மார்கோஸின் முகமற்றவர்களின் முகம் போல குரலற்றவர்களின் குரலாக விட்னஸ். மலக்குழி ஆணவ படுகொலைகள் பற்றிய கதை. பொதுவாகவே இந்த தொழிலோடு சாதி இணைக்கப் பட்டிருப்பதன் அரசியலை புரிந்துகொள்ள சமூகத்தில் புழக்கத்தில் உள்ள சொல்லாடல்களே போதுமானது. லைட் எரிய வில்லையா பேன் ஓடல பிரச்சனையா எலக்ட்ரீசியனை கூப்பிடு.குழால தண்ணி வரல ஹீட்டர் வர்க் ஆவல ப்ளம்பரை கூப்பிடு.ட்ரைனேஜ் லீக் ஆகுதா ? ட்ரைனேஜ் அடைப்பா (எனும் சாதி பெயரை சொல்லி) அவனை கூப்பிடு என்பதே வழக்கம். சோ இப்படியான ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட சுமையை கண்டுக்காமல் போகும் பொது சமூகத்தின் மீது சப்புன்னு அப்பிருக்கிறது விட்னஸ்.

அந்த சமூகத்தின் இந்த சிக்கலை ஒரு கழிவிரக்கமாக மட்டும் காட்டிவிட்டு செல்லாமல் 5 ஆண்டுகள் ஆய்வுகளின் படி இந்த வேலையிலும் கூட அவர்களுக்கு மறுக்கப்படும் சம்பளம் பற்றியும் மறுக்கப்படும் சுய மரியாதை பற்றியும் எல்லாம் முடிந்த அளவு விசாலமாக பேசி இருக்கிறது விட்னஸ். (படத்தில் வரும் சூப்ரவைஸரின் கொடுமையை விட நிஜத்தில் மிக கடுமையாக நடந்ததெல்லாம் உண்டு)கூடவே இது போன்ற நிகழ்வுகளின் போது ஏன் இந்த வேலை செய்ய வேண்டும் படிச்சு நல்ல வேலைக்கு போகலாம்ல என கேட்கப்படும் தற்குறித்தனமான கேள்விகளுக்கு மிக அறிவுப்பூர்வமாக கதையில் வரும் பேர்லர் (இணை கதையில்) ஸ்டோரில பதில் சொல்லி இருக்கார் எழுத்தாளர்.witness movieநல்லா படித்து மிக முக்கியமான பொறுப்பில் நல்லா சம்பாதிக்குன் ஷ்ரத்தா பாத்திரம். ஆனாலும் அவளால் நிம்மதியாக வாழ முடியாமல் அவளை துரத்தும் சோஷியல் ஏன்சைட்டி அந்த சமூக பதட்டம் இங்கே அருந்ததியர்களுக்கும் இஸ்லாமி யர்களுக்கும் (வேறு வேறு காரணங்கள்) பொதுவானது. அதை அனுபவிப்பவன் மட்டுமே இந்த தற்குறி கேள்விகள் கேட்க மாட்டான். ஆளுமை திறம் மிக்க ஷ்ரத்தா பாத்திரம் இறுதியில் தோல்வியை சந்திப்பதாக மிக நேர்மையாக அதை பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.

அதே போல சின்ன சின்னதா வரும் ஃபில்லிங்குகள் (fillings) மிக நேர்த்தியாக இருந்தது. உதாரணம் அதிகாலை தூய்மை பணியாளர்கள் காட்சிகளில் வரும் ஒலி பில்லிங்காக வரும் அந்த பாங்கு ஓசை. பஸ்ல கடந்து செல்லும் போது இந்திராணி பாத்திரம் சொல்லும் வீடு மாற்றப்பட்ட செய்தி. இறுதியாக தீர்பு சொல்லபப்டும் நாளில் கோர்ட் சீனில் வந்து நிற்கும் வேனிலிருந்து இறங்கி வரும். (கெளசல்யா சங்கர் படுகொலையின் குற்றவாளிகள் போல) கணவன் மனைவி மற்றும் இளைஞர்கள். மலக்குழி மரணமும் ஒரு ஆணவப் படுகொலையே என்பதை சொல்லிச் செல்கிறது அந்த காட்சியின் அந்த ஒற்றை ப்ரேம். மிக முக்கியமாக தமிழ் சினிமாவின் ஒற்றை நபர் வந்து சமூக விடுதலையை சாத்தியப்படுத்தும் பிற்போக்கான காட்சிகளிலிருந்து பார்வையாளர்களை மீட்டு இரட்சித்தற்கு ஆயிரம் நன்றிகள். ஆண்டவரே உங்களுக்கு த்தோத்திரம்.

அப்படியே அந்த இறுதி தீர்ப்பு அது அற்புதம். ஒருவேளை இப்படியாக இல்லாமல். ஒரு ஹேப்பி க்ளைமேக்ஸாக இதை முடித்திருந்தால், பாபர் மசூதியின் தீர்பு, பில்கீஸ்பானுவின் தீர்ப்பு வந்து எழுத்தாளரை முகத்தில் அறைந்திருக்கும். பொதுவாக நமக்கான படம் என்றால் க்ராப்ஃட பார்க்காத கண்டண்ட பாரு என சமாதானம் சொல்லிக் கொள்வோம். இந்த படத்தில் க்ராஃப்டாகவும் ரொம்ப நல்லா இருக்கு.

குறைகளும் உண்டு ஓரிரண்டு குறைகள்தான். அது என்னன்னா முதல்ல அந்த சிறை காட்சிகள். சிறை இவ்ளோ ரொமாண்டிக்காக இருந்திருந்தால் அடிக்கடி ஜெயிலுக்கு போகலாம் போல. :) உண்மையில் சிறை உள்ளிருப்பது ஒரு வலி என்றால் மனு போட்டு கைதாகி இருப்பவரை பார்ப்பதும் வலிதான் (அதுக்கு தனியா ஒரு படமே எடுக்கலாம்) மொத்தமா கம்பிக்கு வெளியே ஒரு கம்பிக்கும் இன்னொரு கம்பிக்கு இடையே இரண்டடி இடைவெளி வேற இருக்கும் கத்தி கூச்சலிட்டுத் தான் பேச முடியும். 100 வார்த்தையில் 10 வார்த்தைய எப்படியாவது வாங்கிடுவாங்க அவ்ளோதான் கிடைக்கும். அடுத்ததா படத்தில் வக்கீல் பேசும் வசனம் தோழர் ஜெயிலுக்கு போகாம இருந்தால் நானே சமாளிச்சிருப்பேன் என்பது. ஏன்னா சங்கங்கள் எப்போதும் தனி மனிதனை நம்பி இல்லை. அடுத்தவர் அதை தொடர்ந்து முன் எடுத்துச் செல்வார்கள் கைதான தோழரின் வழக்கையும் உட்ப்படுத்தி. இந்த இரு சிறு குறைகள் தாண்டி படம் அவசியம் சமூகம் உரையாட வேண்டிய படம். உழைக்கும் மக்களுக்கான கலை வடிவங்களை கொண்டாடுவோம்.

- பெரோஸ், புரட்சிகர இளைஞர் கழகம்

Pin It