கல்வியாண்டு தொடங்கும் போது தமிழ்வழிக் கல்வி பற்றி நம்மால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. அனைத்துத் தமிழ்ப் பிள்ளைகளும் தாய்த் தமிழில் கல்வி கற்கும் வாய்ப்பில்லையே என்பதை நினைக்கும் போது நெஞ்சு கனத்துவிடுகிறது. என் தாய்மொழியில் கல்வி கற்க வாய்ப்பளியுங்கள் எனக் கோரிக்கை எழுப்பும் கொடுமை இந்த தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்குமே காண முடியாது. குழந்தைக்குத் தாய்ப்பால் போல் தமிழ்ச் சிறுவர்கட்கு தாய் மொழிக் கல்வி.

Children
தாய்மொழிக் கல்விச் சிக்கலை அறிவியல் பூர்வமாக அணுகி ஆராயும்போதுதான் தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வியின் உன்னதம் நமக்குப் புலனாகும். சுருங்கச் சொன்னால் தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை ஆற்றல் வரை வளம்பெற முடியும் என்று அறிய அறிவியல் கண்டுபிடிப்பை சரியாக இருபது ஆண்டுகட்கு முன்பு உலகுக்கு ஆய்வுப்பூர்வமாக வெளிப்படுத்தினார் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் சுடானோ சுனோடா.

ஏதென்ஸ் நகரில் கல்வித் தொடர்பான யுனெஸ்கோ ஆய்வுக்கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் அறிவியல்பூர்வமான தங்கள் கல்விச் சிந்தனைகளை, ஆய்வுகளை வெளிப்படுத்தினர். அங்கு வெளிப்படுத்தப்பட்ட தாய்மொழிக் கல்விக் கொள்கை தொடர்பான ஆய்வுரைகளில் முத்தாய்ப்பான இடம் பெற்றது. ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் சுடானோ சுனோடா என்பவரின் தாய்மொழிக் கல்வி தொடர்பான ஆய்வும் முடிவுகளும். அங்கு குழுமியிருந்த அத்துணை மொழியியல் மற்றும் கல்வித்துறை வல்லுநர்களின் நெற்றிகளை சுழிக்கச் செய்து, வியப்புடன் சுனோடாவை நோக்கச் செய்தது.

தாய்மொழிக் கல்வி தொடர்பாக அவர் கண்டறிந்த அறிவியல் உண்மைதான் என்ன? தாய்மொழிக்கும் மூளை வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு உண்டு என்பது தான் அவர் கண்டறிந்த அறிவியல் உண்மை. 15க்கும் மேற்பட்ட மொழியாளர்களைக் கொண்டு 15 ஆண்டுகள் செய்யப்பட்ட ஆய்வு முடிவாகும்.

சாதாரணமாக, கருவில் வளரும் குழந்தையின் மூளைப் பகுதி ஏழாவது மாதத்தில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது. அதன்பின், எதனையும் பதிவு செய்து கொள்ளும் திறனைப் பெற்றுவிடுகிறது.தாய் மற்றவர்களோடு பேசும் போது எழுப்பும் ஒலிகளும் தாய் கேட்கும் ஒலிகளும் ஏழுமாதக் குழந்தையின் மூளைப் பகுதியில் அதிர்வு ஒலிகளாகப் பதிவாகின்றன. இதனால் தான் வீட்டிலுள்ள பெரியவர்கள் ஒரு பெண் கருத்தரித்து ஏழு மாதம் ஆகிவிட்டால் போதும், அக்கர்ப்பினிப் பெண்ணை நோக்கி, ஏழு மாதம் ஆகிவிட்டது; இனி, நீ நல்லதையே கேட்க வேண்டும், நல்லதையே பேச வேண்டும். ஏனென்றால் இவை கருவில் இருக்கும் உன் குழந்தையை நேரடியாகப் பாதிக்கும். இனி, பேசுவதிலும் கேட்பதிலும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும், என்று அடிக்கடி அறிவுரை கூறுவதன் அடிப்படை நோக்கம் மூளைக்கும் பேசும் மொழிக்கும் நேரடித்தொடர்பு இருப்பது தான்.

