இலங்கையில் தமிழ்மொழி கல்வி, மொழியாக இல்லாமல் விட்டிருந்தால் இன்று தாய்மொழி தெரியாத ஒர் இனமாக இலங்கைத் தமிழ் மக்கள் இருந்திருப்பார்கள். கல்வி மொழியாகத் தமிழ் இருப்பதற்கும், உலகெங்கும் பலநாடுகளில் இன்று தமிழ்மொழி வியாபித்திருப்பதற்கும் காரணமானவர் யார் தெரியுமா? அவர்தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் இலங்கைச் சட்டசபை உறுப்பினராகவும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய அமரர்.வ.நல்லையா அவர்கள்.

1943 ஜூன் 22 ஆம் திகதி சட்டசபையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் ஒரு பிரேரணையைச் சமர்ப்பித்தார். அதில் 1. எல்லாப் பாடசாலைகளிலும் சிங்களம் கல்வி புகட்டும் மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பதும்,                         

2. பொதுப் பரீட்சைகள் எல்லாவற்றிலும் சிங்களம் கட்டாய பாடமாக ஆக்கப்பட வேண்டும் என்பதும் 3. சபையின் அலுவல்களைச் சிங்களத்தில் ஆற்றுவதற்கான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் என்பதும் முக்கிய விடயங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தப் பிரேரணை 1944 ஆம் ஆண்டு மே மாதம் சபையில் விவாதத்திற்கு வந்த போது, அந்தப் பிரேரணையில் இருந்த சிங்களம் என்பதற்குப் பதிலாக, "சிங்களமும் தமிழும்" என்ற திருத்தத்தினை வி.நல்லையா அவர்கள் சமர்ப்பித்து முன்மொழிந்தார். இந்தத் திருத்தத்திற்கு 29 வாக்குக்களும், எதிராக எட்டு வாக்குக்களும் அளிக்கப்பட்டன. திருத்தம் நிறைவேறியது. தமிழ் கல்வி மொழியாக இல்லாமல் போகவிருந்த மாபெரும் அபாயம் நீங்கியது.

அன்று திரு. வீ. நல்லையா அவர்கள் அந்தத் திருத்தத்தினைச் சமர்ப்பிக்காமல் இருந்திருந்தால் இன்று நாமெல்லாம், தமிழ்மொழியை எழுத வாசிக்கத் தெரியாத தமிழர்களாக இருந்திருப்போம். தமிழைப் பேசிக் கொண்டிருந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்! 

- மாணிக்கவாசகர்

                ***

மாவீரர் நாள் உறுதி!

"மொழியாகி,
எங்கள் மூச்சாகி - நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!"

Pin It