எங்க ஒத்த குடிசைக்கு

பத்தடி தூரத்துலதான் அந்த

மாட்டுக்கொட்டாய்;

சிறுசிறு சிதிலங்களோடு

ஓங்கி உயர்ந்திருந்தது அந்த

ஓட்டுக்கொட்டகை;

அணில்களும் சிட்டுக்குருவிகளும்

கொஞ்சி விளையாடும்

மரக்கழிகளில் துள்ளிகுதித்து!

கருங்கல்லு செங்கல்லு வச்சி

சிமெண்ட் பூசியிருக்கும்;

நல்ல ஒசரத்துக்கு ஓடு போட்டு

கட்டியிருப்பாங்க;

எந்த காலத்துல கட்னதுனு தெரியாது

பகல்லயே உள்ள போகமுடியாது

அவ்ளோ இருட்டா இருக்கும்!

விடிகாலைல வாசலுக்கு

சாணி தெளிக்கனும்னா

மாடு இல்லாதவங்க

யாருக்கும் தெரியாம

இருட்டோட இருட்ல 

சாணிய கரைச்சி வாசல்

தெளிச்சிருவாங்க;

மாட்டுக் கொட்டாய்க்கு முன்னாடி

மட்டும்தான் கதவு;

பின்னாடி பக்கம் கிடையாது

சந்து வழியா வந்து

எடுத்துட்டுப் போயிடுவாங்க!

பொழுது விடிஞ்சி  தெருவுல

நின்னு திட்டுற சத்தத்துலதான்

இந்த சேதியே தெரியவரும்;

ஆளாளுக்கு பேசிப்பாங்க

"அம்மாடி நான் நேத்து சாயங்காலமே

களத்துமேட்ல போய் எடுத்துட்டு வந்துட்டேன்"

அவ திட்றவ திட்டிட்டு போகட்டும்னு

ஆளுக்கொருத்தராய் மாறிமாறி

பேசிப்பாங்க!

ஒரு எட்டு எட்ரைக்கெல்லாம்

மாட்டுக்காரபய வேலுதான்

எல்லாம் மாட்டயும் பூட்டத்தெறிச்சி

மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போவான்;

மாட்டுக்கார வேலன் படம்

பார்க்குறப்போல்லாம் வேலுதான்

ஞாபகத்துக்கு வருவான்;

நாங்கலாம் சின்னப் பசங்களா

இருந்தாக்கூட வேலுவ பேர் சொல்லிதான்

கூப்டுவோம்!

சின்னப்பையன்

சின்னக்குட்டி

வேலய்யன்

பூங்கண்ணன்

ராமு லட்சுமணன்

கூட என்னையும்

சேர்த்து பள்ளிக்கூடம்

போகாத திருட்டுக்கோடுனு

சொல்வாங்க தெருவுல;

அப்போதெல்லாம் நாங்க

பதுங்குற எடம்னா அந்த

மாட்டுக்கொட்டாய்தான்!

ஊர் வெறிச்சோடி கெடக்குற

நேரத்துலதான் நாங்க

வெளியே வருவோம்;

ஆடுமாடு மேய்க்கவும்

வயக்காட்டு வேலைக்கும்

போனது போக மிச்ச சொச்சமாய்

ஒண்ணு ரெண்டு தலை

தென்படுதுனா அந்த புளியமர

நிழலாண்ட வெத்தலை பாக்கு

மென்னு தின்னும்

எங்க பாட்டன் பாட்டிகள்தான்!

கூட்டாஞ்சோறு செய்யலாம்னு

சின்னப்பையனும்

மீன்பிடிக்க போலாம்னு வேலய்யனும்

சொன்னபோது

காண்டீபன் புளியமரத்துல

கொக்குமுட்டை எடுக்கலாம்னு

சின்னக்குட்டிதான் சொன்னான்;

நாங்கூட அவனோட சேர்ந்து ஆமாண்ணே!

