மாயவரம் மகாநாட்டைப் பற்றி ஸ்ரீ வரதராஜுலு நாயுடு செய்த சூழ்ச்சிகளைப் பற்றியும், அதுகள் பலிக்காமல் மகாநாடு செவ்வனே நடந்தேறிய பிறகும் அம்மகாநாட்டைப் பற்றியும், அதில் நிறைவேறிய தீர்மானங்களைப் பற்றியும் பொறாமை கொண்டு குரோத புத்தியோடு கண்டித்து எழுதிய பான்மையைப் பற்றியும் சென்ற வாரம் விபரமாக ஒவ்வொரு விஷயமாய் பிரித்து பிரித்து எடுத்துக் காட்டி பொது மக்களுக்கு விளங்கும்படி தக்க சமாதானமும் எழுதியிருந்தோம். அதற்கு பதில் என்கிற முறையில் “தமிழ்நாடு” பத்திரிகையில் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு நாம் எழுதியதில் ஒரு வரியாவது எடுத்துப் போட்டு அதற்கு சரியான சமாதானமாக ஒரு வரியாவது எழுதுவதற்கு யோக்கியதை இல்லாமல் போனதோடு பயங்கொள்ளித்தனமாய், “நயவஞ்சகம்,” “கடைசி வார்த்தை” என்ற தலைப்புகளின் கீழ் “பழைய விரோதம்,” “வெகுநாளைய கெட்ட எண்ணம்” என்கிற வார்த்தைகளைப் போய்க் கட்டிப் பிடித்துக் கொண்டு, அதுகளை சரணாகதி அடைந்து தப்பிக்கப் பார்க்கிறார்.

periyar and anna“நாயக்கரின் நயவஞ்சகம்,” “பழைய விரோதம்,” “வெகு நாளைய பொறாமை” இதுகளைப் பற்றிப் பின்னால் தக்க ஆதாரங்களுடன் விவரிக்கின்றோம். இப்போது நாம் 15-5-27 “குடி அரசில்” எழுதியதுகளுக்கு என்ன பதில் சொல்கிறார் என்றே கேட்கிறோம். அதோடு “எது பொய்ப் பிரசாரம்” என்று 24-4-27 தேதியில் எழுதியதற்கும் என்ன பதில் சொல்லுகிறார் என்றே கேட்கிறோம்.

ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு இதுகளையெல்லாம் லக்ஷியம் செய்து இதற்குப் பதில் எழுதிக் கொண்டிருப்பதில் தனது காலத்தை சிலவழிக்க இஷ்டப்படவில்லை என்று எழுதித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கலாம், அது நடவாது. முன் ஒரு தரம் அதாவது ‘பொய்ப் பிரசாரம்’ என்ற தலைப்பின் கீழ் எழுதியதிலும் இப்படித்தான் எழுதினார். ஆனால் மறுபடியும் கடைசி வார்த்தை என்ற தலைப்பு வந்துவிட்டதா இல்லையா? அல்லாமலும் கொஞ்சம் தனக்கு இடம் கிடைத்தும் உடனே பதில் எழுதினாரா இல்லையா? அதாவது “முதலியாருக்கு பயமுறுத்தல் கடிதம் எழுதியவர் ஜஸ்டிஸ் கட்சியார்” என்றும் அதற்கு ஸ்ரீமான் ஓ.கே.ராமசாமி செட்டியார் கடிதத்தையும் தருவித்துப் பிரசுரித்தாரா இல்லையா? ஆகவே இப்போதும் கடைசி வார்த்தை என்று எழுதிவிட்டாலும் ஆதாரம் இருந்தால் கண்டிப்பாய் பதில் வருமென்றே நினைக்கிறோம். பதிலெழுத யோக்கியதை இல்லாவிட்டால் அதுவே கடைசி வார்த்தையாய் இருக்கட்டும். ஆனால் பார்ப்பனரல்லாதார் கக்ஷியை வைது கொண்டு வாழும் வரை வரதராஜுலுவின் வண்டவாளம் வந்து கொண்டே இருக்கும்.

