8.7.2010 வியாழன் காலை ஈரோடு மாவட்டக் கழகத்தின் சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் உண்ணும் விரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மேம்பாலம் கட்டுவதற்கு அரசு ஆணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளும் தொடங்கிவிட்டன. இந்து முன்னணி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு இயக்கம் என்ற பெயரில் அந்த மேம்பாலம் கட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தியது. மேம்பாலம் கட்டினால், கோவில் மேம்பாலத்தின் அடியில் போய் விடும் என்பதால், காலுக்கடியில் அம்மனா? என சுவரொட்டியும், கடை அடைப்பு செய்யச் சொல்லியும்  மிரட்டினார். பன்னீர்செல்வம் பூங்காவில் தினமும் பள்ளிக் குழந்தைகள் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் காலை மாலை இரு நேரங்களிலும் அந்த சாலை வழியாக செல்கின்றனர். மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக அந்த இடம் உள்ளது. ஆகவேதான் தமிழக அரசு மிகுந்த பொருட் செலவில் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொது மக்கள் நலன் கருதி அந்த மேம்பாலத்தைக் கட்டுகிறது. 

8.7.2010 வியாழன் அன்று காலை ஈரோடு மின் வாரிய அலுவலகம் முன்பு, மேம் பாலம் கட்டுவதை நிறுத்தக் கோரி இந்து முன்னணிக் கும்பல் சாகும் வரை உண்ணா விரதம் போராட்டத்தை அறிவித்தது. இதைக் கேள்விப்பட்டவுடன் கழகத்தின் சார்பில் மேம்பாலம் கட்டுவதை தொடர வேண்டும் எனவும், விரைவில் கட்டி முடிக்கக் கோரி யும், உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொன்ன இடத்திற்கு நேர் எதிரில் உண்ணும் விரதம் நடத்தப் போவதாக காவல்துறைக்கு தெரிவிக்கப் பட்டது. காவல்துறை உடனே இரு போராட்டங்களுக்கும் தடை விதித்தது. தடையை மீறி இரு தரப்பும் போராட்டம் செய்ய முனைந்தபோது காவல்துறை அனைவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தது. இதில் கழகத்தின் சார்பாக நடைபெற்ற உண்ணும் விரதப் போராட்டத்திற்கு மாவட்ட அமைப் பாளர் வெ. குமரகுருபரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலையில் 23 தோழர்கள் கலந்து கொண்டு கைதாகி சிறைக்குச் சென்றனர். பின்னர் ஒரு வாரம் கழித்து 13.7.2010 அன்று பிணையில் வெளி வந்தனர். 

13.7.2010 செவ்வாக்கிழமை மதியம் 2 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை யில் தோழர்கள் திரண்டு வந்து கோவை மத்திய சிறை வளாகத்தின் முன்பு வாயிலில் நின்று தோழர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பின்பு காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் சிறை மீண்ட தோழர்களுக்கு வரவேற்பு, பாராட்டுக் கூட்டம், கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக சோதி, கோவை கதிரவன், ஈரோடு இரத்தினசாமி, குமர குருபரன், இராம. இளங்கோவன் ஆகியோர் உரைக்குப் பின்பு இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். 

பின்னர் தோழர்கள் அனைவரும், நிவாசு, கோபி செயராமன், நாத்திகசோதி ஆகி யோர் ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் கோவையிலிருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டனர். வழியில் விசயமங்கலத்தில் அப்பகுதி செயலாளர் விசு, தோழர்களுடன் இணைந்து வரவேற்பு அளித்தார். மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், அங்கிருந்த கழக கொடிக் கம்பத்தில் கொடி யேற்றி வைத்தவுடன் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. பின்னர் நேராக ஈரோடு சென்று பெரியார் சிலைக்குத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின்னர் தோழர்கள் தமது இல்லங்களுக்குச் சென்றனர்.  போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்ற கழகத் தோழர்கள்: 

இராம. இளங்கோவன், ஈரோடு இரத்தினகிரி, வெ. குமரகுருபரன், சதுமுகை பழனிச்சாமி, லெமூரியன், இராசேந்திரன், அர்ச்சுனன், அருளானந்தம், திருமூர்த்தி, மாதுராசு, வேணுகோபால், பிரபு, திரு முருகன், சுப்ரமணியன், சிவா, நாகராஜ், முருகானந்தம், பேரறிவாளன், துரை, அனீஸ், விவேக், சித்திக், இரவி ஆகியோர்.

Pin It