வேடிக்கை பார்க்க வந்த இரு சகோதரர்களுக்குள் நடந்த சம்பாஷணை.

தம்பி : நீல் சத்தியாக்கிரகம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே, அது என்ன ஆச்சுது?

periyar sleepingஅண்ணன் : அது உனக்குத் தெரியாதா. “தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி ஏறினது” போல் நீல் சிலையை உடைக்கப் போய் கிருஷ்ணசாமி அய்யர் சிலையின் மூக்கு போய் விட்டது.

தம்பி : அப்படிச் சொன்னால் எனக்கு விளங்கவில்லை, நடந்த சங்கதியைத் தெளிவாய்ச் சொல்லு,

அண்ணன்: நீல் துரை சிலையை சத்தியாக்கிரகக்காரர்கள் சம்மட்டியால் அடிக்கப் போனார்கள், அதைப் பலாத்காரம் என்று ‘குடி அரசு’ எழுதுச்சு. ஆனால் ஸ்ரீமான் காந்தி அதைப் பலாத்காரம் அல்ல சம்மட்டியால் உடைக்கலாம் என்று சொன்னார். அப்பவும் ‘குடி அரசு’ அது பலாத்காரம் தான் என்று சொல்லிற்று. அப்புறம் ஸ்ரீமான் காந்திக்கு புத்தி வந்து சம்மட்டியால் அடிக்காதே களிமண் உருண்டையால் அடி என்று சொல்லிவிட்டு போய் விட்டார். இப்பொழுது சாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்வது போல் தொண்டர்கள் நீல் சிலையை களிமண் உருண்டையால் அர்ச்சனை செய்கிறார்கள். சத்தியாக்கிரகம் நடத்த வந்த தலைவர்களுக்கெல்லாம் வரவு செலவு கணக்கு வைக்கத் தெரியாததால் வசூலான பணங்களை எலி தின்ன ஆரம்பித்து விட்டது. இதனால் ஒருவருக்கொருவர் சண்டையுண்டாச்சு. புதுப்புதுத் தலைவர்கள் வந்தவண்ணமாயிருக்கிறார்கள். தொண்டர்களை விட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாய் விட்டதுடன் வரவர நீல் சத்தியாக்கிரகம் அய்யர், அய்யங்கார், அம்மங்கார், பந்தலு ஆகியவர்களுக்கே சொந்தமாகிவிட்டது. “தேசீயத் தலைவர்கள்” எல்லாம் சர்க்காருக்கு பயந்து கொண்டு ஓடிவிட்டாலும், தேசீயத் தொண்டர்களுக்கு பயந்து கொண்டு. அதாவது நாளைக்கு இத்தொண்டர்கள் ஜெயிலுக்குப் போய் தேசபக்தர்களாய் வந்து தங்கள் மேல் பாய்ந்தார்களானால் ஆபத்து வருமே என்று நினைத்து இரகசியமாய்ப் பணம் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். என்ன செய்தும் எண்ணைச் செலவேயொழிய பிள்ளை பிழைக்கும் வழியைக் காணோம்.

இது இப்படியிருக்க பாவம்! சிவனே என்று சமுத்திரத்தைப் பார்த்து நின்று கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணசாமி அய்யருடைய சிலையின் மூக்கை எவனோ திருட்டுத்தனமாய் அறுத்துவிட்டுப் போய்விட்டான். அந்தச் சங்கதி அப்படியே மறைபட்டுப் போய்விட்டது. அதைப்பற்றி யாரும் கவலையெடுத்துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்களின் கையாளான ஸ்ரீ முத்துரங்க முதலி யாரும் மற்றும் சிலரும் பார்ப்பனரல்லாத வாலிபர்கள்தான் இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும்படி சாடி சொல்லியும் கூட மூக்கறுத்த சிலைக்கு மூக்கு ஒட்ட வைக்காமல் அப்படியே கிடக்கின்றது.

தம்பி : அப்படியானால் இந்த சத்தியாக்கிரகம் எப்படித்தான் முடியும்?

அண்ணன்: அடுத்த முனிசிபல் எலக்ஷன் வரைக்கும் வீதிவீதியாய் மீட்டிங் போட்டு பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க இதை ஒரு சாக்காக நடத்திப் பார்ப்பார்கள். அது முடிந்து அதன் பலன் என்ன ஆச்சுது என்று தெரிந்து பிறகுதான் சொல்லக்கூடும். இப்பொழுது முடிவு கட்ட முடியாது.

