சிறுவயது முதலே வாசிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு படைப்பு என்பது என்னுடைய முப்பதாவது வயதில் தான் கைகூடி வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களிலும் ஆசிரியராகப் பணியேற்றிப் பின் மாதம்தோறும் நடக்கும் ஆசிரியர் சங்க கூட்டங்களிலும் கவிதை என்ற பெயரில் எதுகை மோனையோடு எதையாவது எழுதிக்கொண்டு போய் வாசிப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். தோழிகளுக்குக் கடிதம் எழுதும்போது வழக்கமான நடைமுறைகளை ஒதுக்கிவிட்டு படித்து ரசிக்கும்படியாக எழுதுவேன். கடிதத்தால் தோழிகளையும் அவர் களுடைய குடும்பத்தாரையும் வியப்பிலாழ்த்த வேண்டும் என்று ஒவ்வொரு கடிதத் திற்கும் நிறைய மெனக்கிடுவேன். இதற்காகவே என்னுடன் கடிதத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட தோழியரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டிருந்தது.

திருமணத்திற்குப் பிறகு என் கணவர் நடத்தும் ‘களம்’ இலக்கியக் கூட்டங்களுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்கள் வருவார்கள். அவர்களை, அவர்களின் பேச்சை வேடிக்கை பார்ப்பது, சமயங்களில் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது இதுவே எனது வேலையாக இருந்தது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, மூன்று குழந்தைகளுக்குப் பிறகு எனது எழுத்துப்பயணம் தொடங்கியது. களம் வெளியீடாக வந்த ‘களம் புதிது’ இலக்கிய இதழுக்கு நிதி உதவி செய்தேன். இதற்கு கைமாறு செய்ய நினைத்த என் கணவர் “இதழில் உன் பெயரையும் கொண்டு வருகிறேன் ஒரு கவிதை எழுதிக்கொடு” என்று கேட்டார். முக்கியமான தமிழ்க் கவிஞர்களின் புத்தகங்களையெல்லாம் வாசித்தபிறகு நானும் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே கூச்சப்பட்டேன். (தோழிகளை ஏமாற்றியதுபோல இங்கு ஏமாற்ற முடியாதல்லவா?) ஆனால் ஏதாவது எழுதவேண்டும் என்ற உந்துதல் மட்டும் எனக்குள் தீவிரமடைந்தது. கவிதை எழுத முடியாவிட்டால் என்ன! கதை எழுதிப் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

எதைப்பற்றி எழுதுவது? எந்த செய்தியில், வாக்கியத்தில் தொடங்கு வது. எப்படி கொண்டு செல்வது? எந்தப் புள்ளியில் முடிப்பது? என்பது குறித்த எந்தவிதமான திட்டமிடலும் எனக்குக் கைவரவில்லை.

என் ஆளுமையின் ஆதாரப்புள்ளி எங்கள் அப்பா. அப்பாதான் நினைவுக்கு வந்தார். அப்பாவோடு சென்று அவரது உழைப்பையும் சிரமத் தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பல நாட்கள் ஆசைப் பட்டும் ஒருமுறைகூட எனக்குக் கிட்டாதுபோய்விட்டது. எனக்கு மிகவும் விருப்ப மான, எங்கள் அப்பாவின் ஒருநாள் கடல் பாட்டை எழுதத் தொடங்கினேன். வெகு இயல்பாய் அமைந்தது அந்தத் தருணம்.

பொருளை மட்டுமே விளங்கவைக்கக்கூடிய ஆடம்பரமற்ற எளிய சொற்கள். எந்தவித ஜோடிப்புகளுமில்லாத தொடர்களாய் அமைந்தன. அதற்குமேல் வரிகளுக்கு அணிசெய்ய அழகுபடுத்தத் தெரியவில்லை. நெய்தலின் குறுமணல் பரப்பில் பிஞ்சுப்பாதம் பதிக்கும் சிறு குழந்தை யின் நடைதான் என்பது எனக்கே புரிந்தது. கதைக்கு இது போதுமா என்ற ஐயம்கூட ஏற்பட்டது. இருந்தபோதும் அதற்குமேல் அழகு படுத்துவது பற்றி நான் யோசிக்கவில்லை. என்னுடைய எழுத்துக்கு அது தேவை யுமில்லை என்பதை நாவலை முடித்து முழுதாகப் படித்த பிறகுப் புரிந்து கொண்டேன்.

