ஒரு படைப்பு என்பது படைப்பாளனோடு முடிவடைந்து விடுவதில்லை. வாசகனிடத்தில் சென்று அடைந்தாலும் அது விமாpசிக்கப் படும் போதே, ஆய்வு செய்யப்படும் வேளையே,மதிப்புரைக்கும் சமயமே, ஒப்பீடு செய்யும் பொழுதே முழுமை அடைகிறது. நிறைவு பெறுகிறது. முனைவர் தே. ஞானசேகரன் இப்பணியை ஓர் இலக்கிய சேவையாகச் செய்து வருகிறார். இவ்வாறான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக கட்டுரையாளர் ‘பாரதி முதல் கனிமொழி வரை’ என்னும் நூலை தந்துள்ளார். பாரதி, பாவேந்தர், கண்ணாதாசன், அப்துல் ரகுமான், சிற்பி, புவியரசு, வேதாத்திரி மகரிஷி, சூ. செல்லபப்பா, வைரமுத்து, முத்தமிழ் விரும்பி, கனிமொழி என பதினொரு படைப்பாளிகளின் கவிதைகளை மட்டும் எடுத்து ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.

‘பாரதியாரும் ஆத்திச்சூடி இலக்கியமும்’ என்னும் முதல் கட்டுரை அவ்வையார் முதல் 45க்கும் மேலான ஆத்திச்சூடி நூல்களை பட்டியலிட்டு சிலவற்றை மட்டும் ஒப்பாய்வு செய்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கால கட்டத்திற்கு ஏற்ப ஆத்திச்சூடி உருவாக்கபட்டதை விரிவாய் விளக்கியுள்ளார். ‘அவ்வையின் ஆத்திச்சூடி தனிமனித விடுதலையை நோக்கமாகச் கொண்டு பாடப்பட்டதாகும். பாரதியின் ஆத்திச்சூடி நாட்டின் விடுதலையை நோக்கமாகக் கொண்டதாகும். பாரதிதாசனின் ஆத்திச்சூடி தமிழ்ச் சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்டதாகும். இதற்குப் பின்னர் வந்த பல ஆத்திச்சூடிகள் தனியான துறை சார்ந்த கருத்துக்களைக் கொண்டிருப்பதை காணமுடிகின்றது் என சூழலை சுருக்கமாய் விவரித்துள்ளார். ‘பாரதியாரும் ஆத்திச்சூடி இலக்கியமும்’ என தலைப்பிட்டிருந்தாலும் அவ்வையார் முதல் அண்மையர் வரையிலான அனைத்து ஆத்திசூடிகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். ’தையல் சொற்கேளேல்’ என அவ்வைக்கு முரணாக ‘தையலை உயர்வுசெய்’ என பாரதி எழுதியதையும் ‘போர்த்தொழில் பழகு’ என பாரதியும் பாரதிதாசனும் உடன்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘காலம் மாறச் கருத்துக்கள் மாறி கோலம் புதிதாய்க் கொள்ளுதல் இயற்கை என கவிஞர் சிற்பி தந்த ஆத்திச்சூடி காலத்துக்கு ஏற்ப உள்ளதை உரைத்துள்ளார். இலக்கியத்தில் இது வொரு நல்ல முயற்சி. இக்காலத்தவருக்கும் எக்காலத்தவருக்கும் ‘ஆத்திச்சூடி’ குறித்த ஒரு புரிதல் ஏற்படும்.

தமிழிலக்கிய வரலாற்றில் பாரதியைத் தொடர்ந்து இலக்கியம் செய்தவர் பாரதிதாசன். பாரதியின் நோக்கு இந்திய விடுதலையாயிருந்தது. ஆனால் பாரதிதாசன் தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றியே இருந்தது. முனைவர் தே. ஞானசேகரன் மிகச்சரியாகவே பாரதிதாசனின் நோக்கைக் கண்டறிந்து அவரின் ‘தமிழியக்கம்’ நூலில் விரவியுள்ள தமிழியக்கக் கொள்கைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார். ‘திராவிட இயக்கங்களின் கருத்தியல் அறிஞராக பாவேந்தர் திகழ்ந்தார்’ என பாரதிதாசன் தமிழுணர்வை வைத்து சுட்டியுள்ளார்.

‘மொழியே தானே மூச்சு

              மொழியே தானே உணர்வு

மொழியே தானே வாழ்வு.

              மொழியே தானே இன்பம்.

மொழியே தானே மனிதன்.

              மொழியே தானே விழிகள்.

மொழியே தானே உலகம்.

