று இந்த விடயம் தொடர்பாக நாம் விரிவாகப் பேசுவது அந்தக் கட்சியை இல்லாமல் செய்யும் விடயமாக அமைந்துவிடக் கூடாது. அது புலிகள் மீது மாற்றுக் கருத்து வைக்கிறோம் என்று விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்த நடவடிக்கை போலத்தான் இருக் கும். புலிகள் பேசும் விடயத் தைப் பேச வேண்டும், என்று தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத் திற்கு அனுப்பி வைத்தார்கள். அது எமது போராட்டத்திற்கு ஜனநாயக வழி மீது இருந்த ஈடுபாடும் பயணமும்.

இன்று புலிகள் இல்லாத சூழலில் கூட்டமைப்புத் தான் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் பேசி தமிழ் மக்களுக்கு இனி வகிக்க வேண்டிய பங்கை எடுத்துக் கூற வேண்டும். அது தவிர்க்க முடியாதது. இலங்கை அரசுடனும் பேச வேண்டும். இலங்கை அரசு என்ன செய்கிறது? என்ன சொல்கிறது எம்முடன் எதைப் பகிர வருகிறது என்பதற்கு அப்பால் மக்கள் சார்பாக அதைப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் கூட்டமைப்பிற்கு இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவது, தமிழ் மக்களின் வாக்குகளைக் காப்பாற்றுவது என்பது முக்கியமானது. இப்போது ஈழத்தில் உள்ள முக்கியமான வேலை இது என்று நான் நினைக்கிறேன்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் நீங்கள் புலிகள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச் செல்வம் போன்ற பல மிதவாத தமிழ்த் தலைவர்களைக் கொன்றொழித் ததை இன்று எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

அவர்கள் கொல்லப்படும் போது நான் குழந்தை யாகவும் சிறுவனாகவும் இருந்தேன். யாரையும் கொலை செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அவர்களைப் புலிகள் கொன்றார்கள் என்பது பற்றியும் நான் அறியவில்லை. நான் உன்னதமான போராட்டம் நடந்த சூழலில்தான் இருந்தேன்.

ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து முற்போக்கான புதியதொரு அரசியல் இயக்கம் தோன்றுவதற்கான வாய்ப்புகளுள்ளதாகக் கருதுகிறீர்களா?

ஈழத் தமிழ் மக்களை அரசு எந்தளவுக்கு ஏமாற்றுகிறதோ அந்தளவுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. உலகம் எந்தளவுக்குப் பின் தள்ள நினைக்கிறதோ அந்தளவுக்கு வாய்ப்பிருக்கிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை உலகம் மறுக்கிறது. வாழ்வின் மீது மிக நுட்பமான ஆக்கிர மிப்புகளை, வன்முறைகளை, மீறல்களைச் செலுத்திக் கொண்டி ருக்கிறது. இவை களால் காலமும் சூழலும்தான் அதற்குரிய விடயங்களை, வடிவங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்களை வழங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் வெறும் அரசியல் கட்சியாக அது இருக்க முடியாது. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடிய எமது மக்கள் உண் மையில் மக்களுக்கான இயக்கத் தைச் சுலபமாகக் கண்டு பிடிப்பர்கள்.

இன்றைய நிலையில் ஈழத்தில் சாதியம் எவ்வாறிருக்கிறது? தீண்டாமை இன்னும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அறிகிறோமே?

ஈழப் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய நடவடிக்கையாயிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந் திருந்தது. வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்து விட்டதைப் பார்த்திருக்கிறேன். யுத்தமும் அவலமும் அந்த மக்களை ஒற்றுமையாகத் திரட்டி வைத்திருந்தது. யாழ்ப்பாணத் தில் தீண்டாமை சில இடங்களில் இன்னும் இருந்து வருகிறது. கோயிலுக்குள் பிரவேசிக் கவும், கிணறு களில் தண்ணீர் எடுக்கவும் சில மக்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் தனிப் பாத்திரங்களில் உணவு கொடுக்கப்படுகின்றன. சாதிய ஒடுக்குமுறையை, மீறலை பேசும் இலக்கியங்கள் இங்கு காலத்திற்கு ஏற்ப ஈழத்தில் எழவில்லை.

சாதியத்துக்கும் இந்து மதத்துக்குமான தொடர்புகள் குறித்துப் புலிகளுக்கு அரசியல் புரிதல் இருந்ததாகக் கருதுகிறீர்களா? சாதியத்தின் வேரே இந்து மதம்தான் என்ற புரிதல் அவர்களிடமிருந்ததா? சாதியத்தை ஒழிப்பதற்கான என்ன அரசியல் வேலைத் திட்டத்தை புலிகள் வைத்திருந்தார்கள்?

