அப்பாடா! இந்த வெள்ளைக்காரன் வந்து ஊரையே பாழ் பண்ணி விட்டான்! “கண்ட இடத்தில் எச்சிலைத் துப்பாதே! உடலை மூடாமல் திரியாதே! எதையும் ஆலோசித்துப் பார்! குறித்த நேரத்தில் எதையும் செய்!”­

இந்த மாதிரி, ஒன்றா? இரண்டா? தும்மினால் தப்பு! (அதற்குக் கூட ‘சாரி’ - வருந்துகிறேள் - என்று கூற வேண்டும், தெரியுமா?)

kuthoosi gurusamy 268மனுஷாளுக்கு ஏதோ பல வேலை இருக்கும்! இஷ்டம்போல் வரலாம், போகலாம் என்று இருக்கக் கூடாதோ? சகுனம், சூலம், நல்ல நாள் இவை போன்ற பல விஷயங்களைப் பார்த்துக் கொண்டுதானே எதையும் செய்ய வேண்டும்? “நம் முன்னோர்கள், தெரியாமலா இதெல்லாம் ஏற்படுத்தினார்கள்?” என்று ஹைகோர்ட் ஜட்ஜ் முதல் வெள்ளை முக்காடிட்ட பிரம்ம குலத்துப் பெண் தெய்வம் வரையில் கேட்கிறார்களே! யார் வாய் திறக்க முடியும்?

சட்டசபையிலே நேற்று யாரோ ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினர் சபைத் தலைவருக்குப் பின்னால் நின்று ‘ஸ்மோக்’ பண்ணினாராம்! (அதாவது புகை உண்டாக்கினாராம்!) புகை உண்டாக்குவது வேதியர் தொழில் அல்லவா? என்று கேட்காதீர்கள் (ஷஃபி முகம்மது சமஸ்கிருதத்தைப் பற்றிப் புகழ்ந்ததை நினைவூட்டிக் கொள்க!) இவர் சிகரெட் குடித்தாராம்!

இல்லை, யில்லை! அதென்ன ஓவல்டினா குடிப்பதற்கு?

சிகரெட்டைப் பிடித்தாராம்! அதாவது புகையை உற்பத்தி செய்தாராம்; ஓம குண்டத்தில் பூணூல் கூட்டத்தார் செய்வது போல! இதில் கூடத் தவறென்ன? தலைவரிடம் முறையிட்டார்களாம், சட்டசபை மெம்பர்கள். உடனே வெளியேறி விட்டாராம்!

அப்படி! இது ஒரு பெரிய குற்றமா? சிகரெட் புகை இல்லாத இடம் இந்த உலகத்திலேயே இல்லையே! பஸ்களில் “குடிக்கக் கூடாது” என்று போட்டிருப்பதையே எவரும் லட்சியம் செய்வதில்லையே! ‘எங்கும் நிறைந்திருக்கிற பொருள் ஒன்று உண்டென்றால் அது கடவுளல்ல, சிகரெட்- பீடி - சுருட்டுப் புகைதான்!’ என்றல்லவா “புகை பிடிப்போர் ஐக்கிய சங்கத்தார்” கூறுகின்றனர்? தூங்கும்போதும் குளிக்கும்போதும் கூட சிகரெட் குடிப்பது எப்படி? - என்பதைப் பற்றி யாராவது கண்டு பிடித்துச் சொன்னால் அவர் ஒரே நாளில் லட்சாதிபதியாகி விடலாமே?

லீக் தோழர் ஏன் அப்படிச் செய்தார் தெரியுமா? சட்ட சபையில் எத்தனை பேர் தூங்குகிறார்கள்? எத்தனை பேர் குறட்டை விடுகிறார்கள்? எத்தனை பேர் குறட்டை விடாமல் தூங்குகிறார்கள்? எத்தனை பேர் அக்கம் பக்கத்தைப் பார்க்காமல் விஷயத்தையே கவனிக்கிறார்கள்? எத்தனை பேர் தன்னைக் காரணமாக வைத்தாவது வாயைத் திறக்கத் துணிகிறார்கள்? இதையெல்லாம் பரீட்சை பார்க்கத்தான் புகை பிடித்திருப்பார்.

போகட்டும்! இனிமேலாவது (1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகாவது) இந்த மேல்நாட்டுக் கட்டுத் திட்டங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சட்ட சபையிலேயே புகை பிடிக்கலாம், பொடி போடலாம், தூங்கலாம், ஓமப்பொடி - நிலக்கடலை தின்னலாம் என்கிற மாறுதல் ஏற்பட வேண்டாமா?

அடுத்தபடி இன்னொரு தொல்லை பாருங்கள்! மந்திரி பக்தவத்சலம் சட்டசபைக்கு நேரங்கழித்து வந்தாராம்! அதற்காக சபைத் தலைவர் தம்மிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சொன்னாராம். அப்படியே கேட்டுக் கொண்டாராம்!