சிறுகதை என்றால் ‘களம்புதிது’ டெம்மி சைஸ் புத்தகத்தில் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் போடுவார். A4 தாளில் பத்து பன்னிரெண்டு பக்கங்கள் எழுதலாம்; அதற்குள் கதையை முடிக்க வேண்டும்.

யாரும் தொழிலுக்குப் போகாத அடைமழை நாளில் ஓர் அப்பாவும் பிள்ளையும் சிறுசிறு தொழிற்கருவிகளுடன் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று திரும்பும் ஒரு காட்சியை எழுதிக்கொண்டு வந்திருந்தேன். இருபத்தி இரண்டு பக்கங்கள் எழுதிய பிறகு இந்தக் காட்சி முடிவுக்கு வந்திருந்தது. ஆனால் கதையின் முடிவு அதில் இல்லை.

தொடர்ந்தார் போல மற்றுமொரு பகுதியையும் எழுதிப் பார்த்து விட்டேன். அப்போதும் முடிவு கிடைக்கவில்லை. கதை வளர்ந்து கொண்டே போகும்போல இருந்தது. இதற்கான முடிவு எங்கோ இன்னும் வெகுதொலைவில் இருப்பதுபோலத் தோன்றியது. அனால் அதைநோக்கிச் செல்லக்கூடிய வழியை வரைபடமாகவோ கோட்டுப் படமாகவோ போட்டுக்கொள்ள முடியவில்லை. எழுதி எழுதியேத் தான் முடிவை நெருங்கிச்செல்ல முடியுமென்று தோன்றியது.

என் கணவரிடமும் எங்கள் பகுதியில் வசிக்கும் மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களிடமும் காண்பித்தேன். படித்துவிட்டு அவர்கள் கொடுத்த உற்சாகத்தில் அன்று இரவே உட்கார்ந்து அறுபது பக்கங்கள் எழுதினேன். வேகமாக எழுதுவதும் திருத்தி எழுதுவதுமாக நாவலின் மொத்த வேலையையும் வெறும் இருபத்து ஏழு நாட்களுக் குள் முடித்திருந்தேன்.

கதைக்களத்தையோ கதைக்கான தரவுகளையோ கதை மாந்தர்களின் குணாதிசயங்களையோ ஆராய்ந்து எழுதவேண்டிய அவசியமில்லாமல் போனதால் இது சாத்தியமானது. ‘மாணிக்கம்’ நாவல் முழுக்க முழுக்க எங்கள் அம்மா அப்பாவின் வாழ்க்கை. கதை அமைப்புக்காக அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். கற்பனையைக் கலந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

நாவலை எழுதி முடித்தபோது காவிரியில் தண்ணீர் வராததால் வறண்டுபோன விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறிப்போனதும் விவசாயத்தை நம்பியிருந்த மக்கள் தமது தொழிற்கருவிகளை மாற்றிக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதுமான அரசியல் வெகு இயல்பாக அதில் பொருந்தி வந்திருந்தது.

முதல் நாவலை எழுதி முடித்த உற்சாகத்தோடு அடுத்த நாவலான ‘அளம்’ எழுத ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு நாவலை எழுதத் தொடங்கும்போதும் ஒரேயொரு விஷயம் மட்டும்தான் எனக்கு மிக முக்கியமாகத் தேவைப்பட்டிருக்கிறது. யாரைப் பற்றி எழுதப் போகிறோம் என்பதுதான் அது. அளம் எழுத முற்பட்ட போதும் இப்படித்தான். அப்போது என் மனக்கண்ணில் தோன்றியது என் அம்மா வழி உறவில் இருந்த பெரியம்மா ஒருவரின் உருவம்தான்.

அவர் வாழ்ந்த ஊர் வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோவில் தாழ்வு. சிறுவயது விடுமுறை நாட்களில் நான் அடிக்கடி சென்று வரும், பழக்கப்பட்ட ஊர். இவ்வூர் மக்களின் வாழ்வாதாரம் உப்பளம்.