குழந்தை பிறந்து வளர வளரத் தாய் பேசும் மொழியைக் குழந்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முற்படுகிறது. தாயும் எப்படிச் சொன்னால் குழந்தைக்கு எளிதாகப் புரியவைக்க முடியும் என்பதை உணர்ந்து குழந்தை மொழியான குதவை மொழியைப் போலவும் மழலை மொழியைப் போலவுமே பேசி குழந்தையின் புரிந்துணர்வை படிப்படியாக வளர்த்து வளப்படுத்த முயல்கிறாள். இதற்காக மழலை மொழிக்கேற்ப பாவை பாச்சி என்றும் சோற்றைச் சோச்சி என்றும் கூறி குழந்தையுடனான கருத்துப் பரிமாற்றத்தை வளர்க்க முனைகிறாள். குழந்தையும் புரிந்துணர்வுடன் தான் காணும், பழகும் அனைத்தையும் நன்கு தெரிந்து கொள்ளவும், தான் தெரிந்து அல்லது புரிந்து கொண்டதை ஒலி எழுப்புவதன் மூலம் வெளிப்படுத்த முயல்கிறது. இவ்வாறு தன் தாயின் மொழி வாயிலாகத் தன் புரிந்துணர்வை வெகுவாக வளர்த்து வளமாக்கிக்கொள்கிறது. தாய்மொழி மூலம் இஃது எளிதாகவும் இனிமையானதாகவும் குழந்தைக்கு அமைகிறது. அக்குழந்தை ஐந்து வயதை நெருங்கும்போது, அதன் புரிந்துணர்வு வியக்கும்படி அமைகிறது. எதையும் அறிந்து கொள்ளும் வேட்கையுடன் கேள்விமேல் கேள்வி கேட்டு தாயையும் தன்னைச் சார்ந்தவர்களையும் துளைத்தெடுக்கிறது. அப்போது அக்குழந்தை சுயமாக சிந்திக்கவும் செயல்படவும் முனைகிறது. இப்போது அச்சிறுமியின் மூளையில் சுயசிந்தனை ஊற்றுக்கண் திறக்கப்படும் இனிய சூழ்நிலை உருவாகத் தொடங்குகிறது.

இத்தருணத்தில் அக்குழந்தை நவீனக் கல்வி என்ற பெயரில் கல்வி கற்க ஆங்கில வழிக் கல்விக் கற்க ஆங்கில வழிக் கல்விக் கூடத்தில் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. பிறந்ததிலிருந்து அதிகம் கேட்காத ஒலியை ஆங்கில மொழியை அக்குழந்தை கற்கத் தொடங்குகிறது. கருவறை முதல் இன்றுவரை கேட்ட மூளையில் நன்கு பதிவான தாய் மொழி ஒலியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய ஒலியைக் கேட்டு, தெளிவாக ஏதும் புரியாமல் திகைக்கிறது.காரணம், இதற்கு முன் மூளையில் பதிவான ஒலிக்கும், ஒலி தந்த பொருளுக்கும், இப்போது புதிதாகக் கேட்கும் மொழியின் ஒலியும் பொருளும் முந்தையப் பதிவோடு ஒத்திணைய இயலா நிலை ஏற்படுவதே இதற்குக் காரணம்.

Path
அக்குழந்தை இச்சிக்கலிலிருந்து தப்பிக்க வழி தேடுகிறது. கற்பிக்கும் ஆங்கில மொழியும் ஒலியும், ஒலி உணர்த்தும் பொருளும் புரிகிறதோ இல்லையோ, கற்பிப்பவற்றை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் குறுக்கு வழி தேடும் மனநிலை அதனுள் தலைதூக்கி நிலை பெறுகிறது. இதனால், மூளையில் திறக்கத் தொடங்கிய சுய சிந்தனை ஊற்றுக்கண் முழுக்கத் திறக்கப் படாமலே ஒரு வகை தேக்க நிலைக்கு ஆளாகிறது. இந்நிலை ஆங்கில வழிக் கல்வி கற்கும் காலம் வரை தொடர்கிறது. இதனால் தாய்மொழி அறிவோ ஆங்கில அறிவோ முழுமையாகப் பெறவிடாமல் இரண்டுங்கெட்டான் நிலைக்கு ஆளாகிறது. மூளையில் சுய சிந்தனை ஊற்றுக்கண் முழுமையாகத் திறக்கப்படாமையால் தனித்திறனை இழந்த நிலையில் ஏவியதைச் செய்யும் மனப்போக்கில் வாழ நேர்கிறது.

