கோயமுத்தூரில் நடக்கப் போகும் கோயமுத்தூர் ஜில்லா பார்ப்பன ரல்லாதார் மகாநாட்டை தென் இந்திய பார்ப்பனரல்லாதார் மகாநாடாக நடத்த வேண்டும் என்பதாக சில ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் விரும்பியதால் கோய முத்தூர் ஜில்லா மகாநாட்டு வரவேற்பு சபையினரும் அதற்கு இசைந்து       25 தேதி ஒரு மீட்டிங்கு கூட்டித் தென் இந்திய பார்ப்பனரல்லாதார் சங்க நிர்வாக சபை அம்மாதிரியே தீர்மானித்து வேண்டிக் கொண்டால் அந்தப் படிக்கே தங்களது மகாநாட்டை மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடாக நடத்துவதாகத் தீர்மானமும் செய்தாய் விட்டது. இதன் பலனாக ஜுன் 11, 12 தேதிகளில் கூட்டுவதாயிருந்த மகாநாடு மறுபடியும் தேதி மாறினாலும் மாறலாம்.

periyar and kamarajarஜில்லா மகாநாட்டை மாகாண மகாநாடாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி நண்பர்கள் ஐயுறலாம். அதற்கு நாம் ஒரே பதில் அளிக்கிறோம். காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையுமே தான் காரணம். அதாவது,

ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த சில கனவான்களுக்கு காங்கிரஸினி டத்தில் பைத்தியம் ஏற்பட்டிருப்பதும் காங்கிரசிலுள்ள பல கனவான்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் சேரவேண்டும் என்கிற எண்ணமும்தான் இச் ஜில்லா மகாநாட்டை மாகாணமாக நடத்தப் போகிறது.

நிற்க, காங்கிரசிலுள்ள கனவான்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவது நமது இயக்கத்திற்கு இன்னும் நல்ல காலமென்றே சொல்லுவோம். அவர்களை மனப்பூர்வமாய் வரவேற்போம். அப்படி அவர்கள் வந்து சேருவதற்கு இடையூறாக நம்மிடம் என்னென்ன குற்றங்கள் இருக்கின்றதாகச் சொல்லு கிறார்களோ அவைகளையெல்லாம் விலக்க நம்மாலான வரை முயற்சி செய் வோம். இன்னமும் நம்மீது யாருக்காவது மனவருத்தமிருந்தாலும் மன்னிப்புக் கேட்கவும் பின்வாங்கோம். ஏனெனில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற மடைவதற்கும் அவர்கள் சுயமரியாதை அடைவதற்கும் எந்த விதத்தினாலும் எல்லாப் பார்ப்பனரல்லாதாரும் ஒன்று கூடினால்தான் எதிர்பார்க்கும் பலன் முழுவதும் அடையமுடியும் என்கிற முடிவான கருத்தை நாமுடையவ ராதலால் இந்த நிலையில் நாம் வலிய அழைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் காங்கிரசில் ஜஸ்டிஸ் கட்சியார் எல்லோரும் போய்ச் சேரவேண்டு மென்பதையோ பார்ப்பனரல்லாதார் எல்லோரும் போய்ச் சேர வேண்டு மென்பதையோ நாம் ஆதரிக்க முடியாததற்கு வருந்துகிறோம். ஏனெனில் காங்கிரசைப் பற்றி இதற்கு முன் பல தடவைகளில் “குடி அரசில்” எழுதியும், அனேகக் கூட்டங்களில் பேசியும் வந்திருக்கிறோம். அதற்கு நாளதுவரை யாரும் பதில் சொல்லவேயில்லை.

