பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இன்று எனது எடைக்கு எடை முந்திரிப் பருப்பு அளித்துள்ளீர்கள். எனது எடையானது 192- ராத்தல் ஆகும். எனது எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள், பேரீச்சபழம், துணி, நெல், கம்பு, உப்பு இப்படி அளித்தார்கள். காலையில் வயதை எண்ணி பவுன்கள் கொடுத்தார்கள். சென்ற ஆண்டு நண்பர் திரு. எம்.ஆர். இராதா அவர்கள் எனது வயது அளவுக்கு வருடத்துக்கு ஒரு பவுன் வீதம் தருவதாகக் கூறி 10,000 ரூபாய் அளித்தார்.

நான் எனக்கு அளிக்கப்படும் பொருள்களைப் பணமாக ஆக்குகின்றேன்.

periyar 576நமது கழகத்துக்கு மாதம் குறைந்த பட்சம் 5000- வீதம் வருவாய் வரும் நிலையில் உள்ளது. இனி பணம் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டு பல தொழில்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றேன்.

கவனிப்பாரற்றுத் திரிகின்ற பிள்ளைகளுக்கு இப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டும்படியான தொழில் பள்ளி ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இதற்கு மாதம் 1500- செலவாகக் கூடும். இன்னும் மற்ற மற்றப் பணிகளும் செய்யத் திட்டம் போட்டுள்ளேன்.

தோழர்களே! நமது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டு சமூதாயக் குறைப்பாடுகளை ஒழிக்கும் தொண்டாகும். எங்கள் தொண்டு சோம்பேறித் தொண்டோ, வயிற்றுப் பிழைப்புத் தொண்டோ அல்ல. பயனுள்ள தொண்டு. 2000- ஆண்டு காலமாக எவரும் செய்ய முன்வராத தொண்டு ஆகும்.

சாதி ஒழிப்புக்காகத் தீண்டாமையை ஒழித்தால் சாதி ஒழிந்து போகும் என்பது பித்தலாட்டமான கூற்றாகும். நாங்கள் சாதி வித்தியாசத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சாதி அமைப்பே ஒழிய வேண்டும் என்று பாடுபடுகிறோம். சாதிப்பிரிவை விட சாதி அமைப்பே மிக மிகக் கேடானது. சட்டப்படி, சாஸ்திரப்படி இரண்டே சாதிதான் ஒருவன் பார்ப்பான்; மற்றவன் சூத்திரன். பார்ப்பான் உயர்ந்தவன். சூத்திரன் தாழ்ந்தவன் என்பதே! பார்ப்பான் உயர் வாழ்வு வாழ்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவனது சாதி உயர்வு தான். நமது இழிந்த நிலைக்கு இழிந்த வாழ்வுக்குக் காரணம் நம் சூத்திரத் தன்மை தான்.

தொழிலும் எவ்வளவு அத்தியாவசியமானதாக இருந்தாலும் செய்கின்றவன் தாழ்ந்தவன் என்ற நிலை இருக்குமானால் அந்த நிலை மாற்றப்பட வேண்டாமா? யாரும் எந்தத் தொழிலும் செய்யலாம்.

தொழிலின் காரணமாக இழிவு இல்லை என்ற நிலை மேல் நாடு போல இங்கு ஏற்பட வேண்டும். தொழில் காரணமாக சாதியைக் கூறி இழிவுப்படுத்தும் நிலை ஒழிக்கப்பட வேண்டும்.

இன்று எங்குள்ளது சாதி வித்தியாசம்? சாதியைக் கூறி எவரை ஒதுக்க முடிகின்றது? இன்று ஆதித் திராவிடர்ப் பெண் மந்திரி, ஆதித் திராவிடர் கக்கன் ஒரு மந்திரி! எவரைச் சாதி காரணமாகக் கூடாது என்று தடுக்க முடிகிறது?

காந்தியார் தமது தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தில் சாதியை ஒழிக்க முடியவில்லை. "தீண்டாதவர்களுக்கு பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பள்ளியில் படிக்கவும், கோயிலில் வணங்கவும் வேண்டும் என்று பாடுபடுவது கூடாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு, தனிப் பள்ளிக் கூடம், கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொடுங்கள்" என்று கூறி பணம் ஒதுக்கினார் காங்கிரஸ் நிதியில் இருந்து.

