பாசிப்படர்ந்த அந்த

தாமரைக்குளக்கரைகள்

எப்போதும் அடர்ந்தே இருக்கும் முள்வேலி மரங்கள் சூழ்ந்து!

விடுமுறை நாட்களில் மட்டுமல்ல

வீட்டுப்பாடம் எழுதச்சொன்ன

நாட்களிலும் கூட எங்களுக்கு

அடைக்கலம் தந்தது அந்த

குளமும் குளக்கரையும்தான்!

பொம்மைகள் வாங்கமுடியாத

குடிசைகளில் பிறந்ததாலோ

என்னவோ -அந்த

கரைகளின் களிமண்ணில்

பொம்மைகள் செய்து

விளையாடியிருக்கிறோம்!

அதிகபட்சமாய் எங்கள் சிந்தனைகள்

இதைத்தாண்டி சிறகடித்ததில்லை,

எங்கள் பொம்மைகள்

இப்படித்தானிருக்கும்!

கூர்தீட்டிய கொம்புகள்கொண்ட

ஏர்மாடுகள்;

சோறாக்கவும் மீன்குழம்பு

வைக்கவும் சின்னச்சின்ன

மண்பானைகள்;

தாமரை இலைகளைப்போல

காதுமடல் விரிந்த

கருப்பு யானைகள்!

அப்போது மாவீரன் படத்தில்

ரஜினி வந்த வெள்ளைக்குதிரை;

திருவிழா நாட்களிலும்

கல்யாணப்பந்தலிலும் ஒலிக்கும்

ரேடியோ பெட்டிகள்.

இதுதான் நாங்கள் செய்யும்

களிமண் பொம்மைகள்!

நாங்கள் இவைகளோடு

பேசியிருக்கிறோம்;

யானைகளோடு

நடந்திருக்கிறோம்;

குதிரை மீதேறி

பறந்திருக்கிறோம்;

"உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக"

இப்படி அந்த ரேடியோ பெட்டிகள்

வழியே அந்த குளக்கரையின்

எல்லா பக்கங்களிலும்

எங்கள் குரல்களை எதிரொலிக்கச்

செய்திருக்கிறோம்!

அந்தக்குளமும் கரைகளும்

எங்களுக்கு மீன்பிடிக்க

கற்றுத்தந்தது;

நீச்சல் பழக கற்றுத் தந்தது;

நண்டு பிடிக்க கற்றுத்தந்தது;

ஏன் சிலநேரம் முயல்களையும்

கொக்குகளையும் கூட வேட்டையாடக்கூட

கற்றுத்தந்திருக்கிறது!

எங்களுக்கு பசியெடுத்தால்

கூழ் தேவையில்லை

சில கெண்டை மீன்களும்

சில கெளுத்தி மீன்களும் போதும்

நெருப்பில் சுட்டே

பசியாறுவோம்!

வெயில் அடித்தால்

நீரில் இருப்போம்

குளிரெடுத்தால்

கரையில் இருப்போம்;

சிலநேரம் குளிரையும்

வெயிலையும் மறந்தே

இருப்போம்!

கண்கள் சிவக்க

நீச்சலடிப்போம்;

சேற்றில் புதைந்து

மீன்பிடிப்போம்;

மாலை வந்தால்

தாமரை அரும்புகள்

பறித்து மேலே வருவோம்!

எப்போதோ வரும்

மழைநாட்களுக்காக

காத்திருப்போம் எங்கள்

தெருமண்ணில்;

புரண்டுவரும் மழைநீரை

கைகள் கொண்டு

அழைத்துச்செல்வோம்-அந்த

தாமரைக்குள கால்வாய்நோக்கி!

அந்த மழைநாளின் ஒவ்வொரு

விடியலிலும் ஓட்டமாய்

ஓடுவோம் -அந்த குளத்தை நோக்கி

நேத்து இடுப்புவரை தொட்டநீர்

இன்று கழுத்தளவு வந்திருக்குமா

என்ற ஆவல் துடிதுடிக்கும்!

அந்த தாமரை இலைகளும் கூட

ஒவ்வொரு நாளும்

மேலெழுந்துகொண்டே இருக்கும்!

அப்போதெல்லாம் அந்த

தாமரைக்குளம்தான்-எங்களுக்கு

கடல்

அருவி

அதன் கரைகள்தான்

எங்கள் கால்கள்தொட்ட

சிகரங்கள்!

இப்போது நாங்கள் வளர்ந்தபோது

கொஞ்ச கொஞ்சமாய் செத்திருந்தது

அந்த மரங்களும்

தாமரைக்கொடிகளும்!

தூரத்திலிருந்து பார்த்தாலே

தெரிகிறது மொட்டையாய்

அந்த களிமண்கரைகள்;

ஆங்காங்கே வெடித்துசிதறி

வானம் நோக்கி காத்திருக்கிறது

எப்போதோ வரும் மழைக்காய்

அந்தக்குளம்!

இப்போது யார் அழைத்து

வருவார்

அந்த தாமரைக்குள

கால்வாயைத்தேடி

தெருவில் அலைமோதும்

அந்த மழைநீரை!

இப்போது எங்கள் பிள்ளைகள்

ஊரில் இல்லை

வனாந்தரம் கடந்து

போயிருக்கிறார்கள்

வயிற்று பிழைப்புத்தேடி!

அதோ அந்த தெருவெள்ளத்தைப்

போலவே திக்குத்தெரியாமல்

அலைகிறோம்;

கட்டாயம் ஓர்நாள்

கரையேறுவோம் என்ற

நம்பிக்கையில்!

மீண்டும் அந்த பிஞ்சுக்கைகள்

வழிகோலும் உன் குளக்கரையை

நோக்கி!

அதுவரை எங்களை மன்னித்திரு

கூடவே எங்களுக்காய் காத்திரு

எனதருமை தாமரைக்குளமே!

Pin It