இந்த நாடு இலவசத்திலும், கையேந்துவதிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள கிருபால் மகாராஜ் ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த இலவச உணவு வழங்கும் கூட்டத்தில் நெரிசல் தாளாமல் 100க்கும் அதிகமான மக்கள் செத்துபோய் இருக்கிறார்கள். ஒருநாடு எவ்வளவு வளமாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளம்.

மார்ச் 5 தினமணியில் ஒரு விளம்பரம். “இப்போது பள்ளிக்குச் செல்வது குஷியாக இருக்கிறது. அங்கே படிப்போடு சாப்பாடும் கிடைக்கிறது'' என்று சொல்கிறது. ஆக, இந்த நாடு உணவில்லாத நாடாக இருக்கிறது என்பதை எத்தனை முறை மூடி மறைத்தாலும், அது தம்மை வெளிச்சம் போட்டு வெளியே வந்து தலைநீட்டுகிறது. 1947ஆம் ஆண்டு விடுதலை அடைந்தபின் எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள், எத்தனை எத்தனை நலத்திட்டங்கள். ஆனால் ஒன்றுகூட இந்த மக்களின் வாழ்வை எள் மூக்கின் முனை அளவுகூட முன்னேற விடவில்லை என்பதை இதைப்போன்ற நிகழ்வுகள் நமக்கு காட்சியாக தெரிகின்றன.

செய்தி சொல்கிறது, அந்த மடத்தில் ஆண்டிற்கு ஒருமுறை லட்டு, பத்து ரூபாய் பணம், கைக்குட்டை மற்றும் இலவச உணவு ஆகியவை வழங்கப்படுமாம். அதை பெறுவதற்காகத்தான் மக்கள் போட்டி போட்டு வந்து இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். இழந்த ஒவ்வொரு உயிரும் இந்த நாட்டிடம், இந்த நாட்டின் ஆட்சியாளர்களிடம் நியாயத்தைக் கேட்கிறது. நாம் பெற்ற "சுதந்திரம் எமக்கு அடிப்படையான சோறைக் கூட வழங்காத காரணத்தினால் நாங்கள் கையேந்தி நிற்கக்கூடிய அவலத்திற்கு தள்ளப்பட்டோம். எங்களுக்கான உணவுப் போட்டியிலேதானே எங்கள் மக்களில் இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று.

ஆனால் இந்தியா அது குறித்து வெட்கப்படப் போவது கிடையாது. காரணம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ள நிவாரணம் பெறுவதற்காக காத்திருந்த மக்களும் இப்படிப்பட்ட கொடுஞ்சாவுக்கு இரையானார்கள். இது நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த நாடு வறுமையிலும், வளம் குன்றியும், வாழ்வதற்கான ஆதாரம் இன்றியும், கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கியது என்பதுதானே.இந்த நாட்டை முன்னேறிய நாடு என்று நாடாளுமன்றத்திலே வாய்க்கிழிய பேச எப்படி இந்த அரசியல்வாதிகளுக்கு மனம் வருகிறது?

செத்துப்போன மக்களெல்லாம் யார்? வாக்குச் சாவடிக்கு வராத ஓரளவுக்கு வசதிப் படைத்தவர்களா? இல்லையே. தேர்தல் என்றவுடன் காலை 8 மணிக்கே சாவடிக்கு வந்து வரிசையில் நின்று, கையிலே மை வைத்து, தமக்குப் பிடித்த சின்னத்திலே முத்திரை குத்துபவர்கள்தானே. அவர்கள் வாக்களிக்க மட்டுமல்ல, அவர்களின் வாழ்வின் வாய்க்கரிசியும் வரிசையில் தான் நிறைவு பெற்றது. இது எத்தனை அவமானம். சில விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் கரங்களிலே இந்த நாட்டை ஒப்படைத்துவிட்டு, நாடு முன்னேறுகிறது என்று சொன்னால் இதை யாரை ஏமாற்ற?

பன்னாட்டு மயமாக்கப்பட்ட இந்திய தேசியத்தின் முகம் கோக்கால் கழுவப்படுகிறது. பீசாவால் நிறைவடைகிறது. ரகுமானின் இசையால் குளிர்ச்சியூட்டப்படுகிறது. ஆனால் இந்திய நாட்டின் பெரும்பாலான மக்கள் இரவிலே சோறு இல்லாமல்தான் படுக்கைக்கு செல்கிறார்கள் என்கின்ற சோக நிகழ்வுகள், இந்திய அரசு போடும் ஆடம்பர வெளிச்சத்தில் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

இந்த அரசின் கூட்டெல்லாம் அம்பானி டாட்டோவோடுதான். அப்பாவி மக்களின் வாழ்வோ, கூவத்து கரைகளிலே கொசுக்களின் தாலாட்டிலே இம்சையாய் நகர்கிறது. ஆனால் அந்த குடிசைகளும் அப்புறப்படுத்தப்பட்டு கான்கிரீட் வீடு என்ற போர்வையில் இந்நகரத்தைவிட்டே மக்களை விரட்டியடிக்கும் சதிகாரத் திட்டத்தை அரசு நலத்திட்டம் என வாய்க்கிழிய பேசுகிறது. அரசின் தலைவரை, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆலயம் கட்டி போற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார்.

