இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய மீட்சி வரலாற்றிலும் தனித்துவம் வாய்ந்தவராகச் செயல்பட்டவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். சுதந்திரப் போராட்டக் களத்தில் மட்டுமல்ல தமிழ்ப்பதிப்புக் களத்திலும் தனக்கான தனி முத்திரையைப் பதித்தவர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் எழுதப்பட்ட உரைகளில் யாரும் கவனம் செலுத்தாத குறிப்பிடத்தக்க உரைகளைப் பதிப்பித்துத் தமிழ்ப்பதிப்பு வரலாற்றிற்கும், இலக்கிய வரலாற்றிற்கும் வளம் சேர்த்தவர். சிறைவாசத்தில் தமிழ்வாசம் நுகர்ந்ததோடு அவ்வாசத்தைத் தலைமுறை கடந்து பரப்ப நினைத்தவர். வ.உ.சி. என்னும் பன்முக ஆளுமையைச் சுதந்திரப் போராட்டத் தியாகி என்னும் ஒற்றைக் குடுவையில் அடைக்க முடியாத அளவிற்கு அவரின் செயல்பாடுகள் பரந்து விரிந்தன. வ.உ.சி. அவர்களின் பரந்து விரிந்த இப்பணியில் அவரின் தொல்காப்பியப் பதிப்புப் பணியை விளக்கி உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

வ.உ.சி. அவர்களின் பதிப்புப்பணி 1812-ஆம்ஆண்டு தமிழ்ப் பேரிலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் அச்சில் நிலைபெறுகிறது. திருக்குறளைத் தொடர்ந்து தமிழின் அனைத்து வகையான நூல்களும் அச்சில் ஏறத்தொடங்கின. பதிப்பாசிரியர்கள் என்னும் தனித்துறை சார்ந்த ஆளுமைகள் இக்காலகட்டத்தில் உருவாகினர். சுவடிகளில் அழிந்து போகக் கிடந்த நூல்களையெல்லாம் மீட்டு அச்சில் ஏற்றினர். பதிப்புகளில் பல நிலைப்பட்ட பதிப்புகளை உருவாக்கத் தொடங்கினர். கல்வி வளர்ச்சிக்கும் தமிழ் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்வதற்கும் இப்பதிப்பாசிரியர்கள் வழங்கிய கொடை ஏராளம். ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா., எஸ்.வையாபுரிப் பிள்ளை என்னும் பதிப்பாளுமைகளை நீண்ட நெடுங்காலமாக முன்வைத்த தமிழ்ச் சமூகம் இத்துறையில் நெடுங்காலமாகக் கவனம் பெறாமல் இருந்த பதிப்பாசிரியர் வ.உ.சி. அவர்களையும் சமீபகாலமாகக் கவனப்படுத்தத் தொடங்கியது. நான்கு நூல்களை மட்டுமே வ.உ.சி. பதிப்பித்திருந்த போதிலும் தமிழ்ச்சமூகம் கவனத்தில் கொள்ளாத தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றின் உரைகளை வ.உ.சி. மீட்டெடுத்துத் தந்த பின்புலமே இத்தகு அடையாளப்படுத்தலுக்கும் காரணமாக அமைந்தன. திருக்குறள் மணக்குடவர் உரையையும், தொல்காப்பிய எழுத்ததிகார, பொருளதிகார இளம்பூரணர் உரையையும் பதிப்பித்து வழங்கியதன் வழி வ.உ.சி. என்னும் பதிப்பாசிரியர் தமிழ்ப்பதிப்பு வரலாற்றின் முகமாகவும் மாறி நிற்கின்றார்.

முன்பே பதிப்பிக்கப்பட்ட ஒருநூலை மீண்டும் மறுஅச்சாகக் கொண்டு வந்து பதிப்பாசிரியர் என்னும் அடையாளம் பெற்றவர் அல்லர் இவர். சிறைக்குப் பிறகான வாழ்விற்கு இடையிலும் பல்வேறு துயரங்களுக்கு மத்தியிலும் தமிழின் சுவடிகளைத் தேடிக் கண்டடைந்து அவற்றை அச்சில் ஏற்றித் தமிழ் வளர்ச்சி வரலாற்றிற்குப் பெருந்துணை புரிந்தவர் இவர் ஒருவரே.

