எதிர் வரும் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பது என்று பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு முடிவு செய்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு 20.3.2011 அன்று சென்னையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கூடியது. அப்போது, தேர்தல் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு தூண்டுகோலாக இருந்த காங்கிரஸ் அதற்கு துணை நின்ற தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் முனைப்புடன் பரப்புரை செய்து, எதிர்த்து வாக்களித்தது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், அதே தமிழின விரோத சக்தியான காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.இ. அ.தி.மு.க.வோ, காங்கிரசுடன் கூட்டணிக்காக காத்திருந்து அதன் ஆதரவு கிடைக்காத நிலையில் எதிர்காலத்தில் காங்கிரசுடன் கைகோர்க்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ளது. தமிழின பகைவர்களான பார்ப்பனர்கள் முழுமையாக அ.இ.அ.தி.மு.கவை ஆதரிக்கிறார்கள். இரு அணிகளுமே தமிழின விரோத சக்திகளுடன் கைகோர்த்து நிற்பதால், இரண்டு அணிகளுக்குமே ஆதரவு தெரிவிக்காமல், இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க, பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்து நிற்கும் காங்கிரசை வீழ்த்தக் கூடிய வலிமையான வேட்பாளருக்கு வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Pin It