மரமேறும் விசயத்துல

வேலய்யனையும் சின்னப்பையனையும்

அடிச்சிக்கிவே முடியாது;

கண்ணமூடி கண்ண தொறக்குறதுக்குள்ள

உச்சிக்கிளையிலேயே போய்

மறைஞ்சிப்பானுங்க;

மலையூர் மம்பட்டியானையும்

கரிமேடு கருவாயனையும் வீடியோவுல

பார்க்கும்போது இவனுங்க

ரெண்டுபேரும்தான் ஞாபகத்துக்கு

வருவானுங்க!

நடேசமூட்டு கெணத்து பக்கமா

இருக்குற கிளையிலதான்

கொக்கு கூடு இருந்துச்சு;

"இரை தேடப்போன கொக்கு

சாயங்காலந்தான் வரும்;

அதுக்குள்ள எடுத்துட்டு வாங்கடானு"

கீழ நின்னுட்டு நாங்கலாம்

கத்துவோம்!

வேலய்யனும் சின்னப்பையனும்

ஒருவழியா முட்டைங்கள

எடுத்துட்டு தாமரைக்குளத்துகிட்ட

வந்துட்டானுங்க;

சின்னக்குட்டிதான் ஓடிப்போய்

வத்திப்பெட்டி எடுத்தாந்தான்;

செவிடன்வீட்டு முள்ளேலி

தோட்டத்துலதான் எல்லாரும்

சுட்டுத் தின்னோம்!

நாலரை மணிக்கு ரெண்டாம்பெல்லு

அடிக்குற சத்தம் கேட்டதும்

ஆளாளுக்கு ஓடுவோம்

ஜானமூட்டு மாட்டு கொட்டாயை நோக்கி;

ஆளாளுக்கு அவங்கவங்க

பள்ளிக்கோடபையத் தூக்கிட்டு

பசங்களோட சேர்ந்து

வீட்டுக்குப் போயிருவோம்

நல்லப் பசங்களாட்டம்!

எப்பவும்போல ஒருநாளு

நானும் சின்னப்பையனும்

பள்ளிக்கூடம் மட்டம்போட்டுட்டு

மாட்டுக்கொட்டாயில மறைஞ்சி

இருக்கும்போதுதான்

தெருவுல சனங்க கத்துற  சத்தம்

கேட்டது; ஏரியில தாக்குப்பள்ளம்

எடுக்கப்போன முனியனை

காத்துக்கருப்பு அடிச்சிட்டதா

சடலமா தூக்கியாந்து

மாட்டுக்கொட்டாயாண்ட போட்டாங்க!

அதுக்கப்புறம் நாங்க யாரும்

பகல்லகூட அந்த கொட்டாப்பக்கமே

போறதேயில்ல;

வாரத்துல மூணு நாளாவது

பள்ளிக்கூடம் போயிருவோம்;

மட்டம் போடுற அந்த நாள்ல

தாமரைக் குளத்துக்காவோ

இல்லனா புளியாந்தோப்புக்குள்ளேயோ

ஒளிஞ்சிப்போம்; மறந்தும்கூட

மாட்டுக்கொட்டா பக்கம் போறது

இல்ல! முனியன் ஆவி அங்கேயே

சுத்துமாம்!

பன்னீராங்க அம்மாதான்

சொல்வாங்க!

முந்தாநாள் ஊருக்கு போனப்பக்கூட

ஒரு எட்டு எட்டி பார்த்துட்டு வரலாம்

மாட்டுக்கொட்டாயனு பன்னீரக் கூப்டேன்;

அவன்தான் சொன்னான்

அந்த இடத்துல இப்போ

மாட்டுக்கொட்டாய இடிச்சிட்டு

பள்ளிக்கூடம் கட்டிட்டாங்கனு!

அவன் பையன்கூட அங்கதான்

படிக்கிறானாம்!

காலம் சுழல்கிறது

வாழ்க்கைச் சக்கரங்களாய்!   

- நா.காமராசன், மண்டகொளத்தூர்

Pin It