இரண்டாவது சுயமரியாதை மகாநாடு ஈரோட்டில் மே மாத முதல் வாரத்தில் கூட்டப்படுவதற்கு வேண்டிய முயர்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதே சமயத்தில் மற்றும் பல மகாநாடுகள்அதாவது பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு முதலிய மகாநாடுகளும், விவசாயம் கைத்தொழில் முதலிய பொருள் காட்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று பல நண்பர்கள் அபிப்பிராயப் பட்டிருப்பதற்கு இணங்க அவைகளையும் நடத்த வேண்டும் என்னும் உத்தேசத்துடன் வேலைகள் நடந்து வருகின்றன.
மகாநாட்டிற்கு இதுவரை சுமார் 5000 ஐயாயிரம் ரூபாய்களே வாக்களிக்கப் பட்டிருக்கின்றது என்றாலும் ஒட்டு மொத்தம் சுமார் 10000 ரூ பதினாயிரம் ரூபா வரையில் வசூலில் எதிர்பார்க்கலாம் என்றே கருதி இருக்கின்றோம்.
மகாநாடுகள் அதிகமாய் இருப்பதாலும் குறைந்தது 4, 5 நாள்களுக்காவது நடத்த வேண்டுமென்று கருதியிருப்பதாலும் மேல்கண்ட பதினாயிரம் ரூ.போருமென்று சொல்வதற்கு இடமில்லை.
ஆகவே வரவேற்பு கமிட்டி போஷகர்களுக்கு 25ரூ. என்றும் வரவேற்பு கமிட்டி அங்கத்தினர்களுக்கு 5ரூ. என்றும் பிரதிநிதிகளுக்கும் மூன்று ரூபா என்றும் மேல்கண்ட மூன்று வகைக்கும் சாப்பாட்டு கட்டணமில்லாமல் போடுவதென்றும் விசிட்டர்களுக்கு கட்டணம் ஒரு ரூபாய் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.
நிற்க, திருவாளர் ஆர். கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் வரவேற்புக் கமிட்டி தலைவராகவும், திருவாளர் கோவை சேர்மென் அண்டு ஜில்லா போர்டு பிரசிடெண்டு, ராவ் பகதூர் சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், ஈரோடு சேர்மென் மு. ஹ. ஷேக் தாவுத்து சாயபு, எஸ். ராமநாதன் ஆகிய கனவான்கள் பொது காரிய தரிசிகளாகவும் இருந்து மகாநாட்டை சிறப்புடன் நடத்திக் கொடுக்க தயவுடன் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்.
மற்றும் மகாநாட்டுக்கு வாலண்டியர்களாக இருந்து மனப்பூர்வமாய் தொண்டு செய்வதற்கும் அனேகத் தொண்டர்கள் முன் வந்து தாங்களாகவே தினம் பல கடிதங்கள் எழுதியும், நேரில் வந்தும் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டும் இருக்கின்றார்கள். மற்றும் பொது ஜனங்கள் அன்பாகவும் ஆவலாகவும் மகாநாட்டு விஷயத்தில் பல யோசனைகளையும் ஊக்கங்களையும் அளித்துக் கொண்டு வருகின்றார்கள்.
ஆகவே மகாநாடுகள் ஒரு விதத்தில் திருப்தி கரமாயும் வெற்றிகரமாயும் நடைபெறுமென்றே முழு நம்பிக்கையுடனேயே இருக்கின்றோம் என்றாலும் மகாநாட்டுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிர்ப்புக்கூட்டம் சில இருந்து கொண்டு, அவை தடங்கலான விஷமங்களை செய்து கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறைக்க முயலவில்லை.
உதாரணமாக இவ்வார சட்டசபையில் சைவ சித்தாந்த ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்தே ஒரு வாறு அறியலாம்.
அதாவது சுயமரியாதை இயக்கத்தார்களை மதசம்பந்தமான உத்தியோகத்தில் நியமிக்கலாமா என்றும், சுயமரியாதைக்காரர்கள் விக்கிரக ஆராதனைக்கு விரோதிகள் அல்லவா என்றும் மற்றும் பல கேள்விகள் கேழ்க்கப்பட்டதிலிருந்து இந்து மதமும், இந்து பரிபாலன போர்டுகளும், ஸ்தாபனங்களும் விக்கிரக ஆராதனைக்காரர்களான கூட்டத்தார்களுக்கே சொந்தமானதென்றும் கருதிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும், அவர்களால் கூடிய இடையூறுகளை யெல்லாம் செய்யத் தயாராயிருக்கின்றார்கள் என்பதும் நன்றாய் விளங்குகின்றது.