உப்பளம் பற்றிய தரவுகளுக்காக ஒருமுறை போய் பார்த்துவிட்டு வரவேண்டியதாயிருந்தது. மற்றபடி அளத்துக்கான அத்தனை விஷயங் களையும் சிறுவயது அனுபவக் கருவூலத்திலிருந்தே எடுத்துக்கொண் டேன். இந்த நாவலை எழுதி முடிக்க எனக்கு மூன்று மாதங்களானது.

இரண்டு நாவல்களையும் பதிப்புக்குக் கொடுத்துவிட்டு அது எப்போது வரும்? என்ன மாதிரியான பலனைத் தரும்? என்ற எதிர்பார்ப் பில் காத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ‘கீதாரி’யை எழுதுவதற்கான சந்தர்ப்பம் அமைந்தது.

தென்மாவட்டங்களிலிருந்து தங்கள் செம்மறியாடுகளோடு மேய்ச்சல் நிலம்தேடி நாடோடி வாழ்க்கை நடத்தும் கீதாரிகள், ஆண்டுதோறும் மழைக்காலத்திற்கு நாங்கள் வசிக்கும் விருத்தாசலத்தின் புறநகர் பகுதிக்கு வருவார்கள். ஆறுமாதகாலம் தங்கியிருப்பார்கள். எங்கள் வீட்டின் எதிரில் மூன்று குடும்பங்கள் தங்கும். அவர்களிடம் எனக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நல்ல பழக்கம் இருந்துவந்தது.

வெயில், மழை, பனி, புயல் என அத்தனை இயற்கைச் சீற்றங்களை யும் வெட்டவெளியில் எதிர்கொள்ளும் அவர்களின் எளிய வாழ்க்கை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. அவர்களுடன் கலந்து பேசி அவர்களின் உரையாடல் களின் வழியாகத் தேவையான தரவுகளைச் சேகரித்துக்கொண்டு எழுதத் தொடங்கிவிட்டேன். எழுதி முடிக்கும் வரை கிட்டத்தட்ட ஒரு கீதாரிப் பெண் போலவேதான் என்னை நான் உணர்ந்தேன். அத்தகைய ஓர் உணர்வு இருந்ததால்தான் இது புழங்காத பகுதி, புதிய வாழ்க்கைமுறை, பார்த்திராத நிகழ்ச்சிகள் என்ற தயக்கங்கள் இல்லாமல் எழுதமுடிந்தது. கீதாரியை எனது படைப்பு மனதுக்குக் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்.

‘குடி மனித குலத்திற்கு கிடைத்த போது’ என்று அ.மார்க்ஸ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். உழைக்கும் எளிய மக்களின் வாழ்க் கையை இந்தக் குடி எவ்வாறெல்லாம் புரட்டியெடுத்து நீர்மூலமாக்கி யிருக்கிறது என்பதை என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்கள் கிராமத்து உறவுக்கார அக்கா ஒருவரின் அல்லல் மிகுந்த வாழ்வை நான் கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவரைப் பற்றி எழுதும்படி என் கணவர்தான் யோசனை சொன்னார். பழக்கப்பட்ட வாழ்க்கைதான் என்பதால் தடையில்லாமல் எழுதிக் கொண்டு செல்லமுடிந்தது. அதுவரை கிராமத்திலிருந்து அனைத்து சித்ரவதைகளையும் அனுபவித்து வந்த அந்த அக்காவின் சூழ்நிலை அவரை திருப்பூருக்கு இடம்பெயரச் செய்திருந்தது. அப்போது அவருடன் நானும் திருப்பூருக்குச் சென்றேன். அவருக்கும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் புது இடம் குறித்த பயத்தையும் தயக்கங் களையும் போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களோடு இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பனியன் கம்பெனி வேலைக்கும் அவர்களோடு சென்ற அந்த மூன்று நாட்களில் நிறைய அனுபவங்களைப் பெற்றேன்.

