பெரியார் இயக்கத்துக்காக உழைத்து உள்ளூர் மட்டத்தில் போராடி சாதனைகள் புரிந்த எத்தனையோ சுயமரியாதை வீரர்கள் அடையாளமின்றி புதைந்து போய்விட்டார்கள். அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை இரத்தக் கண்ணீர் வரவழைக்கிறது. மாற்றுப் பண்பாட்டை நோக்கி பயணித்து எதிர் நீச்சலில் வாழும் சோகமான இறுதிக் காலங்கள் நிகழ்ந்து விடாமல் அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் உன்னத முயற்சி தான் “கருந்திணை”. அந்த அமைப்பு பற்றி  வெளிவந்த வெளியீட்டில் திருமங்கலக்குடி கோவிந்தராசன் என்ற கறுப்பு ‘மெழுகுவர்த்தி’யின் தொண்டுகள் விவரிக்கப்பட் டுள்ளன. அந்தப் பகுதியை வாசகர்களுடன் கனத்த இதயத்துடன் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பகிர்ந்து கொள்கிறது.

சுயமரியாதை இயக்கக் காலத்தில் பெரியாருக்குக் கிடைத்த பெரும் போராளி; மாயவரம் நடராசன், பாவலர் பாலசுந்தரம், முத்துப்பேட்டை தருமலிங்கம், தோழர்கள் குடந்தை ஜோசப், நாகை பாட்சா, சேக்தாவூத், நவநீத கிருஷ்ணன் போன்ற களப் போராளிகளின் உற்ற தோழர்; இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழி லாளர்கள் மனிதர்களாக நடத்தப்பட்டதற்கு முக்கியக் காரணியாகத் திகழ்ந்த திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர், கும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்பு களுக்குப் பெருமை தேடித் தந்தவர் திருமங்கலக்குடி கோவிந்தராசன்.

1957 ஆம் ஆண்டு சாதியை ஒழிக்க அரசியல் சட்டத்தை எரித்து கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க, பட்டியலைத் தயாரிக்க பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நாடெங்கும் சுற்றியலைந்த போது அந்தக் கரு நெருப்பைக் கண்டுபிடித்து 2007 தஞ்சை சாதி ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வைத்தனர். அவரைப் போல்ஆசிட் தியாகராசன், நாகை பாட்சா முதலிய போராளி களும் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய அந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் தமது வீரஞ்செறிந்த போராட்டங்களைப் பதிவு செய்தனர். ஆரவாரமில்லாத அடுக்குமொழியில் இல்லாத அமைதியான அழுத்தமான அவர்களது உரையால் ஈர்க்கப்பட்டு அவர்களை நேரில் சந்தித்து விரிவாக அவர்களது அனுபவங்களைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெ.தி.க. தலைவர்களும் தோழர்களும் சிலரைச் சந்தித்தோம். 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் கும்பகோணம் அருகிலுள்ள திருமங்கலக்குடியில் இற்றுப் போன கிடுகுகளைத் தாங்கி நிற்கும் விரிசல் சுவர்களைக் கொண்ட நூறு சதுர அடி பரப்பே உள்ள ஒரு வீட்டில் கம்பீரமாக வாழும் தோழர் கோவிந்தராசன் அவர்களைச் சந்தித்தோம். அவருக்கு வயது 90.

பல முக்கியச் செய்திகளை, மறைக்கப்பட்ட வரலாறுகளை முதன்முறையாக அவரிடம் கேட்டறிந்தோம். தற்செயலாக கிடைத்த கையடக்க வீடியோவிலும் அவற்றைப் பதிவு செய்தோம். கோவிந்தராசன் அவர்கள் கூறிய பல வரலாறுகள் திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் எங்களுக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தையும், இன்னும் நிறைய தகவல்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் என்ற வேகத்தையும் உண்டாக்கின. திராவிடர் கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியபோதும் இந்தத் தகவல்கள் புத்த கங்கள் வாயிலாகவோ, பயிற்சி வகுப்புகள் வாயிலாகவோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. மறைக்கப்பட்ட அந்த தகவல்களில் ஒரு சிலவற்றை கோடிட்டுக் காட்டுகிறோம்.