நான் தான் மறுத்தேன். தீண்டாதவனுக்கு தனிக் கிணறு, தனிப் பள்ளி, தனிக் கோயில் கட்டிக் கொடுத்து - இது பறையன் கோயில், பறையன் கிணறு, பறைப்பள்ளி என்று இழித்துக் கூறும் நிலையில் செய்வதை விட சும்மா இருப்பதே மேல் என்று கூறி நான் பணத்தைச் செலவு செய்யாமல் விட்டு வந்தேன்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வகுப்பதில் அங்கம் வகித்தவர்களில் பெரும்பகுதி பார்ப்பனர்களாக இருந்ததனால் சாதிக்குப் பாதுகாப்பு தேடிக் கொண்டார்கள். அம்பேத்கர் தலைவராக இருந்தும் கூட அவரால் என்றும் செய்ய முடியவில்லை.

இன்று நாட்டில் ஏற்பட்டு இருக்கும் சாதி ஒழிப்பு உணர்ச்சி கண்டு நேரு, காமராஜ் முதல் "சாதி ஒழிக்கப்படத்தான் வேண்டும்" என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.

சாதி ஒழியாத சுதந்திரம் கிடைத்தும் பயனுடையதாகாது என்கின்றார்கள்.

இதன் காரணமாகவே அச்சாமியார் நேருவையும் ஒழிக்க வேண்டும் என்று கூறி பாடுபடுகின்றார்.

எந்த விதத்திலும், எந்த முயற்சியிலும் சாதி ஒழியவில்லையானால் பலாத்காரத்தில் ஈடுபட்டால் தான் ஒழியும் என்றால் இறங்கியே தீருவோம். செய்துவிட்டு இல்லை என்று கூறித் தப்பிக்க மற்ற பசங்கள் மாதிரி முயற்சிக்க மாட்டோம். ஜாமீனில் வரவோ, வக்கீல் வைத்து வாதாடி தப்பித்துக் கொள்ளவோ முயற்சிக்க மாட்டோம். எந்த பிரதிபலனும் கருதாமல் எதற்கும் துணிந்து தான் இந்தப் பணியில் இறங்கியுள்ளோம்.

இன்று சமூதாயத்தில் நடைபெறுகின்ற மாறுதல்களுக்கு முட்டுக்கட்டை போடவோ ஆச்சாரியார் (இராஜாஜி) முயலுகிறார்.

மபொசியார் சுதந்திராகட்சி ஆரம்பித்துள்ளார். நம்மிடையே சிலதுகளை பிடித்து இன்று நாம் மக்கள் நலனில் அக்கரையுள்ள காமராஜர் ஆட்சிக்கு விரோதமாகத் தூண்டி விடுகின்றனர்.

பார்ப்பனர் முயற்சிக்கு அதுக்கள் துணைபோகின்றனரே.

பார்ப்பனர்கள் தங்களுக்கு உதவாத ஸ்தாபனத்தை எதிரிக்குப் பயன்படாமல் ஒழிப்பது தான் தர்மமாகக் கொண்டவர்கள்.

தனக்கு குடிக்க உதவாத பாலை பிறர் குடிக்காமல் கவிழ்த்துவிட்டு விடப் பார்க்கிறார்கள். கவிழ்த்து விட்டதில் சிதறி ஓடும் பாலைக் குடிக்கத்தான் இந்த கண்ணீர்த்துளி போன்றவர்கள் அவர் பின்னே திரிகின்றனர் என்று எடுத்துரைத்தார்கள்.

மேலும் பேசுகையில் நமது இழிவுக்கும், மடமைக்கும், காரணமாக உள்ள கடவுள், மதம், சாஸ்திரங்களை ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், இன்றைய அரசியல் கட்சிகளின் போக்குகள் பற்றியும் விளக்கி அறிவுரையாற்றினார்கள்.

-----------------------

22.07.1962- அன்று "இரும்புலிக்குறிச்சியில்" தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 29.07.1962

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It