ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் ‘லாக்கப்’ பில் இருந்தோம்! நாங்கள் 8 பேர்! சூதாட்டக் கைதி ஒருவர்! ஆக 9 பேர்!
போலீஸ் சேவகர் இரும்புக் கதவைப் பூட்டியதும் உள்ளே கடப்பைக்கல் தரைமீது ஜில்லென்று - அதாவது ஜம்மென்று - அமர்ந்தோம்!
ஹால் வெளிச்சம் இரும்புக் கம்பிக் கதவு வழியாக ஊடுருவி வந்தது. என் காதருகே சிறு மொச்சைக் கொட்டையளவில் ஒரு கொசு வந்தது! அதைத் தொடர்ந்து அதன் நண்பர்கள் (பிராமண போஜனத்துக்கு முண்டிக் கொண்டு வருவதுபோல்) கூட்டங் கூட்டமாக வந்தனர்.
“இதென்ன? போலீஸ் என்ற பயமேயில்லாமல் இவ்வளவு பெருவாரியாகப் படையெடுக்கிறீர்களே?,” என்று ஸ்ரீமான்கள் கொசுக்களைக் கேட்டேன்.
“உங்களை விடமாட்டோம்! நாங்கள் யார் தெரியுமா? பிராமணர்கள்! இங்கே இந்த உருவத்தோடு வந்திருக்கிறோம்! உங்கள் ரத்தத்தை ருசி பார்க்கவே வந்திருக்கிறோம்!” - என்றார்கள், ஸ்ரீமான்கள் கொசுக்கள்!
ஒரு கொசுவாரைப் பிடித்து (அவரை எப்படிப் பிடிப்பது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே) அவர் உடலைக் கவனித்தேன்! உண்மையாகவே பூணூல் (வெள்ளைக் கோடு) இருந்தது!
“உள்ளே வந்துகூட எங்களை இப்படித் தொல்லைப்படுத்தலாமா?,” என்று என் கையிலிருந்தவரின் துக்க விசாரணைக்காக வந்தச் சுற்றத்தாரைக் கேட்டேன்.
“நீங்கள் செத்தாலே உங்கள் பெயரைக் கூறி, உம் சந்ததிகள் இரத்தத்தைக் குடிக்கக் கூடியவர்களாச்சே! இந்த போலீஸ் லாக்கப்புக்காகவா! பயந்துவிடுவோம்? பூ!” என்றார்கள், என் தோழர்களின் இரத்தத்தை இதற்குள்ளாகவே இஷ்டம்போல் உறிஞ்சி உப்பிய உயர் திரு. கொசுவார்கள்!
இந்தச் சமயத்தில் என் பாதத்தில் “கருக்” கென்று குத்தியது போலிருந்தது. வெளிச்சத்தில் கவனித்தேன்!
அடடா என்ன அருமையான காட்சி, போங்கள்! என்னைச் சூற்றிலும் நூற்றுக் கணக்கில் ஸ்ரீஜத் மூட்டைப் பூச்சிகள்!
“எங்களையா விரட்டப் பார்க்கிறீர்கள்? எங்கள் கடைக்குமுன் ஏன் மறியல் செய்தீர்கள்? இதோ, மூட்டைப் பூச்சி உருவத்தில் உள்ளே நுழைந்து விட்டோம்! பார் குத்தூசியே! உன்னைச் சுற்றியிலுமுள்ள சுவர் முழுவதும் பார் உன்னால் ஒழிக்க முடியுமா?”, - என்று அதட்டிக் கேட்டார், என்காலைக் கடித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜத் ஆரிய பவான் ப்ரொப்ரைட்டர்!
சுவரைப் பார்த்தேன். சுவர் ஓரத்தைப் பார்த்தேன்! அய்யயோ! ஓரே ‘சவுக்கார் பேட்டை’தான்! மூன்று அடுக்கு, நான்கடுக்கு மாளிகைகள்!
இதற்குள் மணி 10 ஆகிவிட்டது. என் தோழர்கள் அனைவரும், (சூதாடிக் குற்றவாளித் தோழர் உட்பட) கண் அயர்ந்துவிட்டனர்! முண்டாசு கட்டிய ஸ்ரீஜத் மூட்டைப் பூச்சிகளும் தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டனர்! ஏழைத் தொழிலாளியின் சொத்துக்கள் மார்வாடியின் வட்டிக் கடைக்குள் நுழைவதுபோல, என் தோழர்களின் இரத்தம் ஸ்ரீஜத் மூட்டைப் பூச்சிகளின் உடலுக்குள் வெகு நாசூக்காக நுழைந்து கொண்டிருந்தது.
படை படையாக! அடாடா எப்படி வர்ணிப்பது, போங்கள்! நேரில் அனுபவித்தால்தான் தெரியும்! ஆச்சாரியாரின் பொதுக் கூட்டத்துக்கு அக்கிரகாரத்தார் போவது போல என் தோழர்கள் உடல்களை நோக்கிப் பட்டாளம் பட்டாளமாக, குடும்பம் குடும்பமாக, பிள்ளை குட்டிகளுடன் புறப்பட்டார்கள், ஸ்ரீஜத்கள்!
இரவு மணி 11 ! மணி 12 ! 1 ! 2 ! ஒரே படையெடுப்பு! இருவரும் சேர்ந்து எங்கள்மீது ஒருமுகத் தாக்குதல்! இரத்த வேட்டை! என் கண்கள் சுழன்றன! தலைவலி தொடங்கியது! இதற்குள் இரண்டு இனத்தாரும் சேர்ந்த அரை அவுன்ஸ் இரத்தமாவது எடுத்திருப்பார்கள்! (இரத்த நன்கொடை - ஏற்பாடாக இருக்கலாமோ?) உறக்க மயக்கத்தால் முடங்கிப்படுத்து அயர்ந்து விட்டேன், அழுக்கு நிறைந்த கடப்பைக் கல் தரையில்.
காலை 5 மணிக்குத்தான் எழுந்தேன்! நண்பர்களும் எழுந்தனர்! பொழுது விடிந்ததும் இரத்தப் பிரியர்களும் மறைந்தனர்! பகல் ட்யூட்டிக்குத் தான் ‘உண்மை உருவத்திலேயே’ வரலாமே! அதற்காகத்தான்!
அக்கிரகாரமும் சவுக்கார் பேட்டையும் போலீஸ் இலாகாவில் எவ்வளவு தனிச் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டுமானால், உண்மையாகவும் உவமையாகவும் சொல்கிறேன் - பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் ஒரே ஒரு இரவு இருந்து பார்த்தால் போதும்!
நான் நன்றாகப் பார்த்து விட்டேன்! மற்றவர்களும் விரைவில் பார்த்து விடுங்கள்! நல்ல சான்ஸ்! இச்சமயம் தவறினால் இனிக் கிடைக்காது!
- குத்தூசி குருசாமி (12-12-50)
நன்றி: வாலாசா வல்லவன்