காங்கிரசினால்தான் வெள்ளைக்கார ஆட்சியோ, அதிகார வர்க்க ஆட்சியோ, அன்னிய ஆட்சியோ எதுவோ அதாவது நமது நாட்டிற்கு அனுகூலமில்லாத ஆட்சி பலப்பட்டு நடைபெற்று வருகிறதென்பதும், காங்கிரசினாலேயேதான் மக்கள் ஒற்றுமை இழந்து ³ அரசாட்சியைத் தாங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், காங்கிரசினா லேதான் நம் நாட்டுத் தொழில்கள் கெட்டு தொழிலாளிகள் கஷ்டப்படுகிறார் கள் என்பதும், வருஷம் ஒன்றுக்கு 10 லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நம் நாட்டைவிட்டு வெளியில் கூலிகளாக போய்க்கொண்டிருக்கிறார்களென்பதும், காங்கிரசினாலே தான் உத்தியோகங்கள் பெருத்ததென்பதும், காங்கிரசினாலேதான் அவ்வுத்தியோகங்களுக்கு உலகத்தில் எங்குமே இல்லாத கொள்ளைச் சம்பளம் அதாவது மாதம் 1000, 2000, 5000, 6000, 10000 போல ஏற்பட்டதும் வக்கீல்கள் பெருத்து மாதம் 1000, 10000, 20000, 50000 வீதம் ஏழை மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஏற்பட்டதும், ஏழைக் குடிகள் தலையிலும், வியாபாரிகள் தலையிலும் தாங்க முடியாத வரிகள் ஏற்பட்டதும், பணக்காரர்கள் மேல் மேல் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேல் மேல் ஏழைகளாகவும், தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் தரித்திரத்தினால் மானம், கற்பு, சுயமரியாதை, மனச்சாட்சி இவைகளை விற்று வாழும்படி ஏற்பட்டதும் காங்கிரசினால்தான் என்பது நமது உறுதியான அபிப்பிராயம்.

இதை எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லவும் மெய்ப்பிக்கவும் தயாராயிருக்கிறோம். இப்படிப்பட்ட இன்னல்கள் விளைவிக்கும் ஒரு ஸ்தாபனத்தை தேசாபி விருத்தியில் கவலையுள்ள வர்களும் ஏழை மக்களிடத்தில் அன்புள்ளவர்களும் ஒழித்து நன்மை பயக்கத்தக்க இயக்கத்தில் சேர்ந்து உழைக்க வேண்டுமே அல்லாது அதில் தாங்களும் போய்ச் சேருகிறோம் என்பதும், நீங்களும் வாருங்கள் என்று மற்றவர்களைக் கூப்பிடுவதும் கொலை பாதகமென்பதே நமது கருத்து. என்றாலும், அரசியலை வாழ்வாய் கொண்டவர்களும் ஆங்கிலம் படித்தவர் களும் எவ்வளவு தான் பரிசுத்தமான எண்ணமுடையவர்களாயிருந்த போதிலும் காங்கிரஸ் படுகுழியில் விழாமல் தப்புவிக்க முடியவே முடியாது. ஏனெனில் அரசியல் வாழ்வுக் காரர்கள் பாமர மக்களை ஏமாற்ற சர்க்காரை வைய வேண்டும். ஆங்கிலம் படித்தவர்கள் பெரும் பெரும் பதவி, உத்தியோகம் முதலியதுகளைப் பெற வேண்டும். இவ் விரண்டுக்கும் இது சமயம் நமது நாட்டில் காங்கிரசை விட வேறு இயக்கம் கிடையாது. ஆதலால் அவர்கள் காங்கிரசை விடமுடியாது என்பதை யாவரும் ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.

இதுசமயம் காங்கிரசுக்கு நமது நாட்டில் இழிவு ஏற்பட்டு விட்டதாலும், காங்கிரஸ் நாம் மேற்கூறிய இவ்வளவு இன்னல்களுக்கும் காரணமாயிருப் பதையும் சமீபத்தில் பம்பாய் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை களைப் பார்த்த பிறகு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமானதும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அநுகூலமான ஸ்தாபனம் என்பதை யாவரும் ஒப்புக்கொள்ள வேண்டி ஏற்பட்டதாலும், காங்கிரசானது பார்ப்பன ரல்லாதாரை நசுக்கவே பார்ப்பனர்கள் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆயுதம் என்பது யாவருக்கும் தெரிந்து விட்டதாலும், அதிலிருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே அவர்கள் “பார்ப்பனரல்லா தாரில் முக்கியமாயுள்ளவர்கள் காங்கிரசை விட்டுவிட்டதால் ஒரு சிறிய கூட்டத்தார் பெரும்பான்மையராகி அதில் ஆதிக்கம் பெற்று பார்ப்பன ரல்லாதாருக்கு விரோதம் செய்கிறார்கள். ஆதலில் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மையாகிவிட்டதால் அவர்களது ஆதிக்கம் காங்கிரசில் குறைந்து விடும். பிறகு நமக்கு சுயராஜ்யம் வந்து விடும்” என்கிறார்கள்.  இது வாலறுந்த நரி கதையே தவிர வேறல்ல.

ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள சில ஆங்கிலங் கற்ற பிரமுகர்களோ “நாம் நமது மாகாணத்துக்குள் எவ்வளவுதான் செல் வாக்கு பெற்றிருந்தாலும் காங்கிரசின் மூலம் நமது நாட்டுப் பார்ப்பனர்கள் வெளி மாகாணங்களின் மூலமாக தங்களுக்கு அனுகூலம் தேடிக் கொள் கிறார்கள். இப்போது பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் உபத்திரவங் களில் பெரும்பாகம் காங்கிரசினால்தான் ஏற்படுகிறது. ஆதலால் அதை நாம் கைப்பற்றிக் கொண்டால் அதாவது அவர்களிடமிருந்து நாம் பிடுங்கிக் கொண்டால் நமக்கும் உபத்திரவம் செய்ய அவர்களுக்கு வேறு ஆயுதம் இல்லாமல் போய்விடும்” என்பதாகச் சொல்லுவதோடு “இப்பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளி மாகாணங்களிலும் போய்ச் சொல்ல சௌகரிய மாயிருக்கும்” என்றும் சொல்லுகிறார்கள். இது “கொக்கு தலையில் வெண்ணை வைத்து அது உருகி கண்ணுக்கு வந்து கண் தெரியாமல் போகும் போது பிடித்துக் கொள்ளலாம்” என்பது போல் இருக்கிறது.

மற்றொரு கூட்டத்தார் அதாவது காங்கிரசில் ஒரு காலும் ஜஸ்டிஸ் கட்சியில் ஒரு காலும் வைத்திருக்கிறவர்கள். “இப்போது தானே இந்தக் காங்கிரஸ் இப்படி தேசத்துக்கும் சமூகத்திற்கும் துரோகம் செய்கிற ஸ்தாபனமாகிவிட்டது. இதுவரையில் தேசத்திற்கு எத்தனையோ நன்மை செய்திருக்கிறது. ஆதலால் அதைக் கைப்பற்றி முன் போல செய்யவேண்டும் என்கிறார்கள்.” இது முழு மோசமான தென்றே சொல்லலாம். ஆகவே இம்மூன்று வாதங்களும் கொஞ்சமும் பொருத்தமானதல்ல.

முதலாவது, காங்கிரசை எந்த காரணம் கொண்டும் நம்மால் கைப்பற்ற முடியவே முடியாது. மகாத்மா காலத்திலும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தது. ஆனால் நம்மை முன்னால் இருத்தி வேலை வாங்கிக் கொண்டு வந்தார்கள். இப்போதும் காங்கிரஸ் நம்ம கைக்கு வரவேண்டு மானால் பார்ப்பனர்கள் சொல்படி நடந்தால் உடனே வந்துவிடும். மற்றபடி அவர்கள் நன்மைக்கல்லாமல் நாம் கைப்பற்றுவதானால் முடியவே முடியாத காரியம் என்பது நமது அபிப்ராயம். ஏனெனில் காங்கிரசைக் கைப்பற்ற நமக்கு பார்ப்பனர்களுக்கு ஆள்கள் கிடைப்பதைப் போல நாமும் விசேஷ பணம் செலவு செய்து ஆள்களைச் சேர்த்துக் கொண்டு காலித்தனத்திற்குத் தயாராயிருக்க வேண்டும். பார்ப்பனர்கள் செலவு செய்யும் பணமும் அவர் கள் பேச்சைக் கேட்டு காலித்தனம் செய்யும் ஆள்களும் அவர்களுடையது அல்ல. நம்ம பணங்கள்தான், நம்ம ஆள்கள்தான். அதாவது நமது பண்டாரச் சன்னதிகள், ஜமீன்தாரர்கள், பெரிய பெரிய மிராசுதாரர்கள் முதலியவர்களைத் தங்கள் அதிகார பலத்தால் மிரட்டிப் பணம் பெற்று விடுகிறார்கள். அதைக்கொண்டு நம்மவர்களுக்கே கொடுத்து நம்மவர்களையே பிடித்து நம்மை வையச் சொல்லவும், காலித்தனம் செய்து அடிக்கச் சொல்லவும், அடிபடவும், வசவு கேட்கவும் செய்து விடுகிறார்கள். அன்றியும் இம்மாதிரி நம்மில் பலர் காங்கிரசைக் கைப்பற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருப் பதைக் கேள்விப்பட்டவுடன் காங்கிரஸ் வரவேற்பு கமிட்டி அக்கிராசனர் வேலையை 45000 ரூபாய்க்கு ஒரு அய்யங்கார் பார்ப்பனருக்கு விற்று விட்டதாகவும் அந்த அய்யங்கார் பார்ப்பனர் அந்த 45 ஆயிரம் ரூபாயையும் 2, 3 மடாதிபதிகளிடமும் இரண்டொரு மகந்துக்களிடமும் வாங்கிக் கொடுக்கத் தீர்மானித்து விட்டதாகவும் சென்னையில் பலமான வதந்தி உலாவுகிறது. இதற்கு நாம் செலவு செய்ய பணம் யாரிடமிருக்கிறது.