‘கற்றாழை’யின் கதைப்போக்கு விவசாய கிராமத்திலிருந்து தொழில் நகரான திருப்பூரை நோக்கிச் சென்றதற்கான காரணம் இதுதான். இந்தியக் குடும்ப அமைப்பில் இருக்கின்ற பெண்ணின் மீதான அடக்குமுறை, அராஜகப் போக்கு, வன்முறை போன்றவற்றை உள்ளார்ந்த கோபத்தோடு தொடர்ந்து கவனித்துவரும் எனக்கு குடும்பத்தைத் தூக்கி எறிவது குறித்தெல்லாம் எழுதுவதற்கு சிறுசிறு தயக்கங்கள் இருக்கவே செய்தன. அந்தச் சமயத்தில்தான் கவிஞர் குட்டி ரேவதி தன்னுடைய ‘பனிக்குடம்’ இதழுக்காக என்னை நேர்காணல் செய்ய வந்திருந்தார்.

குடும்ப அமைப்புபற்றி கருத்து கேட்டபோது அது தேவைதான் என்பதுபோல பதில் சொன்னேன். “பெண்களும் பெண்பிள்ளைகளும் இந்தக் குடும்பங்களால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் வெளிவருகிறதே” என்றார். எனக்கு அந்தக் கணத்தில் நான் கவனிக்கத் தவறிய பல விஷயங்களின் மீது வெளிச்சம் பட்டது போல இருந்தது. அவர் போன பிறகு கற்றாழை கதைப்போக்கின் திசையும் மாறியது. பெண்களை ஒரு குழுவாய் வாழ வைக்கலாம். அவர்களால் அப்படி வாழமுடியும் என்று எழுதியதெல்லாம் எழுத்து வேகத்தில் தோன்றிய யோசனைகள்தான். கதைப்போக்கில் மிக யதார்த்தமாக அமைந்த அந்த முடிவை நோக்கிச் செல்லும்போது அடுத்த வரியில் என்ன எழுதப்போகிறோம் என்ற சிந்தனைகூட எனக்கு ஏற்பட்ட தில்லை. முடித்துவிட்டு படித்துப் பார்த்தபோது நானே வியந்தேன்.

சமூகத்தில் பெரிய பதவிகளில், அந்தஸ்தில் இருக்கும் எத்தனையோ பேர் ஒன்றுக்கு மேற்பட்ட துணைவிகள், குடும்பங்கள், அவர்களுக்கான வாரிசுகள் என்று வாழ்வதைப் பார்க்கிறோம். அவர்களின் பலதார வாழ்க்கை முறையை இயல்பான ஒன்றாக நினைத்து ஏற்றுக்கொள்கி றோம். ஆணுக்கான அதே நியதியை ஒரு பெண் பின்பற்ற நேரிட்டால் நாம் எவ்வளவு பதற்றமடைகிறோம்? இதன் காரணமாகத்தான் ‘சமுத்திரவல்லி’ என்னும் கற்பனைப் பாத்திரத்தை நான் படைக்க வேண்டியதாக இருந்தது. வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆறுகாட்டுத் துறை என்னும் மீனவ கிராமம். கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்ட கிராமம். நேர்மையும் தர்மநெறியும் தவறாத மக்கள் வாழும் ஊர். சமுத்திர வல்லியை அவ்வூரில் உலவவிட்டு நாவலை நகர்த்தினேன். நான் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.

அடுத்தாக விருத்தாசலம் பகுதியில் பீங்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் வாழ்வை மையப்படுத்தி ஒரு நாவலை எழுத முடிவு செய்தேன். செராமிக் பகுதி எனக்கு முன்பின் தெரியாத பகுதி. கோடை விடுமுறையில் அவ்வப்போது அப்பகுதிக்குச் சென்று தரவுகளைச் சேகரித்தேன். ஆறு அத்தியாயங்கள் வரை எழுதிவிட்டேன். இடையில் மீன்மார்க்கெட்டில் மீன் விற்றுக்கொண்டிருந்த தலித் பெண் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வியாபாராத்திற்கான சாதுர்யமான வாய்ப்பேச்சையும் மீன் நிறுத்துப் போடும் அவரது கை லாவகத்தையும் சற்று நேரம் நின்று ரசித்தேன். அந்தப் பெண்மணி என்னை வெகுவாக கவர்ந்துவிட்டார். ஒரு சில வார்த்தைகளிலேயே அவரது வாழ்வின் பின்புலத்தை அறிந்து கொண்டேன். எழுதிக் கொண்டிருந்த நாவலை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு அவரைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன். மிகவும் எளிய நிலையில் வாழ்கின்ற ஒரு தலித் பெண்ணிற்குக் கற்புவாழ்க்கை என்பது ஓர் அற்பமான விஷயமாகிவிடுகிறது. அவரது யதார்த்தமான வாழ்க்கைப் பாதையில் அச்சொல் அவரது காலுக்கடியில் மிதிபட்டு சிதைந்து காணாமல் போகிறது. கற்பின் குறியீடாக நம் தமிழ்ச் சமூகம் கொண்டாடும் ‘கண்ணகி’ என்னும் பெயரை அந்த பாத்திரதிற்குச் சூட்டினேன். நாவலின் பெயரும் அதுதான்.