புலிகள் ஏதும் மதத்தை அமைப்பின் அந்தஸ்து மதமாக அறிவித்தார்களா? இல்லைத்தானே. அவர்கள் தமிழ் மக்களின் கனவான தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், உரிமை இந்த விடயங்களைத்தான் புரிந்து முன்வைத்தார்கள். சாதியம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு நல்ல புரிதல் இருந்தது. அமைப்பில் தலைமை வகித்தவர்கள் ஒடுக்க்ப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள். நான் அறிந்தவரை வன்னியில் அப்படி ஒரு பாகுபாடு இருக்கவில்லை. தொடக்க காலத்தில் சாதியத்தை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். நீங்கள் உட்பட பல போராளிகள் அதில் ஈடுபட்டிருந்தீர்கள் என்று அறிந்தேன். யாழ்ப்பாணம் புலிகளது ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்பதனால் சாதிய ஒடுக்குமுறை இருக்கலாம்.

விடுதலைப் புலிகள் குறித்து தமது மக்களின் இன்றைய மதிப்பீடு எதுவாயிருக்கிறது?

ஈழத்திற்காக விடுதலைப் புலிகள் போராடும் விதம், அவர்களது அர்ப்பணிப்பு, தியாகம், வாழ்க்கை என்பன எனக்குச் சிறிய வயதிலிருந்தே மிகுந்த வியப்பை ஏற்படுத்தின. ஈழத்திற்காகப் போராடு பவர்கள் புலிகள் மட்டும்தான் என்ற நிலைதான் என்னிடம் சிறிய வயதில் இருந்தது. வேறு இயக்கங்கள் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. போராளி இயக்கங் களிற் கிடையில் எத்தனையோ விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஈழப் போராட்டத்தைக் கையில் எடுத்து அந்த இலட்சியத் திற்காக இறுதிவரை போராடி னார்கள். விடுதலைப் புலிகள் மரணத்தை முக்கியமான ஆயுதமாக எடுத்தார்கள். அவர் களை மரணம் எப்பொழுதும் கௌரவித்தது. புலிகள் மரணத்தை எதிர்கொள்ளும் விதம் மக்களிடம் பெரியளவி லான ஆதரவைப் பெற்றது. எமது மக்கள் போராடி வீழ்ந்த போராளியின் முன் அவரை வணங்கினார்கள். நான் பிறந்து வளர்ந்த காலங்களில் இப்படித் தானிருந்தது.

அதே மாதிரித்தான் இன்றும் நிலைமையிருக்கிறது. இலங்கை அரசின் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும்தான் ஈழப் போராளிகளை உருவாக்கின. அரசாங்கம் இந்தத் தீவில் அதை என்றுமே நிறுத்தப் போவதில்லை. அதனால் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்றும் இந்த மண்ணில் இருக்கும். புலிகளின் காலம் எங்களுக்கு ஏதோ ஒரு திருப்தியைத் தந்தது. பாதுகாப்பைத் தந்தது. நம்பிக்கையை ஊட்டியது. மக்கள் இப்பொழுது "நாங்கள் எல்லோரும் செத்துப் போயிருக்கலாம்' என்று கூறுகிறார்கள். "புலிகள் காலத்தில் குப்பி விளக்கிலும் வெளிச்சம் மிகுந்திருந் தது'' என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது வன்னி எங்கும் நிலைமை மோசமாக இருக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த உதவிகள், வாழ்க்கைகள் துயரைத்தான் வழங்கியிருக்கின்றன. முகாங்களிலும் சொந்த நிலத்திலும் அடிமைகளைப் போல் மக்கள் நடத்தப்படுகிறார்கள்.

ஆனால் "புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களைச் சுட்டார்கள், மனிதக் கேடயங்களாக வைத்திருந் தார்கள்' என்று பல இடங்களில் நீங்கள் சொல்லி யிருக்கிறீர்கள். அப்படியொரு சூழலை அரசும் உலகமும் தான் உருவாக்கியது. கண்மூடித்தனமான யுத்த களத்தை உலகின் வல்லமையுள்ள நாடுகள் பலவற்றைத் திரட்டி மகிந்த ராஜபக்சேவின் அரசு ஏற்படுத்தியிருக்கிறது. யுத்தம் போராளிகளை நிலைகுலையச் செய்தது. அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருந் தார்கள். பல்லாயிரம் மக்கள் இறுதிப் போரில் இறந்து போனார்கள். போராட்டம் என்றால் இரத்தம் சிந்துவது தவிர்க்க முடியாதது. நாங்கள் எங்களுக்கான வாழ்வை வாழ இதைவிட என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு குறிப்பிட்டதைப் போலவே விடுதலைப் புலிகள் ஈழ மக்களின் நெஞ்சில் இருக்கிறார்கள். கல்லறைகளைத் தடயங்களை அழித்தாலும் எமது மக்களின் நினைவுகளை அழித்து விட முடியாது.