நமக்கு எந்த மடாதிபதி கொடுக்க முடியும். தவிர நம்மவர்களையே பிடித்து நம்முடன் கலகம் செய்யத் தூண்டிவிட்டால் நாம் அவர்களுக்கு பணம் கொடுத்து சரி செய்ய நம்மால் முடியுமா? தவிர ஸ்ரீமான்களான ஒரு ஓ. கே. செட்டி யாரையும், ஒரு நாயுடுவையும், ஒரு முதலியாரையும், ஒரு நாயக்கரையும், ஒரு பிள்ளையையும், ஒரு குழந்தையையும், ஒரு பாவலரையும், ஒரு சாயபு வையும் நாம் வசப்படுத்திக் கொண்டால் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு வேறு நாயுடு, முதலியார், செட்டியார், நாயக்கர், பிள்ளை, பாவலர், சாயபு கிடைக்கமாட்டார்களா? இப்படி எத்தனை பேரை வசப்படுத்த எவ்வளவு ரூபாய் செலவு செய்து எத்தனை காலித்தனங்களுக்கு நாம் தலை கொடுப்பது? இவ்வளவும் செய்தாலும் இந்த விஷயங்கள் தெரிந்தே சமீபத்தில் கூடிய எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஒரு தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறார்களே அதற்கு என்ன செய்வது? அதாவது “ஒரு ஊரில் இரண்டு காங்கிரஸ் கமிட்டி ஏற்பட்டு விட்டால் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் எதை ஒப்புக் கொள்ளுகிறார்களோ அதுதான் செல்லுபடி உள்ளது. மற்றது தள்ளிவிடத் தக்கது” என்று செய்து கொண்டிருக்கிறார்களே. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

ஏதோ ஒரு அன்னக்காவடியைப் பிடித்து ஒரு அய்யர் பிரசிடெண்டு ஒரு அய்யங்கார் காரியதரிசி 2, 3 சோணகிரிகள் நிர்வாக மெம்பர்கள் என்று கடிதத்தில் எழுதிக்கொண்டால் அதைத்தான் காரியக் கமிட்டி ஏற்றுக்கொள்ளுமே தவிர இங்கு நாம் எவ்வளவுதான் ஒழுங்காய் வேலை செய்து ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு பிரசிடெண்டு, ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் காரியதரிசி, பனகால் ராஜா, கலியாணசுந்திர முதலி யார், ராமசாமி நாயக்கர் நிர்வாக சபை மெம்பர்கள் என்று சொன்னாலும் அதை ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காரோ சத்தியமூர்த்தியோ பார்த்துக் காரியக்கமிட்டியால் குப்பைத் தொட்டியில் போடச் செய்ய வேண்டுமானால் அரை க்ஷண நேரத்தில் முடியும். அப்படித்தான் ஜயித்தாலும் காங்கிரசிலும் அகில இந்தியக் காங்கிரஸ் காரியக்கமிட்டி இதுகளிலும் நம்மால் என்ன செய்துவிட முடியும்? பம்பாயில் ஸ்ரீமான் முத்தையா முதலியார் கொஞ்சம் பேசுவதற்குத் தன்னாலானவரை பாடுபட்டும் கடன் வாங்கிப் பார்த்தும் முடியாமல் முக்காடு போட்டுக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். அதற்குமேல் யார் என்ன செய்து விட முடியும்? எப்படியும் எல்லா இந்தியத் தலைவர் பார்ப்பனராகவோ அல்லது ஸ்ரீமான் தாஸ் போன்ற விபீஷணர் களாகவோதான் இருக்க முடியும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டும் அதைப் பிடித்துவிட்டாலும் அதனுடன் மாரடிக்கவும் அதை மறுபடியும் பார்ப்பனர்கள் கைப்பற்றாதிருக்க பாடுபடவும் அதே வேலை நமக்கு சரியாய் இருக்குமே ஒழிய அரை நிமிடமாவது நமக்கு நாட்டிற்கோ சமூகத்திற்கோ வேலை செய்யக் கொஞ்சமும் ஓய்வு இருக்காது. அப்படித்தான் ஓய்வு இருந்தாலும் நமக்கு வேண்டிய திட்டங்களை யெல்லாம் இந்தியக் காங்கிரசில் புகுத்த முடியாது. ஆகவே இவ்வளவு கஷ்டங்கள் காங்கிரசிலிருப்பதை யோசித்துப் பார்த்தால் யாருக்கும் விளங்காமல் போகாது.

ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு எல்லோரும் வாருங்கள் காங்கிரசில் சேருங்கள் என்று பார்ப்பனரல்லாதாரைக் கூவியழைத்ததும் பார்ப்பன மித்திரனுக்கும் பார்ப்பன சுயராஜ்யாவுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்து விட்டது என்பதைப் பாருங்கள். மித்திரன்  “ஸ்ரீ வரதராஜுலு நாயுடு பேச்சைக் கேட்டு பார்ப்பனரல்லாதார்களே கெட்டுப் போய்விடாதீர்கள்” என்று புத்தி சொல்லுகிறான். மற்றொருவன் காங்கிரசுக்கு ஆபத்து வந்து விட்டது போல் ஆத்திரப் படுகிறான். ஆகவே காங்கிரசு பார்ப்பனர்கள் வீட்டுச் சொத்தாய் இருந்து அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து வந்திருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லையா? நாம் ஏன் அங்கு போக வேண்டும். நமக்கு ஒரு சொத்து தேடிக் கொள்ள முடியாதா? இப்பொழுது காங்கிரசின் பூரா யோக்கியதையும் வெளியாகி அது உலகத்தாரால் அவமதிக் கப்பட்டு கூடிய சீக்கிரத்தில் சாகப்போகும் ஒரு ஸ்தாபனத்திற்கு நாம் போய் உயிர்கொடுத்து அதற்கு யோக்கியதை உண்டாக்கிப் பார்ப்பனர்கள் கையில் ஒப்படைத்து விட்டு வர வேண்டுமா? ஸ்ரீமான் நாயக்கர் சொம்பையும் மூட்டையையும் தூக்கிக் கொண்டு காலை ஒரு ஊர், பகல் ஒரு ஊர், மாலை ஒரு ஊர், படுக்கை ஒரு ஊராகத் திரிந்து காங்கிரசுக்கு உழைத்த உழைப்பு இன்று என்ன ஆச்சுது. ஸ்ரீமான் முதலியார் தொண்டைக் கிழியக் கத்திக் காங்கிரசுக்கு உழைத்தது இன்று என்ன ஆச்சுது. ஸ்ரீமான் நாயுடு ஜஸ்டிஸ் கட்சியைக் கொலை செய்து காங்கிரசுக்கு வீரகண்டாமணி சூட்டியது இன்று என்ன ஆச்சுது?

“தென்னாட்டுத் திலகரை (ஸ்ரீ நாயுடுவை) காங்கிரசை விட்டுத் துரத்த வேண்டும்,  மாரீசனை (ஸ்ரீ முதலியாரை) காங்கிரசை விட்டு வெளியாக்க வேண்டும், நாயக்கரை ஜெயிலில் பிடித்து அடைக்க வேண்டும்” என்று சொன்னவரைத் தானே காங்கிரசு தனக்கு தலைவராக ஏற்றுக் கொண்டது வேறு அதனிடத்தில் நாட்டுக்கோ மக்களுக்கோ சமூகத்திற்கோ இருக்கும் நன்மையோ, நாணயமோ இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆனபோதிலும் ஜஸ்டிஸ் கட்சியில் வந்து சேருவதற்கு காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதாருக்குத் தடையாக ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு 25 - தேதி தந்தியில் கண்ட காரணமாகிய இரண்டு மாத்திரமே அதாவது “ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரஸ் விவகாரங்களை எதிர்க்கக்கூடாது” என்பதும் “பார்ப்பனரல்லாதார்கள் தங்கள் சொந்த ஹோதாவில் காங்கிரசில் சேர அனுமதி அளிக்க வேண்டும்” என்பதுகளே ஆnக்ஷபணைகளா யிருக்கு மானால் அதைப்பற்றி நமக்குத் தோன்றியதைச் சொல்லுகிறோம். இரண்டா வது விஷயத்தைப் பற்றி நமக்கு ஆnக்ஷபணை இல்லை. சொந்த ஹோதா வில் காங்கிரசில் சேருகிறவர்கள் சேர்ந்து கொள்ளட்டும்.

