periyar 283நமது நாட்டில் பார்ப்பனர்கள் சம்மந்தப்பட்ட எந்த ஸ்தாபனமானாலும் அதில் அவர்களிஷ்டப்படி ஏதாவதொரு காரியம் நடைபெற முடியாது என்பதாக அவர்களுக்குப் பட்டால் உடனே சண்டித்தனமும் காலித்தனமும் செய்வதன் மூலமாகவும் செய்விப்பதன் மூலமாகவும் வெற்றி பெற முயற்சிப்பது சரித்திரக் காலம் தொட்டு அவர்களது பரம்பரை வழக்கம் என்பது உலகானுபவமுள்ள யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். அதே காரியத்தை சைமன் கமீஷன் பஹிஷ்கார விஷயமாய் சமீபத்தில் நடந்த சென்னை கார்ப்பரேஷன் கூட்டத்திலும் காட்டி தங்கள் கையாலானவரை முயற்சித்துப் பார்த்தும் முடிவில் வெற்றியில்லாமல் அவமானமடைந்து வெளியேறினது பத்திரிகைகளில் இருக்கின்றது.

சில சமயங்களில் சிறு பிள்ளைகள் எங்காவது சிக்கிக் கொண்டு அடிபட நேர்ந்தால் நன்றாய் அடிபட்டுவிட்டு அழுது கொண்டு வீட்டுக்குப் போகும்போது, தங்களுடைய போலி மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி தூரத்தில் போய் நின்று கொண்டு உதைத்தவர்களைப் பார்த்து “எங்கள் வீதிக்கு வந்து பார்! உன்னை அங்கு பேசிக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடுவதுண்டு. அது போலவே சென்னைப் பார்ப்பனர்களது சண்டித்தனமும் காலித்தனமும் தோல்வி அடைந்த பிறகு வேறு வழியில்லாமல் தங்கள் வீதி என்று நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதான அடுத்த முனிசிபல் தேர்தலுக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் வரும்போது பேசிக் கொள்ளுகின்றதாக வாய் வலிக்கக் கத்துகிறார்கள்: கை வலிக்க எழுதுகின்றார்கள் . சில பார்ப்பனக் கூலிகளும் இவர்களோடு கூடவே கோவிந்தா போடுகின்றனர். இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் தேர்தல்களில் இனி தங்கள் ஜம்பம் சிறிதும் நடவாது என்பதை நன்றாய் அறிந்து கொண்டே தற்கால சாந்திக்காக இவ்வித கூச்சல் போடுகின்றார்களே ஒழிய உள்ளுக்குள் ஒன்றும் இல்லை என்பதை நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

6-2-29-தேதி சென்னை கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திருவாளர்களான சைமன் கோஷ்டியாருக்கு கார்ப்பரேஷனிலிருந்து ஒரு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற தீர்மானம் யோசனைக்கு வந்தது. அத்தீர்மானத்தை கார்ப்பரேஷன் மீட்டிங்கில் யோசனைக்கு கொண்டு வரும்படியாக 26 அங்கத்தினர்கள் தங்கள் சம்மதத்தைக் காட்டி கையெழுத்திட்டு கார்ப்பரேஷனுக்கு விண்ணப்பம் அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அதற்கு விரோதமாக 11 பேர்களே தான் இருந்திருக்கின்றார்கள். ஆகவே பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் எவ்வளவோ விஷமப் பிரசாரம் செய்தும் 11 பேர்களே கமீஷனுக்கு வரவேற்பு கூடாது என்கின்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பெரும் பகுதியார் வரவேற்க ஆசையுள்ளவர்களாயிருக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து விளங்கும்.

அன்றியும் வரவேற்புக் கூடாது என்கின்ற 11 கனவான்களின் யோக்கியதை என்ன என்பதை பொது ஜனங்கள் அறிய அவசியம் ஆவலுள்ளவர்களாயிருப்பார்கள் என்றே எண்ணுகின்றோம்.