              மொழியின்றேல் நாம் யாரோ?’ என பாடலொன்றையும் எடுத்துக்காட்டி பாவேந்தாpன் கொள்கையை விளங்கிச் செய்துள்ளார். மொழி முதன்மை பெற வேண்டுமாயின் மொழியிலேயே பாடம் கற்க பாரதிதாசன் வரிகள் மூலம் உணர்த்தியுள்ளார்.

‘தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில்

கட்டாயம் என்பதொரு

சட்டம் செய்க என்னும் பாவேந்தாpன் வரிகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது சிறப்பு. பாரதிதாசன் கூற்று நிறைவேற்றப் பட்டிருந்தால் இன்று தமிழுக்கு இந்நிலை ஏற்பட்டிராது. இச்சூழ்நிலையில் இக்கட்டுரை முக்கியமானதே.

கண்ணாதசன் ஒரு கவிஞர், கதைஞர், கட்டுரையாளர், வரலாற்று ஆசிரியர் என பல தளத்தில் இயங்கினாலும் அவர் பாடலாசிரியர் என்னும் வகையிலேயே மிகப் பிரபலமாய் அறியப்பட்டவர். திரைப்பட பாடல் இலக்கியம் ஆகுமா, ஆகாதா என்னும் விவாதம் ஒருபுறம் தொடர்ந்தே வருகிறது. இந்நிலையிவ் இத்தொகுப்பாசிரியர் ‘கண்ணாதாசனின் கவிதைக் கலை’ என்னும் தலைப்பில் திரைப்படப்பாடல்களை எடுத்துக்கொண்டு அதிலுள்ள கவிநயங்களை அழகாக, அருமையாக எடுத்துக்காட்டியுளள்hர். அதில் காதல், தத்துவம், வாழ்க்கைத் தத்துவம், சமூக விமாpசனம் என்னும் பிரிவுகளில் ஆய்ந்துள்ளார்.

‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா - அந்த

உறவுக்குக் காரணம் பெண்களடா் என காதலுக்கான பாடல் வரியை எடுத்துக்காட்டியுள்ளார். தத்துவம் எனில் இறைவனை அறிதல் என்பது கட்டுரையாளரின் கருத்தாயுள்ளது. மற்றதை ‘வாழ்க்கைத் தத்துவம் ‘ என வகைப்படுத்;துகிறார். இவ்வாறு காண்பது ஒரு புதுப்பார்வை. பொதுவாக இறைவனை அறிதலை அன்மீகம் என்பர். எனினும் கண்ணதாசனின் தத்தவப்பாடல்கள் தன்னிகரற்றவை. காலம் கடந்தாலும் காற்றின் வழி காதுகளில் தத்துவவரிகள் ஒலித்துக் கொண்டேயுள்ளன.

‘உறவு வரும் ஒருநாள் பிரிவு வரும்

வரவு வரும் வழியில் செலவு வரும்

பகலும் வரும் உடனே இரவு வரும்

பழகி விடும் துணையும் விலகி விடும்’ என்னும் பாடல் சரியான எடுத்துக்காட்டு. இப்பாடலில் தத்துவம், கவிநயம், சந்தம், சொல்லாடல் என அனைத்தும் சரிவிகிதத்தில் உள்ளன. எளிமை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையே கண்ணதாசனின் வெற்றிக்குக் காரணம் என கட்டுரையாளர் தன் ஆய்வுரையை வைத்துள்ளார்.

பழம் பெரும் இலக்கியங்களில் இருந்து கருத்துக்களை எடுத்து அதிகம் கையாண்டு பாடலாக்கியவர் கண்ணதாசன். ஆனால் வைரமுத்துவின் பாடல் வரிகளில் எடுத்தாண்டுள்ளதை கடடுரையாளர் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். கண்ணதாசனின் பாடல்களை எடுத்து ஆய்வு செய்தவர் வைரமுத்துவிடமிருந்து கவிதைகளையோ, நாவலையோ ஆய்வு செய்திருக்கலாம். வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியாராக மிகவும் அதிகமாகவே விமர்சிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஒரு கவிஞராக அறியப்பட வேண்டியது, ஆராயப்பட வேண்டியது அவசியம். எனினும் கட்டுரையாளர் கவிஞர் வைரமுத்துவிற்குள் இலக்கிய தாகத்தை கண்டறிந்து கட்டுரையாக்கியுள்ளார்.