நமது கேள்விகள்

  1. தேச பக்தர்கள் மாயவரம் மகாநாட்டிற்கு (போகக்கூடாது என்கிற எண்ணத்துடன்) போக மாட்டார்கள் என்று எழுதினாரா இல்லையா?
  1. பிறகு தானே “உடம்பு சௌகியமில்லாததால் மகாநாட்டுக்கு வரமுடியவில்லை” என்று எழுதினாரா இல்லையா?
  1. மகாநாட்டு விஷயங்களைப் பற்றி ரிப்போர்ட் செய்வதற்கு தமது ஆபீஸ் மானேஜர் ஒரு பார்ப்பனரல்லாத ரிப்போர்ட்டரை அனுப்ப ஏற்பாடு செய்திருந்தும் அவர் போனால் மகாநாட்டுக்கு விரோதமாய் ரிப்போர்ட் செய்யமாட்டார் என்று ஒரு பார்ப்பன ரிப்போர்ட்டரை அனுப்ப வேண்டுமென்று உத்திரவு போட்டாரா இல்லையா?
  1. மகாநாட்டுத் தீர்மானங்களில் 4, 5 மாத்திரம் தனது பத்திரிகையில் போட்டு விட்டு மற்றதைப் போடாமலே மறைத்து விட்டதோடல்லாமல், சில தீர்மானம் மகாநாட்டில் செய்திருந்தும் அவைகளைச் செய்யவில்லை என்பதாக ஒரு போலிக் குற்றம் சாட்டித் தன் குரோத புத்தியைக் காட்டிக் கொண்டாரா இல்லையா?
  1. மதுரை மகாநாடு கூட்டும் தேதியில் தானும் ஒரு மகாநாடு கூட்டுவதாக வெளிப்படுத்தி இதற்கு இடைஞ்சல் செய்ய சூழ்ச்சி செய்தாரா இல்லையா?
  1. இவரது சூழ்ச்சியை லக்ஷியம் செய்யாமல் அது செவ்வனே நடக்கப்போகிற சங்கதி தெரிந்து அதை ஒத்திபோட்டதாக எழுதிவிட்டாரா இல்லையா?
  1. ஸ்ரீமான் முதலியாருக்கு பயமுறுத்தல் கடிதம் எழுதினவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரானாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. அக்கடிதம் எழுதினவர் “தமிழ்நாடு” பத்திரிகைக்கு ஒரு ஏஜண்டா இல்லையா? என்பதுதான் நமது கேள்வி.
  1. அக்கடிதம் எழுதினவர் மகாநாட்டின் போது “தமிழ்நாடு” பத்திரிகை களை கையில் வைத்து விற்றுக் கொண்டும் சந்தா சேர்த்துக் கொண்டும், இருந்தாரா இல்லையா?
  1. இதை ஸ்ரீமான் ஒ.கே. ராமசாமி செட்டியார் பார்த்தாரா இல்லையா?
  1. அன்றியும் ஸ்ரீவரதராஜுலு நாயுடு “குடி அரசு” எழுதிய மற்ற சங்கதிகளுக்கு எல்லாம் பதில் எழுதாமல் விட்டு விட்டு இதற்கு மாத்திரம் பதில் எழுதப் புறப்பட்டவர் “ஸ்ரீமான் முதலியாருக்கு பயமுறுத்தக் கடிதம் எழுதியவர் ஜஸ்டிஸ் கட்சியார்” என்று எழுதினாரே அல்லாமல் அவர் ‘தமிழ்நாடு’ ஏஜண்டா இல்லையா என்று ஏன் தானே தைரியமாய் எழுதியிருக்கக் கூடாது? இதற்கு “முதலியார் சொன்னார்” “செட்டியார் எழுதுகிறார்” என்று ஏன் எழுத வேண்டுமென்று இப்பொழுதும் கேட்கிறோம். “குடி அரசு”ம் இதைப் பற்றி எழுதுகையில் “தமிழ்நாடு பத்திரிகையின் ஏஜண்டு ஒருவர் ஸ்ரீமான் முதலியாரவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் கடிதம் எழுதினார்” என்று தான் எழுதிருக்கிறதே அல்லாமல் இன்ன கட்சி என்று எழுதிற்றா? இந்தச் சமாதானம் கொல்லத் தெருவில் ஊசி விற்றது போல் இருக்கிறதே அல்லாமல் வேறென்ன?
  1. தவிர நாகப்பட்டணம் ஸ்ரீமான் பக்கிரிசாமி பிள்ளை குமாரர் ஸ்ரீமான் ஏ.ஞ.காயாரோகணம் பிள்ளை அவர்களும் மற்றும் 63 கனவான்களும் தன்னை மகாநாட்டுக்கு வரும்படி அழைத்ததாக ஒரு போலிக் கடிதத்தைத் தன் பத்திரிகையில் போட்டு விளம்பரம் செய்துகொண்டு அதன் மூலம் ஜஸ்டிஸ் கட்சியையும் வைது பெருமை பாராட்டிக் கொண்டாரா இல்லையா? அக்கடிதம் முற்றிலும் பொய் என்றும், தான் எழுதவில்லை என்றும், “ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தனது அரசியல் கொள்கை இன்னது என்று யாரும் கண்டுபிடிக்காத மாதிரியில் இருப்பதாலும் அவரது கொள்கைகளும் திட்டங்களும் தினம் இருமுறை மாறி வருவதாலும், நான் அவரது வரவை அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்க நியாயமில்லை” என்று பகிரங்கமாக எழுதி இருக்கிறாரே, அதற்கு இதுவரை ஸ்ரீமான் நாயுடு ஏதாவது பதில் எழுதினாரா? ஸ்ரீமான் காயாரோகணம் பிள்ளைக்கும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கும் வெகுநாள் விரோதமா பொறாமையா? அல்லது நயவஞ்சகமா? என்று கேட்கிறோம்.
  1. இதுவும் தவிர மன்னார்குடியில் இருந்து சமரச ஞான சபையார் பேரால் 48 கனவான்கள் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவை மகாநாட்டுக்கு அழைத்ததாக மற்றும் ஒரு பொய்க் கடிதத்தைத் தனது பத்திரிகையில் பிரசுரித்துத் தன்னை பெருமைப்படுத்திக் கொண்டதோடு அதற்கு வர முடியாது என்பதாக எழுதியதில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களைத் தாக்குவதால் வரமுடியாது என்று பார்ப்பனருக்கு வக்காலத்து வாங்கி எழுதினாரா இல்லையா? தவிர மன்னார்குடி சமரச ஞானசபை காரியதரிசியார் இம்மாதிரி கடிதம் தாங்கள் எழுதவில்லை என்று எழுதி இந்தப் பித்தலாட்டத்தை வெளியாக்கினார்களே அதற்கு ஏதாவது ஸ்ரீமான் நாயுடு பதில் எழுதினாரா? சமரச ஞான சங்கக் காரியதரிசியாருக்கும் ஸ்ரீவரதராஜுலுக்கும் வெகுநாள் விரோதமா பொறாமையா அல்லது நயவஞ்சகமா? தவிர மன்னார்குடி கடிதத்தில் காணும் 48 பெயர்களையும் தலைப்பு எழுத்துக்கள் இல்லாமல் மொட்டை மொட்டையாய் பத்திரிகையில் போட்டுக் கொண்டதிலிருந்தே இக்கடிதம் இக்காரியத்திற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டதும் அனாமதேயக் கடிதம் என்பதும் உறுதியாகிறதா இல்லையா?