அப்பதினொருவர்கள் யாரென்றால் திருவாளர்கள் எஸ்.சத்திய மூர்த்தி சாஸ்திரி, ஜி.ஏ.நடேசய்யர், புர்ரா சத்திய நாராயணா, டாக்டர் மல்லய்யர், பஷிர்அகமது சாயபு, ஷாபி மகமது சாயபு, டி.வி. மீனாட்சிசுந்தரம், ஸ்ரீராமுலு நாயுடுகாரு, சாமி வெங்கடாசலம், கெத்தா ரெங்கய்ய நாயுடுகாரு, செல்வபதி செட்டியார் ஆகியவர்களே ஆவார்கள்.

எனவே முதல் நால்வரும் பார்ப்பனர்கள். அவர்களின் யோக்கிய தையை அதிகம் எழுத வேண்டியதில்லை. அடுத்த இருவர்களும் மகமதிய கனவான்களானாலும் அவர்கள் திரு. சீனிவாசய்யங்கார் பிரதிநிதியாக திரு. சீனிவாசய்யங்கார் பணச்செலவில் கார்ப்பரேஷனுக்கு சீனிவாசய்யங்காரால் கலகம் செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்டவர்கள் ஆவார்கள் என்று சென்னை மகமதிய பத்திரிகைகளே பல தடவை எடுத்துக்காட்டி இருக்கின்றன. ஆதலால் நமது அபிப்பிராயம் தேவையில்லை. அடுத்த இருவரும் அய்யங்கார் பணத்தில் அய்யங்கார் முயற்சியில் அய்யங்கார் பிரதிநிதியாக அய்யங்காராலேயே கொண்டு வரப்பட்டவர்கள்.

திரு.சாமி வெங்கிடாசலம் செட்டியார், கமிஷனை வரவேற்கின்றவரே கார்ப்பரேஷன் தலைவராக இருக்க வேண்டுமென்று கோரி தலைவர் தேர்தலில் ஓட்டுச் செய்தவர். எனவே அவருடைய அபிப்பிராயத்தில் உள்ளுக்குள் இரகசியமாய் இருக்கும் அபிப்பிராயத்தை மதிப்பதா அல்லது வெளியில் காட்டிக் கொள்ளுமா என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ள விட்டுவிடுகின்றோம். பின்னைய இருவர்களிடம் கமிஷனை வரவேற்கலாம் என்பதற்கு வேண்டுமானாலும் ஓட்டு வாங்கி விடலாம். ஏனெனில் அவர்கள் அவ்வளவு தாக்ஷண்யக்காரர்கள்.

எனவே இந்த பதினொருவரின் அபிப்பிராயம் சென்னை பொது ஜன அபிப்பிராயமா அல்லது மற்றபடி வரவேற்க வேண்டுமென்று அபிப்பிராயம் கொண்டு கையெழுத்துப் போட்ட 26 பேரினுடையவும் மற்றும் கமீஷனை வரவேற்பதால் தங்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை யென்று கருதி அதைப்பற்றிய கவலையே எடுத்துக் கொள்ளாத மீதியுள்ள சுமார் 15 கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுடைவும் அபிப்பிராயங்கள் பொது ஜன அபிப்பிராயமா என்பதை வாசகர்களையே கவனிக்க விரும்புகின்றோம்.

தவிர, உலகமே முழுகிப் போய்விட்டதாக கூச்சல் போட்ட திரு. சத்திய மூர்த்திக்கோ அவரது கூட்டத்தாருக்கோ நமது நாட்டு ஷேமத்தில் கவலை இருக்க வேண்டிய அவசியம் ஏதாவது இருக்க முடியுமா? என்பதையும், யோக்கியமாய் கோவிலுக்கு தாசிகள் இருக்கும் வரையும், சென்னையில் தாராளமாய் விவசாரிகள் இருக்கும் வரையும், சத்திரங்களில் இலவசமாய் சாப்பாடுகள் போடப்படும் வரையும், பார்ப்பனர்களுக்கு சமாராதனை செய்வதும் அவர்களுக்கு தக்ஷணை கொடுப்பதும் பார்ப்பனரல்லாதாருக்கு மோட்சத்திற்கு மார்க்கம் என்று நினைத்து கொண்டிருக்கும் முட்டாள்கள் நம்மில் இருக்கும் வரையும் நமது சாஸ்திரிக்கும் அய்யருக்கும் வேறு என்ன கவலை இருக்க முடியும் என்பதையும் நமது நாடு எக்கேடு கெட்டால்தான் அவருக்கு என்ன கவலை என்பதையும் யோசிக்க வேண்டுகின்றோம். நிற்க இக்கூட்டத்தார் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் நடந்து கொண்ட யோக்கியதைப் பற்றி சற்று கவனிப்போம். மீட்டிங் கூடியதும் போலீசார் வெளியே இருந்ததைப் பற்றி ஆட்சேபித்தார்களாம்.