வ.உ.சி. அவர்களின் தொல்காப்பியப் பதிப்பு உருவான பின்புலம்

1908-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட வ.உ.சி. அவர்கள் சிறைவாழ்க்கையைத் தம் வாசிப்புப் பின்புலத்தால் அர்த்தப்படுத்திக் கொண்டார். திருக்குறள் மீது தீராக்காதலும் பற்றும் கொண்ட வ.உ.சி. தொல்காப்பியத்தையும் படிக்கத் தொடங்கினார். 1910 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது தொல்காப்பியப் பொருளதிகாரத்தை வாசிக்கத் தொடங்கிய இவர் அதன்கடின நடைகண்டு உரை எழுதவும் தொடங்கினார்.

“தொல்காப்பியத்தைப் படிக்கும் பாக்கியம் எனக்கு 1910- ம் வருடம் கிடைத்தது. அதன் பொருளதிகாரத்தை யான் படித்தபோது, அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் காணப்படாத நிலப்பாகுபாடு, நிலங்களின் மக்கள், ஏனைய உயிர்கள், மரங்கள், செடிகள், மலர்கள், மக்களது ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருக்கக் கண்டேன். இவ்வொப்புயர்வற்ற நூலைத் தமிழ் மக்கள் படியாததற்கு ஒரு காரணம் இந்நூலிற்கு ஆன்றோர் இயற்றியுள்ள உரைகளின் கடின நடையென்று உணர்ந்தேன். இந்நூலைத் தமிழ்மக்கள் யாவரும் கற்கும்படி எளிய நடையில் ஓர் உரை எழுத வேண்டுமென்று நினைத்தேன். உடனே எழுத்ததிகாரத்தின் முதற்சில இயல்களுக்கு உரையும் எழுதினேன். (தொல்காப்பியப் பதிப்புரைகள், ப. 167).

என்னும் வ.உ.சி.யின் கூற்று தெளிவுபடுத்துகிறது. உரை எழுதத் தொடங்கிய வ.உ.சி.அவர்கள் 1912 ஆம் ஆண்டில் விடுதலையான பிறகு, சென்னை பெரம்பூரில் வசித்த காலத்தில் தாம் எழுதிய தொல்காப்பிய உரையை நிறைவு செய்யும் பொருட்டுச் செல்வக் கேசவராய முதலியார் அவர்களைச் சந்தித்து அவரோடு இணைந்து உரையைச் சரிபார்க்கத் தொடங்குகிறார். அந்தக் காலத்தில் தி.த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களிடமிருந்து வ.உ.சி. அவர்களுக்குத் தொல்காப்பிய இளம்பூரண எழுத்ததிகார அச்சுப்புத்தகமும், சொல்லதிகார ஏட்டுப்பிரதிகள் சிலவும் பொருளதிகார ஏட்டுப்பிரதி ஒன்றும் கிடைக்கிறது. இளம்பூரணர் உரையை வாசிக்கத் தொடங்கிய வ.உ.சி. அவர்கள் அவ்வுரையின் சிறப்புணர்ந்து தாம் உரை எழுதுவதைக் கைவிடுகிறார். உரை எழுதும் முடிவைவிட்டு அந்த இளம்பூரணர் உரையைப் பதிப்பித்துவிட வேண்டும் என்னும் உந்துதலைப் பெற்றுத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தையும் எழுத்ததிகாரத்தையும் பதிப்பிக்கத் தொடங்குகிறார்.

"இளம்பூரணத்தை யான் படித்த போது அதன் உயர்வும், சிறப்பும், எளிய நடையும் தொல்காப்பியத்திற்கு யான் உரை எழுதுவது மிகை யென்று நினைக்கச் செய்தன. பின்னர் என் உரையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தை விடுத்து, இளம்பூரணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த எண்ணினேன். முதலில் எழுத்ததிகாரத்தை ஒரு புத்தகமாகவும், பின்னர்ப் பொருளதிகாரத்தின் அகத்திணையியலையும், புறத்திணையியலையும் ஒரு புத்தகமாகவும் அச்சிட்டு வெளிப்படுத்தினேன்”. ( தொல்காப்பியப் பதிப்புரைகள், ப. 167) என்னும் வ.உ.சி. அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகிறது.