மற்றொரு புறம் ஒரு கூட்டம், ‘சுயமரியாதை இயக்கம் சர்க்காருக்கு அடிமைப்பட்ட கூட்டமென்றும் உத்தியோகங்களுக்கு ஆசைப்பட்ட கூட்டமென்றும்’ சொல்லிப் பிரசாரம் செய்வதும், மற்றொரு புறம் சுயமரியாதை இயக்கம் மந்திரிகளை ஆதரிக்கின்ற இயக்க மென்றும் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதும் மறைக்கக் கூடிய தல்ல.
இவைகள் ஒருபுறம் இப்படியிருக்க இதுசமயம் திரு. காந்தி அவர்களால் துவக்கப்பட்டிருக்கும் உப்புக் காச்சும் சத்தியாக்கிரகத்தின் கிளர்ச்சியினால் தென்னாட்டில் ஒரு கூட்டம் “உலகமே திரண்டு திரு. காந்தியாரைப் பின் பற்றி இந்த சர்க்காரை ஒழிக்கப் போகும் சமயத்தில் சுய மரியாதை இயக்கத்தார் சர்க்காரை ஆதரித்து விடுதலைக்கும் பூர்ண சுயேச்சைக்கும் எதிரியாய் இருக்கின்றார்கள்” என்று பாமர மக்களை விஷமத் தனமாய் கிளப்பி விட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.
இவை இப்படியிருக்க, மற்றொரு புறம் ஆதாரமில்லாமல் சிலர் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் திடீர் திடீர் என்று தங்களுக்குத் தோன்றியக் காரியங்களைச் செய்வதும் தோன்றிய அபிப்பிராயங்களை வெளியிடுவதுமான காரியங்களால் பொது ஜனங்களின் மனதை குழப்பத்திற்குள்ளாக்குவதுமாகச் செய்து வருவதும் யாரும் அறியாததல்ல. ஆகவே இப்படியாகப் பலவித எதிர்ப்புகளும் சங்கங்களும் இருந்து வருகின்றது.
எது எப்படி இருந்த போதிலும் நமது கொள்கைகளையே நாம் உலக விடுதலைக்கும் சிறப்பாக நமது நாட்டுக்கும், குறிப்பாக பார்ப்பனரல்லாத கூட்டத்தாருக்கும் பூரண ஆதாரமாகக் கருதி இருப்பதால் அதன் பலா பலனைத் தனித்து நின்றாவது அனுபவித்து தீரவேண்டிய உறுதி கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோமாதலால் பின்வாங்க முடியாத நிலையில் எதற்கும் தயாராய் இருக்கின்றோம் என்பதை பொது ஜனங்களுக்கு வணக்க மாய்த் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிற்க, இவ்வியக்கம் ஏற்பட்ட பிறகு தமிழ் நாட்டில் அடிக்கடி சுய மரியாதை மகாநாடுகள் கூடுவதும், இது சம்பந்தமாகப் பல ஆண்டு விழாக்கள், கொண்டாட்டங்கள் முதலியவைகள் நடப்பதுமாய் இருப்பதின் மூலம் அன்பர்களுக்கு அடிக்கடி செலவுகள் ஏற்பட்டு வருவதும் நமக்கு நன்றாய்த் தெரியுமானாலும், பலவித எதிர்ப்புகளுக்கும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கும் இம்மாதிரி அடிக்கடி மக்கள் கூடி இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டு அமுலில் நடத்த முயற்சிகள் செய்வதுதான் தகுந்த பதிலே ஒழிய வேறு இல்லை. ஆதலால் இம்மாதிரியான காரியங்களைப் பிரசாரத்தை முன்னிட்டுச் செய்து தீர வேண்டியதாயிருக்கின்றது.
அன்றியும் அரசியல் விஷயங்களுக்காக இதுவரை மக்கள் அடைந்த நஷ்டத்திற்கும் பட்ட கஷ்டத்திற்கும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்ட பலப்பல கெடுதிகளுக்கும் கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்த சமூக இயக்கத்திற்கு செலவாகும் நஷ்டமும், கஷ்டமும் பதினாயிரத்தில் ஒரு பங்குக்கூட இருக்கா தென்றே சொல்லுவோம்.
ஆதலால் தமிழ்நாட்டு இளைஞர்கள் கவனித்து, தமிழ் மக்களுக்கு இன்றியமையாத இந்த இயக்கத்திற்காக நடைபெறும் மகாநாட்டை சிறப்புற நடத்தி பலன் பெற உதவி செய்ய வேண்டிக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 30.03.1930)