முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி குருவிக்கரம்பை வேலு படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி, மார்ச் 26 அன்று மாலை 5  மணியளவில் எழும்பூர் இக்சாமய்யத்தில் முனைவர் பொற்கோ தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் இரா.நல்லக்கண்ணு, குருவிக்கரம்பை வேலு படத்தினைத் திறந்து வைத்து, இரங்கல் உரை நிகழ்த்தினார். குத்தூசி குருசாமி - குஞ்சிதம் இணையரின் மகள் கு.கு. இரசியா,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,கவிக் கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் தமிழேந்தி, முனைவர் வளர்மதி, கழஞ்சூர் சொ.செல்வராசு,  வ.கீதா, முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன், மு. பாலன் (மானுட மறுமலர்ச்சிப் பாசறை),எழுத்தாளர் இளவேனில் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். பேரா வூரணியில் குத்தூசி குருசாமிக்கு சிலை அமைக்கும் முயற்சியில் குருவிக் கரம்பை வேலு, நாத்திகம் இராமசாமி இருவரும் தீவிரமாக செயல்பட்டு சிலையும் தயாராகி, குருவிக்கரம்பை வேலு அவர்களின் இல்லத்தில் இருக்கிறது. இந்த நிலையில் குத்தூசி குருசாமியின் சிலையை  நிறுவுவதே குருவிக்கரம்பை வேலுவின் மறைவுக்கு உரிய நினைவாக இருக்கும் என்று பலரும் வற்புறுத்தினர். 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை குருவிக்கரம்பை வேலு எழுதியுள்ளார்.

ஆரியர் - திராவிடர் வரலாற்றுப் பின்புலத்தில் தமிழர் அடையாளத்தைக் காணும் அவரது நூல்களை அரசு நாட்டுடைமையாக்க வேண்டும் என்றும், அவரது பெயரில் அறக்கட்டளை  ஒன்றை நிறுவி, ஆண்டுதோறும் சுயமரியாதை இயக்கம் தொடர்பாக ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். குருவிக் கரம்பை வேலுவர்கள் எழுதிய ‘ குத்தூசி துணைவியார் குஞ்சிதம் அம்மையார் வரலாறு’ விரைவில் தமிழ்க் குடியரசு பதிப்பகம் சார்பில் வெளிவர இருக்கிறது என்று, வாலாஜா வல்லவன் அறிவித்தார். குருவிக் கரம்பை வேலுவின் குடும்பத்தினர் அனைவரும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். குடும்ப நிகழ்ச்சி யாக இன்றி, கொள்கையாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

Pin It