வடக்கு சென்றிருந்த கொத்தலாவல மொழி மாற்றச் சட்டம் வரும்போது தமிழ்மொழிக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து தெற்கில் இனவாதிகள் துள்ளி எழும்பினர். இனவாதத்தை வைத்துப் பிரச்சாரம் செய்யத் தவித்துக்கொண்டிருந்த வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கண்டபாட்டுக்கு அவர்கள் வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர். எல்லாச் சிங்கள மக்களும் தமிழ் கற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படப் போகிறார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டது. தமிழ்மொழிக்குச் சம உரிமை என்பது சிங்கள மொழி பேசுபவர்களும் தமிழ் கற்கும் நிலையை உருவாக்கும் என்று திரிக்கப்பட்டது. சிங்களத் தேசியவாதம் முடுக்கி விடப்பட்டது.

SWRD2UNP மலையக மக்களின் உரிமைகளைச் சட்டப்படி பறித்தது சரி என்று வாதாடிய சிங்களத் தேசியவாதிகள் இச்சட்டம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்கள் உட்பட அனைத்து ‘வெளிநாட்டவர்களுக்கும்’ பொருந்தும் என்றும் வாதிட்டனர். இலங்கை வரலாற்று ரீதியாக சிங்களவரின் சொத்தென்றும் பின் வந்த தமிழர் தம் நாட்டின் பாதியைப் பறித்துவிட்டனர் என்றும் சிலர் வாதிட்டனர். அநகாரிக தர்மபாலவின் பிரச்சாரங்கள் மீட்டெடுக்கப்பட்டன. 1815ஆம் ஆண்டு கண்டிய ஒப்பந்தம் மீண்டும் நினைவுகூரப்பட்டது.

1956இல் நடந்த புத்தர் இறந்த 2500ஆம் ஆண்டு நினைவு (பரினிபான) சிங்கள பௌத்த இனவாதத்தைப் பலப்படுத்த உதவியது. இதைச் சரியான சந்தர்ப்பமாக எண்ணிய  LSSP கிராமப்புறச் சிங்களப் பெரும்பான்மையர் ஆதரவைத் திரட்ட இனவாதத்தைக் கையிலெடுத்தது. ‘கம்யூனிச’ அபாயத்தை முறியடிக்க மதவாதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற போக்கு வலதுசாரிகள் மத்தியில் உலகெங்கும் நிலவிய காலமது. UNPயும் மதம் தழுவிய இனவாதத்தைக் கையிலெடுப்பதற்கு வலதுசாரிகள் மத்தியில் எத்தடையும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்தப் போட்டியிலறங்க முதல் SWRD பண்டாரநாயக்கா அவசர அவசரமாகத் தனது கட்சி சாதாரண சிங்கள மக்களின் கட்சி என்று நிறுவுவதில் ஆர்வமாக இருந்தார். தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 24மணி நேரத்துக்குள் சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்குவதாக அவர் அறிவித்தார். முன்பு தமக்கு ஆதரவாக இருந்தவர்களும் SLFP பக்கம் திரும்புவதை ஆதங்கத்துடன் அவதானித்த UNP அவர்களுக்குப் போட்டியாக குறுக்க வழியை நாடினர்.

ஏற்கனவே தாம் ஏற்படுத்திய பொருளாதாரக் குளறுபடிக்குத் தமிழ் பேசும் மக்களைக் குறை கூறிய ஜே.ஆருக்கு இது அரிய சந்தர்ப்பமாகப் பட்டது. மொழிசார் தமது கொள்கையை UNP வேகமாக மாற்றிக்கொண்டது. தாம் தேர்தலில் வென்றால் SLFP யை விட அதிகமான உரிமைகளைச் சிங்கள மக்களுக்கு வென்றெடுத்துத் தருவதாக அவர்கள் கூச்சலிட்டனர்.