சாதாரணமாக பொதுக் கூட்டங்கள் கூடுகிற இடத்தில் போலீசார் தங்களுக்கு அவசியம் என்று தோன்றினால் வந்து நிற்பது வழக்கம். அது மாத்திரமல்ல, கூடுமானால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர்கள் போக வேண்டியது அவர்களது கடமையாகும். இந்த விஷயம் கூட அறிய முடியாதவர்கள் கார்ப்பரேஷன் கவுன்சிலராயிருப்பதானால் அது அய்யங்கார் பணத்தின் பெருமையே ஒழிய ஓட்டர்களின் அறிவீனம் என்று சொல்லிவிட முடியாது.

தவிர மீட்டிங்கில் கூட்டத்தில் போலீசார் இருக்கக் கூடாது என்றும் இருந்தால் வெளியில் போகவேண்டும் என்றும் திரு சத்தியமூர்த்தி தலைவரைப் பார்த்து சொன்னாராம். பூரண சுயேச்சை விரும்பும் திரு. சத்தியமூர்த்தியின் தைரியத்திற்கு இந்த விஷயமே போதுமான சாக்ஷி யன்றோ? போலீசாருக்கு இவர்கள் ஏன் அவ்வளவு பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை. போலீசார் எதிரில் பேசுவதற்கே பயந்த இந்த ‘வீரர்கள்’ நமக்கு பூரண சுயேச்சை வாங்கித் தரக்கூடியவர்களா என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

திரு.மூர்த்தியின் பயத்தை நீக்க அந்தக் கூட்டத்தில் போலீசார் யாராவது இருக்கின்றார்களா? என்று தலைவர் தேடியதில் அய்யரின் ‘யோகம்’ போலீசார் ஒருவரும் காணப்படவில்லையாம். இந்த விஷயம் நன்றாய்த் தெரிந்து கொண்ட பிறகு சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டதாம். ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் தலைவர் திரு.ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் கேள்வி கேட்டவர்கள் வெட்கித் தலைகுனியும்படியும் மேற்கொண்டு மூச்சு விடுவதற்கு வழியில்லாமலும், சாந்தமாகவும் அலட்சியமாகவும் பதில் சொல்லி வாயடக்கிக் கொண்டே வந்திருக்கிறார். இந்த உண்மை பார்ப்பனப் பத்திரிகையாகிய ‘இந்து’, ‘மித்திரன்’ முதலியவைகளிலேயே காணக் கிடக்கின்றது.

இதுமாத்திரமல்லாமல், கேள்வி கேட்கும் முறையையே திரு.சத்திய மூர்த்தி முதலியவர்களுக்குத் தலைவர் கற்பித்துக் கொடுத்துக் கொண்டே வந்திருப்பதும், மெம்பர்களுடைய அதிகாரத்தையும் ஒழுங்கையும் பற்றி அவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டு வந்திருப்பதும் அந்த இடத்தில் தலைவரின் சாமார்த்தியத்தை நன்றாய் விளக்கி இருக்கின்றதென்றே சொல்ல வேண்டும்.

கடைசியாக சட்டத்தின் மூலம் தங்கள் ஜபம் பலிக்கவில்லையென்று தெரிந்தவுடன் காலித்தனம் செய்ய சிலர் ஆரம்பித்திருப்பதாகவும் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகின்றது. அதாவது, ஒரு அங்கத்தினர் எழுந்து வெளியே போகும்போது அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தினர் தடுத்து மிரட்டியதாகவும் அதற்கு அந்த தடுக்கப்பட்ட அங்கத்தினர் அய்யங்கார் கூட்டத்தைப் பார்த்து, “பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அதட்டிச் சொன்னதாகவும் பிறகு அவர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டதாகவும் இன்னும் இதுபோல் பல காலித்தனம் என்று சொல்லப்படக் கூடிய சங்கதிகள் நடந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

நிற்க, கமீஷனுக்கு வரவேற்பு கூடாது என்று சொல்லவந்த கவுன்சிலர்கள் அங்கு சொன்ன சமாதானம் என்ன என்பதையும் கவனிப்போம்.