நமது மக்களின் மரணம் குறித்து இனவாத இலங்கை அரசுக்கும் சர்வதேச அரசுகளுக்கும் அக்கறையில்லை. ஆனால் அந்த அக்கறை நமது சொந்த மக்களின் மீதே புலிகளுக்கு இல்லாமல் போனதுதானே அவர்கள் கடைசியில் நமது மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருக்கக் காரணமாயிருந்தது? இதில் புலிகளுக்குப் பொறுப்பில்லை என எப்படிச் சொல்ல முடியும்?

விடுதலைப் புலிகள் எமது மக்களை அழிக்க வில்லை. அரசும் உலகமும்தான் எமது மக்களைக் கொன்று குவித்தது. விடுதலைப் புலிகள் அந்த அநீதிக்கு எதிராகப் போராடியவர்கள். தமிழ் மக்களை யும் விடுதலைப் புலிகளையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மக்களிடமிருந்துதான் போராளிகள் உருவாகினார்கள். விடுதலைப் புலிகள் மீது எமது மக்கள் கொண்ட விருப்பமும் தேவையும் தான் இன்றும் அவர்கள் தேவை என்ற நிலைமையும், அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள எது காரணம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெற்றதற்குக் காரணம் அந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் சிந்தனையுடன் அவர்களால் உருவாக்கப்பட்டதும் அந்த அமைப்பில் உள்ள மூத்த அரசியல் வாதிகள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும்தான். அந்த வகையில் மக்கள் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள் என நினைக் கிறேன். தமிழ் பேசும் ஈழ மக்களினது போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மரபு வழித் தமிழர் தாயகம், சுய நிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்ற வாழ்வுரிமையை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க எமது மக்கள் தயாராக இல்லை. அது எமது மக்களின் அடையாளம். அதற்காகவே எமது மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயங்களை நிதானமாகத் தெளிவாக உண்மையாகக் கொண்டு செயல்படுகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.

தமிழர் தாயகத்தை, அவர்களது கனவை நிராகரிக் கும் எந்த நிலையையும் தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த தேர்தல் சூழலில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடிப் பிரதிநிதித்துவங்களை அள்ளிச் சென்று தமிழ் மக்கள் விரும்பாத கதைகளை அளக்கவே அரசு முயன்றது. அரசு எங்கள் மண்ணில் நடத்தும் எந்தத் தேர்தலையும் நாங்கள் புத்தி சாதுர்யமாக எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வன்னி யுத்தத்தின் பின்னர் இப்பொழுது அரசின் அடுத்த போர் தமிழ் மக்களின் வாக்குகளை, பிரதிநிதித்துவத்தை இலக்கு வைத்து நடந்து கொண்டி ருக்கிறது. போர் தந்த வலிகள் போராட்டத்தின் தோல்வி நிலை என்பன எமது மக்களிடம் வாக்களிக்கும் மனநிலையைப் பாதித்துவிட அதையும் தமக்குச் சாதகமாக அரசு பயன்படுத்த நினைக்கிறது. இதில் எமது மக்கள் தொடர்ந்து தெளிவாக இருக்க வேண்டும்.

யாழ் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கிழக்கின் அரசியற் குரல்களை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

மட்டக்களப்பு, வன்னி மக்கள் மீதான மேலாதிக்கப் போக்கு சில பின்தங்கிய இடங்களில் இருக்கின்றது. ஆனால் முழுமையாக அப்படியொரு ஆதிக்கம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எங்களுடன் பல்கலைக் கழகத்தில் கிழக்கிலிருந்து வந்து படித்த தமிழ் முஸ்லீம் மாணவர்களுடன் மிக நெருக்கமான உறவு இருந்தது. அறை நண்பர்களாக இருந்திருக் கிறோம். பல்கலைக் கழகத்தில் முக்கிய பதவிகளில் கிழக்கைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். புலிகள் அமைப்பில் கூட கிழக்கைச் சேர்ந்தவர்கள் முக்கிய இடங்களில் இருந்தார்கள். ஈழப் போராட் டத்தில் கிழக்கு உறவுகள் முக்கிய இடம் வகித்தார்கள்.

அண்மையில் கிழக்கில் கிரான் என்ற இடத்திற்குச் சென்றபொழுது மக்களுடன் பேசினேன். அவர்களும் எங்களைப் போலவே வாழ்கிறார்கள். அவர்களது விருப்பம், கனவு, நிலைப்பாடு எல்லாம் எங்களைப் போலவே ஒன்றாக இருந்தது. போக்குவரத்துகள் ஓரளவு சீரடைந்திருப்பதால், இப்பொழுது மீண்டும் வடக்கு கிழக்கு உறவு வலுவடைந்து வருகிறது.

நன்றி செவ்வி: லும்பினி ஷோபா சக்தி

Pin It