தமிழ் மக்கள் மத்தியில் இவை பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இந்த ஒட்டுமொத்தமான ‘தமிழ் எதிர்ப்புப்’ பிரச்சாரங்கள் வலதுசாரி தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. UNP ல் இருந்த அனைத்து தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்தார்கள். இருப்பினும் சிங்கள பேரினவாத்தின் தாக்கத்தை முழுமையாக அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மலையக தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான தாக்குதல் ஒட்டுமொத்த தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் என்பதை அறிந்து கொள்ளாது அவர்கள் தொடர்ந்தும் UNP க்கு ஆதரவு கொடுத்து வந்தது தெரிந்ததே. இது தவறுதலாகவோ தெரியாத்தனமாகவோ நிகழ்ந்த செயலல்ல. மாறாக தமிழ் முதலாளிகளினதும் சிங்கள முதலாளிகளினதும் வர்க்க நலன் ஒற்றுமையின் பிரதிபலனேயிது.

தமிழ் முதலாளிகள் சிங்களத் தொழிலாளிகளை விடச் சிங்கள முதலாளிய-ஆளும் வர்க்கத்தை நட்புடன் நடத்தியது வர்க்க நலன்சார் செயலே. சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக வறிய மக்களின் நலனைவிட இவர்களுக்குத் தமது வியாபார நலன் முக்கியமாக இருந்த காரணத்தால் சிங்கள முதலாளித்துவத்துடன் இணைந்தனர். இருப்பினும் பலவீனமான சிங்கள முதலாளித்துவம் தமது அதிகாரத்தைத் தொடர்ந்தும் நிலைநாட்ட இனவாதத்தைக் கையிலெடுத்தது. தமிழ் முதலாளிகளை அந்நியப்படுத்தவும் இது தயங்கவில்லை. இதன்மூலம் தமிழ்த் தேசியவாத ஒருங்கிணைப்புக்கும் போராட்டத்துக்கும் வித்திட்டது. தேசிய வாதம் - தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி முதலாளிகள் மத்தியிலும் பிளவுகளை உருவாக்க வல்லது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

1955ஆம் ஆண்டு வரை எல்லாக் கட்சிகளும் இருமொழிக்கும் சமஉரிமை என்பதைப் பெயரளவிலாவது ஒத்துக்கொண்டிருந்தனர். UNP கூட சிங்கள இனவாத எழுச்சியை இவ்வளவுதூரம் எதிர்பார்த்திருக்கவில்லை. UNP உம் SLFP யும் போட்டி போட்டு இனவாதத்தை வளர்த்த போதும் 1956க்கு பிறகு அது வளர்ந்த வேகம் அவர்களுக்கே ஆச்சரியமுண்டாக்கியது என்பது மிகையான கூற்றல்ல. அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இடதுசாரிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பாதது இதற்கு முக்கிய காரணம்.

இருப்பினும்  LSSP யிடம் இருந்து எதிர்ப்பை எதிர்பார்த்த இனவாதிகள் அவர்களைக் குறிவைத்துத் தாக்கினர். சம உரிமை கோரி நிகழ்த்தப்பட்ட தமிழ்க் கூட்டங்கள் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டன.  LSSP ஒருங்கமைத்திருந்த சம உரிமை கோரும் கூட்டம் ஒன்றுக்கு முன் காவலுக்கு நின்ற ரெஜினால்ட் மென்டிஸின் (Reginald Mendis) மேல் கைக்குண்டு வீசப்பட்டது. அத்தாக்குதலால் அவர் தன் கையை இழந்தார். இதுபோன்ற வன்முறை நாடெங்கும் பரவி 1956ஆம் ஆண்டு தேர்தல் வரை தொடர்ந்தது.