முதலாவதாக ஆட்சேபித்த கவுன்சிலர், திரு. ஜி.ஏ.நடேசய்யர் “சைமன் கமிஷனர்கள் பெரிய மனிதர்கள், கண்ணியமுள்ளவர்கள் என்பதையும் அவர்களை சமூக விஷயங்களில் விலக்குவது கூடாது என்பதையும் அவர்கள் வரும்போது வேலை நிறுத்தம், கடையடைப்பு முதலியவைகள் செய்வதும் கூடாது என்பதையும் தாம் ஒப்புக் கொள்வதாகவும் முதலில் சொல்லிவிட்டு, பின்னர், ஆனால் இந்தியாவில் உள்ள பெரிய மனிதர்களும், பெரிய கட்சிகளும் பகிஷ்கரிப்பதால் நானும் பகிஷ்கரிக்க வேண்டியிருக்கிறது” என்று சொல்லியிருக்கின்றார். இதைக் கவனிக்கும்போது சில பள்ளிக் கூடத்துச் சிறுபிள்ளைகள் விஷயம் ஞாபகத்திற்கு வருகின்றது.

அதாவது, சில சமயங்களில், சிறுபிள்ளைகள் விளையாட்டுத்தனமாய் பள்ளிக்கு வராமல் இருந்து விட்டால், உபாத்தியாயர் ‘ஏன் வரவில்லை’ என்று பையனைக் கேட்டும்போது பிள்ளை, “எனக்கு நேற்று வயிற்று வலியாய் இருந்தது அதனால் வரவில்லை!” என்று சொல்லுவதும், உபாத்தியாயர், “உனக்கு வயிற்றுவலி என்று எப்படித் தெரிந்தது” என்று கேட்டால், “எங்க அம்மா சொன்னாங்கோ,” என்று சொல்லுவதும் போல நமது திரு. ஜி.ஏ. நடேசய்யர் “ஊரார் எல்லோரும் பகிஷ்கரிக்க வேண்டும் என்கின்றார்கள். அதனால் நானும் பகிஷ்கரிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்களுடன் விருந்துண்பதிலோ, பழகுவதிலோ தனக்கு ஆஷேபணை இல்லையாம்! அவர்கள் வரவுக்காக, பகிஷ்கார அறிகுறியாய் கடையடைப்பதிலும் தாம் சம்பந்தப்படப் போவதில்லையாம். எனவே, இது எவ்வளவு சரியான காரணம் என்பதை வாசகர்களே அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

அடுத்தாற்போல், திரு. சத்தியமூர்த்தி அய்யரும் “கமிஷன் மெம்பர்கள் உபச்சாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டிய அவ்வளவு பெரியவர்கள் அல்ல” என்று சொன்னதைத் தவிர, வேறொரு சரியான காரணமும் சொல்லவில்லை. திரு.சாமி வெங்கடாசலம் செட்டியாரும், ‘கக்ஷிப் பிரதிகக்ஷி விஷயம் கார்ப்பரேஷனில் கூடாது’ என்பதைத் தவிர வேறு சரியான காரணம் ஒன்றும் சொல்லவில்லை. இந்த உணர்ச்சி அவருக்கு இப்போதாவது வந்ததைப் பற்றி சந்தோஷமே.

பிறகு, ஜனாப் பஷீர் அகமது சாயபு பேசியிருப்பதில் முக்கியமாக, “வெள்ளைக்காரர்கள் துருக்கியை சின்னாபின்னப்படுத்தி ‘கிலாபத்’தை அழித்து விட்டார்கள்” என்றும், இதுவரையில் “முஸ்லீம்கள் ஒத்துழைத்ததற்கு யாதொரு கூலியும் கிடைக்கவில்லை,” யென்றும், “ஆதலால் வெள்ளைக்காரர்களைச் சேர்ந்த சைமன் கோஷ்டிக்கு உபசாரம் கூடாது” என்றும் சொல்லியிருக்கிறார், ‘கிலாபத்’ ஒழிந்ததற்கு வீரர் கமால்பாஷா காரணமா? வெள்ளைக்காரர் காரணமா? என்பதையும், முஸ்லீம்களுக்கு சர்க்கார் கொடுத்த கூலிக்கு உதாரணம், திரு. பஷீர் அகமது சாயபு போன்றவர்கள் சட்டசபை மெம்பராவதற்கு இடம் கொடுத்ததே போதாதா என்பதையும் யோசித்தால் யாருக்கும் விளங்காமல் போகாது.