அதே சமயத்தில் அக்குழந்தை தாய் மொழியிலேயே கல்வி கற்கும் இனிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், அக்குழந்தையின் சுயசிந்தனை ஊற்றுக்கண் முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கும். அதனால் சுயமாகச் சிந்தித்துப் புதியன புனையும் அறிவாற்றலும் செயல்திறனும் முழுமையாக வளர வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆங்கிலக் கல்வி மோகத்தில் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் மனப்போக்கில் நம்மை அறியாமல் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவாக சுய சிந்தனை ஆற்றலைப் பெரிதும் இழந்த ஒரு சந்ததியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் தமிழ்மொழி, இன வளர்ச்சிக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கும் மாபெரும் கொடுமை என்பதை காலம் உணர்த்தவே செய்யும்.

சுய சிந்தனை ஊற்றுக் கண்ணாக விளங்கவல்ல மூளைப் பகுதியைத் திறம்பட இயங்கச் செய்யும் வல்லமை தொடக்க காலத்தாய் மொழிக் கல்விக்கே பெரிதும் உண்டு என்பதையும் அதுவே, சுயசிந்தனை ஊற்றுக் கண்ணைத் திறக்கும் திறவுகோல் என்பதையும் பதினைந்து ஆண்டுகள் பல்வேறு மொழி பேசும் மக்களை வைத்து தொடர் ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்த சுனோடாவின் ஆய்வு முடிவை உலகம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டதன் விளைவாக, யுனெஸ்கோவின் கல்விக் கொள்கை எந்த நாடாக இருந்தாலும் எந்தச் சூழலில் இருந்தாலும் ஆரம்பக் கல்வி ஐந்து ஆண்டுகள் அவரவர் தாய்மொழியிலேயே தரப்பட வேண்டும். அப்போதுதான் அக்குழந்தையின் மூளைப் பகுதியில் அமைந்துள்ள சுய சிந்தனை ஊற்றுப் பகுதி முழுமையாகத் திறக்கவியலும். ஐந்தாண்டு தாய்மொழிக் கல்விக்குப் பிறகு அச்சிறுவர் எந்த நாட்டில் எந்தச் சூழலில் எந்த மொழியில் கல்விக் கற்றாலும் ஆரம்ப ஐந்தாண்டுகள் தாய் மொழியில் பெற்ற கல்வியினால் முழுமையாக மூளைப்பகுதியில் திறக்கப்பட்ட சுய சிந்தனை ஆற்றல் மங்காமல் மறையாமல் மேன்மேலும் வலுப்படவே செய்யும் என்பதாக யுனெஸ்கோ கல்விக் கொள்கை அமைந்திருப்பதாகக் கூறப்படுவது இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

யுனெஸ்கோவின் இக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆரம்பக்கல்வி உலகெங்கும் அவரவர் தாய்மொழி வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை இந்திய நாடெங்கும் முழுமையாகப் பேணப்படுகிறது. அவ்வளவு ஏன், தமிழ் நாட்டைத் தவிர்த்துள்ள தென்னக மாநிலங்கள் எங்கும் அவரவர் தாய்மொழியிலேயே ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மட்டுமே அனைத்துத் தமிழ்க் குழந்தைகளும் தங்கள் தாய் மொழியாகிய தமிழில் ஆரம்பக் கல்வி பெற இயலாநிலை. இதனால் வளரும் தமிழ்த் தலைமுறை சுய சிந்தனை ஆற்றல் பெற இயலாத அவல நிலைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளது என்பதை இனியாவது தொடர்புடையவர்கள் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே நம் அவா.
Pin It