நாள்: 19-9-2011, திங்கட்கிழமை மாலை 5.30 மணி

இடம்: பி.எட் அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்

உரை:

தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர். விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

பேராசிரியர். மணிவண்ணன், சென்னை பல்கலைக்கழகம்.

ஒன்றரை இலட்சம் உயிர்கள் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்டபின்பே தமிழக மக்கள் ’இராசீவ் கொலை’ என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றனர். 1991 இலிருந்து ஒரு தலைமுறை கடந்த பின் தான் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் புலிக் கொடியையும் மேதகு பிரபாகரனின் படத்தையும் ஏந்த துணிந்தார்கள். 2009 இலிருந்து இரண்டாண்டுகளைக் கடந்தும் ஆறாத காயங்களுடனும், அடங்காத சினத்துடனும் தமிழக அரசியல் வெளியைத் தமிழீழ ஆதரவு குரல் நிரப்பியிருந்தது. இனி இது ஈழத் தமிழர் பிரச்சனை அல்ல; இது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்குமான பிரச்சனை என்று வளர்ந்துக் கொண்டிருந்தது ஈழ ஆதரவு இயக்கம். ஆனால் 2011 ல் நின்று கொண்டிருந்த நம்மை மீண்டும் 1991 க்கு தள்ளிவிட்டது இந்திய அரசு.

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்கு தண்டனைக்கு இந்திய அரசு நாள் குறித்தது. மூன்று தமிழர்களின் உயிரைப் பணையம் வைத்து இனக்கொலை விசாரணை கோருவதைவிட்டு தமிழகத்தை விலகச் செய்தது இந்திய அரசு. போரை நிறுத்த கெஞ்சி நின்றது போல் மூன்று தமிழர் உயிர் காக்க மீண்டும் ஒரு முறை மன்றாடும் அரசியல் போக்குக்கு மாறினோம். மூன்று தமிழர் உயிரை மீட்பதென்பதைத் தமிழகம் தன்னுடைய மானப் பிரச்சனையாக உணர்ந்தது. இந்த முறை போராட்ட சுழற்சி வேகமாக நடந்தது. குறித்த நேரத்தில் வழக்கறிஞர்கள் மூவர் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் இறங்கினர். இன்னும் சூடு பிடித்தது களம். முதல் சுற்றின் இறுதியில் தோழர் செங்கொடியின் தீக்குளிப்போடு ஒரு உயிரை இழந்து நின்று கொண்டிருக்கின்றோம். மக்கள் போராட்டத்தின் ஒரு பயனாக தமிழக சட்டசபை ’தூக்கை நிறுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. உண்மையில் சட்டப் போராட்டத்தின் மூலம் தூக்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சிங்கள அரசுகள் தங்களை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான அரச தந்திர கைவரிசைகளை அனைத்துலக அரங்கில் கவலையின்றி செய்து கொண்டிருக்கின்றன. இரண்டாவது சுற்றுக்குள் நாம் நுழைகின்றோம்.

இராசீவ் கொலையை மீண்டும் தமிழக மக்களின் நினைவுக்கு கொண்டுவந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டும் பழைய அம்பையே வீசுகின்றது அரசு. ’இராசீவ் கொலை’ என்பது இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்க்கு எதிராக செய்த அட்டூழியங்களின் எதிர்வினையாகவே நடந்தது என்ற உண்மை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதை வெளிக்கொணர்வோம். இராசபக்சேவை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்து தமிழீழ விடுதலைக்கு தடை போடத் தானே இந்திய அரசு நினைக்கின்றது. இராசபக்சே மட்டுமல்ல இராசீவ் காந்தியும் போர்க்குற்றவாளியே என்ற உண்மையைப் போட்டுடைப்போம். அது உண்மையில் மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டங்களை இன்னும் ஆழப்படுத்தும்.