1930களில் ‘குடிஅரசு’ இதழ்களில் சித்தர்காடு இராமையா என்ற தோழர் “பரிதாபத்துக்குரிய பஞ்சமர்கள்” என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதி அது நூலாகவும் அப்போது வெளிவந்துள்ளது. சூரிய உதயத்தில் வயலில் கால் வைத்து சூரியன் மறையும் வரை சேற்றில் வெயிலில் மழையில் மாட்டோடு மாடாக உழைத்த தோழர்களின் துயரங்களையும், ஒன்னுக்குப் போக ஒதுங்கும்போதோ குழந்தைக்கு பாலூட்டும் போதோ கூட நேரம் அதிகமானதற்காக சவுக்கடி வாங்கிய பெண்களின் வேதனைகளையும், நடவு வயலில் குனிந்த தலை நிமிர்ந் தால் சவுக்கடி! ஏன் அடித்தாய் என்று கேட்டால் சாணிப் பால்! என்ற தண்டனைக் கொடுமைகளையும் விரிவாகப் பதிவு செய்தது அந்த நூல். அந் நூலில் வாயிலாக வெளிக் கொணரப்பட்ட கொடுமைகளை ஒழிக்கத்தான் பெரியா ரால் திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கப் பட்டது. அந்த அமைப்பில் தஞ்சை மாவட்ட அமைப்பாளரான தோழர் கோவிந்தராசன் கடமையாற்றிய காலத்தில்.

பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்

நிலங்களில் பண்ணையாளாக உழைக்கும் தாழ்த்தப் பட்ட மக்கள் தமது திருமணத்திற்காக பவுன் 20 ரூபாயாக விற்ற காலத்தில் வெறும் 20 ரூபாயை மிராசுதார்களிடம் கடன் வாங்குவார்கள். அந்தக் கடனுக்காக தன்னையே அடமானமாக வைத்து பத்திரமாக எழுதி பண்ணையாரிடம் கொடுத்து கடன் வாங்குவார்கள். திருமணத்தின்போது வாங்கும் அந்தக் கடன் அவர்களது வாரிசுகளின்  திருமணம் வரைகூட அடைபடாமல் பரம்பரை பரம்பரையாக நில உடமையாளர்களிடம் கொத்தடிமையாக, சோற்றை மட்டும் வலியாகப் பெற்று காலங்காலமாக உழைப்பார்கள். அந்த முறையை மாற்றி உழைப்புக்கு கூலி நிர்ணயம் செய்து கூலியையும் பெற்றுக் கொடுத்து அவர்களை அடிமை வாழ்விலிருந்து மீட்கப் போராடி வென்றது தி.க.வி.தொ. சங்கம். அப்படி எண்ணற்ற குடும்பங்களை மீட்டவர் தோழர் கோவிந்தராசன்.

தஞ்சை குத்தகைதாரர் சட்டம்


நில உடமையாளர்களிடம் உழைக்கும் தோழர்கள் குத்தகைக்கு நிலத்தை வாங்கி பயிரிட்டு வரும் வருமானத் தில் 60 சதவீதத்தை நில உடமையாளர்களிடம் கொடுத்து விட்டு 40 சதவீதத்தை தாம் பெற்று வந்தனர். எந்த உழைப்பும் நடப்பு முதலீடும் இல்லாத பண்ணையார் ஒருவனுக்கு வருமானத்தில் 60 சதம் ஏன் கொடுக்க வேண்டும். வெறும் 20 சதவீதம் கொடுத்தால் போது மானது என அன்று பெரியார் போராட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறார். அதை ஏற்று பல போராட்டங்களை நடத்தி 25 சதம் பண்ணையாருக்கும் 75 சதம் உழைக்கும் குத்தகைதாரருக்கும் என மாபெரும் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கி வெற்றியை பெற்றுக் கொடுத்த போராளிகளில் முக்கியமானவர் தோழர் கோவிந்தராசன்.

