காந்தியவர்கள் “உயிர் விடுகிறேன்! உயிர் விடுகிறேன்” என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப்பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம். ஆனால் பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது. ஏனென்றால் இந்த ‘மகாத்மா’ உயிர்விட்டால் அவருக்கு சமாதி கட்டி, குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்கு பிழைப்பு ஏற்படுத்திக் கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர்களால் முடியும். ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர்களிடம் மாத்திரம் செல்லாது. ஆகையால் காந்தி மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு “மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன்” என்று உப்புக் காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும்படி செய்யும் வேலைக்கோ, ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லா விட்டால் எப்படியாவது ராஜி செய்து கொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்லதாகும்.

(குடி அரசு - கட்டுரை - 05.02.1933)

***periyar 28வருந்துகிறோம்

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு சதா உழைத்து வரும் மாயவரம் தோழர் சி. நடராஜன் அவர்களது அருமைத் தாயாரும் நாளது 1-2-33 தேதி காலை மரணமடைந்த சேதி கேட்டு வருந்துகிறோம். சென்ற 7, 8 மாதங்களுக்கு முன்புதான் தோழர் நடராஜனது தந்தையாரும், அவரது சகோதரியும் காலஞ்சென்றார்கள். அம்மையாரவர்கள் அன்று முதல் தனது கணவன் இறந்த துக்கத்தாலும், குமாரத்தி இறந்த துக்கத்தாலும் ஆழ்ந்தவராகி அதே கவலையாய் இருந்து இம்மாதம் முதல் தேதி காலமாகி விட்டார். இதெல்லாம் அதிசயமற்ற காரியமாயினும், இயற்கையேயாயினும் தந்தையையும், தாயையும் 8 மாத காலத்தில் பறி கொடுக்க நேர்ந்த தோழர் நடராஜனவர்களைப் பற்றியும், அவரது இளைய சகோதரரான சப் ரிஜிஸ்டரார் தோழர். சி. சுப்பையா பி. ஏ. அவர்களைப் பற்றியும் அனுதாபப்படாமல் எவரும் இரா. அம்மையாரவர்கள் கடைசி வரையிலும் மாயவரம் செல்லும் சுயமரியாதைத் தொண்டர்களுக்கும், அன்பர்களுக்கும் பொங்கிப் பொங்கிப் போடுவதில் சிறிதும் சலிப்பில்லாமல் சந்தோஷத்துடனேயே உபசரிப்பார்கள். பெரும்பான்மையான தொண்டர்களுக்கு மாதக்கணக்காய் இளைப்பாருவதற்கு மாயவரம் தோழர் நடராஜன் அவர்கள் வீடு ஏற்றதாய் இருந்து வந்ததற்கும் காரணம் இந்த அம்மையாரின் அன்பு நிறைந்த உபசாரமேயாகும். அப்படிப்பட்ட அம்மை யார் காலமானதானது மிகவும் விசனிக்கத்தக்கதாகும்.

தோழர்கள் நடராஜனும், சுப்பையாவும், அவர்களது சிறிய தந்தையார் முத்தையாவும் இயற்கையை செவ்வனே உணர்ந்த ஞானவான்களானதால் அவர்களுக்கு உலக வழக்கப்படியான ஆறுதல் தேவையில்லை என்றே கருதுகிறோம்.

(குடி அரசு - இரங்கலுரை - 05.02.1933)

Pin It