மூணாம் வகுப்பு

முதல் பாடவேளை!

பூங்கண்ண வாத்தியார்தான்

வருகைப்பதிவேட்டை

படித்தார்!

அனா ஆவன்னா வரிசையில்

உள்ளேன் அய்யா குரல்

ஒலித்தது!

ராமு வேலய்யன் குமாரு

ஏன்டா இன்னைக்கு பள்ளிக்கு

வரல

பூங்கண்ண வாத்தியாரின்

குரலில் அதட்டல் தெரிந்தது!

நீங்க மூணுபேரும் போயி

அவங்க எங்க இருந்தாலும்

புடிச்சிட்டு வாங்க!

நான் பழனி வேடியப்பன்தான்

அந்த மூணுபேரு

வீட்டுக்குலாம் போயி தேடிப்பார்த்தோம்

மூணுபேருமே இல்ல

முள்ளேலித்தோட்டம்

கலுகுட்டு கால்வாய்லாம்

தேடிப்பார்த்தோம்

ஈ காக்காக்கூட இல்ல!

அப்போதான் பழனி சொன்னான்

கணக்கமுட்டு புளியமரத்தாண்டாதான்

கோலி வெளையாடிட்டு இருப்பாங்கனு!

எங்கள தூரத்துல பார்த்ததுமே

மூணுபேரும் மரத்துமேல

ஏறி ஒளிஞ்சிட்டானுங்க!

பள்ளிக்கூட பையெல்லாம்கூட

மறைச்சி வச்சிட்டானுங்க!

வேடியப்பன் தூரத்துலயே

இதெல்லாம் பார்த்துட்டான்!

நாங்களும் ஒண்ணுந்தெரியாத

மாதிரியே மரத்துகிட்ட நின்னோம்

மூணுபேரும் உச்சிக்கிளையிலே

உட்கார்ந்திருக்காங்க!

பழனிதான் என்னமேல ஏறச் சொன்னான்

மெதுவா நானும் மேல ஏறுனேன்!

ராமு என்னப்பார்த்துட்டு

திட்றான்

நாங்க பள்ளிக்கூடம் வரமாட்டோம்

போடான்னாங்க

நா விடவேயில்லை

உங்கள புடிச்சிட்டுபோகலனா

வாத்தியார் எங்க தோல

உறிச்சிடுவாருன்னேன்!

ஆளுக்கொரு கிளைக்கு தாவுனாங்க

மூணுபேரும்

குமாருதான் மொதல்ல

கீழகுதிச்சான்

பழனியும் வேடியப்பனும்

அவன புடிச்சிட்டாங்க

ராமு சேத்துல குதிச்சி

ஓடிட்டான்

வேலய்யன் நெல்தண்ணி

கொளத்துக்கா ஓடிட்டான்

பையெல்லாம் மரத்துமேலேயே

தொங்குது

ரெண்டாவது பாடவேளை முடிஞ்சி

மூணாவது தொடங்கியிருக்கும்

குமாரு பையன மட்டும்

மூணுபேரும் புடிச்சிட்டு போனோம்!

இப்போ குமாரு அதே பள்ளிக்கூடத்துல

வாத்தியாரு

நேத்துகூட என்ன கூப்புட்டு

சொன்னான்

உன் பையன ஒழுங்கா

பள்ளிக்கூடம் வரச்சொல்லு

பசங்கக்கூட சேர்ந்துட்டு

கணக்கன் தோட்டத்துல

கிரிக்கெட் விளையாடிட்டு

இருக்கானு!

இதோ நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்க்கையையும்

பள்ளிக்கு போகாத என்

மகனையும்!

- கவிஞர். நா.காமராசன், மண்டகொளத்தூர்

Pin It