தொல்காப்பியத்தின் சிறப்பை உணர்ந்து அதற்கான உரை எழுதவேண்டும் என்று நினைத்தவர் தொல்காப்பிய இளம்பூரணர் உரையைப் படித்தபிறகு அந்த உரையே சிறந்தது, அதனை எப்படியாவது தமிழ்ச் சமூகத்திற்குப் பதிப்பித்து வழங்கிட வேண்டும் என்று உறுதிபூண்டு பதிப்பித்து வழங்கியமுறை வ.உ.சி. என்னும் தமிழ்ப் பதிப்பாளுமையைத் தனித்து அடையாளப்படுத்துவதற்குக் காரணமாக அமைகின்றது.

வ.உ.சி. அவர்களின் தொல்காப்பியப் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ­இளம்பூரணர் உரை - 1919 .

தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை - 1928 .

தொல்காப்பியப் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல் ­இளம்பூரணர் உரை - 1933 .

தொல்காப்பியப் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் - இளம்பூரணர் உரை - 1935.

தொல்காப்பியம் பொருளதிகாரம் ஒன்பது இயல்களும் - இளம்பூரணர் உரை- 1935

வ.உ.சி. அவர்கள் தொல்காப்பியத்தைப் பதிப்பிப்பதற்கு முன்பு தொல்காப்பியத்திற்குப் பல பதிப்புகள் வெளிவந்திருந்தன. 1847 ஆம் ஆண்டு தொல்காப்பிய நச்சினார்க்கினியர் எழுத்ததிகார உரை மழவை மகாலிங்கையரால் முதன்முதலாகப் பதிப்பிக்கப் பெற்றது. அதன் பிறகு சாமுவேல் பிள்ளை, ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, சோடசாவதானம் சுப்பராயசெட்டியார், பவானந்தம்பிள்ளை, ரா. இராகவையங்கார் ஆகியோர் தொல்காப்பியத்தைப் பதிப்பித்திருந்தனர். இதில் தொல்காப்பிய மூலம், நச்சினார்க்கினியர் உரை, பேராசிரியர் உரை, எழுத்ததிகார இளம்பூரணர் உரைஆகியன மட்டுமே பதிப்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வுரைகளில் காலத்தால் தொன்மையானதும் எவரும் உள்நுழைந்து வாசிப்பதற்கு எளிமை தன்மை கொண்டதுமான ஒரே உரை இளம்பூரணர் உரை மட்டுமே. இன்றளவும் கல்விப்புலத்திலும் வாசிப்புத்தளத்திலும் மிக வலுவான உரையாக இருப்பதும் இவ்இளம்பூரணர் உரை மட்டுமே. இந்த உரைக்கு அக்காலகட்டத்தில் பதிப்பாசிரியர்கள் பெரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதை அக்காலத்தைய பதிப்புகளில் இருந்தே அறிய முடிகிறது. எழுத்ததிகார இளம்பூரணர் உரை மட்டுமே 1868-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோதிலும் 1919-க்கு முன்புவரை இளம்பூரணரின் சொல்லதிகாரம், பொருளதிகார உரைகள் கவனத்தில் கூடக் கொள்ளப்படவில்லை என்பதும் அவ்வுரையின் பெருமையை வ.உ.சி. அறிந்து அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற அவரின் செயல்பாடுமே தொல்காப்பிய இளம்பூரணர் பொருளதிகார உரையை இன்றைய தலைமுறைக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