கண்ணதாசன் மட்டுமல்ல,வைரமுத்து மட்டுமல்ல இரண்டாயிரமாண்டு பழமைமிகு தொன்மைமிகு இலக்கியத்தின் தாக்கமின்றி எவராலும் எழுத முடியாது என்பதே கடந்த கால இலக்கிய வரலாறு காட்டும் உண்மை. வைரமுத்துவின் ஒவ்வொரு பாடல் வரிக்கும் சங்க இலக்கியம், திருக்குறள், மகாபாரதம், இராமாயணம், சிலப்பதியாரம், கலிங்கத்துப் பரணி,பாரதியார், பாரதிதாசன், சிற்பி என அனைத்திலிருந்தும் - அனைவரிடமிருந்தும் வரிகளை சுட்டிக் காட்டி வைரமுத்துவின் இலக்கியத் தாக்கத்தோடு தன் இலக்கியத் தாக்கத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தியுள்ளார்.

‘யான் நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கமால்

தான் நோக்கி மெல்லநகும்’ என்னும் குறள்

‘நானோ கண் பார்த்தேன்

நீயோ மண் பார்த்தாய்’ என வைரமுத்து பாடலாக்கியதை சுட்டியுள்ளார். எனினும் வைரமுத்து முன்னோர்களின் படைப்பலிருந்து மாறுபட்டு எவ்வாறு நவீனமாய்க் கற்பனையும் நவீன மொழியமைப்பையும் புதிய உத்திகளையும் கையாண்டுள்ளார் என கட்டுரையாளர் தெரிவிக்கிறார். இதுவே வைரமுத்துவின் பலம். தனித்துவம். வெற்றிக்கு வழி.

கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் அப்துல் ரகுமான். படிமம், குறியீடு ஆகியவற்றை கவிதைகளில் பயன்படுத்தியவர். முரண்களும் உண்டு. பின்னாளில் இவர் எழுத்துகளில் மாற்றம் ஏற்பட்டது. ‘பித்தன்’ ‘ஆலாபனை’ என தொடர்ந்தார். ஆலாபனையே அவருக்கு சாகத்திய அகாதெமி விருது பெற்று தந்தது. ‘ஆலாபனை’ என்னும் ஒரு கவிதையை எடுத்துக் கொண்டு கட்டுரையளர் ‘மானுட விசாரனை’ நடத்தியுள்ளார்.

‘நீ நிர்வாணமாக இருந்தாய்

ஆனாலும் உன்னிடம்

ஆபாசம் இல்லை.

நாமோ ஆடைகளை அணிந்து கொண்டு

ஆபாசமாக இருக்கிறேhம்’ என நாகரிகத்தின் பெயரால் எந்தளவிற்கு பின்னடைந்துள்ளோம் என கவிதை உணர்த்துகிறது. ‘நாட்டு மிராண்டி’ என்னும் ஓரோயொரு கவிதையை வைத்துக் கொண்டே ஒரு நீண்ட முழுமையான ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.

அப்துல் ரகுமானுக்கு ‘ஆலாபனை’ சாகத்திய அகாதெமி விருது பெற்று தந்தது போலவே சிற்பிக்கு விருது பெற்று கொடுத்த தொகுப்பு ‘ஒரு கிராமத்து நதி’. வானம்பாடிகளில் முதன்மையானவர். ’ஒரு கிராமத்து நதி’ யில் ஒரு கிராமத்தையே படம் பிடித்துக்காட்டிய கவிஞர் கிராமத்தவர்களை எவ்வாறு சித்திரமாக்கிக்காட்டியுள்ளார் என முனைவர் தே. ஞானசேகரன் பல மனிதர்களை அடையாளம் காட்டியுள்ளார். ஒவ்வொரு மனிதரையும் அவரவர் குணங்களோடு சிற்பியின் கவிதைத் திறத்தோடு சித்திரப்படுத்தப்பட்டுள்ளது. ஊமையன், நடுக்காட்டுப் பெரியசாமி, சின்னக் கண்ணாள், மாப்பிளைக் கவுண்டர் என அசலர்களையே கவிதையாக்கப்பட்டுள்ளதை காட்டியுள்ளார். ஆயினும் ‘அம்மா’ குறித்து சிற்பி எழுதியதே நெகிழ்ச்சி.

‘அம்மா

என்

பிஞ்சு வயதுப் பிரபஞ்சமே் என்னும் வரியை எடுத்துக்காட்டி இதயத்தில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி விடுகிறார் கட்டுரையாளர். ‘அம்மா’வை கொங்கு நாட்டு பெண்களின் ஓட்டு மொத்தப் பிரதிபலிப்பு என கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது சுட்டத்தக்கது.

வானம்பாடியரில் மற்றுமொரு மாபெரும் கவிஞர் புவியரசு. ‘புல்லாங்குழல்’ என்னும் தொகுப்பில் ‘மன்னியு‘;கள்’ என்னுமொரு கவிதையை கவிஞா ;ஏன் எழுதினார் என சூழ்நிலையை விவரித்துள்ளார்.

