அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கும் வகையில் திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக 1 மற்றும் 6ம் வகுப்புகளில் கடந்த ஆண்டே இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மற்ற வகுப் புகளில் இந்த கல்வி ஆண்டு (2011-12) முதல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடிவு எடுக்கப் பட்டு, அதற்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டன. சமச்சீர் கல்வி பற்றி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், அதி முக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியை ரத்து செய்தது. அதில் மாற்றங்கள் கொண்டு வந்து மேம் படுத்த வேண்டியிருப்பதால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை தொடர முடியாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக சட்ட மசோதா ஒன்றையும் சட்டசபையில் நிறை வேற்றியது. அரசின் இந்த உத்தர வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது.

அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும். அதே நேரத்தில் 2 முதல் 5-ம் வகுப்பு வரையும், 7 முதல் 10ம் வகுப்பு வரையும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு தனது அறிக் கையை 2 வார காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தினமும் விசா ரணை நடத்தி ஒரு வார காலத்துக் குள் தீர்ப்பளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்களுக்கு அடுத்த 3 வார காலத்துக்கு பாடம் நடத்த வேண்டாம் என தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைய டுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார். இந்த குழு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 6.7.2011-க்குள் தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அளிக்கும். பின்பு உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்து சமச்சீர் பாடத்திட்டம் பிழைக்குமா? இல்லையா என்பது தெரிய வரும். வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் தேதியில் திறக்கப்படும் பள்ளிக்கூடங்கள் இந்த பாடத்திட்ட குழப்பத்தால் ஜூன் 15ல் திறக்கப்பட்டது. ஆனாலும் பலனில்லை. காரணம் பாடப்புத்தகம் இல்லாமல் எந்த பாடத்தை படிப்பது? பிள்ளைகள் பள்ளிகளில் வெறுமனே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை மறைக்க, செயல்முறை பாடம் நடத்திடுமாறு அரசு சொல்லியது. பாடம் நடக்கிறதோ இல்லையோ, தனியார் பள்ளிகள் மாதக் கட்டனத்தை கறாராக வாங்கி விட்டனர். எனவே விரைவாக பாடத் திட்டம் முடிவு செய்யப்பட்டு மாணவர்களின் கல்விக்கு வழி வகை காண வேண்டும்! அரசு, 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு' என்ற அண்ணாவின் வாய்மொழியை நினைவில் கொண்டு கல்வியில் அரசியலை கலப்பதை விட்டும் விலக வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் வேண்டுகோளாகும். சமச்சீர் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-முகவையார்

Pin It