முடிவாக, இத்தீர்மானத்தின் மீது நடத்திய கலகத்தால் பார்ப்பனர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு மார்க்கமும் அவர்களது கூலிகள் பார்ப்பனர்க்கு உதவியாக பிரசாரம் செய்வதற்கு ஒரு ஆதாரமும் கிடைத்தது. இதைத் தவிர, வேறு முக்கியமான சங்கதி ஒன்றும் நடந்துவிடவில்லை.

பொதுவாக, சைமன் கமிஷனை பகிஷ்கரிப்பதில் எத்தனை பேருக்கு சம்மதம் என்றும், ஆதரிப்பதில் எத்தனை பேருக்கு சம்மதம் என்றும் அறிய வேண்டுமானால், பொதுவாகப் பார்த்தால் முதலாவது இந்தியாவில் உள்ள மாகாண சட்டசபைகள் எல்லாம் ஆதரிக்கின்றன என்பதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. இரண்டாவதாக இந்தியா சட்டசபை ஆதரிப்பதையும், யாரும் ஆட்சேபிக்க முடியாது. மற்றபடி இந்தியாவில் உள்ள மதமுறைப்படி பார்த்தால் கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், “இந்துக்கள்” ஆகியவர்களில் முக்கிய சபைகள் ஆதரிக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. கடைசியாக, வகுப்பு முறைப்படி பார்த்தாலும் பார்ப்பனர் சபை முதற்கொண்டு ஒவ்வொரு வகுப்பு சபையும் ஆதரிக்கின்றன.

எனவே, இனி ஆதரிக்காத மக்கள் யார் என்று கேட்கின்றோம். அன்றியும், மற்றவர்கள் விஷயம் எப்படிச் சொல்லப்படுவதானாலும் பார்ப்பனரல்லாதாருக்கு என்று ஏற்பட்ட பொது இயக்கங்களும், பொது சபைகளும், அவர்களுக்குள் உள்ள தனித்தனி வகுப்பு இயக்கங்களும் ஒன்றுவிடாமல் கமிஷனை ஆதரித்து வரவேற்று, தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்ளத் தீர்மானித்திருக்கின்றன என்பதில் யாரும் ஆட்சேபணை சொல்ல முடியாதென்றே சொல்லுவோம்.

அது மாத்திரமல்லாமல், இந்த ஒரு வருஷகாலமாய் நடைபெற்ற ஒவ்வொரு வகுப்பு மகாநாடுகளிலும், வகுப்பு சபைகளிலும், பார்ப்பனர்களும் அவர்தம் கூலிகளும் பிரவேசித்து, கலகம் செய்ய ஆட்களை ஏவிவிட்டும் கூட, எவ்வளவு முயற்சி செய்தும்கூட ஒரு வகுப்பிலாவது ஒரு இயக்கத்திலாவது, சரியானபடி தங்களுக்கு அனுகூலமான கக்ஷியையோ அபிப்பிராய பேதத்தையோ கூட கொண்டுவந்து போட முடியாத அளவு கமிஷன் ஆதரவு பலப்பட்டிருக்கின்றது என்பதையும் கவனித்துப் பார்க்கும்படி ஞாபகப் படுத்துகின்றோம்.

கடைசியாக, சைமன் விஷயத்தை ஆதாரமாய் வைத்துக் கொண்டு தேர்தலில் விஷமம் செய்யலாமென்று நினைத்துக் கொண்டிருக்கும் கனவான்களுக்கும் ஒன்று ஞாபக மூட்டுகின்றோம். அதாவது எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனி பாமர மக்களை இந்த தந்திரங்களின் மூலம் ஏமாற்றலாம் என்கின்ற எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஜீவனத்திற்கு வேறு வழிபார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 10.02.1929)

Pin It