‘மூன்றாவது உலகப்போர்

எப்போதோ தொடங்கி

நடந்து கொண்டிருப்பது

தெரியுமா உங்களுக்கு் என புவியரசு வரிகளையே தொடக்கமாக வைத்து ஓர் ஆர்வத்தை உண்டாக்கியுள்ளார். கட்டுரையாளர் முதல் உலகப் போரில் ஏற்பட்ட அறிவுகளை மிகத் துல்லியமாக புள்ளி விவரங்களை வரிசைப்படுத்தி இதயத்தை உறையச்செய்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் விளைவுகளையும் கோடிட்டு காட்டியுள்ளார்.

‘உலகின் எந்தப் பகுதியில் நடக்கும்

எந்தக் குழப்பமும்

பெண்டகன் வாசற் படியிலிருந்தே

ஆரம்பமாகின்றது என புவியரசு எழுதியதை கட்டுரையாளர் காட்டியுள்ளார். முடிவில் முனைவரே புவியரசுவின் பிரதிநிதியாய் தெரிந்து என்ன செய்ய, நாம் தான் சுரனை இல்லாதவர்களாக இருக்கிறோமே என வாசிப்பாளனை சூடேற்றியுள்ளார். ஒரு படைப்பாளியாய் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

பாரதியார், பாவேந்தர், கண்ணதாசன், அப்துல் ரகுமான், சிற்பி, புவியரசு, வைரமுத்து, கனிமொழி என வெகுவாக அறியப்பட்ட படைப்பாளிகளுடன் வேதாத்திரி மகரிஷியின் ‘ஞானக்களஞ்சியம்’ தொகுப்பில் இடம் பெறும் ஓருலகப் பேரரசு என்னும் சிந்தனைகளைச் சுருக்கமாக விளக்கியுள்ளார். இயேசு, நபிகள், புத்தர் போல மகரிஷியும் மானுடச் சமூகத் துயர் துடைக்க பாடுபட்டவர் என்கிறார்.

‘உலகப் பொது ஆட்சியென்ற உயர்திட்டம்

ஒன்றுஹ தான் போர் எழாமல்

ஒவ்வொரு நாட்டை அதனின் மக்கள் தமை

அச்சமின்றி பாதுகாக்கும்’ என மகரிஷியின் கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளார். ஓருலகப் பேரரசினால் ஏற்படும் பதினேழு நன்மைகளை பட்டியலிட்டு ஓர் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளார். ஓருலகப் கோட்பாடு உறுதி செய்யப்படாத வரையில் சாதி, மதம், இனம், மொழி, தனியுடமை என்ற கருத்தாக்கத்தால் மனிதன் அமைதியற்ற வாழ்வையே தொடர்ந்திட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரம் என்றும் சிறந்த காவியம் என்றும் மகாகவியம் என்றும் நாளைய தமிழகம் இந்திர காவியத்தை எற்றுக் கொள்ளும் நம்பிக்கையுள்ளது என சூ. செல்லப்பா எழுதிய ‘இந்திர காவியம்’ அல்லது நான்மறை விளக்கம்’ என்னும் நூலை ஆய்வு செய்துள்ளார். மருத நில மக்கள் தலைவனின் மறைக்கப்பட்ட வரலாற்றை கட்டுரையாளர் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். இக்காவியத்தை ஒலிநூல், ஒளிநூல், கலைநூல், ஒகநூல் எனவும் பகுத்துள்ளார். கட்டுரையாளர் மற்றவற்றை விட இதில் மட்டுமே ஒரு காப்பியத்தையே ஆய்வுக்குட் படுத்தியுள்ளார்.

அண்மையில் இலக்கியயுலகில் பேசப்பட்ட ஒரு தொகுப்பு ‘பூமரநிழல்’. இதன் ஆசிரியர் முத்தமிழ் விரும்பி. இத் தொகுப்பிலுள்ள ‘பூமர நிழல்’ கவிதையையே கட்டுரையாளர் சுட்டிக் காட்டுகிறார். ஒரு தனி மனித உணர்வு எவ்வாறு நுட்பமாக பொது அனுபவமாக மாற்றப்படுகிறது என்பதற்கு ‘பூமர நிழல்’ ஒரு சான்று என்கிறார். இந் நெடுங்கவிதை மூலம் கவிஞர் வெற்றிப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ‘பூமர நிழல்’ என்னும் தலைப்பில் பூ ஒரு குறியீடு என்றும் மரம் ஒரு குறியீடு என்றும் நிழல் ஒரு குறியீடு என்றும் குறிப்பிட்டுள்ளார். இக்கவிதை

