மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ஊர் மாணிக்பூர். இந்த கிராமத்தில் அரசியல் செல்வாக்கு பெற்ற பெரும் நிலக்கிழாராக உள்ளவர் ராம்பால் சிங். ராஜபுத்திரப் பிரிவை சார்ந்த உயர்சாதிக்காரர். இவர் பாசத்துடன் ஒரு நாய் வளர்த்தார். நாயின் பெயர் ‘ஷேரு’. கடந்த வாரத்தில் ஒரு நாள் நாய் ‘ஷேரு’ மிகப் பெரும் ‘பாவ’ச் செயல் ஒன்றை செய்து விட்டது. சுனிதா ஜாதவ் என்ற தலித் பெண் கூலி வேலை செய்த தமது கணவனுக்கு கொண்டு சென்ற ரொட்டி ஒன்றை அருகே திரிந்து கொண்டிருந்த அந்த ‘நாய்’க்கு போட்டார். நாயும் ‘சாதி’ தெரியாமல் ரொட்டியை விழுங்கி விட்டது. 

செய்தி நாயை வளர்த்த ராம்பால் சிங் காதுக்கு எட்டியது. அவ்வளவு தான். “நாய் தீட்டாகி விட்டது; இனி இந்த நாய்க்கும் எனது குடும்பத் துக்கும் எந்த உறவும் இல்லை; வீட்டிலிருந்து விரட்டுகிறேன்” என்று அறிவித்தார். பிரச்சினை அத்துடன் முடியவில்லை. ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினார். தலித் பெண் சுனிதாவும் அழைக்கப்பட்டார். “தோட்டத்தில் வேலை செய்த கணவருக்கு கொண்டு வந்த சாப்பாட்டில் மீதமான ஒரு ரொட்டியை அருகே சுற்றிக் கொண்டிருந்த நாய்க்குப் போட்டேன்” என்று விளக்கமளித்தார். “நாய் தீட்டாகிவிட்டது. இனி அந்த நாய் ஊர்ப் பொதுவிடங்களில் நடமாடக் கூடாது; அதை ஊர்  நாய் என்று எவரும் அழைக்கக் கூடாது; இனி அது சேரி நாய்; நாயை வளர்க்க வேண்டிய பொறுப்பு சுனிதாவுக்குத்தான்” என்று பஞ்சாயத்து தீர்ப்பளித்தது. நாய்க்கு ‘ரொட்டி’ போட்ட குற்றத்துக்காக சுனிதாவுக்கு ரூ.15000 அபராதமும் விதித்தது. நாய் இப்போது சேரிக்கு வந்துவிட்டது. 

வறுமையில் உழலும் அந்த ஏழைக் குடும்பத்தால், எப்படி இவ்ளவு பெரிய தொகையை அபராதமாக கட்ட முடியும்? பதறிப் போன சுனிதாவும், அவரது சகோதரர் நகர்சிங்கும், சுமாவாலி காவல் நிலையத்துக்கு விரைந்து நடந்ததைக் கூறினர். அங்கே புகாரை வாங்க மறுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்காகவே கல்யாண் பகுதியில் இருக்கும் காவல் நிலையம் போகுமாறு கூறிவிட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு எடுத்துச் சென்றனர். மாவட்ட தீண்டாமை ஒழிப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி பல்தேவ் சிங்கும் வழக்கை பதிவு செய்யவில்லை. 

போலீஸ் படை ஒன்றை, கிராமத்துக்கு அனுப்பி விசாரணை நடத்திய பிறகே வழக்கை பதிவு செய்வோம் என்று கூறிவிட்டார்.  மாவட்ட ஆட்சித் தலைவர் அகர்வால், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். 

தலித் பெண் தந்த ரொட்டியை, மலம் தின்னும் நாய் சாப்பிட்டால்கூட, நாயும் தீட்டாகி விடுகிறது என்று கருதும் நிலை தான் இந்த புண்ணிய பூமியில் இன்றும் நீடிக்கிறது!

செய்தி : ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செப். 24

Pin It