தொல்காப்பியப் பொருளதிகார, எழுத்ததிகாரப் பதிப்புகள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதல் இரண்டு இயல்களான அகத்திணையியலையும் புறத்திணையியலையும் இளம்பூரணர் உரையோடு வ.உ.சி. அவர்கள் முதன்முதலாகப் பதிப்பித்து வெளியிடுகிறார். வ.உ.சி. அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட இந்த முதல் இரண்டு இயல் பதிப்பின் காலத்தை ஆய்வாளர்கள் பலரும் கண்டறியமுடியாதநிலையிலேயே இருந்தனர். அதன் முகப்புப்பக்கத்தில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு இல்லாததும், முன்னுரை இல்லாததுமே இக்குழப்பத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது. பதிப்பு நுட்பங்கள் வளர்ச்சி பெறாதகாலத்தில் இவை எதுவும் குறைஇல்லை. ஆனால் ஆண்டைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் போனதால் 1921 ஆம் ஆண்டு என்று ஏதோ ஒருபதிப்பில் எழுதி வைக்கப்பட்ட குறிப்பைக்கொண்டே ஆய்வாளர்கள் இப்பதிப்பு 1921 ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டு வந்தனர்.

1921-ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டால் வ.உ.சி.யின் தொல்காப்பியப் பதிப்பு இரண்டாம் பதிப்பு முயற்சியாக மாறி விடுகிறது. ஏனென்றால் 1920-ஆம் ஆண்டு கா. நமச்சிவாய முதலியார் இதே இரு இயல்களை இளம்பூரணர் உரையோடு பதிப்பித்து வெளியிட்டு இருந்தார். அதனால் வ.உ.சி. பதிப்பு இரண்டாம் பதிப்பாகவே எல்லாத் தொல்காப்பியப் பதிப்பு ஆய்வாளர்களாலும் கருதப்பட்டு குறிப்பிடப்பட்டு வந்தது. இதனை ஆராய்ந்து வ.உ.சி. அவர்களின் பதிப்பு 1921 இல் வந்தது அல்ல. அது 1919 ஆம் ஆண்டே வெளியிடப்பட்டது என்ற உண்மையைக் கண்டறிந்து நுட்பமானத் தரவுகளோடு முதன்முதலாகத் தமிழுலகிற்கு வழங்கியவர் ஆய்வாளர் பொ.வேல்சாமி அவர்களே (மானுடம், ப.7). 1918-1919 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தமிழ் இதழின் மதிப்புரையை அடிப்படையாகக் கொண்டு பொ.வேல்சாமி அவர்கள் இக்கருத்தை நிறுவுகிறார்.

“ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் அகத்திணையியலும் புறத்திணையியலுமாகிய பாகத்தை அச்சிட்டிருக்கிறார்கள். அதன்பிரதி யன்றெனக்கு அளிக்கப்பட்டதை அவகாசம் கிடைத்தபொழுது இடையிடையே படித்துப் பார்த்தேன். அது படிப்பவர்களுக்கு உரைப்பகுதி நன்கு விளங்கும்படி பத்தி பிரித்து நல்ல காகிதத்திற் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அச்சில் வெளிவந்ததும் வெளிவராததுமான உதாரணச் செய்யுள் பலவற்றிற்கும் ஆதாரம் காட்டி நன்கு பரிசோதித்துப் பதிக்கப்பட்டு வருவதாய்த் தெரிகிறது. இன்னும் முன்னும் பின்னும் அடுத்தடுத்துத் தொடுத்து ஒரு புத்தகமாம் படி ஏனைப் பகுதிகளையும் அச்சிட்டு வெளியிடக் கருதிய குறிப்பும் காணப்படுகின்றது. (செந்தமிழ்த்தொகுதி, 1918 -1919, ப. 448)

என்று அந்த மதிப்புரை அமைகின்றது. செந்தமிழ் இதழில் வெளிவந்த இந்த மதிப்புரையை அடிப்படையாகக் கொண்டே பொ.வேல்சாமி அவர்கள் இந்தப் பதிப்பு 1919 ஆம் ஆண்டே வெளிவந்தது என்று உறுதிப்படுத்துகிறார்.

இவரின் இந்த கண்டுபிடிப்பினால் வ.உ.சி. அவர்களின் பொருளதிகார இளம்பூரணர் உரைப் பதிப்பே முதல் பதிப்பு என்றும். 1920-ஆம் ஆண்டில் வெளிவந்த கா. நமச்சிவாய முதலியாரின் பதிப்பிற்கு முன்பாக வெளிவந்த பதிப்பு என்றும் உறுதி செய்ய முடிகிறது.