‘உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்பாடென்ப் மெய்யுணர்ந் தோரே என்னும் தொல்காப்பியர் கூற்றுப்படி அமைந்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

‘அன்று உயிர்ப்பூ துறந்து

சருகாய்க் கிடந்தாலே

எந்தை நிழலடி காத்த

மூன்று பூக்களுக்கு இனி

நிழலில்லை என்றார் சுற்றம்’ என்று கவிதை கட்டமைத்த விதம் கவனத்திற்குரியது. இறுக்கமாயிருப்பினும் உருக்கமாயுள்ளது. கவிதையில் இடம் பெறும் துன்பியல் காட்சிகள் அலையாய் அவல உணர்வை ஏற்படுத்தும் எல்லையற்ற பிரதிகளாக அமைந்துள்ளன என்கிறார்.

பாரதியில் தொடர்ந்த முனைவரின் ஆய்வுப் பயணம் கனிமொழியிலும் தொடர்வது வரவேற்பிற்குரியது. பாரதி புதுக் கவிதையைத் தொடங்கி வைத்தவர். கனிமொழி ஒரு நவீன தளத்தில் இயங்குபவர். கனிமொழியின் ‘அகத்திணை’ என்னும் அண்மைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘தாட்சாயினி’ கவிதை ‘தொன்மம்’ எனும் வகையில் அமைத்து பின் நவீனத்துவப் பார்வையில் ‘பெண் மொழி’பேசும் உரையாடலாக அமைவதை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார். கட்டுரையாளரின் பார்வை பின் நவீனத்துவதிலும் நீள்வது குறிப்பிடத்தக்கது. ‘தாட்சாயினி’ ஒரு குறியீடு எனினும் இந்த கவிதை ‘தொன்மம்’ மிக்கதாயுள்ளது என்கிறார். இக்கவிதையை புரிந்து கொள்ள சிவன் - பார்வதி கதை அறிந்திருக்க வேண்டும் என்கிறார்.

‘பாவம்

முக்காலும் உணர்ந்த

ஈசனுக்கு மறக்குமா

அவள் தாட்சாயினி

என்பது என கவிதை முடித்து பெண்ணுக்குள்ளும் ஒரு பெரு நெருப்பு புதைந்துள்ளது என்கிறார். கனிமொழியிடம் எப்போதும் ஒரு பெண் குரல் தொடரும் என்பதற்கு சான்றாகவே உள்ளது இக்கவிதை. இதையே முனைவர் எடுத்துரைத்துள்ளார்.

முனைவர் தே. ஞானசேகரன் ‘பாரதிமுதல் கனிமொழி வரை’ என்னும் இக்கட்டுரைத் தொகுப்பில் தொல்காப்பியம் முதலான தன் ஆழ்ந்த வாசிப்பனுவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாரதி, பாரதிதாசன்,சிற்பி, கண்ணதாசன், புவியரசு, வைரமுத்து, முத்தமிழ் விரும்பி, கனிமொழி என வேவ்வேறு தளத்தில் இயங்கும் கவிஞர்களை ஆய்வுக்குட்படுத்தியதோடு ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு தன்மையை ஆராய்ந்துள்ளார். ஆனால் எவரையும் முழுமையாய் ஆய்வுச் செய்யவில்லை. கவிஞர்களின் கருத்துக்களை கண்டறிந்து சொல்வதோடு அவர்கள் கருத்துக்களோடு உடன் பட்டு தன் கருத்தையும் முன்வைக்கிறார்.

பாரதி முதல் கனிமொழி வரை என தலைப்பிட்ருந்தாலும் பதினொரு படைப்பாளிகளையே ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். கவிதைகள் குறித்த கட்டுரைத் தொகுப்பை வாசிப்பிற்கேற்ப எளிய நடையிலேயே எழுதியுள்ளார். கட்டுரைத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒரு நூற்றாண்டு இலக்கிய அனுபவத்தை உள்வாங்கிய ஓர் உணர்வு ஏற்படுகிறது. கட்டுரைகள் ஆழ்ந்து இருப்பினும் நெடியதாயுள்ளது. இலக்கியத்தில் படைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தாலும் படைப்புகள் குறித்த ஆய்வுகள், விமாpசனங்கள், ஒப்பாய்வுகள் அவசியமே. முனைவர் தே. ஞானசேனரன் இப்பணியைத் தொடர வேண்டும்.

வெளியீடு - கடற்குதிரை, ஏ4,முதல் தளம், நேதாஜி நகர், பூனை மேடு, கோவை - 641064. விலை - ரூ 75. 00

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It