இத்தனைப் புரட்டும் பித்தலாட்டமும் நாணயக் குறைவும் தன்னிடம் பிறர் கண்டுபிடிக்க இடம் ஏற்படுகிறதே என்பதற்கு கொஞ்சமாவது வருந் தாமலும் வெட்கப்படாமலும் பொது நன்மையை உத்தேசித்து தனக்கு சரியென்று தோன்றியதை யாராவது நியாய வழியில் செய்தால் அதனிடம் பொறாமையும் துவேஷமும் கொள்ளுவதும் அதைக் கெடுக்க சூழ்ச்சி செய்வதும் அதை யாராவது கண்டித்தால் அது பழய விரோதம், பொறாமை, நயவஞ்சகம் என்று எழுதுவதும் எவ்வளவு இழிகுணம் என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

ஸ்ரீமான் நாயக்கர் எழுதியவைகளுக்கு தலைப்புப் பேர் கொடுத்த நயவஞ்சகம் என்கிற வார்த்தையையே தான் ஸ்ரீமான் நாயுடு மே மாதம்  4 - ந் தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில் சுதேசமித்திரனுக்கும் கொடுத்து இருக்கிறார். அதாவது “சுதேசமித்திரனின் நயவஞ்சகம்” என்று தலையங்கமிட்டு ஒரு வியாசம் இதுபோலவே எழுதியிருக்கிறார்.

