பார்ப்பனக் கூட்டமும் சாதி ஆதிக்கச் சக்திகளும் சாதிகளைப் பாதுகாக்கும் திட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இது அவர்களின் நீண்ட காலத் திட்டம் என்ற போதும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனக் கூட்டமும், சாதி ஆதிக்கச் சக்திகளும் சாதி மோதல்களை திட்டமிட்டு உண்டாக்குவது என முடிவு செய்து செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். மாணவர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் சாதி அடிப்படையில் கைகளில் கயிறு கட்டும் பழக்கத்தை தொடங்கிவிட்டனர்

இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் கூட கயிறுகளுடன் தான் அலைகின்றனர். இருந்தும் சென்னை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் சாதிக் கலப்பு(சாதி மறுப்பு) திருமணங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நடைபெறும் திருமணங்களில் ஒரு சதவீதம் கூட சாதியை மறுக்கும் திருமணங்கள் அல்ல. அதேசமயம் பெரும்பாலான திருமணங்கள் ஆணாதிக்க நிலையில்/சாதி ஆதிக்க நிலையில் ஏதோ ஒரு சாதியாக மாறிவிடுகிறது. குழந்தைகள் தாய் அல்லது தந்தையின் சாதி வழியில் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சிலர் சாதி மற்றும் மதத்தை மறுத்து பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதனால் இவர்கள் இட ஒதுகீட்டில் இடமில்லாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அல்லது சாதி ஆதிக்கச் சக்திகளின் பிரிவில் இணைக்கப்பட்டுவிடுகின்றனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்த பார்ப்பன சக்திகளும், ஆதிக்க நிலையில் உள்ள சாதிகளும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதிக்கீட்டை பெற அனுமதிகக்கூடாது. அதற்கான சரியான வழி முறைகள் கண்டறியப்பட வேண்டும். சாதிய சிக்கல் தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு பார்ப்பனிய கொள்கைதான் அடிப்படை.

இந்திய அளவில் நடைபெறும் சாதிப் பிரச்சனைகளில் பார்ப்பனியத்தின் நேரடிப் பங்கு இருப்பதில்லை. தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டு பார்த்தால் பள்ளருக்கும் தேவருக்குமான பிரச்சனைகளாகவும், பறையருக்கும் வன்னியருக்குமான பிரச்சனைகளாகவும், அருந்ததியர்களுக்கும் கவுண்டர்களுக்கு மான பிரச்சனைகளாகவும், மோதல்கள் நடைபெறுகின்றன. எனினும் சாதி ஆதிக்க சக்திகளுக்குள்ளேயும் மோதல்கள் சிறிய அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக சாதி ஆதிக்கச்சக்திகள் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. பார்ப்பர்னகளைப் பொறுத்த அளவில் பார்ப்பனர்கள் - பார்ப்பன அல்லாதவர்கள் தான்.

இந்தப் போக்கினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பகை நீடிக்கச் செய்கின்றன. எனினும் சாதிகளின் தோற்றத்திற்கு காரணமாகவும் ஆதிக்கச் சக்தியாக தொடர்ந்து முன்னிலை பெறும் பார்ப்பனியம் இன்றுவரை தன்னை வளர்த்துக் கொண்டேவருகிறது. பெரியாரும், அம்பேத்காரும் பார்ப்பனியத்திற்கு எதிராக, பார்ப்பனியம்தான் பிரச்சனைக்கு காரணம் என்று மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். ஆனாலும் சாதி ஆதிக்கம் முற்றாக ஒழிந்துவிடவில்லை. அது தன்னை சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொண்டே வளர்கிறது. ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும், சாதி ஆதிக்கமும் பார்ப்பனியத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும். ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்தும், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்தும் பார்ப்பன சாதிகளில் இருந்தும் பார்ப்பனத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஆதிக்க சாதிகளிலிருந்தும் தங்கள் சொந்த சாதிகளிலிருந்து கணவன் மனைவியைத் தேர்வு செய்யும் திருமண தகவல் மையங்கள் ஏராளமாக தொடங்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தங்கள் ஊருக்கு அருகில் அல்லது நகரத்துக்குள் தன் சாதி மணமக்களை தேடி திருமணம் செய்து கொண்டிருந்த சாதிகள் மாவட்ட, மாநில எல்லைக்குள் தற்போது இந்தியாவிற்குள்ளும், ஏன்? உலக அளவிலும் தங்களது சாதியைத் தேடிக் கொண்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சி, சாதியை உலக அளவில் இணைக்கிறது. தொழில் வளர்ச்சி சாதியை ஒழித்துவிடும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு சக்திகள் பாடம் நடத்தி வந்தனர். ஆனால் சாதி ஒழிப்புப் போராட்டமும் நிலப்பிரபுத்துவ ஒழிப்பும், முதலாளிய ஒழிப்பும் இல்லாமல் சாதியை ஒழித்துவிட முடியாது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கொண்டுவரும் சாதி மறுப்புத் தீர்மானங்கள், சாதிமறுப்புக் கொள்கைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. சாதி மறுப்பு திருமண முறைகளால் மட்டும் சாதியை ஒழித்துவிட முடியாது என்றபோதிலும் சாதி ஒழிப்புக்கு கலப்புத் திருமணங்கள் துணை செய்யும். புரட்சிகர இயங்கங்களில் முதன்மையான, முக்கியத்துவமான கொள்கையாக சாதி மறுப்பு இருக்க வேண்டும். நிலவுடைமை, ஏகாதிபத்திய,- முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசக் கொள்கை பார்ப்பன ஒழிப்பு, சாதி ஒழிப்பு நடைமுறைகளுடன் இணைந்தே முன் எடுக்க வேண்டும்.

Pin It