nm_pereraஇவ்வகைப் பெரும்பான்மைத் தாக்குதல்களின் பின்னால் ஜே.ஆர் ஆதரவில் இயங்கிய திரி சிங்கள பெரமுன (Tri Sinhala Peramuna) இருந்ததைப் பலரும் அறிந்திருந்தனர். கிராமப்பகுதிகளில் தமது கட்சி செல்வாக்கை வளர்க்கவும் இடதுசாரிகளைத் தாக்கவும் இனவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டார் ஜே.ஆர். இச்சமயம் அவர் கற்றுக் கொண்ட பாடம் பின்னாளில் 1970 மற்றும் 80களில் அவர் பிரதம மந்திரியாகவும் பின்பு சனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதிகளில் அவருக்கு உபயோகமாக இருந்தது பற்றிப் பின்பு பார்க்கலாம். சிங்கள வன்முறைக் குழுக்கள் இலங்கை அரசியல் போக்கை நிர்ணயிக்கப் போவது 56களிலேயே தெளிவாகியிருந்தது. ஜே.ஆரின் சேட்டைகளையும் அவரது திரி சிங்கள பெரமுனவின் வன்முறைகளையும் 1955களிலேயே என்.எம் பெரேரா பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். சிங்களம் மட்டும் என்பது சிலோனைக் கட்டியமைக்காது மாறாகச் சிங்கள நாட்டையே கட்டமைக்கும் என்று அவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவர் பாராளுமன்றத்தில் இதைப் பேசிய போது அவரது பேச்சில் குறுக்கிட்ட ஜே.ஆர் ‘நீர் ஆங்கிலத்தில் பேசுகிறீர்’ என்று கத்தினார்.

ஜே.ஆரின் கத்தலுக்கு மசியாத என்.எம் தொடர்ந்து விளக்கினார். ‘ பெரும்பான்மையினரைப் பார்த்துச் சிறுபான்மையினர் அனாவசியமாகப் பயப்படத் தேவையில்லை என்று சும்மா கத்துவதால் பயனில்லை. முன்பு நல்ல ஒற்றுமையாக இருந்தோம் அதுபோல் இனிமேலும் இருப்போம் என்ற கதை இனி எடுபடாது. இன்று நிலமை அதைத் தாண்டிச் சென்றுவிட்டது. இன்று வளரும் சிறுபான்மையினரின் பயத்தைப் போக்க நாம் விசேச சலுகைகளை வழங்க வேண்டும். நாம் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சிங்களப் பேரினவாதத் துவேசம் மேலும் வளரவும் அவர்கள் தாக்குதல்கள் அதிகரிக்கவும் நாம் துணை போனவர்கள் ஆவோம்.’ இப்பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்கானது.

19ஆம் திகதி அக்டோபர் 1955இல் என்.எம் பெரேரா பாராளுமன்றத்தில் வழங்கிய இப்பேச்சு மிக முக்கியமானது. தமிழ் பேசும் மக்களுக்கெதிரான தாக்குதல் தொடர்ந்தால் அவர்கள் ‘பிரடல்’ கோரிக்கைக்கும் அப்பாலான கோரிக்கையில் இறங்குவர் என்ற எச்சரிக்கையையும் என்.எம் சுட்டியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இனவாதப் பிரச்சாரங்கள் மூலம் பெரும்பான்மை ஆதரவுச் சுவை கண்ட வலதுசாரிகள் இனவாதத்தைக் கைவிடத் தயாராக இருக்கவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் 1956இல் நிகழ்ந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். உட்கட்சிப் பிரச்சினைகளின் மத்தியிலும்  LSSP 14 ஆசனங்களை வென்றது. முன்பு 54 ஆசனங்களை வைத்திருந்த UNP 8 ஆசனங்களை மட்டும் வென்றது. ‘மொழி முன்னணி’ என்றழைக்கப்பட்ட MEP (People United front with SLFP) 51 ஆசனங்களுடன் ஆட்சியமைத்தது.

UNP யை விட 2 ஆசனங்கள் அதிகமாகப் 10 ஆசனங்களைத் தமிழ்க் கட்சியான பிடரல் கட்சி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டுமே வென்றிருந்தது. தேசியவாதத்திற்கு எதிராக நின்ற  LSSP யின் பெரும் வெற்றி மிக முக்கியமானது. MEP யின் வெற்றியைக் கூட ஒரு விதத்தில் இடதுசாரிகளின் வெற்றியாகப் பார்க்க முடியும். தமிழ்பேசும் சிறுபான்மையினரை மோசமாகத் தாக்கியருந்தபோதும் அவர்கள் தேசியமயமாக்கல் மற்றும் பல சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனால் குறிப்பிடத்தக்க தமிழ் வாக்குகளையும் அவர்கள் பெறக்கூடியதாக இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளுக்கு மாபெரும் தோல்வியை இது பகிரங்கப்படுத்தியது.

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It