சென்னை காந்திமண்டபத்தை அண்மையில் காணும் பேறு பெற்றேன். அந்த அவலத்தை பேறு என்று சொல்ல வாய்கூசுகிறது. பத்தடிக்கு ஒரு விளம்பரப்பலகை..... ஒளிவிளக்கு என்று ஆடம்பரத்தின் உச்சியில் நின்று அட்டகாசம் செய்யும் தனியார் கம்பெனியின் பெயர் மட்டுமே அங்கு நினைவுக்கு வந்தது. இந்த ஆரவாரத்தில் தேசத்தந்தையின் நினைவு எப்படி வரும்? வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு காந்தி என்கிற பெயரை மறக்கச்செய்து தனியார் கம்பெனியின் பெயரை மனதில் இருத்தச்செய்யும் முயற்சி இது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்த ஒளிவெள்ளத்தின் முன்பு ராஜாஜி, பக்தவச்சலம் போன்றோரின் சிறப்புக்களும் மங்கிப் போனதில் வியப்பில்லை.

Gandhi Mandapamநினைவிடங்களைப் போற்றிப் பராமரிப்பது ஒரு தேசியக் கடமை. பள்ளிப் பாடப்புத்தகத்தில் நாட்டுக்கு உழைத்த நல்லோரின் வரலாற்றை இடம்பெறச் செய்வது போன்ற முயற்சிதான் இதுவும். நினைவுத்தூண்களாகவும், நினைவில்லங்களாகவும், சிலைகளாகவும், மண்டபங்களாகவும், சதுக்கங்களாகவும் இந்தப் பெரியவர்கள் அழியும் உலகில் அழியாப்பெருமை பெற்று நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டின் சிற்றூர்களில்கூட பூங்காக்களை பராமரிக்கும் உள்ளாட்சிமுறை ஒரு காலத்தில் இருந்தது. அப்போதிருந்த உள்ளாட்சி மன்றங்களே அந்த பூங்காக்களை செம்மையாக பராமரித்து வந்தன. மாலைநேரங்களில் பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்துபோகும் இடமாகவும், அப்போது பிரபலமாக இருந்த வானொலியைக் கேட்கும் இடமாகவும் அவை இருந்தன. அதற்குப் பிறகு சுயநலஅரசியல் வந்தது. கூடவே கரைவேட்டிகள் வந்தன. நீண்டு தொங்கும் மேல்துண்டுகள் வந்தன. கட்சிக்காரர்கள் நடந்துபோன காலம் மாறி டாட்டா சுமோ வரிசை கார்கள் வந்தன. பூங்காக்கள் இருந்த இடங்கள் உருமாறி வணிக வளாகங்களாக மாறிப்போயின. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பூங்காக்கள்தான் அவ்வூரின் நுரையீரல் என்று மருத்துவம் சொல்லுகிறது. அரசியல்வாதிகளின் வளர்ச்சியால் ஊரின் நுரையீரல் கெட்டுப்போனதெல்லாம் பழையகதை. நாட்டின் கல்லீரலே கெட்டுப்போனதாக இப்போதைய முதல்வர் ஒப்புக்கொண்டிருக்கிறார் ஒரு காலத்தில். அது குணமாகிவிட்டது என்று அவர் இன்னும் சொல்லவே இல்லை.

இன்று நாட்டின் மானம் கெட்டுப்போயிருக்கிறது. பெற்ற அப்பனின் சமாதிக்கு விளக்குப் போட அடுத்த வீட்டுக்காரனிடம் எண்ணெய் கடன்வாங்கும் அவலம் சென்னை காந்தி மண்டபத்தில் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. இது ஆரம்பம்தான். எதிர்காலத்தில் இந்த பட்டியல் நீளும். “பாரதியார் கையை சும்மாதானே நீட்டிக்கொண்டிருக்கிறர். ஒரு வெள்ளைக்காரக் கம்பெனியின் சட்டையை அவர்கையில் விளம்பரத்திற்காக மாட்டிவிட்டால் காசு வருமே” என்று கணக்குப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “கண்ணகி சிலைக்குக்கீழே அவ்வளவு இடம் காலியாக இருக்கிறதே! ஒரு சினிமாக்காரனுக்கு வாடகைக்கு கொடுப்போமே!” என்றுகூட ஆட்சியாளர்கள் நினக்கலாம். “அந்த சினிமாவின் கதை, நடிகையின் சதைமடிப்புகளுக்குள் புதைந்துகொண்டு வெளியேவர திணறிக் கொண்டிருந்தாலும் நமக்கு கவலையில்லை. பைசாதான் முக்கியம்” என்றுகூட ஆட்சியாளர்கள் நினைக்கலாம். “தமிழ்நாட்டு இளைஞர்களின் உடல்நலத்தைக் காட்டிலும் சாராய வருமானமே பெரிது” என்று நினைக்கும் தமிழக அரசு இப்படியெல்லாம் அறிவியல்பூர்வமாக சிந்திக்காது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்ன?