இப் பதிப்பைத் தொடர்ந்து 1933-ஆம் ஆண்டில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அடுத்த மூன்று இயல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றார். இப்பதிப்பானது வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட்ஸன்ஸ் அச்சுக்கூடம் வழி வெளிவருகிறது. இப்பதிப்பில் ஒரு பக்கப் பதிப்புரை இடம் பெறுகிறது. அப்பதிப்புரையில் இந்தப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட சுவடிகள் குறித்தும் இந்தப் பதிப்பில் இளம்பூரணர் உரை இல்லாத இடத்தில் நச்சினார்க்கினியருரை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவடிகள் குறித்துக் கூறும் போது,

“இதனை வெளியிடுவதற்குக் கிடைத்த கடிதப்பிரதிகளில் ஒன்று காலஞ் சென்ற த.மு.சொர்னம்பிள்ளையவர்களுக்குரியதாகும். அவர்கள் பிரதி செய்யும் பொழுது உரையில் இல்லாதபல சொற்றொடர்களை இடையிடையே பெய்திருக்கிறார்கள் என்பது பல காரணங்களால் ஊகிக்கக்கூடியதாயிருக்கிறது. பிறிதொரு பிரதி ஸ்ரீமான் தி.நா. சுப்பிரமணிய ஐயரிடமிருந்து கிடைத்தது. இது சொர்னம்பிள்ளையவர்களது பிரதியைப் பார்த்து எழுதிய கடிதப் பிரதிகள் பிரதியென்று தெரியவருகிறது. இதிலும் பலவகையான இடைச்செருகல்கள் உள்ளன. மூன்றாவது பிரதி ஸ்ரீமான் எஸ்.வையாபுரிப் பிள்ளையவர்களுக்குரியது. இது 1912ல் ஸ்ரீமான் தி.த.கனகசுந்தரம் பிள்ளையவர்கள் ஏட்டுப்பிரதியைப் பார்த்து எழுதிய கைப்பிரதியாகும். இதுவே இடைச்செருகல்களைத் தெரிந்து கொள்வதற்கும், மூலத்தின் சுத்தபாடத்தை நிச்சயிப்பதற்கும் பெரிதும் பயன்பட்டது. இதனையே த.மு. சொர்னம்பிள்ளையவர்கள் இரவலாகப் பெற்றுத் தமக்குத் தோற்றியவாறு பலவிடங்களில் மாற்றியுங்கூட்டியுங் பிரதி செய்து கொண்டார்கள்." (தொல்காப்பியப் பதிப்புரைகள், ப. 156)

- என்று பதிவு செய்கின்றார். தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரைக்கு ஒரே சுவடி மட்டும் இருந்ததையும், அந்த ஒரு சுவடியில் இருந்தே மற்றவை பிரதி செய்யப்பட்டன என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. இதில் தெளிவாகப் பிரதி செய்து வைத்த எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களே இந்தப்பதிப்பிற்கும் உதவி செய்தார் என்பதை வ.உ.சி. அவர்கள் பின்னர் பதிவு செய்கின்றார்.

தொல்காப்பியத்திற்கு வெளிவந்த இந்தப் பதிப்பிற்குப் பிறகு 1935-ஆம் ஆண்டு தொல்காப்பியப்ª பாருளதிகார இறுதி நான்கு இயல்களையும் இளம்பூரணர் உரையோடு பதிப்பித்து வெளியிடுகின்ற வ.உ.சி. அவர்கள் அதில் மூன்று பக்க அளவில் ஒரு முன்னுரையும் எழுதுகின்றார். நூலை அச்சிட்ட வாவிள்ள குழுமத்தினரின் பிரசுரிப்போர் முன்னுரை ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது.

