கப்பலோட்டிய தமிழன் - திரைப்படம் 1961-ஆம் ஆண்டு பி.ஆர். பந்துலுவின் பத்மினி பிக்ச்சர்ஸ் மூலம் வெளிவந்தது. 1936-இல் வ.உ.சி அமரராகிறார். 25 ஆண்டுகள் கழித்து 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படம் ம.பொ.சி -யின் நூலை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. தமிழிலுள்ள வாழ்க்கை வரலாற்று [bio -pic] படங்களில் இது முதன்மையானது. ஏனென்றால் வ.உ.சி.யை நேரே பார்த்தவர்கள், இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் வேடப் பொருத்தத்தைப் புகழ்ந்திருக்கின்றனர். இந்திய அளவில் எந்த விடுதலைப் போராட்ட வீரருக்கும் கிடைக்காத ''நிலையான திரைப்படக் கலையில்'' வ.உ.சி வாழ்க்கை பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் முழுவதும் ஸ்டுடியோவிலியே எடுக்கப்பட்டிருக்கிறது. விரல் விட்டு சொல்லக்கூடிய சில காட்சிகளே வெளிப்புறத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. திரைக்கதை வடிவமைப்பு கனகச்சிதமாக செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் மூலம் தேவையான காட்சிகள் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது.
வள்ளியப்பன், உலகநாதபிள்ளை சிதம்பரம் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்குவதும் ,'உப்பளம்' வைத்திருப்பதும் தொடக்கக் காட்சிகளாக வந்து அறிமுகம் செய்கிறபோதே, ஆங்கிலேயருக்கும் இந்திய விடுதலை போருக்குமான முரண்பாடு குறித்துப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறது. தூத்துக்குடியில் இருந்த தமிழக முதலாளிகளின் உப்பு மூட்டைகளை இலங்கைக்கு கொண்டு செல்ல ஆங்கிலக் கப்பல்கள் மறுக்கின்றன. இதனையே முதல் முரண்பாடாக கொள்ளலாம். இது போன்ற முரண்பாடுகள் அடுத்தடுத்த காட்சிகளைக் கொண்டு வருகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 'நமக்கான கப்பலின் தேவை' என்கிற கருத்து உந்த - பல்வேறு நபர்களிடம் பங்கு சேகரிக்கப்பட்டு 'சுதேசி கப்பல் கம்பெனி' உருவாகிறது.இந்திய தேசியக் காங்கிரசின் தீவிர செயல்பாட்டாளர்களான லாலா லஷபதிராய், பாலகங்காதர திலகர், சி.ஆர்.தாஸ், பாரதியார் முதலியவர்களுடன் இணைந்து தென்னிந்தியாவில் ஆங்கில ஏகாதிபதித்தியத்திற்கு எதிராக செயலூக்கமுள்ள போராட்டங்களான, 'அந்நியத் துணி எரிப்பு', 'ஆலைத் தொழிலாளர் போராட்டம்' போன்றவற்றை முன்னெடுக்கிறார். ஆத்திரமடைந்த வெள்ளையரசாங்கம், வ.உ .சி க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கிறது. தம்பி இதை கேட்டவுடன் புத்தி பேதலித்து மனநோயாளியாகிறார். காந்திஜி வருகைக்கு முன் 1909 முதல் 1912 வரை கோவை, கண்ணனூர் சிறைகளில் செக்கிழுத்தும், அதிகப்படியாக வேலை வாங்கியதால் உருக்குலைந்தும் போகிறார். சிறைக் கைதிகளுக்கான எந்தச் சலுகையும் வ.உ .சிக்கு மறுக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுகிறார்.
வ.உ.சிக்கு வழக்காடும் உரிமை பறிக்கப்படுகிறது. வீடு, உப்பளம், கப்பல் கம்பெனி எல்லாவற்றையும் இழந்து சென்னை பெரம்பூரில் இருந்து கொண்டு மண்ணடியில் மண்ணெண்ணை விற்கிறார். வயது முதிர்ந்த காலத்தில் ஷேம்ஸ் ஆலனின், 'அகமே புறம்', போன்ற குறுநூல்களை மொழி பெயர்க்கிறார். திருக்குறள் மணக்குடவர் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் முதலிய நூற்களைப் பதிப்பிக்கிறார். திலக முனிவர், யான்கண்ட பாரதி, சுய வாழ்க்கை வரலாறு முதலியவை படைப்பதுடன் படம் முடிகிறது.