முதலாவது விஷயமாகிய அதாவது “காங்கிரஸ் விவகாரங்களை ஜஸ்டிஸ்காரர்கள் எதிர்க்கக்கூடாது” என்று சொல்லுவது நியாயமாகுமா? நேற்று பம்பாயில் கூடிய கூட்டத்தின் நடவடிக்கைகளை இப்போது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு முதல் உலகமே எதிர்க்கிறதே. கயா தீர்மானங்களை தேசபந்து தாஸ் எதிர்க்க வில்லையா? காங்கிரசு சூழ்ச்சிகளை ஜனங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாமா? காங்கிரசு தேவஸ்தான ஆக்டை எதிர்த்தால் ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் சும்மா இருக்க வேண்டியதா? காங்கிரசு சர்க்காரை ஆதரித்தால் ஜஸ்டிஸ்காரர்கள் சும்மா இருக்க வேண்டியதா? காங்கிரஸ் இப்போதைய மந்திரிகளை ஆதரிக்க அ. இ. கா. கமிட்டி உத்திரவு பெற்று வந்து விட்டதால் ஜஸ்டிஸ் கட்சியும் ஸ்ரீமான் சுப்பராய மந்திரியை எதிர்க்கக்கூடாதா? ஆதரிக்க வேண்டியதுதானா? என்பதுகளை யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு கொடுமையான அடக்குமுறை என்பது விளங்காமல் போகாது. இதுவரை காங்கிரஸ் எத்தினை குட்டிக்கரணங்கள் போட்டு வந்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாதா? ஆதலால் முதலாவது நிபந்தனை நீக்கி இரண்டாவது நிபந்தனையை ஒப்புக்கொள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆnக்ஷபணை இருக்காது என்றே எண்ணுகிறோம். மற்றபடி நமக்கு சொந்தத்தில் எதைப்பற்றியும் அதிகமான கவலை கிடையாது. ஏனெனில் நாம் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களைப் பற்றியும் ஜஸ்டிஸ் அரசியல் விவகாரங்களைப் பற்றியும் நம்பிக்கையே கிடையாது.

இரண்டின் அரசியல் விவகாரங்களையும் புரட்டு என்றும் பாமர ஜனங்களையும் ஏமாற்றி உத்தியோகம் சம்பாதிக்கும் வழி என்கிறோம். நமது தேசாபிமானம் நிர்மாணத் திட்டம்தான். நமது அரசியல் விவகாரம் எல்லா மக்களுக்கும் சரிசமமாய் அரசாங்கப் பதவி உத்தியோகத் தில் உரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான். நமது ஜீவகாருண்ணியமும் பரோபகாரமும் சுயமரியாதைதான். ஆதலால் மற்றவைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நம்மால் ராஜி கெட்டு போய் விட்டது என்கிற பெயர் வேண்டியதில்லை. ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் நிபந்தனைகளைப் பற்றி யோசிப்பவர்கள் நம்மைப்பற்றி யாரும் நினைக்க வேண்டியதில்லை. யார் எப்படி தீர்மானம் செய்து கொண்டாலும் மேற்குறித்த நமது கொள்கை களை நிறைவேற்றும் விஷயத்தில் யார் யார் உதவி செய்யக் கூடும் என்று தோன்றினாலும் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் அவர் களுடன் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.

நமது மேற்கண்ட கொள்கைகளுக்கு யார் யார் எதிராயிருந்தாலும் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் அவர்களை எதிர்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதைப் பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 29.05.1927)

Pin It