periyar 450 copy copy“ஜஸ்டிஸ்” கட்சித் தலைவர்களுக்கு ராயல் கமிஷன் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய தன்மையைப் பற்றி ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், தனது அபிப்பிராயமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் செய்தியாவது:-

பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள் ஒப்புக் கொண்டு இருக்கின்ற வரையில் இம்மாதிரியான ராயல் கமிஷன்களில் இந்தியர்களுக்கு பதவி அளிக்காதது நம்மவர்களின் சுயமரியாதையை பாதிக்கக் கூடியதாய் இருக்கின்றது என்று எண்ணுவதில் கொஞ்சமாவது அர்த்தமில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஒரு அம்சமாகவே இந்த கமிஷன் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியரின் சுயமரியாதையை அடியோடு அழித்ததான பஞ்சாப் அநீதி போன்ற காரியங்களில், ஒன்று சேர்ந்து பரிகாரம் தேட சம்மதிக்காத ஒரு கூட்டத்தார் இப்போது பகிஷ்காரத்தைப் பற்றி வீண் கூப்பாடு போடுவது கேலிக்கிடமானதென்றே சொல்ல வேண்டும்.

உண்மையில் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதென்பது எந்த அரசாங்கத்தாரால் இந்த ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டதோ அதே அரசாங்கத்தின் அம்சங்களான சட்டசபைகளையும், மந்திரி முதலிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பகிஷ்கரிக்கத்தக்க கொள்கையுடையதாயிருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு விதமான தியாகத்திற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாததான வெறும் வார்த்தை அளவில் பகிஷ்காரம் என்று கூச்சல் போடுவதானது சுயமரியாதையுள்ள தேசத்தார் என்பவர்களுக்கு கொஞ்சமும் அழகாகாது. உண்மையிலேயே முழு விடுதலைக்கும் நம்முடைய நாட்டார் தயாராயிருக்கின்றார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் அந்த காலத்தில் பார்ப்பனரல்லாதாரே முன்னிலையில் நின்று விடுதலைப் போர் புரிவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

ராஜீய விஷயங்களில் சாத்தியமானதும், காரியத்தில் நடக்கக் கூடியதுமான துறையில் பாடுபடும் ‘ஜஸ்டிஸ்’ கட்சிக்காரர்கள் வேண்டுமென்றே பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக மற்ற கட்சியார் செய்யும் சூழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது அறிவுடைமை ஆகாது. கோயமுத்தூரில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாட்டில் மாகாண சுயாட்சி கிடைக்கும் வரையிலும் பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

ஆதலால் முழு சுதந்திரமும் கேட்கக்கூடிய காலம் வரும் வரை ‘ஜஸ்டிஸ்’ கட்சிக்காரர்கள் மாகாண சுயாட்சிக்காகவும், நம்முடைய நாட்டிலுள்ள எல்லா வகுப்பார்களுக்கும் சமமான நீதியும் பங்கும் கிடைக்கும்படியாகவும், ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்று கொண்டாடும் பாத்தியதையை நிராகரிக்கவும், ஒரே நிலையாக இருந்து பாடுபட்டு வர வேண்டியவர்களாவார்கள். ‘ஜஸ்டிஸ்’ கட்சியாரின் வெளிப்படையான இந்த கொள்கையை நம்முடைய தேச மக்களிடமும் மற்றும் அந்நிய நாட்டாரிடமும், அவர்களால் ஏற்படுத்தப்படும் சபைகளின் முன்னிலையிலும் ஸ்தாபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

கமிஷன் அங்கத்தினர்களில் இந்திய அங்கத்தினர்கள் ஒருவரும் இல்லாதது ஒரு கெடுதியாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கவர்ன்மெண்டார் ஒரு சமயம் இந்தியர்களில் யாரையாவது நியமிப்பதானால் இப்போதைய நிலைமையில் நியமனம் பெறக்கூடிய இந்தியர்கள் பொதுவாக பிராமணரல்லாதாருக்கு தீங்கிழைக்கக் கூடியவர்களாகத்தான் இருக்க முடியும்.

தவிர, ஆதியில் ரௌலட் கமிட்டியில், இந்தியர் ஒரு அங்கத்தினராய் இருந்தும்கூட, அக்கமிட்டியின் சிபார்சானது இந்திய மக்களை அரசாங்கத்தோடு ஒத்துழையாமை செய்ய வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது. பொதுவாக யோசிக்குமிடத்து கமிஷனில் அங்கம் பெறக்கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர்களாகவே இருந்துவிடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)

Pin It