அதேபோல பண்ணையார் முப்போகத்தில் (ஆண்டுக்கு 3 முறை விளைச்சல்) குருவை பட்டத்தை ஒருவருக்கு குத்தகை விட்டிருப்பார். அடுத்த போகத்தை சம்பாவை, தாளடியை வேறொருவருக்கு குத்தகைக்கு விட்டுவிடுவார். விவசாயத்தில் 3 மாதம் 4 மாதத்திலெல்லாம் எந்த வருமான மும் பார்க்க முடியாது. எந்த குத்தகையையும் எழுத்தில் பதிவு செய்யும் வழக்கமும் கிடையாது என்பதால் யாரும் நீதிமன்றத்துக்கும் போக முடியாது. அவ்வளவு வசதியும் விவசாயிக்கு இருக்காது. எனவே நில உடமை யாளர்கள் வைத்ததுதான் சட்டம். குத்தகை விவசாயிகள் அனை க்ஷவருக்கும் ஒரு நிலையற்ற பாதுகாப்பற்ற பொருளாதார சூழலும், சுயமரியாதையற்ற மானமற்ற சமூக நிலையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். அந்த மரபுகளை உடைக்க தஞ்சை குத்தகைதாரர் சட்டம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவரப் போராடி வென்றது பெரியார் இயக்கம். மேலும் குத்தகைக்கான பரப்பு  மொத்தமாக 50 ஏக்கர் 100 ஏக்கர் என குத்தகை எடுக்கக் கூடாது. மொத்தக் குத்தகை கூடாது. 20 ஏக்கருக்கு மேல் குத்தகை எடுத்தால் அவனும் நிலஉடமையாளர்கள் செய்யும் அனைத்துக் கொடுமைகளையும் செய்ய வேண்டியவனாகி விடுகிறான். எனவே குத்தகை மூன்று ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என அதற்கும் ஒரு போராட்டம் நடத்தினார் பெரியார்.

இந்தச் சட்டத்தின்படி ஒரு குத்தகைக்காலம் என்பது குறைந்தது 3 ஆண்டுகள் இருக்க வேண்டும். அந்த மூன்று ஆண்டுகளுக்கு உள்ள குத்தகை உரிமை வருவாய்த்துறை அலுவலகங்களில் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தக் குறிப்பிட்ட குத்தகை காலத்துக்குள் நில உரிமை யாளர்களுக்கும் குத்தகை எடுத்த விவசாயிகளுக்கும் இடையே நிலத் தகராறு மற்றும் குத்தகை தொடர்பான எந்தச் சிக்கலானாலும் அவர்கள் அதற்கென நீதிமன்றங் களுக்குப்போக வேண்டியதில்லை. வழக்கறிஞர்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. சமரச நீதிமன்றங்கள் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் வழக்கறிஞர்களுக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட விவசாயியே வாதாடலாம். அல்லது அவரது சம்மதத்துடன் விவசாயத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் வாதாடலாம் என்ற புரட்சிகர மாற்றம் உருவானது. அனைத்து குத்தகை களும் பதிவு செய்யப்பட்டது. குத்தகை தொடர்பாக அப்போது உண்டான ஆயிரக்கணக்கான வழக்குகளில் விவசாயத் தோழர்களுக்காக வாதாடி வழக்குகளை வென்று கொடுத்தவர் தோழர். கோவிந்தராசன்.

இச்சட்டத்தில் உள்ள பெரிய தீண்டாமை என்னவென் றால் இச்சட்டம் கீழத் தஞ்சை மாவட்டங்களில் மட்டும் தான் செல்லும். தருமபுரம் ஆதின மடம், திருப்பனந்தாள் மடம், சங்கரமடம், சூரியனார் கோவில் ஆகியவற்றுக்குச் சொந்த மான கோவில் நிலங்களில், பார்ப்பன நில உடமையாளர்கள் நிறைந்த மேலத் தஞ்சை பகுதி நிலங்களில் இச் சட்டம் நடைமுறைக்கு முதலில் வரவில்லை. அதற்கும் போராட்டம்.

கரும்பு, வாழை, தென்னை முதலிய பணப் பயிர்களை பயிரிடும் நிலங்களிலும் இச்சட்டம் செல்லாது என்ற நிலையை எதிர்த்து ஒரு போராட்டம்.

சாமியார்களை சாமிகளை பல்லக்கில் வைத்து தூக்கிச் சுமந்து செல்லும் முறையை எதிர்த்துப் போராட்டம்.

கள்ளுக்கடைகளில் இரட்டைக் குவளை முறையை எதிர்த்து குவளைகளை உடைத்துப் போராட்டம் என போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டவர் தோழர் கோவிந்தராசன்.             

(அடுத்த இதழில் முடியும்)

Pin It