கண்ணகியை எழுதி முடித்த கையோடு இடையிலே நிறுத்தியிருந்த நாவலைத் தொடரலாம் என நினைத்தால் அதற்கிடையே கீதாரியின் தொடர்ச்சியாக ‘பொன்னாச்சரம்’ என்ற நாவலை எழுதவேண்டியதாகி விட்டது. கீதாரியில் கீதாரிப் பெண்களைப் பற்றி சொல்லியிருந்தா லுமே கூட அவர்களைப் பற்றிய முழுமையான பதிவு அதில் இல்லாதது போன்றதொரு மனக்குறை எனக்குள் இருந்து கொண்டே யிருந்தது. முழுக்க முழுக்க கீதாரிப் பெண்களைப் பற்றிப் பேசும் நாவலாகப் பொன்னாச்சரத்தை எழுதியுள்ளேன். பாதியில் நிறுத்தி யிருந்த நாவலை மீண்டும் இப்போது தான் எழுதிவருகிறேன். இதில் மையப் பாத்திரமான மலர்க்கொடி ஆரம்ப நாட்களில் தினக்கூலிக்கு பீங்கான் பொம்மைகள் செய்யும் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறாள். பணி செய்யுமிடத்தில் தனக்கேற்ற துணையைத் தேடிக் கொள்கிறாள். தனது அபாரமான தொழில் திறமையாலும் கற்பனைத் திறத்தாலும் உழைப்பாலும் புதியதொரு தொழிற்கூடத்தைத் தனக் கென்று அமைத்து புது பொம்மை மாதிரிகளை உருவாக்கி பொரு ளீட்டுகிறாள். விரும்பி ஏற்றுக்கொண்ட கணவன் செய்யும் துரோகம், அவள் மீது காட்டும் அலட்சியப்போக்கு இவற்றுக்கு சோர்ந்து போகா மல் விடாப்பிடியாக உழைக்கிறாள். தனது லட்சியம் நிறைவேறி விட்டதாக நினைக்கும்போது தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்கிறாள். வீடு, தொழிற்கூடம், உறவுகள் அனைத்தையும் விட்டு விட்டு கிளம்பிவிடுகிறாள். மொழி தெரியாத தேசத்தில், மக்கள் நெருக்க மில்லாத ஒரு மலைச்சாரல் கிராமத்தில் முகம் தெரியாத வெகுசில மனிதர்களுக்கு மத்தியில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி தன் மீதமுள்ள நாட்களைக் கழிக்கிறாள். வாழ்வின் மிகப்பெரிய தத்துவங்களை யெல்லாம் தன் சொந்த அனுபவங்களின் மூலமே கற்றுக்கொண்ட மலர்க்கொடிக்கு தன் பிச்சைப் பாத்திரத்தில் விழும் எச்சில் பருக்கைகளில் கிடைக்கிறது வாழ்க்கைக்கான மிகப்பெரிய ஆறுதல்.

இப்படி விதையிலிருந்து இயற்கையாக வளர்ந்து விருட்சமாவது போல எனது நாவல்களும் வளர்வதால் ஒவ்வொரு நாவலை எழுதி முடிக்கும் போதும் நான் நிறைய அனுபவங்களைப் பெறுகிறேன். என்னுள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விடுகிறது. இதையெல்லாம் நான் எழுதாமல் போயிருந்தால் வாழ்க்கையில் பலவற்றையும் நான் கற்றுக்கொள்ளாமலே இருந்திருப்பேன். எத்தனையோ விஷயங்கள் எனக்கு பிடிபடாமலே போயிருக்குமென்று நினைக்கிறேன்.

Pin It