கனவான்களே,
சில உபசாரப் பத்திரங்களிலும் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி அவருக்குக் கிடைத்ததற்கு திரு. ராஜனும், நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான் ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு. ராசன் அவர்கள் பொறுப்பாளி என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்புடையவன் என்றால் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய மற்ற காரியங்களையும் தொண்டுகளையும் கெடுத்து விடும் எனக் கருதி தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான் கண்டிப்பாய் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன். அதைத்தவிர எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு. ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார் அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக வேண்டு யென்றாவது கருதிக் கொண்டு ஒரு காரியமும் செய்ய வேண்டாமென்றே சொல்லுகிறேன்.
ஏனெனில், அது முடியாத காரியம் - ஒரு சமயம் முடிவதாயிருந்தாலும் அது யோக்கியமான மனிதனின் காரியமாகாது. ஒரு சமயம் யோக்கியமான மனிதனுக்கும் சாத்தியப்படுமானாலும் அதனால் நன்மையை விட கெடுதியே அதிகமாகும். மக்களில் பலதிறமுண்டு - யோக்கியனும் அயோக்கியனும் உண்டு - இருவரையும் திருப்தி செய்யக் கருதுவது நாணயமாகாது. ஆதலால் அடியோடு கஷ்டப்படுகின்றவர்களுக்கு நன்மை செய்வதின் மூலம் சுகப்படுபவர்களுடைய ஆசையும் அனுபவமும் சற்று குறைந்தாலும் குற்றமில்லை.
நான் பொதுவாக இம்மாதிரி பதவி பெறுபவர்களை பாராட்டுகிற வழக்கமில்லை. ஆனால் திரு. நாடாரைப் பாராட்டுகின்ற காரணம் எல்லாம் அவர் கொடுமைப்படுத்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரிலும் அதிகமாய்க் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் ஏராளமாய் நமது நாட்டில் வதைக்கப்படுகின்றார்கள் என்றும், அவர்களுக்கு விடுதலையும் சாந்தியும் ஏற்பட கொடுமையை அனுபவித்த ஒருவருக்கு பதவி கிடைப்பது அனுகூலமானதென்றும், அந்த வழியில் நாடார் மன உறுதியோடு உழைப்பார் என்றும் நம்பி, அவர் அடைந்த பதவியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மையை உத்தேசித்து அவர்களைப் பாராட்டும் முறையில் இவர்களைப் பாராட்டுகின்றேன் என்றும், திரு. நாடார் அந்தத் துறையில் உறுதியுடன் நின்று இந்தக் காரியத்தை நடத்தத் தாட்சண்யமோ பயமோ சுயநலமோ பொது ஜனங்களிடம் கீர்த்தி பெற முடியாதே என்கின்ற சந்தேகமோ தோன்றுமானால் தயவு செய்து அந்த க்ஷணமே அந்த வேலையை இராஜீனாமாக் கொடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது செய்கின்ற தொண்டே செய்ய வேண்டுமென்றும் சொல்லுகின்றேன்.
(குறிப்பு : 23.11.1928 இல் இராமநாதபுரம் ஜில்லா போர்டுக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. WPA.சௌந்திரபாண்டியனார் அவர்களுக்கு விருதுநகர் பொதுமக்களால் நடத்தப் பெற்ற பாராட்டுக் கூட்டத்தில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 25.11.1928)