இந்தப் படம் வருவதற்கு முன்பே டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழு வ.உ .சி நாடகத்தை நடத்தி வந்தது. அந்தக் குழுவினர் நடத்திய எல்லா நாடகங்களும் திரைப்படமானது குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் வ.உ.சி பாத்திரத்தை டி.கே. பகவதியும், சுப்பிரமணிய சிவா வேடத்தை டி.கே.சண்முகமும் நடித்தனர். வெள்ளைக்கார வின்ச் துரை கேள்விகளுக்கு வ.உ.சி சொல்லும் பதில்கள் நாடகத்தில் இருந்தது அப்படியே திரைப்படத்தில் வந்திருக்கிறது. இது போலவே பாரதி பாடல்களும்.
பாரதியும் வ.உ.சியும் திருநெல்வேலி மாவட்டக்காரர்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் இருவரும் ஒன்றாக இருந்தவர்கள். பாரதி, நேரடியாகவும் மறைமுகமாகவும் வ.உ.சி.யைப் பல இடங்களில் பாடியிருக்கிறார். பாரதியாருக்குப் பிறகு அவரது உறவினர்கள் வறுமையின் காரணமாக பாரதி பாடல் உரிமையைச் செட்டியாரிடம் அடகு வைத்து விட்டார்கள். மீட்க முடியவில்லை; நாடகத்திலோ திரைப்படத்திலோ பயன்படுத்தக்கூடாது என்று ஏ.வி.எம் சொல்லி விட்டார். அதன் பிறகு, 'பாரதி கவிதைகள் மீட்பு இயக்கம்' தோழர் ஜீவா, டி .கே. சண்முகம், ம.பொ.சி முதலியவர்களால் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டதால் செட்டியார் 'பாரதிக்கு விடுதலை' தந்தார்.
ஏ.வி.எம்.மின் 'நாம் இருவர் ', 'வேதாள உலகம்' முதலிய படங்களில் பாரதி பாடல்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் -திரைப்படத்தில் பாரதி பாடல்கள் பெருமளவு சரியான இடங்களில் பொருத்தத்துடன் பயன்படுத்தப்பட்டது. கர்நாடக சங்கீத வித்துவான்கள் பாடியதை விட, சினிமாவே பாரதி பாடல்களைப் பொதுமக்களிடம் கொண்டு சென்றது. படத்தில் எஸ்.வி .சுப்பையா, பாரதியாராகவே மாறினார். ஆஷ் துரையாக அசோகனும், வின்ச் துரையாக எஸ்.வி .ரங்காராவும் அற்புதமாக நடித்தனர்.
வாஞ்சிநாதனாக பாலாஜி நடிக்கிறார். ஆஷ் கொலை வழக்கு, காங்கிரசுக்காரர்களை ஒடுக்கியதால் கொல்லப்பட்டார் என்று ஆவணங்கள் சொன்னாலும், சமூகரீதியில் அன்றைக்கு விடுதலைக்குப் போராடியவர்கள் மத்தியில் கூட சாதி உணர்வு இருந்ததை வேறொரு நிகழ்வும் சுட்டிக் காட்டுகிறது. ஆஷ் துரை, தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணைத் தனது சாரட்டில் வைத்து மருத்துவமனைக்கு அக்ரஹாரம் வழியாக அழைத்துச் சென்றது வாஞ்சிநாதனுக்கு பிடிக்கவில்லை என்பதும் ஒரு காரணம். இதற்கு மற்றொரு நிகழ்வையும் சுட்டலாம். சேரன்மாதேவியில், காங்கிரஸ் நிதியில் இருந்து நடத்தப்பட்ட பள்ளியில், வ.வே.சு. அய்யர் - பார்ப்பனர்களுக்குத் தனி சாப்பாடு, பார்ப்பனரல்லாதாருக்குத் தனி சாப்பாடு என்று கடைபிடித்தார். இவர்தான் வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி கொடுத்தவர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை உருவாக்கிய வ.உ.சி, பெரியார், திரு.வி.க, வரதராஜீலு நாயுடு போன்றவர்கள் எல்லோருமே அதிலிருந்து விலகி விட்டதை ம.பொ.சி. சொல்லவில்லை.
முதுமைக் காலத்தில் தன் மகனுக்கு வேலைவாய்ப்புக்காகப் பல பெரியவர்களுக்கு வ.உ.சி. கடிதம் எழுதியும் யாரும் உதவவில்லை. இதுதான் சிறந்த விடுதலை வீரரான வ.உ.சி.க்குத் தமிழகம் செய்த கைம்மாறு.
- நிழல் திருநாவுக்கரசு