ஸ்ரீமான் நாயுடுவின் வண்டவாளத்தை வெளிப்படுத்துகிற ஒவ்வொருவருக்கும் ஸ்ரீமான் நாயுடு இந்தப் பெயரையே கொடுத்து தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அது கண்டிப்பாய் இனி நடவாது என்றும் ஸ்ரீமான் நாயுடுவிடம் “நயவஞ்சகம்” என்கிற பெயர் வாங்க இனியும் 1000க்கணக்கான பெயர்கள் நமக்குப் பின்னால் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஸ்ரீமான் நாயுடு மேல்கண்ட தனது குணங்களை மாற்றிக் கொண்டாலொழிய “நயவஞ்சகம்” தமிழ்நாட்டு மக்களிடம் நிற்கப் போவதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

மற்றபடி “நாயக்கரின் நயவஞ்சகம்” என்ற தலைப்பின் கீழ்கண்ட கடிதங்களுக்கும் கடைசி வார்த்தைக்கும் அடுத்த வாரம் விபரமாய் பதில் எழுதுவோம். ஏனெனில் அக்கடிதங்கள் சம்பந்தமாக சில ஆராய்ச்சிகள் வேண்டியிருப்பதாலும் அதுகளுக்கு பதில் எழுதிய பல கடிதங்களைத் தேடி எடுக்க வேண்டியிருப்பதாலும் நாம் கோவை, கள்ளிக்கோட்டை முதலிய இடங்களில் இந்த வாரம் முழுவதும் செலவு செய்ய வேண்டி ஏற்பட்டு விட்டதாலும் சாவகாசமும் இடமும் இல்லை. ஆனாலும் அடுத்த வாரம் நாலு பக்கம் இதற்காகவே அதிகமாய்ப் போட்டு விபரமாய் எழுதுகிறோம்.

குறிப்பு :-

பார்ப்பனரல்லாதாருக்குள்ளாகவே நாயக்கரின் நயவஞ்சகமும் வரதராஜுலுவின் வண்டவாளமுமான மனவருத்தத்திற்கிடமான சங்கதிகள் எழுத நேரிடுவது பற்றி சில உண்மையான பெரியோர்களின் மனம் சங்கடப் படக்கூடும் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் இதனால் ஒன்றும் முழுகிப் போய்விடாது. உலகத்திற்கோ சமூகத்திற்கோ இதனால் நன்மையே தான் ஏற்படும் என்பதே நமது உறுதியாகும். ஏனெனில் நம்முடைய வேலையோ ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களுடைய வேலையோ அவரவர்கள் சொந்த நன்மை தீமைகளை பொருத்த வேலையல்ல என்பதும் பெரிய ஒரு சமூகத்தின் பேராலும் ஒரு தேசத்தின் பேராலும் நடைபெறுகின்றது என்பதும் முதலில் பொது ஜனங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு பெரிய பொறுப்புள்ள வேலைகளை மேற்கொண்டு அதற்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளுபவர்களின் யோக்கியதைகளும் நாணயங்களும் பொதுமக்கள் அறியும்படி வெளியாக்க வேண்டியது அவசியமா இல்லையா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. மகாத்மா காந்தி அவர்களுக்கு நாட்டில் உள்ள பெருமை முதலியதுகள் எல்லாம் அவருடைய யோக்கியதையைப் பற்றியும் நாணயத்தைப் பற்றியும் ஜனங்கள் அறிய நேர்ந்தமைதானே தவிர வேறில்லை. இவ்விவகாரங்கள் எத்தனைக்கெத்தனை யார் யாருடன் ஏற்படுகிறதோ அத்தனைக்கத்தனை அவரவர்கள் தொண்டுக்கு தக்க பலனை அளிக்கும் என்பது நமது எண்ணம்.

(குடி அரசு - கட்டுரை - 22.05.1927)

Pin It