இதென்ன அக்கிரமம்! பாருங்கோ! ஒரு மந்திரியை, அதுவும் கனம் மந்திரியை, பள்ளிக்கூடத்துப் பையனை ஹெட்மாஸ்டர் நடத்துகிற மாதிரியா நடத்துவது? “நேரங்கழித்து வரக்கூடாது” என்பதே வெள்ளையன் நாகரீகம்! அவன்தான் ஆகஸ்ட் 15 உடன் ஒழிந்தானே? இனி அவரவர் இஷ்டம்போல் வந்தாலென்ன? அவர் தம் அறையை விட்டுப் புறப்பட்டபோது வாசற்படி தடுக்கியிருக்கலாம். பிறகு உள்ளே போய் சற்று நேரம் உட்கார்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, பிறகு வந்திருக்கலாம். ‘சகுனத் தடை’ கூடவா கிடையாது, நம்ம சுயராஜ்யத்தில்? அட, நாஸ்திகப் பிண்டங்களா!

சில மாதங்களுக்கு முந்தி ராமநாதபுரத்துக்கு ஒரு மந்திரி வந்திருந்தார். அவருக்கு நடுப்பகல் விருந்து ஒன்று 12. 30 மணிக்கு ஏற்பாடாகியிருந்தது. பலமான விருந்து என்பதை முன் கூட்டியே அறிந்திருந்த பிரமுகர் சிலர் காலையில் வெறும் காஃபி மட்டும் குடித்து வந்திருந்தனர், ஒரு கை (வாய்) பார்க்கலாம் என்ற எண்ணத்துடன்!

12.30 ஆயிற்று! மந்திரியார் வரவில்லை! பல வேலைத் தொல்லைகள் 1 மணி ஆயிற்று! 1.30 ஆயிற்று! ஆள் அனுப்பப்பட்டது! 2 மணி ஆயிற்று! பாதிப் பிரமுகர்கள் அரை மயக்கத்தில் கிடந்தனர். 2. 30 ஆயிற்று! 3-ம் ஆயிற்று! வரவில்லை!

அம்மாடி! உயிர் வந்தது! 3.15 -க்கு வந்தார், கனம் மந்திரி! “ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி!” - தயவு செய்து மன்னியுங்கள் என்று தன் பவள வாய் திறந்து முத்தான சொற்களை உதிர்த்தார்! எல்லோரும் சிரித் (இளித்)தனர்! விருந்தும் நடந்தது!

வெளியேறிய வெள்ளைக்காரனா யிருந்தால் சரியாக 12. 25க்கு அங்கே குதித்திருப்பான்! சுத்த கர்நாடகப் பேர்வழிகள், இந்த வெள்ளையர்கள்!

கடிகாரத்தின் அடிமைகள்! நாம்தான் சுதந்தர புருஷர்கள்! எதிலும் சுதந்திரம்! முழுச் சுதந்தரம்!

கெடிகாரத்தைப் பற்றிக்கூட ரொம்பப் பேருக்குத் தப்பான அபிப்பிராயம் இருந்து வருகிறது. அதாவது மணி பார்த்து அதன்படி நடப்பதற்குத்தான் கெடிகாரம் என்று கருதியிருப்பதே ஒரு மேல்நாட்டு அடிமைப் பழக்கம்! கடிகாரம் ஒரு அணி! அழகுக்காக ஏற்பட்டது! இதனால்தான் 100 -க்கு 90 பேர் கைக் கெடியாரம் பழுதாகவே இருக்கும். யார் மணி கேட்டாலும் “ஓஹோ! இப்பத்தான் ஸ்டாப் ஆகியிருக்கிறது!” என்று முள்ளைத் திருப்புவார்கள்! உள்ளேயிருக்கும் ஸ்பிரிங் அறுந்து மூன்று வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது, என்பது யாருக்குத் தெரியும்? என் கண்ணில் பட்ட பெண்களில் 100-க்கு 99 பேர் கைக்கடியாரம் வளையலோடு ஒரு வளையலாக இருப்பதைத்தான் பார்த்திருக்கிறேன்! மணிக்காக அல்ல! அழகுக்காக!

அவர்களைச் சொல்வானேன், பாவம்!

சென்னை நகரில் முக்கிய முச்சந்திகளில் பல கெடிகாரங்கள் நிறுத்தப் பட்டிருக்கின்றன! என்ன அருமை தெரியுமா? அத்தனையும் நிரந்தரமான வேலை நிறுத்தம்! எதைப் பார்த்தும் மணி தெரிந்து கொள்ளவே முடியாது. இராத்திரியா, பகலா என்பதை மட்டுந்தான் இந்தக் கெடிகாரம் காட்டும்! மணி பார்க்கும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் கார்ப்பரேஷனுக்கு ஜே!

இவைகளுக்குப் பதிலாக இரண்டு கைகாட்டிகளைப் பொருத்தி, ஒன்று மேலே காட்டுமாறு வைத்து, “இதுதான் வானம்” என்று எழுதலாம்; மற்றொன்றைக் கீழே காட்டுமாறு வைத்து, “இதுதான் பூமி” என்று எழுதி வைக்கலாம்!

- குத்தூசி குருசாமி (19-02-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It