கீற்றில் தேட...

மாயனூர் கிராம சீரமைப்பு நிலையத்தின் தோழர் சே. நரசிம்மன் எம்.ஏ. அவர்கள் சமீபத்தில் இறந்துவிட்டார் என்று அறிய பெரிதும் துக்கிக்கிறோம். சமீபகாலமாக நமது "குடி அரசு", "புரட்சி" வார இதழ்களில் அவர் எழுதிவந்த பாலும், தேனும் கலந்த கட்டுரைகளை வாசித்துப் புதிய உத்வேகத்தையும், இன்பத்தையும் பெற்றிருந்த நமது வாசகர்களுக்குப் பெரிதும் துக்கமேற்படுமென்பதிலும் ஐயமில்லை.

தோழர் நரசிம்மன் அவர்கள் பிறவியினால் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளக்கூடியவரானாலும் அவர் பாழான பழைய வர்ணாஸ்ரம தர்மத்தையும், இன்றைய முதலாளி, தொழிலாளி என்பதான வேறுபாட்டையும் எவ்வளவு தூரம் மனப்பூர்வமாக வெறுத்து அதை ஒழிப்பதற்காகவே இந்தியர் ஊழியர் சங்கத்தின் சார்பாகவும் நமது பத்திரிகைகளின் மூலமாகவும் தொண்டாற்றியுள்ளார் என்பதை நாம் விரிக்க வேண்டுவதில்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு நமது கொள்கைகளை வலியுறுத்தி எழுதுவதில் மிகத் திறமை பெற்றிருந்த நமது அருமை நண்பரை நாம் இழந்தது ஒரு விதத்தில் பெரிய நஷ்டமேயாகும். அதிலும் வாலிப உலகத்திற்கு அவரது ஆண்மையும், தீவிர உணர்ச்சியும் பெரிதும் வேண்டற்பாலதான இந் நல்ல சந்தர்ப்பத்தில் நாம் அவரை இழக்க ஏற்பட்டது சமீபத்தில் ஈடு செய்ய முடியாத நஷ்டமுமாகும். என்றாலும் துயரத்தால் வருந்தும் நம் தோழர் சே. நரசிம்மன் அவர்கள் குடும்பத்தாருக்கும், மாயனூர் கிராம சீரமைப்பு நிலையத்தாருக்கும் நமது துக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகிறோம்.

(புரட்சி துணைத் தலையங்கம் 11.02.1934)

***

தோழர் சிவப்பிரகாசம்

ஜஸ்டிஸ் கக்ஷியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் செல்வாக்கு மிகுந்த வக்கீலும், சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலருமான தோழர் சிவப்பிரகாசம் முதலியார் அவர்கள் 2234ல் திடீரென்று இறந்து போனதைக் கேட்டு வருந்துகிறோம். நல்ல அருங்குணங்களும் பொதுஜன சேவை நோக்கம் மிகுந்தவருமாகத் திகழ்ந்த தோழர் சிவப்பிரகாசம் அவர்களின் மரணத்திற்கும் துயருறுவதோடு அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.

(புரட்சி துணைத் தலையங்கம் 11.02.1934)

***

பத்திரிகாசிரியர் ஏ. ரங்கசாமி ஐயங்கார் மரணம்

ஏ. ரங்கசாமி ஐயங்கார் நீண்ட நாள் பத்திரிகை ஆசிரியராகவிருந்து வந்ததின் பயனாக தென்னாட்டில் தமிழ் பத்திரிகையாகிய "சுதேசமித்திரன்" வாயிலாகவும், ஆங்கிலப் பத்திரிகையாகிய "இந்து" பத்திரிகை வாயிலாகவும் மக்களுக்கு அரசியல் துறைகளை ஒருவாறு புகட்டிவருவதில் முன்னேற்ற மடைந்தவராவார். அவர் மக்கள் விடுதலைக்கு போராடும் வழிகளிலும் அவரது வர்ணாசிரம தத்துவங்களுக்கு எவ்வித உபாதைகளும் உண்டாக்காமல் பாடுபட்டு வருபவர்களில் தலைசிறந்து விளங்கினார்.

காங்கிரஸில் அவர் மிக்க ஊக்கத்துடனும், முயற்சியுடனும் உழைத்துத் தன்வசமாக்கி தனது கருத்துக்கிசைந்த முறைகளில் தொண்டாற்றி வந்தவராவார். எந்த காரியத்தில் ஆனாலும் தமக்கு வேண்டியதை எப்படியும் பிரவேசித்து செய்து முடிக்குந் திறமை வாய்ந்தவர்.

வர்ணாச்சிரமத்தை வெறுப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவர் எப்போதும் விரோதியாக இருந்து வந்தவரே அல்லர். அத்துடன் அவர்களை தமது பத்திரிகைகளிலும் மிகுந்த சலுகைகளுக்கு பாத்திரர்களாக்கியும் வைப்பார்.

பத்திரிகையை முன்னேற்றமடையச் செய்து அதைப் பெரும்பான்மையோரான மக்களிடம் பரவி வரவேண்டுமென்கின்ற விஷயத்தில் அவரெடுத்துக்கொண்ட சிரமமும், முயற்சியும் அளவிடற் பாலதன்று. இத்தகைய குணசமூகங்களோடு வாழ்ந்து வந்து தமது பகுதி வயதினில் நோய்வாய்ப்பட்டு தமது ஆருயிர்க் காதலி, காதலர்களையும், துணைவரையும் இஷ்டமித்திரர் பந்து ஜன சமூகங்களையும் விட்டுப் பிரிந்ததானது மிகவும் துக்ககரமானதாகும். அன்றியும் பத்திரிகை உலகத்திற்கும் மற்றுமுள்ள நண்பர்களுக்கும் ஒரு ஈடுசெய்யக் கூடாத நஷ்டமேயாகும். இன்னமும் அவருடைய விரோதிகளுக்கும்கூட அவர் பிரிவானது அவ்விரோதிகளின் புத்தி கூர்மையையும் ஊக்கத்தையும் கொள்ளை கொண்டு விட்டதென்றே சொல்லலாம். நமது ஐயங்கார் ஆருயிர் துறந்தார் என்பதைக் கேழ்கும்போதே மனம் திடுக்கிட்டு விட்டது. இனிச் செய்வதென்ன இருக்கிறது. உலகம் இயற்கையின் வழி சென்று கொண்டிருக்கும்போது அதையேதான் சமாதானமாகக் கொள்ள வேண்டியவர்களாகிறோம்.

அவர் குடும்பத்தவர்களுக்கு நமது மனமாழ்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(புரட்சி துணைத் தலையங்கம் 11.02.1934)