தம்பி : சட்டசபை எலக்ஷனுக்குக்கூட இது உபயோகப்படுமா?

அண்ணன்: அது முனிசிபல் எலக்ஷனைப் பொறுத்திருக்கின்றது. ஏனென்றால் இதில் ஜெயம் கிடைத்தால் நீட்டி வைப்பார்கள். இதில் தோல்வி கிடைத்தால் நிறுத்தி விடுவார்கள்.

தம்பி: இந்தப் புரட்டுக்காக எத்தனை பேர் ஜெயிலுக்குப் போவது? கேள்வி கேப்பாடு இல்லையா?

அண்ணன் : கேள்வி என்ன, கேப்பாடு என்ன? அவர்கள் ஜெயிலில் இருந்தால் நஷ்டம் என்ன, வெளியில் இருந்தால் லாபமென்ன? எல்லாவற்றையும் கடந்து உள்ளும் புறமும் ஒன்று என்று நினைக்கும் கடந்த ஞானிகள் தானே இப்போது ஜெயிலுக்குப் போயிருப்பவர்கள்.

தம்பி: ஐயோ பாவம்! அவர்கள் தாய் தகப்பன்மார்கள் வருத்தப்பட மாட்டார்களா?

அண்ணன்: சிலரின் தாய் தகப்பன்மாருக்கு தங்களைப் பிடித்த தொல்லை ஏதோ ஒரு வழியில் ஒழிந்ததே என்ற சந்தோஷமுண்டு. சிலருக்கு அவரவர்களே தாய் தகப்பன்மார்கள். சில விஷயத்தில் வருத்தப்பட்டாலும் படலாம். ஆனாலும் இவற்றை அவ்வளவு பிரதானமாய்க் கருதுவதில்லை. ஏனென்றால் தங்கள் குழந்தைகள் உள்ளே போகும்போது தேசத்தொண்டர்களாகப் போய் ஜெயிலிலிருந்து வரும்போது தேச பக்தர், தேசத் தலைவர், தேசீயத் தலைவர் முதலிய பட்டங்களோடு வரக்கூடும் என்கின்ற தைரியத்தினால் பொறுத்துக் கொள்வார்கள்.

தம்பி: இந்த மாதிரி கணக்கு வழக்கு இல்லாமல் அதிகமான தேசபக்தர்கள் ஏற்பட்டுவிட்டால் இவ்வளவு பேர்களுக்கும் வேலை வேண்டாமா?

அண்ணன் : அதைப்பற்றி உனக்கென்ன கவலை? தாலூக்கா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலிய எத்தனையோ எலக்ஷன்கள் வரப்போகிறது. எத்தனையோ பேர் அகில இந்திய தலைவர்களாகப் போகிறார்கள். இன்னும் எத்தனை பேர் வாழ்வுக்கு இம்மாதிரி குட்டித்தலைவர்களும் மூட்டை முடிச்சுகளைத் தூக்குவதற்குத் தேசபக்தர்களும் தேவையிருக்கிறது. இன்னும் எத்தனையோ ஊர்களில் கக்ஷிப் பிரதிகக்ஷிகள் இருக்கின்றது. இதில் ஒவ்வொரு கக்ஷிக்கும் தேச பக்தர்கள் வேண்டும். இவைகளையெல்லாம் பார்த்தால் இன்னும் குட்டித் தலைவர்களும் தேச பக்தர்களும் வேண்டுமே ஒழிய இப்போதிருப்பது அதிகமென்று சொல்ல முடியாது. ஆனதினால் தேசபக்தர்களை உண்டாக்க இந்த சிலை ஒரு காரணமாயிருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்று சொல்ல முடியாது.

தம்பி : அப்படியா? நேரமாச்சுது மற்ற சங்கதிகளை சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம். நேரமாச்சுது இதோ தெரிகிறதே காங்கிரஸ் பொருள் காக்ஷி கொட்டகை அதற்குள் நுழைந்து அதைப் பார்க்கலாம் வா.

சரி இருவரும் பொருள்காக்ஷி சாலைக்குள் நுழைந்து விட்டார்கள், அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டுவரும்படி வேறு ஆளை அனுப்பி விட்டு நான் வந்து விட்டேன்.

(குடி அரசு - உரையாடல் - 15.01.1928)

Pin It