ஆனால் தமிழ்நாட்டிலே வாழும் மக்களின் எத்துணைபேர் தமது வாழ்வை பசியால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பேர் தங்கள் அவமானத்தை நிர்வாணத்தால் நிறைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். யார்யாரெல்லாம் தமது தாகத்தை நல்ல குடிநீர் இல்லாமல் தணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பட்டியலை எல்லாம் இந்த அரசுக்கு சொல்லப் போவது யார்? சாலையிலே நடப்பதற்கு கூட இந்த அரசு, வரி வாங்கும் கேட்டை உருவாக்கிவிட்டது.

இன்னும் வரிவிதிக்கப்படாத ஒரே ஒரு செயல்தான் இந்த அரசிடம் இல்லை. விரைவாக அதுவும் நிறைவாக்கப்படலாம். ஆம்! "வாசிப்பதற்கான வரிதான் இந்த அரசு வசூலிக்காமல் இருக்கிறது. உள்ளூர் வரி, வெளியூர் வரி, கேளிக்கை வரி, மறைமுக வரி, அடடா... வரியின் தன்மைகள் தான் எத்துணை எத்துணை. இது எந்த மக்களுக்குப் பயன்பட இந்த வரி. நாம் மேற்சொன்ன விளம்பரம் இந்தியாவை அவமானப்படுத்தும் விளம்பரம் என்பது அவர்களுக்குப் புரியவில்லையா? இந்திய தேசத்து மக்கள் கல்விக்காக அல்ல, சோற்றுக்காக பாட சாலைக்கு செல்லும் அவமானத்தை எப்படி மறைக்கப் போகிறார்கள்.

நஞ்சுக்குமேல் இனிப்பை தடவுவதுப்போல அவர்கள் கல்விக்கு மேல் சோற்றை தடவுகிறார்கள். இந்த கல்வி யாருக்கு பயன்படப்போகிறது. பகல் உணவு திட்டத்திற்காக நடுவண் அரசு 2008-2009ஆம் ஆண்டில் 11.2 கோடிக்கு மேற்பட்ட சிறார்களுக்கு பயன்தந்துள்ளதாம். இதற்காக 5187.01 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.95 லட்சம் பள்ளிகளில் சமையல் அறைகள் கட்ட சற்றேக்குறைய 1772 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இத்திட்டத்திற்குப் பெயர் பாரத் நிர்மானம்.

ஆனால் தரமான கல்வி கொடுத்து, இந்த தேசத்துக் குழந்தைகள் அறிவாளிகளாக மாற்றுவதற்குப் பதிலாக, உணவு கொடுத்தால் தான் பாட சாலைக்கு பிள்ளைகளை அழைக்க முடியும் என்ற போக்கு, கல்வியைப் பார்த்து கேலிச் செய்வதாக இருக்காதா? இதற்குப் பதிலாக இந்த குழந்தைகளின் பெற்றோருக்கு வேலைக்கான உறுதியை அரசு அளிக்குமேயானால், அந்த குழந்தைகளுக்கான உணவை அவர்களின் பெற்றோர்களே கொடுக்க மாட்டார்களா? நாட்டில் விவசாயம் இல்லை. விவசாயிகள் தங்கள் வாழ்வை ஒவ்வொரு நாளும் நாள்குறித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். கைத்தறி நெசவாளர்கள் தங்களின் தறிகளிலேயே தமது வாழ்வை நிறைவாக்கிக் கொள்கிறார்கள். ஆலைத் தொழிலாளர்கள் தமக்கான வேலை உறுதிவாய்ப்பை ஆலை வாசல்களில் ஆர்ப்பாட்டங்களால் அடைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் தமக்கான கல்வி உரிமையை பல்கலைக்கழங்களுக்கு முன்னால் போராட்டங்களால் பெறத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலங்களுக்கு முன்னால் தமது வாழ்வை எதிர்நோக்கி தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்கள் திருமணத்திற்காக காத்துக் கொண்டு, என்றாவது ஒருநாள் தங்கம் விலை குறையும், அப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று தினம் தினம் செய்திகளில் வரும் தங்கத்தின் விலையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருசாரர் மட்டும் புதிது புதிதாய் வீடு கட்டுகிறார்கள். நவீன மகிழ்வுந்தில் நாள்தோறும் பவனி வருகிறார்கள். ஆற்று மணலை அள்ளியதிலிருந்து கிடைத்த வருமானத்தில் ஆகாயம்வரை இடம் கிடைத்தாலும் அதை அப்படியே மடக்கிப்போட்டு மனம் குளிர தயாராக இருக்கிறார்கள்.