வ.உ.சி. அவர்கள் தம் முன்னுரையில் குறிப்பிடத்தக்க சில செய்திகளைப் பதிவு செய்கின்றார். தொல்காப்பியம் படிக்க முற்பட்டது, அதனைப் பதிப்பிக்க முனைந்தது, அதற்கு வையாபுரிப் பிள்ளை அவர்களின் உதவியை நாடியது, ரா.ராகவையங்கார் சுவடிகள் வழங்கியது, உதவி செய்தோர் குறித்துப் பதிவு செய்தது என இம்முன்னுரை அமைகின்றது.

வ.உ.சி.அவர்களின் 1933, 1935-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பதிப்புகளுக்கு எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் உதவி எத்தகையது என்பதை வ.உ. சி. அவர்கள் தம் பதிப்பு முன்னுரையில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்.

“சில வருடங்களுக்குப் பின், தமிழ்த் தொன்னூல்களின் ஏட்டுப் பிரதிகளைப் பலவிடங்களில் தேடிப் பெற்றுப் பரிசோதித்துக் கொண்டு வருந்தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) எஸ். வையாபுரிப்பிள்ளை (பி.ஏ.,பி.எல்.,) அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிடம் இளம்பூரணப் பொருளதிகாரத்தின் பிந்திய இயல்களை அச்சிட இயலாமலிருக்கிற நிலைமையைத் தெரியப்படுத்தினேன். என் உண்மைத் தேசாபிமானத்தையும் பாஜாபிமானத்தையும் கண்டு, அவ்வியல்களை அச்சிடுதல் சம்பந்தமான ஆசிரியர் வேலைகளைத் தாமே செய்வதாகப் பிள்ளையவர்கள் வாக்களித்தார்கள்”. (தொல்காப்பியப் பதிப்புரைகள், ப. 168) என்று இப்பதிப்புக் குறிப்பு அமைகின்றது.

எஸ். வையாபுரிப்பிள்ளை இப்பதிப்பில் என்னவெல்லாம் செய்தார் என்பதையும் வ.உ.சி. அவர்கள் பதிவு செய்கின்றார்.

“காயிதப் பிரதிகளை ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கிக் காயிதப் பிரதியிற்கண்ட வழுக்கள் முதலியவற்றைக் களைந்தும், அச்சுத்தாள் (புரூவ்)களைச் சரிபார்த்துத் திருத்தியும், மேற்கோட் செய்யுள்களின் நூற்பெயர் முதலியவற்றைத் துலக்கியும், முதலில்களவியல், கற்பியல், பொருளியல் இம்மூன்றையும் அச்சிடுவித்து ஒரு புத்தகமாக்கித் தந்தார்கள். இப்போது ஏனைய இயல்களையும் புத்தகவடிவில் வெளிவரச்செய்தார்கள். இவ்வேழு இயல்களுக்கும் பெயரளவில் பதிப்பாசிரியன்யான்; உண்மையிற் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்களே. அவர்கள் செய்த நன்றி என்னால் என்றும் உள்ளற்பாலது”. (தொல்காப்பியப் பதிப்புரைகள், ப. 168) இந்தக் குறிப்பில் வ.உ.சி. அவர்களின் நேர்மை புலப்படுகின்றது.

 வையாபுரிப் பிள்ளை என்னும் மனிதரின் உழைப்பை முழுமையாகப் பதிவு செய்ததோடு பின்னால் இதே ஆண்டில் வெளிவந்த தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரைமுழுமைப் பதிப்பில் தன் பெயரோடு எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்கள் பெயரையும் இணைத்துப் பதிவு செய்தது வ.உ.சி. என்னும் ஆளுமையை அடையாளப் படுத்துகிறது. இவ்வாறு வையாபுரிப்பிள்ளை அவர்களின் பெயரை இப்பதிப்பில் ஏன் இடம் பெறச் செய்தார் என்பது குறித்து பெருமாள்முருகன் அவர்கள்,