மகாத்மா காந்திபோன்ற தலைவர்களின் நினைவிடங்களை பராமரிக்க எளிமை போதும். தமிழ்நாட்டு பொதுப்பணித்துறைக்கு சில லட்சங்கள் செலவில் முடியக்கூடிய காரியம் அது. யானையின் வாய்க்குள் சோற்று உருண்டைகளை வீசி எறியும்போது சிந்திச்சிதறும் சோற்றுப்பருக்கைகளுக்கு ஈடான காசு அது. “மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றிப் பாதுகாக்க எங்கள் துறைக்கு வசதியில்லை; உதவி செய்யுங்கள்” என்று அதன் பொறுப்பாளர்கள் ஒரு பலகையில் எழுதிவைத்து பக்கத்தில் ஒரு உண்டியல் வைத்தால் கூட அந்த லட்சங்கள் சேர்ந்துவிடும். இன்று காந்திநினைவிடத்தில் செய்யப்பட்டுள்ள தனியார் கம்பெனி விளம்பரம் காந்தியை மறக்கடிக்கச் செய்யும் நோக்கத்திலேயே செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளெல்லாம் காந்தியை மறந்து போய்விட்டன. போகட்டும். இந்த காங்கிரஸ்காரர்களுக்கு புத்தி எங்கே போனது? கதர்க்குல்லா, கதர்சட்டை என்று ஆரம்பித்து இப்போது கதர் அங்கவஸ்திரத்தையும் காங்கிரஸ்காரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே கிளம்பும்போது மூவர்ண அங்கவஸ்திரத்தை மறக்காமல் போட்டுக்கொள்ளும் இவர்கள் காந்தியை மறந்துபோனதுதான் சோகம். “அன்னை” காந்தியை போற்றிப்புகழும் காங்கிரஸ் பேரியக்கம் “தந்தை” காந்தியை மறந்தது எப்போது? இந்த லட்சணத்தில் சட்டமன்றம் வேறு கூடியிருக்கிறது. காங்கிரஸ்கட்சியில் இருக்கும் ஏதாவதொரு புழு, பூச்சியாவது காந்திமண்டப அவலத்தைப்பற்றி ஒரு முனகல் கேள்வியாவது எழுப்பியிருக்க வேண்டாமா?

மைக்கைப் பிடிக்கும் நம்மூர் அரசியல்வாதிகள் தான் காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கார், காமராசர், அண்ணா வழியில் நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் இருப்பதாக சொல்லி நம்முடைய காதில் பூ சுற்றுவது வழக்கம். ஒரு பலசரக்கு கடைக்காரர் தூக்கத்தில் உப்பு, புளி, மிளகாய், கடுகு, சீரகம், வெந்தயம் என்று உளறுவதைப் போன்ற பேச்சு அது. இறந்துபோன அவர்களெல்லாம் எழுந்துவந்து கேட்கப் போவதில்லை என்கிற தைரியத்தில் பேசும் பேச்சு அது. அந்த துணிச்சல்தான் இப்போது வலிமைபெற்று நினைவிடங்களை கேலிக்கூத்தாக்கும் முயற்சியை கையிலெடுத்திருக்கிறது. எளிமையாக வாழ்ந்த தலைவர்கள் மட்டுமே மக்களின் மனதில் நிலைபெறுகிறார்கள்; காலப்போக்கில் நினைவிடங்களாக உருப்பெறுகிறார்கள்.

இதே நிலை அண்ணா சமாதிக்கு நேர்ந்து அப்போது திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கட்சியாக இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்! இந்த கற்பனை குதிரை ஓடிக்கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் ஏன் தமிழ்நாட்டில் வளர்ச்சியடையவில்லை என்பதற்கான விடையும் கிடைத்துவிடும்.

கோயில் கர்ப்பக்கிரகத்திற்கு டியூப் லைட்டை உபயமாக கொடுத்த வியாபாரி ஒருவர் கூடவே தன்னுடைய பெயரான க.உ.பெ.ரா.மா.மானாபெனா(எ)பெரியாத்தூர் சுப்பிரமணியம் பிள்ளை என்ற பெயரையும் டியூப் லைட்டில் எழுதிவைத்தார். அந்த சாமி இப்போதும் இருட்டில்தான் நின்றுகொண்டு இருக்கிறது..... காந்திமண்டபத்தில் காந்தியைப்போல..... 

- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It