நடிகர்கள் சிலர் தாம் வாங்கிய நிலங்களில் கோடிகளை இழந்ததற்காக காவல்துறையினரிடம் நடையாய் நடை நடக்கிறார்கள். சில நடிகர்கள் தாம் எழுதிய எழுத்துருக்கள் இணையத் தளங்களில் விற்பனையானதில் இலட்சங்களை இழந்ததாக ஊடகங்களுக்கு நேர்காணல் தருகிறார்கள். ஆனால் எமது அப்பாவி மக்கள் ஒருவேளை சோற்றுக்காக வரிசையில் நின்று அதுவும் கிடைக்காமல் செத்து விழுகிறார்களே! இதுதான் இந்த நாட்டின் வளர்ச்சியின் குறியீடா? இந்த நாடு வளமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமா? ஒட்டுமொத்த மக்களில் ஒருசிலர் மட்டும் அடைவது மகிழ்ச்சியாகுமா? ஒட்டுமொத்த உடலில் ஒரு பகுதி மட்டும் வளர்வது ஆரோக்கியமானதா? அதை வீக்கம் என்றல்லவா சொல்லுவோம்.

உடலில் வீக்கம் நோயின் அறிகுறி அல்லவா? நோய்க்கான சிகிச்சை தராமல் சிக்கலை தீர்க்கிறேன் என்று சொல்வது ஒருவித ஏமாற்று. இதை அரசு எப்படி புரிந்து கொள்ளப்போகிறது. மும்பையில் குண்டு வெடித்தபோது பதறி துடித்த மக்களவை, எமது மக்கள் பசிக்காக, கேவலம் ஒரு லட்டுக்காகவும், கைக்குட்டைக்காகவும் வரிசையில் நின்று அதை பெறுவதற்காக முயற்சி செய்வது என்பது எவ்வளவு கவலைக்குரிய, வேதனைக்குரிய செய்தி. இதைக்குறித்து மக்களவை ஒருவரியில் தீர்மானம் போட்டு, இறந்தவர்களுக்கு மூன்று லட்சம் வழங்க வேண்டும் என்று ஒரு உறுப்பினர் பேசுவார். ஆவண செய்யப்படும் என்று அமைச்சர் பதில் சொல்வார். அத்தோடு அந்த கூட்டம் நிறைவெய்தும். செத்த மக்களின் ஈமச்சடங்கும் மறந்துவிடும்.

அடடா...! எல்லாவற்றையும் மறந்துபோகும் தேசமாகிவிட்டதே. இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நக்சல்களை வேட்டையாடுவதற்காக கோடிக் கணக்கில் செலவு செய்ய நடுவண் அரசு முனைப்புக் காட்டுகிறது. புதிய புதிய படைகளை எல்லாம் அமைக்கிறது. அதற்காக புதிய புதிய பெயர்களை எல்லாம் அறிமுகம் செய்கிறது. ஆனால் இந்த நாட்டின் வறுமையை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை குறித்து இந்த அரசு இன்னமும் மௌனமாய் இருக்கிறது. இந்த அரசுக்கு நாடு என்பது ஒரு சிலர் மட்டும்தான்.

மக்கள் என்பது வெறும் வாக்களிக்கும் இயந்திரங்கள்தான். இதை மாற்றி அமைக்க வேண்டும். இந்த களம் மாறாத வரை, இந்த நிலை மாறாத வரை, சோற்றுக்காகவும், இலவசத்திற்காகவும், வரிசையில் நின்று செத்துப்போகும் கூட்டம் இன்னும் இன்னும் அதிமாகிக் கொண்டுதான் இருக்கும். இதை நிறுத்தவேண்டிய அரசின் கடமை என்றாலும், அரசு அதை செய்யாது. மக்கள்தான் செய்ய வேண்டும். அதற்காக மறுநாள் என நாளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். இன்றே இப்போதே செய்ய வேண்டிய மகத்தான பணி இது. முடிந்தது ஒரு நிகழ்வல்ல, இது தேசிய அவமானம்.

-கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It