“1936-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் பதவிக்கு வையாபுரிப்பிள்ளை முயன்றார். அதற்கு இந்தத் தொல்காப்பியப் பதிப்பு உதவும் என்பதை முன்னுணர்ந்த வ.உ.சி.. அவர் பெயரையும் இணைத்து முழுநூலை வெளியிட்டிருக்க வேண்டும். வ.உ.சி., வையாபுரிப் பிள்ளை இருவருக்கும் முக்கியமான ஒரு நூல் வெளியாக வேண்டும் என்பதுதான் கவனத்தில் இருந்திருக்கிறது. தம்பெயர் இடம் பெற வேண்டும் என்னும் வேட்கையில்லை. அதேசமயம் வையாபுரிப் பிள்ளையின் பெயர் இடம் பெறுவதால் அவருக்குக் கிடைக்கப் போகும் நன்மையை வ.உ.சி. அறிந்திருக்கிறார். அந் நன்மையைக் கருதி அவர் பெயரையும் இணைத்து முழுமையான பொருளதிகார இளம்பூரணத்தை வெளியிட்டிருக்கிறார்”.(தமிழ்த்தடம், ப. 32)

என்று பதிவு செய்கின்றார். வையாபுரிப் பிள்ளை அவர்களின் பெயரை வ.உ.சி. அவர்கள் போடவில்லை என்றாலும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கேட்டிருக்கப் போவதில்லை. ஆனால் வ.உ.சி. அவர்கள் வையாபுரிப்பிள்ளை உழைப்பிற்கு மரியாதை தந்ததோடு, அதனால் அவருக்குக் கிடைக்கபோகும் அல்லது தமிழுலகிற்குக் கிடைக்கப் போகும் நன்மையை அறிந்து அவரின் பெயரை இப்பதிப்பில் இணைத்துச் சென்றிருக்கிறார்.

1919 ஆம் ஆண்டு தொடங்கிய தொல்காப்பியப் பொருளதிகார உரைப்பதிப்பானது 1935 ஆம் ஆண்டு முழுமை பெறுகிறது. இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ நெருக்கடியில் வ.உ.சி. அவர்கள் இந்தநூலை வெளியிட்டுத் தமிழின் நெடுங்காலப் பயணத்திற்குப் பெருந்துணை புரிந்துள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் 1868 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு மறுபதிப்பே பெறாதிருந்த தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை 1928 ஆம் ஆண்டு மீண்டும் வ.உ.சி. அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டுத் தமிழுலகிற்கு வழங்கப்பட்டது.

பதிப்பை நேர்த்தியாகவும், வாசிப்போருக்குப் பயனுடையதாகவும் மாற்றித் தர வேண்டும் என்ற நோக்கில் வ.உ.சி. அவர்கள் உருவாக்கிய இப்பதிப்புகள் தமிழின் பெரும் ஆவணங்கள். தி.த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்த அந்த ஒற்றைச் சுவடியை வ.உ.சி. அவர்கள் நூலாக்கம் செய்யாமல் விட்டிருந்தால் தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தின் முதல் உரையாகச் சொல்லப்படுகின்ற இளம்பூரணரின் தொல்காப்பியப் பொருளதிகார உரையினைத் தமிழ்ச்சமூகம் காணாமலே போயிருக்கலாம்.

பயன்பட்டநூல்கள்

1.           இளமாறன், பா., தொல்காப்பியப் பதிப்புரைகள், பரிசல் பதிப்பகம், சென்னை, 2021

2.           சங்கரவள்ளிநாயகம், அ., வ உ சி வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும், மலர் புக்ஸ், சென்னை, 2022

3.           பெருமாள்முருகன், உண்மைப் பாஜாபிமானம்: வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்புகள், தமிழ்த்தடம், காலாண்டு ஆய்விதழ், ஜீன் - ஆகஸ்டு - 2022

4.           வெங்கடடேசன், இரா., தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள், இராசகுணா பதிப்பகம், சென்னை, 2011.

5. வேங்கடசாமி, மயிலைசீனி., பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், மெய்யப்பன் தமிழாய்வகம், 2001.

6.           வேல்சாமி, பொ., தொல்காப்பிய பொருளதிகார இளம்பூரணர் உரை முழுமையும் முதன்முதலாக அச்சிட்டு வெளிப்படுத்தியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையே!, மானுடம் (சமூக - அரசியல் - பண்பாட்டுக் காலாண்டிதழ் ), நவம்பர் - சனவரி 2022.

- முனைவர் பா.ஜெய்கணேஷ்

Pin It