காங்கிரசைப் பற்றி நாம் அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய, ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்ல வென்றும், இவர்களுக்கு கெடுதியை தரத் தக்க தென்றும் 4, 5 ஆண்டு காலமாக விடாமல் சொல்லி வருகின்றோம். இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத் துரோகி என்று சொல்லி விஷமப் பிரசாரமும் செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார் பத்திரிகையானது தனது தலையங்கத்தில், “காங்கிரசு பணக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய் விட்டது. உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப் பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகி விட்டார்கள். காங்கிரசுக்கு எதிரிகளாய் விட்டார்கள். முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள்” என்று எழுதி இருக்கின்றது.
இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா? எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடுகின்றோம்.
(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929)
***
இப்பொழுது மதம் எங்கே?
திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாடசாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று ‘மகந்து’வும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல்லாதார்களை விலக்கி விட்டார்கள். இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாசமும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லா பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே இப்போது அந்த மதம் இருக்கிறதா போய்விட்டதா? என்று கேட்கின்றோம்.
பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் “பேய்” இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப் போகும் என் பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப் பேய் பறந்து விடுவதாகத் தெரிகிறது.
(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929)