சிங்கள இராணுவம் இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது என்றால் இராசீவின் இந்திய இராணுவமும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. சிங்கள இராணுவத்தைப் போலவே இந்திய இராணுவமும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியது. இராசபக்சே, வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களைக் கொல்ல சொன்னது போல் இராசீவும் சமாதானம் பேசப் போன மேதகு பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார். ‘என் இராணுவம் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டது’ என்று இராசபக்சே சொன்னது போல் ‘இந்திய இராணுத்தினர் ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒற்றை கையால் கவனமாக சண்டைப் போடுகின்றன்ர்’ என்று இராசீவும் அன்று சொன்னார்.

இராசபக்சே போல இராசீவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைத்தார். ஈழத் தமிழர்தம் தமிழீழ தாயக வேட்கை உலகத் தமிழர்களின் தாகமாக மாறும் என்று இராசபக்சே கருதியிருக்க வில்லை. அது போல் அன்று புலிகளின் தாகம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் தாகமாக மாறி போராட்டம் புது வேகம் எடுக்கும் என்று இராசீவும் நினைக்க வில்லை. எனவே, இராசீவும் இராசபக்சேவும் வரலாற்றின் அடுத்தடுத்தப் பக்கங்களிலேயே நின்று கொண்டிருக்கின்றார்கள்.

ஏராளமான இழப்புகளுடன் அரசியல் நியாயத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கின்றோம். பாயும் நேரத்தில் பதைபதைத்து நிற்கலாகாது. செங்கொடி உயிரைவிட்டது நமது அரசியல் நியாயத்தைப் பெருக்குவதற்கேயன்றி மண்டியிடுவதற்கு அல்ல. நமது வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டு வருகின்றது. தமிழகம், தமிழீழம் என்று காலம் நம்மீது சுமத்தியிருக்கும் பொறுப்பும் மிகப் பெரியது. இருபது ஆண்டுகளாக இருட்டடிக்கப்பட்ட உண்மைகளை ஊருக்கு உரக்க சொல்வதற்கு இது இன்னுமொரு நற்றருணம். இன்று போர்க்குற்றங்கள் பற்றிய பரவலான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கின்றது. இந்திய அமைதி படையின் அட்டூழியங்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் மீள்பதிவு செய்வோம்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மரண தண்டனையைச் சட்டக் களத்தில் கேள்விக்குள்ளாக்குவதைத் தொடர்வோம். வெகுஜெனக் களத்தில் மரண தண்டனைக்கு எதிரான முழக்கத்தையும், நிரபாதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் பரவலாக்குவோம். அரசியல் களத்தில் இந்திய அரசு மூவரின் உயிரைப் பகடைக் காயாகப் பயன்படுத்தும் சதித் திட்டத்தை முறியடிப்போம்.

இந்திய அரசு நம் முன் வைக்கும் இவ்வரசியல் தடையை எதிர் கொள்வதற்கு வழி அதை தவிர்த்துவிட்டு போவதல்ல; தகர்த்துவிட்டு போவது தான். இந்திய அரசு தன்னிடம் இருக்கும் ஒற்றை கருத்தியல் கருவியாக கருதுவது இராசீவ் கொலையைச் சுற்றி அது கட்டி எழுப்பியுள்ள பயங்கரவாதப் பூச்சாண்டி அரசியல் தான். இந்த கருத்தியல் தடையைத் தகர்த்திட வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த 'இராசீவ் கொலை’ என்ற அரசியல் பிழையைத் திருத்தி எழுத நமக்கு இருக்கும் ஒற்றை வழி ’இராசீவ் ஒரு மக்கள் தலைவர்’ என்ற தோற்றத்தைத் தகர்த்தெறிவதே.

இராசீவ் ஒரு போர்க்குற்றவாளி ! இராசபக்சே ஒரு இனக்கொலையாளி!

என்ற முழக்கத்தை அரசியல் களத்தில் ஏந்துவோம். 

மூன்று தளங்களிலும் முகம் கொடுத்து மூவர் உயிர் காப்பில் வெல்வதோடு சேர்த்து ஈழ ஆதரவு போராட்டத்தைத் தமிழகத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம்.

Save Tamils Movement

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

www.save-tamils.org

9941931499, 9840090898

Pin It